எபோட்சிலி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவுடன், தொழிலாளர்களின் மாநாடு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அட்டன் நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில், "பெருந்தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் படிப்பினைகள் மற்றும் ஊதியங்களையும் சமூக உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான முன்னோக்கிய பாதை," பற்றி கலந்துரையாடப்படும்.
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கான புத்திஜீவிகளை இந்த முக்கியமான கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா நாள் சம்பளத்துக்கான ஒன்பது நாள் வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னரே எபோட்சிலி நடவடிக்கை குழு ஸ்தாபிக்கப்பட்டது. ஏனைய பல தோட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் எபோட்சிலி குழுவோடு தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதோடு, இதே போன்ற குழுக்களை உருவாக்க போராடுவதற்கும் சபதம் எடுத்துள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய இரண்டு பிரதான பெருந்தோட்ட தொழிற்சங்கங்களும், ஒரு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்த போதிலும், தொழிலாளர்களின் தற்போதைய எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ள அரசாங்கம் அதை வர்த்தமானியில் வெளியிடவில்லை. இந்த புதிய ஒப்பந்தத்தில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன் பிணைக்கப்பட்ட ஒரு அற்ப சம்பள உயர்வே வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 200,000 தோட்டத் தொழிலாளர்கள் பங்கெடுத்த ஊதிய அதிகரிப்புக்கான வேலை நிறுத்தமானது, ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்தால் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச ரீதியில் தொழிலாளர் வர்க்கப் போராட்டம் மறு எழுச்சி பெறுவதன் ஒரு பாகமாகும்.
ஒப்பந்தத்தின் கீழ், அடிப்படை தினசரி ஊதியமானது 500 ரூபாவில் இருந்து 700 ரூபா (3.92 டொலர்) வரை 200 ரூபாவால் காகிதத்தில் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை பங்கு கொடுப்பனவானது 30 முதல் 50 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், கம்பனிகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த வருகைக்கான கொடுப்பனவு 60 ரூபாவையும் உற்பத்தி திறன் கொடுப்பனவு 140 ரூபாவையும் அபகரித்துக்கொண்டன. அதாவது மொத்தமாக தொழிலாளர்களுக்கு 750 ரூபா மட்டுமே கிடைப்பதுடன், முந்தைய சம்பளத்துடன் ஒப்பிடும்போது வெறும் 20 ரூபாவே அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் மேலாக, புதிய கூட்டு ஒப்பந்தத்தின் உட்பிரிவு 3 இன் கீழ், தொழிற்சங்கங்கள், "வருவாய் பகிர்வு வெளியார் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட, உற்பத்தி திறனோடு பிணைக்கப்பட்ட சம்பள மேலாதிக்கத்தை" திணிப்பதற்கு ஒத்துழைக்க உடன்பட்டுள்ளன.
இந்த "வருமானப் பகிர்வு வெளியார் உற்பத்தி மாதிரி" நடைமுறைப்படுத்தப்பட்ட தோட்டங்களில், குறைந்தபட்ச வாழ்க்கைக்கான வருமானத்தைக் கூட தொழிலாளர்களால் சம்பாதிக்க முடியவில்லை. இந்த முறையின் கீழ் ஒதுக்கப்படும் காணியில், முழுக் குடும்பமும் உழைக்க நிர்ப்பந்திக்கப்படுவதோடு தொழிலாளர்களை குத்தகை விவசாயிகளாக மாற்றிவிடுகின்றது. தொழிலாளர்களின் ஓய்வு கால நிதிகளையும் ஏனைய மட்டுப்படுத்தப்பட்ட சமூக நலன்களையும் கூட இழந்து விடும் அபாயம் உள்ளது.
தொழிலாளர்களின் எதிர்ப்பை பற்றி ஆழமாக கவலை கொண்டுள்ள அரசாங்கம், புதிய கூட்டு ஒப்பந்தத்தை முறையாக வர்த்தமானியில் அறிவிப்பதை தாமதப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கமோ அல்லது கம்பனிகளோ தொழிலாளர்களுக்கு நல்லதை செய்யும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி போன்ற போதுமான அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன. கென்யா, இந்தியா மற்றும் சீனா போன்ற மற்ற நாடுகளிலுள்ள எங்களது சக தோட்டத் தொழிலாளர்களைப் போலவே, சர்வதேச பெருந்தோட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களினதும் ஒரு சங்கிலி மூலம் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றார்கள்.
அற்ப ஊதிய உயர்வையும் வேலை வேகப்படுத்தலுக்கான கோரிக்கையையும் நாங்கள் நிராகரிக்க வேண்டும். முழு ஊதியத்துடனான விடுமுறை, மருத்துவ நலன்கள் மற்றும் முறையான ஓய்வூதியத் திட்டத்துடன், ஒரு கெளரவமான மாத சம்பளத்திற்கான உரிமை எங்களுக்கும் உள்ளது.
150 வருடங்களுக்கும் மேலாக தோட்டத் தொழிலாளர்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்த அடிமைத்தொழிலாளர் நிலைமைகளுக்கு முடிவு கட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது.
சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதற்காக இலங்கையில் எல்லா பிரிவு தொழிலாளர்கள் மத்தியிலும் பிரசாரம் செய்து வருகிறது. சோசலிச சமத்துவக் கட்சியால் முன்மொழியப்பட்ட சோசலிச வேலைத்திட்டம், அனைத்து தொழிலாளர்களுக்கும் அவசியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.
–சோசலிச சமத்துவக் கட்சி
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...