Headlines News :
முகப்பு » , , , , » சிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி!? - என்.சரவணன்

சிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி!? - என்.சரவணன்

“பி.ப 4 மணி. கண்டி பிரதானிகள், திசாவ, அதிகாரி ஆகியோர் கூடியிருந்த \ மகுல் மடுவ’ வில் வில் கண்டி ஒப்பந்த பிரகடனத்தை தேசாதிபதி வாசித்தார். அதன் பின் அரச மரியாதையுடன்  ராஜரீக கொடி ஏற்றப்பட்டது. அளவான வெப்பமுள்ள நாள், தெளிவான வானம்....”
கண்டி வீழ்ச்சியின் சூத்திரதாரி ஜோன் டொயிலியின் டயரியில் மார்ச் 2. 1815 ஆம் திகதி இப்படித்தான் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் அதே தினம் வாரியபொல சுமங்கள தேரர் அங்கிருந்த கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட ஆங்கிலேயர்களின் கொடியை இறக்கி காலால் மிதித்து சிங்கக் கொடியை ஏற்றியதாக பல்லாயிரக்கணக்கான சிங்களக் கட்டுரைகளும், நூல்களும் பதிவு செய்து வந்திருக்கின்றன. பாடசாலை பாடப்புத்தங்களில் இன்றுவரை அப்படியொரு கதை எழுதப்பட்டு வருகின்றன.
ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் அதுவொரு கட்டுக்கதை என்றும் பிரபல மானுடவியலாளரான பேராசிரியர் கணநாத் ஒபேசேகர உள்ளிட்ட பலர் தமது ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர்.

டொயிலியோ அல்லது வேறெந்த ஆங்கில அறிஞர்களோ, அல்லது அதிகாரிகளோ கூட அன்றைய தினம் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை.
அப்படி சிங்கக் கொடியை எற்றியிருந்தாலும் கூட அப்படியொரு கொடி கண்டி ராஜ்ஜியத்தின் கொடியாக இருந்ததில்லை. கண்டி ராஜ்ஜியம் ஏழு பிரிவுகளாக நிர்வகிக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கென கொடிகளும் இருந்தன. அந்த ஏழில் ஒன்று “சத்கோறளை” எனப்படும் பிரதேசம் இன்றைய குருநாகல் பகுதியின் பெரும்பகுதியை உள்ளடக்கியது அது. சத் கோரளவின் கொடி தான்  சிங்கக் கொடி. ராஜசிங்கனுக்கு எதிரான கிளர்ச்சி சத்கோரளையிலிருந்து தான் ஆரம்பித்தது எனலாம்.


கண்டி தலதா மாளிகைப் பகுதிக்குள் உள்ள அதே ‘மகுல் மடுவ’வில் இன்றும் அந்தக் கொடிக்கம்பம் இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தின் 200வது ஆண்டு நிறைவையொட்டி மகுல்மடுவவுக்கு ஊர்வலமாகச் சென்ற பிக்குமார்கள் தலைமையிலான கும்பல் தேசியக் கொடியிலிருந்து பச்சை, செம்மஞ்சள் பகுதிகள் அகற்றப்பட்ட தூய சிங்கக் கொடியை போலிசாரோடு மல்லுக்கட்டிக்கொண்டு ஏற்றிய சம்பவத்தை நாம் மறந்திருக்கமாட்டோம். அந்தளவு வாளேந்திய சிங்கக் கொடி பற்றிய கற்பிதங்களும், புனிதப்படுத்தளும் நிறுவனமயப்பட்டுள்ளன.

இலங்கையில் சிங்கத்தை ஒரு குறியீடாகவோ, சின்னமாகவோ கொடியாகவோ பயன்படுத்தப்பட்ட சில சந்தர்ப்பங்கள் வரலாற்றில் இருக்கத் தான் செய்கின்றன. அதே வேளை கிடைக்கப்பற்ற தொல்பொருள் சான்றுகளைத் தவிர்ந்த “சிங்கம் சின்னமாக” இருந்ததன் கதைகள் நம்பகத்தன்மை குறைந்ததாகவே உள்ளதை பேராசிரியர் கணநாத் ஒபேசேகர உள்ளிட்ட சில வரலாற்றாசிரியர்கள் எடுத்துக்காட்டத் தவறவில்லை. 

இலங்கையில் புராதன அரண்மனை வாசல்களில் அமைக்கப்பட்டிருந்த சந்திரவட்டக்கற்களில் வரிசையாக செதுக்கப்பட்ட சிங்கங்களின் உருவங்கள் காணப்படுகிறன. 

அதுமட்டுமன்றி ஏறத்தாழ 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் மன்னர்கள் மலசலம் கழிக்க உருவாக்கப்பட்டிருந்த கற்களில் இருக்கும் சிற்ப வேலைப்பாடுகளிலும் சிங்கத்தைக் காண முடிகிறது.

மலசலம் கழிக்க பண்டைய காலத்தில் கற்களால் செதுக்கி உருவாக்கப்பட்டிருந்திருக்கிறது (அனுராதபுரத்தில்)
இலங்கையில் சிங்கள சாதியமைப்பில் மேனிலையில் இருந்த சாதிகளுக்கென்று தனித் தனியான கொடிகள் இருந்திருக்கின்றன. கராவ (மீனவ "கரையார்" சாதிக்கு ஒப்பானவர்கள்) சாதியினர் சிங்கத்தை தமது கொடியில் வைத்திருந்திருக்கின்றனர்.

கராவ சாதிக்குரிய கொடி
இவர்கள் எல்லோரும் அப்படி நம்புமளவுக்கு அந்த சிங்கக் கொடி தான் கண்டியின் கடைசிக் கொடியா?

இலங்கைக்கு விஜயன் வந்தபோது சிங்கக் கொடியுடன் தான் இலங்கையில் கால் பதித்தான் என்று ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது. மகாவம்சத்திளும் சூலவம்சத்திலும் அப்படி இருப்பதாகவும் கதைகள் பரப்பப்பட்டுவருகின்றன. விஜயனின் தகப்பன் சிங்கபாகு சிங்கத்துக்குப் பிறந்ததாகக் கூறும் மகாவம்சக் கதையின் தொடர்ச்சியாகவே இப்படிப் புனைய நேரிட்டிருப்பதாகக் கொள்ள முடியும்.
எல்லாளன் - துட்டகைமுனு போரை சித்திரிக்கும் 19ஆம் நூற்றாண்டுக்குரிய தம்புள்ளை குகை ஓவியம்

அதுபோல எல்லாளனுடன் துட்டகைமுனு போர்புரிந்தபோது துட்டகைமுனு சிங்கக் கொடியுடன் தான் சென்றதாகவும் மகாவசம் கூறுவதாக சொல்வதும் சுத்தப் பொய். பிற்காலத்தில் வரையப்பட்ட அப்படியொரு சுவரோவியத்தைக் காட்டுவதைத் தவிர வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 18ஆம் நூற்றாண்டில் மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் ஆட்சியின் போது வரையப்பட்ட தம்புல்லையில் உள்ள குகை ஓவியத்தில் ஒன்றே எல்லாளன் – துட்டகைமுனு போரை சித்திரிக்கிறது. இலங்கையின் தொல்பொருள் ஆய்வின் வித்தகராக போற்றப்படும் பரணவிதான எழுதிய “சிங்ஹலயோ” என்கிற நூலில் தான் அந்த ஓவியம் ஒரு கோட்டுச் சித்திரமாக வெளியிட்டிருந்தார். ஆனால் அந்தச் சித்திரத்தில் கொடியில் இருந்த உருவத்தை வெறுமையாக விட்டார். அந்த உருவம் தெளிவாக இல்லாததால் அவர் அதை வெறுமையாக விட்டிருக்கக் கூடும்.

ஆனால் ஈ.டபிள்யு பெரேரா கொடிகள் பற்றி எழுதி வெளியிட்ட நூலில் இந்தக் கொடியில் இருப்பது சிங்கம் தானென்றும் சிங்கத்தின் வலது கையில் வாளொன்றையும் உருவகப்படுத்தி புனைந்து வெளியிட்டார். இலங்கையின் தேசியக் கொடியைக் கண்டுபிடித்துக்கொண்டு வந்ததாக கூறி ஒரு வரைபடத்தை முதன் முதலில் வெளியிட்டதும் அவர் தான். அந்தக் கோடி தான் இலங்கையின் தேசியக் கொடியானது. வாளேந்திய அந்தக் கொடியே தான் கண்டு பிடித்த தேசியக்கொடி என்பதை உறுதிபடுத்த அவர் இந்த “துட்டகைமுனுவின் சிங்கக் கொடி புனைவில்” இறங்கியிருக்கக் கூடும்.

இந்த தம்புள்ள ஓவியத்தைக் கொண்டு தான் இன்றும் சகலரும் அந்தப் போர் குறித்த கற்பிதத்துக்கும், காட்சிப்படுத்துவதற்கும் வலுசேர்த்து வருகிறார்கள். பயன்படுத்திவருகிறார்கள். அந்த காட்சியைத் தான் பலரும் சிலைகளாகவும், ஓவியங்களாகவும், கதைகளாகவும் மேலதிகமாக புனைந்துவருகிறார்கள். அதுபோல “சிங்கக் கொடி”யை சிங்களக் கொடியாக புனிதப்படுத்தும் மரபும் இங்கிருந்துதான் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.

சரி... சிங்கக் கொடி கண்டி ராஜ்ஜியத்தின் கொடி என்றால் இலங்கையின் தேசியக் கொடி எது? சிங்களவர்களின் கொடி தான் என்ன? அவ்வாறு சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடி என்று ஒன்று வரலாற்றில் இருந்திருக்கிறதா? அல்லது ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்களவர்களின் நாடாகத் தான் என்றாவது இருந்ததுண்டா?

இலங்கையில் சிங்கம் கிடையாது என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். இல்லாத ஒரு விலங்கு ஆதி காலத்தில் இருந்தே இலங்கையின் சின்னமாக இருந்ததாக கூறப்படுவது எப்படி?

இலங்கைக்கு பௌத்தத்தைப் பரப்பிய அசோக சக்கரவர்த்தியின் தாக்கமே பிற்காலத்தில் “சிங்கம்” சின்னமானதன் பின்னணிக் கதையாகக் இருக்கக் கூடுமென பலரும் நம்புகின்றனர்.

இன்றும் இந்தியாவின் தேசிய அரச இலட்சினையாக பயன்படுத்தப்பட்டுவருவது நான்கு சிங்கங்களைக் கொண்ட அசோகனின் சின்னம் என்பது நமக்குத் தெரியும். அசோகன் இலங்கைக்கு தனது மகன் மகிந்தனை அனுப்பி பௌத்தத்தை இலங்கையில் பரப்பியபோது அனுராதபுரத்தை தலைமையாகக் கொண்டு தேவனம்பியதிஸ்ஸன் ஆட்சி புரிந்துவந்தான். தேவனம்பியதிஸ்ஸன் பௌத்தத்தைத் தழுவினான். அதுபோல அசோகனுக்கும் தேவனம்பியதிஸ்ஸனுக்கும் இடையில் பல தடவைகள் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்ட செய்திகள் காணக் கிடைக்கின்றன. இந்த பின்னணியில் தான் தேவனம்பியதிஸ்ஸனின் கொடியும் கூட சிங்கக் கொடியாக அமைகிறது.

இலங்கையில் சிங்கத்தைக் கொடியாகக் கொண்டிருந்தவர்கள் அந்தந்த ராஜதானிகளின் கொடிகளாகத் தான் கையாண்டிருக்கிறார்களேயொழிய  ஒரு இனத்தை அது பிரதிநிதித்துவப்படுத்தியது கிடையாது. 


ஐரோப்பியர்கள் பலரின் குறிப்புகளில் மன்னர் சூரியனையும், சந்திரனையும் கொண்ட கொடியையும், சில நேரங்களில் அன்னம், மயில், மான், கரடி, சிங்கம், புலி, யானை, மேலும் சில பறவைகள் போன்ற பல்வேறு பிராணிகளைக் கொண்ட கொடியையும் பயன்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றனர். ரொபர்ட் பேர்சிவல் தனது நூலில் (An Account of the Island of Ceylon: Containing Its History, Geography) ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் பரிவாரங்கள் சூரியனின் உருவத்தைக்கொண்ட கொடியைத் தாங்கிச் சென்றதாக குறிப்பிடுகிறார்.

இதேவேளை இன்று நாம் பயன்படுத்தும் வாளேந்திய சிங்கத்தின் உருவத்துக்கு நிகராக ஐரோப்பாவில் பல சின்னங்களும், கொடிகளும், லட்சினைகளும் இருந்திருக்கின்றன. இன்றும் இருக்கின்றன. போர்த்துகேயர், ஒல்லாந்தர் காலத்தில் அவர்களின் முக்கிய லட்சினைகளாகவும், சின்னங்களாகவும், நாணயங்களிலும் சிங்க உருவம் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அவற்றின் தாக்கம் கூட இந்தக் காலப் பகுதியில் இருந்திருக்கலாம் என்றும் நாம் சந்தேகிக்க முடியும்.

இப்போது சொல்லுங்கள் சிங்கக் கொடி/கண்டியக் கொடி எப்படி தேசியக் கொடியாக முடியும்? இனப்பிரச்சினையின் ஒரு குறியீட்டு அடையாளமாக இன்று இந்த கொடி உருவகமாகுமளவுக்கு இன்று வந்து நிற்கிறதல்லவா?

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates