Headlines News :
முகப்பு » , , , , , » வரலாற்றில் காணாமலாக்கப்பட்ட பிரான்சாஸ் வெலென்டின்! - என்.சரவணன்

வரலாற்றில் காணாமலாக்கப்பட்ட பிரான்சாஸ் வெலென்டின்! - என்.சரவணன்

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அத்தனை படங்களும் 1726இல் வெளியான வெலென்டினின் "Oud En Nieuw Oost Indien"  நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.
போர்த்துகேயர்களின் முடிவும், டச்சுக் காரர்களின் ஆரம்பத்தையும் குறித்து வரலாற்றுப் பதிவுகளைச் செய்த பிலிப்பு பால்டேயு, ரொபர்ட் நொக்ஸ், கெப்டன் ரிபைரோ போன்றவர்களின் வரிசையில் பிரான்சாஸ் வெலென்டின் (François Valentijn) என்கிற வரலாற்றாசிரியரும் முக்கியமானவர். இவர்களில் வெலென்டின் மாத்திரம் இலங்கையில் இருந்ததில்லை. அவரின் நூல்கள் உலக அளவில் பிரசித்திபெற்றபோதும் இலங்கையின் வரலாற்றாசிரியர்களால் அந்தளவு பேசப்பட்டதில்லை. இவர்களின் வரிசையில் யாழ்ப்பாணம், வன்னி கிழக்கு பகுதிகளில் இருந்த தமிழ் அரசுகள் குறித்து பேசியதால் கெப்டன் ரிபைரோ வரலாற்றசிரியர்களால் கண்டுகொள்ளப்படவில்லையோ அதுபோல பிரான்சாஸ் வெலென்டினும் வடக்கு – கிழக்கு பகுதியில் இருந்தவற்றை பதிவு செய்ததால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்று சந்தேகம் கொள்ள இடமுண்டு.

பயணம்
வெலென்டின் 17.04.1666ஆம் ஆண்டு ஒல்லாந்தில் டோர்றே (Dordrecht) என்கிற இடத்தில் பிறந்தார். பிற்காலத்தில் இறையியல் துறையில் பட்டம்பெற்று சீர்திருத்த தேவாலயப் பணிகளில் ஈடுபட்டார். 1684இல் கிழக்கிந்திய நாடுகளுக்கான மதத் தூதுவராக நியமிக்கப்பட்டு கிழக்கிந்திய நாடுகளுக்கான சேவைகளுக்கு அனுப்பப்பட்டார். ஒல்லாந்திலிருந்து 13.05.1685இல் பத்தவியாவுக்கு புறப்பட்டார். இந்தோனேசியாவில் Batavia எனும் இடத்தில் தான் அன்றைய டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தலைமையகம் இயங்கியது. ஆறு மாதங்களின் பின்னர் 30.12.1685 அன்று தான் பத்தவியாவுக்கு வந்து சேர்ந்தார். பத்தாண்டு கால சேவையில் பின்னர் மீண்டும் 1695 ஒல்லாந்துக்கு திரும்பினார். அவர் மீண்டும் மிஷனரிப் பணிகளுக்கு தூதுவராக நியமிக்கப்பட்டு பத்தவியாவுக்கு குடும்பத்துடன் 27.12.1705 அன்று வந்து சேர்ந்தார் .  கிழக்கு ஜாவா தீவுகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்துக்கான போதகராக (army chaplain) 1706இலிருந்து கடமையாற்றினார்.

அவர் பத்தவியாவில் இருந்த காலப்பகுதியில் டச்சு கிழக்கிந்திய கம்பனியின் வலைப்பின்னலில் இருந்த காலனித்துவ நாடுகளில் பணிபுரிந்த சகல தரப்பினருடனும் தொடர்பில்  இருந்ததால் அவர் பல்வேறு விபரங்களை தொகுத்துவந்தார். மீண்டும் 1714இல் ஒல்லாந்துக்குத் திரும்பினார். அங்கிருந்தபடிதான் அவர்  “Oud en Nieuw Oost-Indiën” (பழைய புதிய கிழக்கிந்தியா) நூல் தொகுப்பை எழுதத் தொடங்கினார். 1726இல் ஐந்தாவது தொகுப்பு வெளிவந்தது. அடுத்த வருடம் 06.08.1727 அன்று அவர் காலம் ஆனார்.

இந்த இடைக்காலத்தில் அவர் இந்த தொகுப்பை மட்டுமல்ல பைபிளை மலே மொழிக்கு மொழி மாற்றம் செய்தார். மலே, ஜாவா போன்ற மொழிகளில் அகராதிகளையும் உருவாக்கினார். (மலே மொழி அகராதி இறுதிவரை அச்சாகவில்லை என்பது இன்னொரு கதை) முஸ்லிம் மதம் குறித்த ஆய்வொன்றையும் வெளியிட்டார். 

உள்ளடக்கம்
“பழைய புதிய கிழக்கிந்தியா” தொகுப்பானது இன்றும் 16-17 ஆம் நூற்றாண்டின் காலனித்துவ காலத்தை ஆராய்பவர்களுக்கு முக்கிய ஆதார நூலாக கருதப்படுகிறது. 5000க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட சிறிய எழுத்தினாலான மொத்தம் ஐந்து தொகுப்புகளையும் 1724-1726 இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியிட்டார். அதை விட  ஆயிரக்கணக்கான விளக்கப்படங்களும், ஓவியங்களும், வரைபடங்களும் உள்ளன. மக்களின் தோற்றம், அவர்களின் பண்பாடு, துறைமுகங்களின் அமைப்பு, நகரங்களின் வரைபடம், தாவரங்கள், விலங்குகள், சில முக்கிய சம்பவங்களைக் காட்டும் காட்சிகள் எல்லாம் அந்த கோட்டோவியங்களில் அடங்குகின்றன. அவை மிகவும் பயனுள்ளவை. இலங்கையில் டச்சுக்காரர்கள் செய்த வியாபார நடவடிக்கைகளின் புள்ளிவிபரங்கள், வேட்டையாடி எடுத்துச் சென்றவை, இலங்கை அரசர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பரிசுகள் காலி, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற கோட்டைகளுக்குப் பொறுப்பாக இருந்த தளபதிகளின் காலவரிசையான பட்டியல் எல்லாம் இந்த தொகுப்புகளில் அடக்கம்.

இந்த ஐந்து தொகுப்புகளிலும் இலங்கை குறித்து ஏராளமான விபரங்கள் அடகியிருந்தாலும் ஐந்தாவது தொகுப்பில் தான் இலங்கையைப் பற்றிய தனித் தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த 1384 பக்கங்களைக் கொண்ட ஐந்தாவது தொகுப்பில் 456 பக்கங்கள் இலங்கைப் பற்றியவை.

வெலென்டின் கிழக்கு ஜாவா, பத்தவியா, கேப், அம்பொய்னா, பண்டா தீவுகள் போன்றவற்றில் வாழ்ந்து செவயாற்றியிருக்கிறார். ஆனால் இந்தியா, சுமாத்திரா, இலங்கை, மலாக்கா போன்ற நாடுகளுக்கு அவர் பயணித்தது கிடையாது. இந்த நூலில் ஆங்காங்கு சில விளக்கப் பிழைகள் இருப்பதற்கான காரணம் இதுவாக இருக்கக் கூடும். ஆயினும் இந்த நாடுகள் குறித்து இந்தளவு விளக்கமாக எழுதியவை அனைத்தும் பெறுமதியானவை.

வெலென்டின் பணி ஓய்வு பெற்று ஒல்லாந்தில் இருந்த காலத்தில் இந்த நூலை எழுதத் தொடங்கினார். ஏற்கெனவே அவர் கிழக்கிந்திய கம்பனியில் பணியாற்றிய போது சேகரித்த ஆவணங்கள், ஆதார்ணகள் என்பவற்றை கொண்டுவந்து சேர்த்திருந்தார். அவர் கிழக்கிந்திய கம்பனியில் பணிபுரிந்த கவர்னர்கள், படையதிகாரிகள், சிவில் அதிகாரிகள் போன்றோரிடம் இருந்து ஏராளமான ஆவணங்களையும், விபரங்களையும் பெற்றுக்கொண்டார். இலங்கையைப் பற்றிய விடயங்களைத் தொகுக்கும் போது இலங்கையில் 1703-1706 காலப்பகுதியில் கவர்னராக இருந்த ஜோன் சிமோன் (Cornelis Joan Simons) ஓய்வு பெற்று ஒல்லாந்து திரும்பியதும்  உத்தியோகபூர்வமான பல ஆவணங்களை ஆராய்வதற்கான வாய்ப்புகளை அவருக்கு வெலென்டினுக்கு வழங்கினார். அதுபோல யாழ்ப்பாணத் தளபதியாக 1699 -1708 காலப்பகுதியில் பணியாற்றிய ஆதம் வான் (Adam Van der Duyn) தனது பணி ஓய்வின் பின்னர் ஒல்லாந்து திரும்பியதும் அவரும் வெலென்டினுக்கு உதவியிருக்கிறார். இந்தக் காலப்பகுதியில் கிழக்கிந்திய கம்பனியில் பணியாற்றியவர்கள் அவர்கள் பணியாற்றிய காலனித்துவ பிரதேசங்கள் குறித்து எழுதி வெளியிடுவது தடைசெய்யப்பட்டிருந்த காலம்.

இலங்கை பற்றி அதற்கு முன்னர் இலங்கைப் பற்றி பதிவு செய்த எழுத்தாளர்களான குறிப்பாக "Decadas Da Asia" எழுதிய Diogo de Couto, "Decadas Da Asia" எழுதிய Joao de Barros அடுத்தது "Fatalidade Historica de Ilha de Ceilao" ('Historical Tragedy of the Island of Ceylon')  எழுதிய Joao Ribeiro ஆகியோரின் எழுத்துக்கள் வெலென்டினுக்கு அதிகமாக உதவியிருந்தன.

அதுபோல இந்துத்துவம் பற்றிய சிறப்பாய்வுகளைச் செய்த டச்சு எழுத்தாளரான ஆப்பிரகாம் ரொஜேரியஸ் (Abraham Rogerius) என்பவருடன் சிறந்த நட்பைக் கொண்டிருந்தார். பிலிப் பால்டேயு (Phillipus Baldaeus)டானியல் ஹாவார்ட் (Daniel Havart) ரொபர்ட் நொக்ஸ் (Robert Knox) போன்றவர்களின் எழுத்துக்களும் அதிகம் உதவியிருக்கின்றன. ரொபர்ட் நொக்ஸின் "An Historical Relation of the Island Ceylon" நூல் அப்போது S. de Vriesஎன்பவரால் டச்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு 1692 ஆம் ஆண்டே வெளிவந்திருந்தது.

டச்சு மொழி மூல நூலில் இருந்து இவற்றைப் புரிந்து கொள்வது அவ்வளவு இலகுவல்ல. மேலும் சமீபத்தில் இப்படி 300 ஆண்டுகளுக்கு முந்திய டச்சு மொழி நூலொன்றின் சில வரிகளை ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு டச்சு எழுத்தாள நண்பரிடம் விளக்கம் கோரியிருந்தபோது அதற்கு அவர்கூட சிரமப்பட்டார். இது பழமையான டச்சு மொழி இப்போதுள்ளவர்களால் விளங்கிக் கொள்ள சற்று கடினம் என்றார். தோராயமாகத் தான் எனக்கு மொழிபெயர்த்து காட்டினார்.

இலங்கையில் மொழிபெயர்ப்பு
வெலென்டின் எழுதிய இந்தத் தொகுப்பு இலங்கையின் சிவில் துறையில் பணியாற்றிய அன்ரூ ஆர்மர் (Andrew Armour) என்பவரால் முதல் தடவை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதனை அவர் 1806-09 காலப்பகுதியில் இலங்கையின் நீதியரசராக இருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனுக்கு (Sir Alexander Johnston) சமர்ப்பித்திருக்கிறார். ஆனால் இந்த பிரதி ஒரு மோசமானதும், பிழையானதும் மொழிபெயர்ப்பு என்று பின்னர் சேர் எமர்சன் டெண்னன்ட் (Sir Emerson Tennent) குறிப்பிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு தடவை இந்தியாவில் 1783 – 1821 காலப்பகுதியில் பணியாற்றிய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த கேணல் கொலின் (Colonel Colin Mackenzie) என்பவரால் ஒரு பகுதி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
கடின வரலாற்றுச் சமர்களை எதிர்கொண்ட யாழ் கோட்டையின் அன்றைய வரைபடம் மேலே
பின்னர் இந்த நூலின் சில பகுதிகளின் சுருக்க மொழிபெயர்ப்பை இலங்கையின் தொழிற்சங்க முன்னோடியும், ஆய்வாளருமான பறங்கி சமூகத்தைச் சேர்ந்த புல்ஜென்ஸ் (A. E. Buultjens) மொழிபெயர்த்தார் (Orientalist -1885-86, 1888-89, 1891). அதன் பின்னர் தான்இந்த நூலை சின்னப்பா அரசரட்ணம் விரிவாக ஆய்வு செய்து 1977இல் “François Valentijn's Description of Ceylon” என்கிற நூலை வெளியிட்டிருக்கிறார். அந்த நூலே இன்று வரை வெலென்டின் குறித்த ஆய்வுகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசரட்னத்தின் அந்த நூலில் முதல் 12 அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சிங்கள வரலாற்று ஏடான “ராஜாவலிய”யவை மொழிபெயர்ப்பதற்கான அனுமதியையும் வெலென்டின் அப்போது பெற்றிருந்ததாக எஸ்.அரசரட்னம் தனது நூலில் குறிப்பிடுகிறார். “ராஜாவலிய”வில் குறிப்பிடாத அரசர்களின் குறிப்புகளை வெலண்டின் கண்டெடுத்திருந்தார். அரசாட்சிகளின் முன்னுக்குப் பின் முரணான காலவரிசை குறித்து ஆழமாக ஆராயந்திருப்பதை அவர் கண்டெடுத்த தகவல்களில் இருந்து அறிய முடியும். குறிப்பாக “தோஸ் ராஜா” என்கிற அரசர் பற்றிய விபரம் வியப்பை அளிப்பவை. வெலண்டினின் உச்சரிப்புப் பிழைகளால் அதில் உள்ள தகவல்களை சரியாக விளங்கிக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு வியாக்கியானப்படுத்துவதிலும் வரலாற்றாசிரியர்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாவார்கள் என்பது நிச்சயம்.

இலங்கையில் நெடுங்காலமாக இயங்கிவந்த டச்சு பறங்கியர் சங்கம் பல ஆண்டுகளாக ஒரு ஆய்வுச் சஞ்சிகையை (Journal of the Dutch Burgher Union of Ceylon) வெளியிட்டு வந்தது. எனது இந்தக் கட்டுரைக்கான தேடுதல்களின் போது அந்த சஞ்சிகையில் ஆய்வாளரான மொத்தாவு (S.A.W.Mottau) என்பவரால் 1983இல் மொழிபெயர்க்கப்பட்ட 16 அத்தியாயத்தையும், 1985 ஆம் ஆண்டு மொழிபெயர்த்த 17வது அத்தியாயத்தையும் (இறுதி அத்தியாயம்) கண்டெடுக்க முடிந்தது. அதற்கு முந்திய இதழ்களில் வேறெந்த அத்தியாங்களும் மொழிபெயர்க்கப்படாததால் இந்த கடைசி இரு அத்தியாங்கள் மாத்திரம் மொழிபெயர்க்கு தெரிவு செய்யப்பட்டதன் நோக்கத்தைப் பற்றி அறிய முடியவில்லை. ஆனால் அந்த இரண்டுமே இலங்கையின் மதங்கள் பற்றியவை. இந்த முக்கிய நூல் அதன் பின்னரும் ஆங்கிலத்தில் நூலாக முழுமையாக இன்னமும் வெளிவரவில்லை என்று அறிய முடிகிறது.
மட்டக்களப்பு கோட்டையின் அமைப்பை பற்றிய விபரங்களுடன் அன்றைய வரைபடம்
வரலாற்று ஆதாரங்கள்
உதாரணத்திற்கு 16வது அத்தியாயத்தில் ஒரு சுவாரசியமான பந்தியை இங்கே பாருங்கள்.
அவர்களின் மதவழிபாட்டுத் தளத்தை கோவில் (Pagodas) என்று அழைக்கிறார்கள் (கோவிலைத் தான் குறிப்பிடுகிறார் என்று புரிந்துகொள்வோம்). புராதன இலங்கை மன்னன் திருகோணமலையில் பிரமாண்டமான கோவிலைக் கட்டியிருக்கிறான். Tricon-maele எனும்போது சிங்கள மொழியில் “மூன்று கோபுர மலைகள்” என்பது பொருள். இந்திய உபகண்டத்தின் பிரபல கோவிலாக அது திகழ்ந்திருக்கிறது. ஆனால் 1622 ஆம் ஆண்டு இது முற்றிலும் இடிக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு போர்த்துக்கேயர் அங்கு அழகான கோட்டையைக் கட்டினர்.
திருகோணமலையில் மாத்திரமல்ல இலங்கையில் மற்ற இடங்களில் பௌத்த விகாரைகள் அழிக்கப்பட்ட கதைகள் கூட அவரின் நூலில் உண்டு.
300 ஆண்டுகளுக்கு முந்திய இலங்கையின் வரைபடம்
திருகோணமலை கோட்டையின் வரைபடம்
இலங்கை பற்றி வெளியான 5வது தொகுப்பில் "Description of Ceylon" தலைப்பின் கீழ் அவற்றை 17 அத்தியாயங்களுக்கு தொகுத்திருக்கிறார். முதல் அத்தியாயமே இலங்கையில் அழைக்கப்பட்ட அதிகாரத் தரப்பினரின் பதவிப் பெயர்களை வரிசைப்படுத்தி விளக்கப்படுத்துவதுடன். அந்த அத்தியாயத்தில் சாதிப் பெயர்களையும் அவற்றின் விளக்கங்களையும் கூட வெளியிட்டிருப்பது கவனிப்புக்குரியது.

இந்த நூலில் அவர் நூற்றுகணக்கான சாதிக் குழுமங்கள் மட்டுமன்றி அந்த சாதிகளின் உப சாதிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டிருப்பது முக்கிய சான்றுகள். உதாரணத்திற்கு சிங்கள சமூகத்தில் இருக்கும் கராவ சாதியினர் மத்தியில் உள்ள பிரிவுகள் மாத்திரம் 1) Caraeuw 2) Boroedal Caraeuw 3) Dandoe-Caraeuw 4) Moroe-Caraeuw 5) Kespe-Caraeuw 6) Cadoel –Caraeuw 7) Tock-Keulo 8) Godo-Keulo and 9) Indimal-Keulo என்கிற 9 குழுமங்களை அடையாளம் காட்டுகிறார்.  கடலில் மீன் பிடி முறையில் இவர்களுக்கு இடையில் வித்தியாசம் இருந்ததையும் அந்த வித்தியாசங்களையும் வெலென்டின் விரிவாக விளக்கியிருக்கிறார். குறிப்பாக கடலின் எந்த ஆழங்களில் பிடிப்பது, எந்த வலைகளைப் பயன்படுத்துவது, எந்த முறைகளைக் கையாள்வது போன்ற தொழில் பிரிவுகளால் இவர்களின் சாதிகள் வகைப்படுத்தப்பட்டிருந்ததை குறிப்பிடுகிறார். கராவ சாதியினர் படைகளிலும் இருந்ததாகவும் அவர்கள் முதலியார், முகாந்திரம் போன்றவர்களின் கீழ் பணியாற்றியதாகவும் விளக்குகிறார்.

அதுபோல சிங்கள சமூகத்தில் இருந்த துராவ சாதியினரில் இருந்த 10 பிரிவினரையும் அவர்களின் வேலைப்பிரிவினைகளையும் குறிப்பிடுகிறார். யானைப் பாகன்கள், மரம் வெட்டுபவர், தேங்காய் பறிப்பவர், கள்ளிறக்குபவர் போன்றவர்களையும் பிரிவுகளாக வகைப்படுத்துகிறார்.

இலங்கையில் துராவ சாதியினர் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். போர்த்துகேயர்களால் ஆரம்பத்திலேயே அதிகமானோர் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டவர்கள். பிற்காலத்தில் கொவிகம சாதியினரின் அந்தஸ்துக்கு அருகில் கருதப்பாட்டார்கள் என்பதெல்லாம் இன்னொரு தனிக்கதை.

காலப்போக்கில் இந்த உப சாதிக் குழுமங்களின் அடையாளங்கள் அழிந்துபோனாலும் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்த இலங்கை மக்கள் சாதிகளாக எப்படி பிளவுண்டு இருந்திருக்கிறார்கள் என்பதை அறிவதற்கான முக்கிய குறிப்புகள் இவை.

இலங்கையின் சாதிகளைப் பற்றி ஆராய்ந்த பலர் வெலென்டினின் குறிப்புகளைத் தவறவிட்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். சாதிகள் பற்றிய அவரின் குறிப்புகளை பயன்படுத்தியவர்களில்  “Caste in Sri Lanka - From Ancient Times to the Present Day” என்கிற நூலை எழுதிய ஆசிப் ஹுசைன் (Asiff Hussein) கவனிக்கத்தக்கவர். 

முதல் இரண்டு அத்தியாயங்களைத் தவிர எஞ்சிய அத்தியாயங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 1. புவியியல் நிலப்பரப்பு, இலங்கையின் இனப்பரம்பல், மக்களின் பண்பாட்டு அம்சம், மரபுகள், மொழி
 2. இலங்கையின் வரலாற்றுச் சுருக்கமும், 1724 வரையான இலங்கையின் காலனித்துவ கால வரலாற்றுக் குறிப்புகளும், (4-15 வது அத்தியாயம் வரை)
 3. இறுதி இரண்டு அத்தியாயங்களும் இலங்கையின் அன்று நிலவிய மதங்கள் பற்றியது. பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து, போன்றவை பற்றி.

இலங்கை பற்றிய 31 கோட்டோவியங்களும், இலங்கையின் வரைபடமும் இந்த நூலில் உள்ளடக்கம்.
யாழ்ப்பாண பட்டணம்
வெலென்டினின் “பழைய புதிய கிழக்கிந்தியா” நூலைத் தவிர மேலும் சில முக்கிய ஆய்வு நூல்களையும் வெளியிட்டிருந்தார். கடற் தாவரங்கள் விலங்குகள் குறித்த ஆரின் நூல் அவர் இறந்ததன் பின்னர் 1754இல் ஆம்ஸ்டர்டாமில் வெளியானது. வேறு பல மொழிகளிலும் அது மொழிபெயர்க்கப்பட்டது. அவரின் நூல் ஆசியாவின் முக்கிய கடல்வழிப் போக்குவரத்தை அறிந்துகொள்வதற்கான அடிப்படையான மூல நூலாக பல்லாண்டுகாலம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அது ஒரு முக்கியமான கலைக்களஞ்சியம் என்கிறார் மொத்தாவு. அது போல அன்றைய டச்சுக் காலனித்துவத்துக்கு ஆதாரமாக இன்றும் ஒல்லாந்தர்களின் தேசியவாத பெருமிததத்துக்கு வெலென்டினின் பணிகளைக் கொண்டாடி வருகின்றனர். இலங்கையைப் பற்றியே இவ்வளவு என்றால் ஏனைய நாடுகள் பற்றி அவர் எழுதியிருக்கும் விபரங்கள் கூட வியப்பைத் தரும் வரலாற்றுப் பதிவுகள்.

வெலென்டின் இலங்கையின் வரலாற்றின் ஒரு முக்கிய காலப்பகுதியை கட்டுடைத்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக சம்பந்தப்பட்ட இலங்கையர்களுக்கு இன்னமும் அது முழுமையாக போய் சேரவில்லை. அவரின் பதிவுகள் பல வெளிச்சங்களை தர வல்லவை.

தமிழில் மொழிபெயர்க்க முன்மொழியக் கூடிய வரலாற்று நூல்களில் வெலென்டினின் “பழைய புதிய கிழக்கிந்தியா” முக்கியமான ஒன்று.

இக்கட்டுரைக்குப் பயன்பட்ட பிரதான நூல்களும் கட்டுரைகளும்
 • Oud en Nieuw Oost-Indiën (Description of Ceylon) – By François Valentijn - Volume 1 2,3,4,5, (Published 1624 – 1927 - Dutch East Indies)
 • “Francois Valentijn’s Oud En Nieuw Oost Indien And the Dutch Frontispiece in the 17th and 18th Centuries” - Maria S.Labarge A Thesis - Submitted to the Faculty of the University of Miami, in partial fulfillment of the requirements for the degree of Master of Arts – May 2008
 • Translation of Francois Valentijn's Description of Ceylon (Chapter 16) — translated By S.A.W. Mottau, Journal of the Dutch Burgher Union of Ceylon – Vol LXI – 1983
 • Translation of Francois Valentijn's Description of Ceylon (Chapter 17) — translated By S.A.W. Mottau, Journal of the Dutch Burgher Union of Ceylon – Vol LXII - 1985
 • Condensed from S. Arasaratnam's introduction to Francois Valentijn's Description of Ceylon, Hakluyt Society, London, 1978.
 • Francois Valantijn. a biographical note Journal of the Dutch Burgher Union of Ceylon – 1983 – Vol – LXI
 • Antiquarian Ambonese. François Valentyn’s Comparative Ethnography (1724) by Siegfried Huigen - The Dutch Trading Companies as Knowledge Networks. Intersections 14. Leiden / Boston: Brill, p. 171-200.
 • THE MANY FACES OF THE KANDYAN KINGDOM, 1591-1765: LESSONS FOR OUR TIME? –Prof Gananath Obeyesekere. (Article)
 • Caste in Sri Lanka - From Ancient Times to the Present Day -  Asiff Hussein - Neptune Publications – 2013
நன்றி - அரங்கம்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates