Headlines News :
முகப்பு » , , , , , » கண்டி மன்னனின் சிம்மாசனத்தை மீட்ட கதை - என்.சரவணன்

கண்டி மன்னனின் சிம்மாசனத்தை மீட்ட கதை - என்.சரவணன்

மகாவம்ச வர்ணனைகளின்படி ஆரம்பகாலம் தொட்டே அரண்மனைகளையும், அரச சபைகளையும் ஆடம்பரமாக அலங்கரித்திருந்தது பற்றி பல இடங்களில் கூறப்படுகின்றன. சிம்மாசனங்களையும், அரசவை ஆசனங்களையும் தயாரிப்பதற்கும், ஆபரணங்கள், வாள்கள் தயாரிப்பதற்கென தனியான அரசவை நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்திருக்கின்றனர். அந்த நிபுணத்துவத்தின் அற்புதங்களை கொழும்பு அருங்காட்சியகத்தில் காண முடியும்.

அப்படி அங்கிருக்கும் ஒரு முக்கிய பொருள் இறுதி அரசரின் சிம்மாசனம். அங்கே அரசரின் மகுடமும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிம்மாசனம் 1693இல் ஒல்லாந்து அளுனராக தோமஸ் வான் ரீ (Thomas van Rhee – 1691-1697) பதவி வகித்த காலத்தில் அவரால் மன்னர் இரண்டாம் விமலதர்மசூரியனுக்கு (1687-1707) பரிசளிக்கப்பட்டதாகும். ஒல்லாந்தர்களால் அது வழங்கப்பட்டபோதும் அதில் செதுக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகள் இலங்கையின் பாரம்பரியத்தைக் கொண்ட சிற்ப நுணுக்கங்களே என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நீரா விக்கிரமசிங்க அது தென்னிந்திய வேலைப்பாடுகள் என்று தனது ஆய்வில் தெரிவிக்கிறார்.

ஐந்தடி உயரம், மூன்றடி அகலத்தில் மரத்தால் செய்யப்பட்ட அந்த சிம்மாசனத்தின் வெளித்தோற்றத்தில் தங்கத் தகட்டில் சிற்ப வேலைப்பாடுகளும், இரத்தினக் கற்கள் பொறிக்கப்பட்டும் காணப்படுகிறது.


இந்த சிம்மாசனத்தையும் கிரீடத்தையும் இரண்டாம் விமலதர்மசூரியனுக்குப் பின்னர் ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திரசிங்கன் (1707 – 1739), விஜயராஜசிங்கன்  (1739 – 1747). கீர்த்திஸ்ரீ ராஜசிங்கன்  (1747 – 1782), ராஜாதி ராஜசிங்கன் (1782 – 1798) ஆகியோர் பயன்படுத்திவிட்டு பின்னர்  ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798 – 1815) இறுதியாக பயன்படுத்தினார்.

ஆங்கிலேயர்கள் உலகமெல்லாம் நாடுகளைப் பிடித்தபின் அந்த வெற்றியில் நினைவாக சிம்மாசனத்தையும் கிரீடத்தையும், கொடியையும், அரசனின் வாளையும், செங்கோலையும், லட்சினையையும் தமது நாட்டுக்கு கொண்டு சென்று விடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். நெப்போலியனைத் தோற்கடித்தபின் அவனின் பிரதான கழுகுச் சின்னத்தைக் கொண்டு போய் வைத்திருந்தனர்.

3வது ஜோர்ஜ் மன்னன் இலங்கையின் இறுதி அரசனின் சிம்மாசனம், கிரீடம், வாள் என்பவற்றை அப்படித்தான் லண்டன் வின்சர் மாளிகையில் வைத்திருந்தனர். அங்கே தான் இந்தியாவில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் சின்னங்களையும் வைத்திருந்தனர்.


புதையல்களைத் தேடித்திரிந்த பிரிட்டிஷார்
கண்டியைக் கைப்பற்றியதுமே ஆங்கிலேயர்கள் கண்டியின் அரச சொத்துக்களை அபகரிப்பதில் மும்முரமாக இருந்தார்கள். 10.01.1815 அன்று ஆளுநர் பிரவுன்றிக் கண்டிக்கெதிரான போர் பிரகடனத்தைச் செய்திருந்தார். ஜோன் டொயிலி, ஹென்றி மார்ஷல், கப்டன் டி புஷ்ஷ, மேஜர் வில்லர்மன், உள்ளிட்ட பலரின் குறிப்புகளின்படி கண்டிக்குள்  அன்று கண்டிக்குள் பிரிட்டிஷ் படைகள் நுழைந்தபோது கண்டி வெறிச்சோடியும், புகை மண்டலங்களுமாக இருந்ததுடன் சொத்துக்கள் பல அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. மக்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். மன்னரின் சிம்மாசனம், கிரீடம், பாதபீடம் உள்ளிட்ட பொருட்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது.

எஹெலபொல தனக்குத் தெரிந்த மன்னரின் புதையல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களின் பட்டியலை ஆங்கிலேய அதிகாரிகளுக்கு காட்டிக்கொண்டுத்தான். அதன்படி உடுவெல, ஹங்குரங்கெத்த, மனகொல, வலப்பனை, மெத மானுவர, தெல்தெனிய, ஹிருவெல, கொஸ்கம, அரட்டான, மாவெல, கொத்மலை, கப்பெல, புப்புறெஸ்ஸ, ரம்புக்கன போன்ற இடங்களில் இருந்து பல புதையல்கள் எடுக்கப்பட்டுள்ளன. அப்படித்தான் அரசனின் முக்கிய சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை இங்கிலாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.

5.04.1815 சிலோன் கசெட் வெளியீட்டின்படி பிரவுறிக் H.M.Frigate Africaine என்கிற கப்பலில் அரசரின் கிரீடம், வாள், கொடி என்பவற்றை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

டொயிலியின் நாட்குறிப்பில் 1815 மார்ச் 13 அன்று எஹெலபொல அரசனுக்குச் சொந்தமான ஏராளமான தங்க ஆபரணங்கள், தங்கத் தலைப்பாகை, இரத்தினக் கற்கள் பதித்த நெஞ்சுக் கவசம் உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்து ஆளுநர் பிரவுன்றிக்குக்கு கொடுத்ததாகவும் ஆனால் ஆளுநர் அந்த பரிசுகளை நிராகரித்தாக குறிப்பிடுகிறார். மார்ச் 26 அன்று எழுதிய குறிப்பில் உடுவெல பகுதியில் இருந்து 31 சாக்குகளில் வெள்ளி மற்றும் வெண்கல நாணயங்களைக் கண்டெடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். அதே நாளும், அதற்கடுத்தடுத்த சில நாட்கள் எழுதப்பட்ட குறிப்புகளில் அரசரின் புதையல்கள் எங்கிருக்கின்றன என்பது பற்றி கிடைத்த தகவல்களும் அவற்றைக் கண்டெடுத்து  கொண்டுவர அனுப்பப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.

இவை எல்லாம் கிடைத்தபோதும் ஒரு வருடத்துக்கு மேலாகியும் அரசரின் கிரீடமும் வாளும் கண்டெடுக்கப்படாமல் இருந்தது. ஒரு முறை வெல்லஸ்ஸ பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதானி மில்லேவே திசாவ ஆளுனரை சந்தித்து அரச கிரீடமும் வாளும் பிரித்தானியர் வசம் கிடைக்கும் வரை மக்கள் பிரித்தானியர் கைகளுக்கு ஆட்சி போய் விட்டதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பிரித்தானியர் அதைத் தேடிக்கண்டுபிடிப்பதில் மும்முரம் காட்டினர். 5.11.1816 அன்று இலங்கையிலிருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட தந்தியொன்றில் மன்னரின் வாளும், கிரீடமும் ஊவாவுக்கும் கொத்தமலைக்கும் இடையிலான ஒரு காட்டுப் பகுதியில் இருந்து எஹெலபொலவால் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தவிடுபொடியான எஹெலபொலவின் கனவு
04.02.1829 அன்று பிரித்தானிய வருமானவரி இலாகாவின் ஆணையாளர் வெலேகெதர அப்புஹாமி சிட்டம்பி என்பவரை விசாரணை செய்தார். அப்புஹாமி சிட்டம்பி அரசரின் விசுவாசமான சேவகர். அப்புஹாமி சிட்டம்பியின் வாக்குமூலத்தின் படி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் தனிப்பட்ட ஆபரணங்கள் அனைத்தும் அரசர் வசித்துவந்த அறையிலிருந்து சற்று தூரத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. பிரித்தானிய படை சீத்தாவக்க பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்கிற செய்தி வந்தடைந்ததும் அப்புஹாமி சிட்டம்பியும் மேலும் மூன்று சேவகர்களும் பெறுமதிமிக்க பொருட்கள் அனைத்தையும் இரண்டு பெட்டிகளில் வைத்து முத்திரையிட்டு பூட்டி வைத்துள்ளனர். எதிரிகள் நெருங்குமுன் அரசர் அங்கிருந்து வெளியேறும் போது இவற்றுடன் சேர்த்து நான்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தெல்தெனிய பகுதியில் மறைந்திருந்த அரசர் பிடிபடும் போது அவரிடம் தங்க நாணயங்கள் அடங்கிய ஒரு பெட்டி மாத்திரம் தான் இருந்திருக்கிறது. ஏனைய பெட்டிகள் மன்னருக்கு விசுவாசமான ஒருவரிடம் இரகசியமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாக்குமூலத்தில் இன்னொரு விடயத்தையும் அப்புஹாமி குறிப்பிடுகிறார். அரசர் பிடிபட்டு 6வது நாளன்று எஹெலபொல அரசருக்கு சொந்தமான ராஜரீக பொருட்கள் பலவற்றை சொந்தமாக்கிக்கொள்வதற்கு தனது ஒத்துழைப்பை நாடி வந்ததாக குறிப்பிடுகிறார்.
“அன்று இரவு என்னை உள்ளறைக்கு அழைத்துவந்தார். அனைத்து கதவுகளையும் திறந்து தேடினார். அங்கிருந்த ஒரு தங்க தலைப்பாகையையும் மார்பு கவசத்தையும் அணித்துகொண்டார். நான் அது சரியில்லை என்பதை விளக்கினேன். இன்னும் சில தினங்களில் பிரித்தானியரால் தான் அரசராக முடி சூட்டப்படப் போவதாக அவர் பதிலளித்தார்.”
சிம்மாசனம் எங்கே?
பிரித்தானியா கைப்பற்றிச் சென்ற அரசுரிமைச் சின்னங்கள் பற்றிய ஒரு விரிவான பெரிய நூலொன்று 2016ஆம் ஆண்டு “கிரீடங்களும் காலனித்துவமும்” (Crowns and Colonies: European Monarchies and Overseas Empires) என்கிற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. 350 பக்கங்களைக் கொண்ட அந்த நூலில் இலங்கைக்கு திருப்பிக் கொடுக்கப்பட்ட அரச சின்னங்கள், பொக்கிசங்கள் குறித்த 25 பக்கக் கட்டுரையொன்றை ஐரோப்பிய வரலாற்று பேராசிரியரான ரொபர்ட் அல்டிறிச் (Robert Aldrich) எழுதியிருக்கிறார்.
ஆங்கிலேயர்கள் ஏராளமான தங்க ஆபரணங்கள், கலசங்கள், பதக்கங்கள், வைரக்கற்கள் என ஏராளமான பொக்கிசங்களையும் கொள்ளையடித்துக்கொண்டு சென்றனர். இவற்றை 13.06.1820 அன்று “38, King Street, Covent Garden” என்கிற இடத்தில் ஏலத்துக்கு விடப் போவது குறித்த 17பக்கங்களில் ஒரு பட்டியலைக் (Regalia ofthe King of Kandy A catalogue) காணக் கிடைத்தது. அது வெளியாகி 200 ஆண்டுகள் ஆகப் போகிறது ஆச்சரியமளிக்கும் விபரங்கள் அவை. இத்தனையையும் கொள்ளையடித்துக் கொண்டு போயிருக்கிறார்களே. அந்த வெளியீட்டின் அட்டையில் இப்படி இருக்கின்றன
  • “கண்டி மன்னனின் பொக்கிசங்கள்”
  • பெறுமதிமிக்க நகை சேகரிப்புகள்
  • தூய தங்கம், முத்துக்கள், வைரக்கற்கள், பதக்கங்கள்
  • தங்க மாலைகள்; குறிப்பாக 23.5 அடிகளைக் கொண்ட மாலை
  • விற்பனை பகல் 1 மணிக்கு சரியாக தொடங்கிவிடும்
  • முன்பதிவின்றி அப்போதே விற்பனையாகிவிடும்.
இந்த ஏலத்தில் சிம்மாசனம், மகுடம், வாள் என்பவை இருக்கவில்லை என்று தெரிகிறது. அன்றைய ஆளுநர் பிரவுன்றிக்கின் மகனால் அவை அனைத்தும் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. பின்னர் நான்காவது ஜோர்ஜ் மன்னரிடம் அவை திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது வின்சர் மாளிகையில் வைக்கப்பட்டது.

கண்டி மன்னனை பிடித்தபின்னர் அரசாட்சியோடு இந்த சிம்மாசனமும், மகுடமும், வாளும் தனக்கே கிடைக்கும் என்று நம்பியிருந்த எஹெலபொலவுக்கு ஒன்றையும் கொடுக்கவில்லை ஆங்கிலேயர்கள். அவர்கள் மேற்படி அரசுரிமைச் சின்னங்கள் அனைத்தையும் இங்கிலாந்துக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
இலங்கை மக்கள் மன்னரின் இந்த முக்கிய சின்னங்கள் பற்றி மறந்தே போயிருந்தனர். 1913ஆம் ஆண்டு தான் அப்போது காலனித்துவ செயலாளராக இருந்த எட்வர்ட் ஸ்டப்ஸ் (Sir Reginald Edward Stubbs) முதன் முறையாக இந்த சின்னங்கள் எங்கே இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களை அறிவித்தார்.

இதே வேளை 1924ஆம் ஆண்டு லண்டன் பத்திரிகையாளரான பிரெடிரிக் குருப் (Frederick Grubb) எழுதிய ஒரு பதிவு சிலோன் டெயிலி நியூஸ் பத்திரிகையில் வெளியானது. அதன்படி கண்டி அரசரின் சிம்மாசனம், மகுடம், வாள் என்பவை அங்கிருந்து இடம் மாற்றப்பட்டுவிட்டதென்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த சிம்மாசனம் ஒரு பௌத்த சிம்மாசனம் என்பதால் கிறிஸ்தவ அரசர் அருகில் வைத்திருப்பது உகந்ததல்ல என்கிற முடிவுக்கு வந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டது.
பத்திரிகையாளர் பிரெடிரிக் குருப் மீண்டும் இது குறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டுவருவதற்காக மன்னரின் அந்தரங்க செயலாளரோடு அணுகி தொடர் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இவை நாகரீகமாக இலங்கைக்கே திருப்பிக் கொடுக்கப்படவேண்டியவை என்று விளக்கியிருக்கிறார்.

காலனித்துவ செயலாளராக இருந்த எட்வர்ட் ஸ்டப்ஸ் ஆளுநராக பதவியேற்ற காலத்தில் (1933-1937) அவரும் இந்த முயற்சியில் பங்களித்துள்ளார்.

மீண்ட “முடி”
இறுதி அரசனின் சின்னங்களை இலங்கைக்குத் திருப்பித் தருமாறு அன்றைய அரச சபை உறுப்பினர் ஜோர்ஜ்  ஈ.டி சில்வா (இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராகவும் இருந்தவர்) 30.11.1933 அன்று ஒரு பிரேரணையை அரச சபைக்கு கொண்டுவந்தார். 15.02.1934 அன்று அது அரச சபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பற்றிய விபரத்தை இக்கட்டுரைக்காக தேடியபோது சிங்கப்பூர் பத்திரிகையொன்றில் (The Straits Times, 13.09.1936, P5) காணக்கிடைத்தது.

இந்த முயற்சிகளைத் தொடர்ந்து மன்னர் இறுதியில் ஒப்புக்கொண்டார். பக்கிங்ஹாம் மாளிகை காலனித்துவ செயலாளருக்கு இது தொடர்பில் 1934 ஜூன் 5 அன்று ஒரு தந்தியை அனுப்பி வைத்தது. 100 வருடங்களுக்கும் மேலாக வின்சர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த கண்டி மன்னனின் மகுடத்தை மக்களின் உணர்வுபூர்வமான தேவை கருதி திருப்பித் தர ஒப்புக்கொண்டதாகவும், இளவரசர் டியுக் கிளவுஸ்செஸ்டரின் இலங்கை விஜயத்தின் போது அது கையளிக்கப்படும்  அந்த தந்தி குறிப்பிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்த சிம்மாசனமும் கிரீடமும் இலங்கைக்கு 1934ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று மீண்டும் கொண்டுவரப்பட்டு கண்டியில் பெரும் திருவிழாவாக இதற்கான வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது. கண்டியின் பாரம்பரிய தாள வாத்திய இசையுடனும், கண்டிய நடனங்களுடனும் கோலாகலமான ஊர்வலமாக அந்த சிம்மாசனம் எடுத்துக் கொண்டுவரப்பட்டது.
இரவு 9 மணியளவில் இலங்கை பறிகொடுக்கப்பட்ட அதே கண்டி “மகுல்மடுவ”வில் வைத்து பல பௌத்த மத குருமார் மற்றும் அரச தலைவர்கள் முன்னிலையில் அவை இளவரசர் டியுக் கிளவுஸ்செஸ்டரால் (Duke of Gloucester) ஒப்படைக்கப்பட்டன. அங்கு அவர் ஒரு உரையையும் ஆற்றினார்.

அடுத்த மூன்று நாட்கள் 24-27 வரை கண்டி மன்னனின் அரசுரிமை சின்னங்கள் அங்கு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன. நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அதைக் காணச் சென்றிருந்தனர். பின்னர் கொழும்பிலும் ஒக்டோபர் 1-நவம்பர் 14 வரை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. 902,920 இலங்கையர்கள் அதை பார்வையிட்டனர்.


1942 இல் கொழும்பில் இருந்த இராணி மாளிகை மியூசியமாக ஆக்கப்பட்டது. கண்டி அரசனின் இந்த சிம்மாசனமும் கிரீடமும், வாள் உள்ளிட்ட பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டன. இன்றும் அவற்றைப் பார்க்க முடியும்.

சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்று மார்தட்டிக்கொள்ளுமளவுக்கு பல உலக நாடுகளை கைப்பற்றியிருந்த ஆங்கிலேயர்கள் ஏராளமான சொத்துக்களையும் பொக்கிசங்களையும் அள்ளிக்கொண்டு சென்று தமதாக்கிக்கொண்டனர். அரசுரிமைச் சின்னங்களை தனியாக தமது சாம்ராஜ்ஜிய பெருமிதத்தின் நினைவுச் சின்னங்களாக வைத்திருந்தனர். இலங்கையைத் தொடர்ந்து பர்மா, எத்தியோப்பியா போன்ற நாடுகளின் அரச சின்னங்களை மாத்திரம் அவர்கள் திருப்பிக் கொடுத்தனர். மேலும் பல நாடுகளின் அரச சின்னங்கள் அவர்கள் வசமே இன்னமும் உள்ளன. ஆனால் ஏனைய பொக்கிசங்கள் பலவற்றை ஏலத்துக்கு விற்று பிழைத்துக்கொண்டனர்.

கண்டி ராஜ்ஜியத்தில் மாத்திரமல்ல இன்னும் பல இலங்கை அரச பொக்கிசங்களையும், புதையல்களையும் எப்படியெல்லாம் தேடித்தேடி சூறையாடினார்கள் என்பது தனிக்கதை.

உசாத்துணை:
  • Crowns and Colonies: European Monarchies and Overseas Empires by Robert Aldrich, Cindy McCreery - Manchester University Press; 1 edition (August 1, 2016)
  • Regalia ofthe King of Kandy A catalogue,  Printed by w. SMITH, King Street, Seven Dial -1820, 
  • THE THRONE OF THE KINGS OF KANDY – by By JOSEPH PEARSON (Vice-President, Royal Asiatic Society - Ceylon Branch) Vol. 31, No. 82, Parts I., II., III., and IV. (1929), pp. 380-383
  • Diary Of Mr. John Doyly by H.w.Codrington, (JRAS) 1917
  • Tri Sinhala: The Last Phase, 1796-1815 - by P. E. Pieris - Asian Educational Services (2001)
நன்றி - அரங்கம்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates