Headlines News :
முகப்பு » , , , , » “ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை! - என்.சரவணன்

“ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை! - என்.சரவணன்


இலங்கையில் “ரதல” என்கிற சொல்லாடலை சமூக அரசியல், வரலாற்று அறிதல்களின் மூலம் அறிந்திருப்போம். இதை பல்வேறு இடங்களில் குழப்பம் தருகிறவகையில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது.

நான்காம் பராக்கிரமபாகு காலத்திலிருந்தே “ரதல” குழாமினர் பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பேற்றாலும் கண்டி ராஜ்ஜியகாலத்தில் தான் இந்த சொல் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அரச வம்சத்துக்கு அடுத்தபடியாக ராஜ்ஜியத்தில் அதிகாரம் செலுத்திய பிரதானிகள் குழாமினரே இவ்வாறு அழைக்கப்பட்டார்கள். ஒரு வகையில் இவர்கள் “சாதி”யாகவும் இயங்கினார்கள். உயர் வர்க்கமாகவும் இருந்தார்கள். சொத்து படைத்த நிலப்பிரபுக்களாகவும் இருந்தார்கள். இறுக்கமான அகமணமுறையை அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.

ஆக அதிகாரம் படைத்த, சொத்தும் செல்வாக்கும் படைத்த பெரும் பிரமுகர்களாக அறியப்பட்டிருந்தார்கள். ரத் (ராஜரீக = Royal), குல/கொல (சாதி = Caste) இவை சேர்ந்து உருவானதே “ரதல” என்கிற சொல் என்பார்கள். இலங்கையின் சாதியமைப்பில் பிரதான உயர் சாதியாக இவர்கள் கருதப்பட்டபோதும் சனத்தொகையில் இவர்கள் 0.001% வீதம் மட்டுமே என்கிறார்கள் இலங்கையின் சாதியமைப்பை ஆராய்ந்த பலரும். (1)

நாயக்க வம்சத்தினர் காலத்தில் தான் இந்த “ரதல” என்கிற குழாமினரின் உருவாக்கம் நிகழ்ந்தது என்று பல ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

கண்டி ராஜ்ஜியத்தைப் பொறுத்தளவில் ஒருவகையில் இவர்களே பின்புலத்தில் இருந்து அரசர்களை உருவாக்கும் வல்லமையையும் (kingmakers) பெற்றிருந்தார்கள். அதுபோல அவர்கள் அரசாட்சியைக் கவிழ்க்கும் வல்லமையையும் கொண்டிருந்தார்கள்.

இன்றும் சிங்கள சமூகத்தினரில் சாதீய வைதீக முறைமைகளில் கட்டுண்டு கிடப்பவர்கள் பலர் இலங்கையை ஆளும் தகுதி படைத்தவர்கள் “ரதல” வம்சத்தவர்களே என்கிற நம்பிக்கையைக் கொண்டுள்ளார்கள். அந்த நம்பிக்கையானது இலங்கையின் கடந்த கால அரசியலில் பெரும் செல்வாக்கை செலுத்தியுமிருக்கின்றன. சிறிமா பண்டாரநாயக்க பதவிக்கு வரும்போதும், அதன் பின் வந்த ஆட்சிமாற்ற காலனகளிலும் அவர் ஒரு “ரதல” வம்சத்து பெண் என்கிற பிரச்சாரம் இருக்கவே செய்தன. அதுபோல ஆளுநராகவும், இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவருமான வில்லியம் கொபல்லாவ “ரதல” பரம்பரையைச் சேர்ந்தவர் என்று பெருமை பாராட்டியிருக்கிறார்கள். இன்றும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பவர்களில் இவர்களையும் காணலாம்.

கண்டிய – சிங்கள – பௌத்த - கொவிகம – நிலப்பிரபுக்களாக
இலங்கையை பல்வேறு கால கட்டங்களில் நிகழ்ந்த தென்னிந்திய ஆக்கிரமிப்புகளும், ஆட்சிகளும் இலங்கையின் சாதிமுறையைப் பலப்படுத்தியதுடன் தென்னிந்திய சாதிய வடிவங்களை புகுத்தின. காலப்போக்கில் சிங்கள சாதிய அமைப்பிலும் புதிய வகை சாதிகளையும் அவற்றுக்கான கோத்திர விதிமுறைகளையும் உருவாக்கிக்கொண்டு வளர்ந்துவந்தான. இது தமிழ் சமூகத்தின் சாதி அமைப்பில் இருந்து வேறுபட்டதாக இருந்தது.

இலங்கையில் மூன்று பிரதான சாதிய வகைகள் இயங்கிவந்தன – இயங்கிவருகின்றன. சிங்கள சாதியமைப்பு, தமிழ் சாதியமைப்பு, இந்திய வம்சாவளியினர் மத்தியில் நிலவும் சாதியமைப்பு. இவற்றில் வடக்கு – கிழக்கில் இயங்குகிற “இலங்கை தமிழர்” சாதியமைப்பைப் பொறுத்தவரை வடக்கில் உள்ள சாதிய முறைக்கும் கிழக்கில் உள்ள சாதிய முறைக்கும் வித்தியாசம் உண்டு.

சிங்கள சாதியமைப்பில் இன்றளவிலும் உயர்த்தப்பட்ட சாதியாக கருதப்பட்டு வருபவர்கள் கண்டிய – சிங்கள – கொவிகம சதியைத் தான். கொவிகம சாதியில் பல உபசாதிகளும் அதற்கான அதிகாரப்படிநிளையொழுங்கும் இருக்கின்றன. தமிழ் சமூகத்தில் உள்ள வெள்ளாளர் சாதிக்கு சமமாக கருதப்படும் வேளாண்மையைதன்னகத்தே கொண்ட நிலவுடைமை சமூகமாக கொவிகம சாதியினர் இருந்தார்கள்.

“ரதல” என்பதை கனவான் (Gentleman) என்று தான் 1886இல் வெளிவந்த “The Ceylon Almanac and Annual register” அறிக்கையில் சிங்களப் பதவி நிலை குறித்த பட்டியலில் விபரிக்கிறது.
கொவிகம சாதியின் படிநிலையொழுங்கில் ரதல, முதலி ஆகிய பதவிகளை வகிக்கக்கூடியவர்கள் கொவிகம சாதியின் உயர் பிரிவில் உள்ளவர்களே என்று கே.எம்.டி.சில்வா குறிப்பிடுகிறார்.(2)  கண்டி ராஜ்ஜியத்தின் சாதிய படிநிலைக்கேற்ற ஒழுங்கில் தான் பதவிகளின் படிநிலையையும் கொண்டிருந்தார்கள் என்று அவர் தனது நூலில் மேலும் விளக்குகிறார்.
  • மகா அதிகாரம் / மகா நிலமே = பிரதம அமைச்சர் (பிரதம மந்திரி)
  • நிலமே = உயர் அலுவலர்
  • திசாவ = மாநிலங்களுக்கான ஆளுநர்
  • ரட்டே மாத்தயா = சிறிய மாநிலங்களுக்கான முதல்வர்
  • கோரால = கோரளைப் பிரதேசங்களின் தலைவர்
  • விதானே = கிராம அதிகாரி
  • லேக்கம் = லிகிதர் (3)
  • மொஹட்டலா = செயலாளர்
  • அட்டுகோரல = கோரலைகளின் பிரதித் தலைவர்
அதுபோல இன்றும் நாம் புழக்கத்தில் பெண்களை அழைக்கப் பயன்படுத்தப்பட்டுவரும் குமாரிஹாமி (மகா அதிகாரம் அவர்களின் மனைவியைத் தான் அழைக்கலாம்), ஹாமினே, மெனிக்கா, எத்தனா, ஹாமி போன்றவையும் அன்று அதே அதிகார உயர் படிநிலை ஒழுங்கில் தான் அழைக்கப்பட்டன.

மகா அதிகாரம்
இவர்களில் “அதிகாரம்” எனப்படும் பிரதம அமைச்சர் பதவி சில அரசர்களின் காலத்தில் நான்கு பேர்  ஒரே சமயத்தில் வகித்திருந்திருக்கிரார்கள். அவர்களில் ஒருவர் “மகா அதிகாரம்” பதவியை வகிப்பார். அவர் மன்னருக்கு ஆலோசனைகளை வழங்குபவராக இருப்பார். அடுத்தவர் நகரத்தைப் பாதுகாப்பதற்கும், மற்றவர் நீதித்துறையைக் கையாள்வதர்காகவும், நான்காமவர் யுத்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவராகவும் இருந்திருக்கிறார். இரண்டாம் ராஜசிங்கன் காலம் வரை ஒருவர் மட்டுமே அதிகாரம் பதவியில் இருந்திருக்கிறார். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலத்தில் மூவர் நியமிக்கப்பட்டார்கள். அவர்களில் பிரதான இருவர் சமமான அதிகாரங்களைக் கொண்டிருந்த போதும் ஒருவர் மட்டும் “மகா அதிகாரம்” பதவியை வகித்தார். இவர்களின் சேவைக்காலம் ஒரு வருடம் மட்டுமே. ஒவ்வொரு வருடமும் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் அல்லது முன்னையவரின் பதவி புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. (4)

“ரதல” பிரிவினர் உயர் கொவிகம சாதியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அவர்கள் ஆள்வதற்காக பிறந்த (5) அரசகுலத்து ஷத்திரிய வம்சத்தவர்களாக கருதப்பட்டார்கள். (6) இலங்கையின் வரலாற்றில் பல சமயங்களில் அரசாட்சிக்கு நெருக்கடியைக் கொண்டுவரும், பலத்த அழுத்த சக்தியாகவும், அரசாட்சிக்கு சவாலான சக்தியாகவும் இருந்து வந்திருக்கிறது. (7)

வீரசுந்தர பண்டார எனும் “ரதல” அமைச்சரின் உதவியால் தான் முதலாம் ராஜசிங்கன் (கி.பி 1581 - 1593) கண்டியைக் கைப்பற்றினான். அவர்கள் இன்றேல் கண்டியைக் கைப்பற்றுவது சாத்தியமற்றுப் போயிருக்கும். ஆனால் தன்னைவிட மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு வீரசுந்தர பண்டாரவுக்கு இருப்பதாகக் கருதிய சீத்தாவக்க ராஜசிங்கன் 1585இல் ஒரு குழியொன்றில் வீரசுந்தரவை விழுத்தச் செய்து கொன்றான். தனக்கு எதிராக “ரதல” பிரிவினர் சதி செய்யக்கூடும் என்று நம்பிய ராஜசிங்கன்  எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை அழிக்கும் பணியில் இறங்கினான். பின்னர் அதுவே அவனது வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.

அதன் பின் 1592ஆம் ஆண்டு வீரசுந்தரவின் மகன் கொனப்பு பண்டார; “விமலதர்மசூரிய” என்கிற பேரில் ஆட்சியேறினான். 

கண்டி ராஜ்ஜிய காலத்தில் மூன்று அரச வம்சங்கள் ஆட்சிசெய்தன.
  1. சேனா சம்மத்த விக்கிரபாகு  வம்சம்
  2. விமலதர்மசூரியனின் வம்சம்
  3. நாயக்கர் வம்சம்
கண்டி ராஜ்ஜிய அரசர்கள்
ரொபர்ட் நொக்ஸ்ஸின் குறிப்புகள்
கண்டியை ஆண்ட அரசர்களிலேயே அதிககாலம் ஆட்சி செய்தவர் இரண்டாம் ராஜசிங்கன் (1634 -1686). ரொபர்ட் நொக்ஸ் பிடிபட்டு சிறையிருந்ததும் இவரது காலத்தில் தான். ரொபர்ட் நொக்ஸ்  பிற்காலத்தில் தப்பிச் சென்று எழுதிய நூலைப் பயன்படுத்தாத இலங்கை வரலாற்றாசிரியர்கள் இல்லை எனலாம். ரதல பிரபுக்கள் அரசில் உள்ள ஏனைய ஊழியர்களையும் சேர்த்துக்கொண்டு இரகசிய ஒப்பந்தமொன்றை செய்து கொண்டு ஒரு ஆட்சிக் கவிழ்ப்புச் சதியைச் மேற்கொண்டது பற்றி தனது “இலங்கையின் வரலாற்றுரவுகள்” என்கிற நூலில் எழாம் அத்தியாயத்தில் தகவல்களைத் தருகிறார்.

“21.12.1664 ராத்திரி 12 மணிக்கு இந்த கிளர்ச்சியின் முதற்கட்டமாக நகரிலுள்ள அரண்மனையை நோக்கி திரண்டார்கள்...” என்று சுவாரசியமாக அந்த கிளர்ச்சி குறித்து ஒரு கதையாக விளக்குகிறார். (8)

அந்தக் கிளர்ச்சியின் சூத்திரதாரிக்கு நேர்ந்ததை ரொபர்ட் நொக்ஸ் இப்படி விளக்குகிறார்.(9)

“கிளர்ச்சியின் சூத்திரதாரியாக நிரூபிக்கப்பட்ட ‘அம்பன்வெல றால’வுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோதும் அரசனுக்கு அந்த தண்டனை போதவில்லை. சிங்கள தேசத்தில் கொடுக்கும் கொடும் சித்திரவதை போதாது என்பதால் புதுவிதமான தண்டனையை அளிப்பதற்காக கொழும்பிலுள்ள ஒல்லாந்தருக்கு அம்பன்வல றால அனுப்பப்பட்டான். ஆனால் ஒல்லாந்தர் அவனின் கை விலங்குகளை அவிழ்த்திவிட்டு அவனோடு சேர்ந்து கும்மாலமடித்ததுடன் அவனை விடுவித்து சுதந்திரமாக உலவவிட்டனர்...” (10)
இந்த கிளர்ச்சி கொடூரகரமாக முறியடிக்கப்பட்டதன் பின்னர் “ரதல” பிரபுக்களில் நம்பிக்கை வைத்துக்கொள்வதை தவிர்த்தார் அரசர். அவர்களுக்கு இருந்த அதிகாரங்களைக் குறைத்தார். அதிலிருந்து  “அதிகாரம்” பதவி (பிரதம அமைச்சர்) இரண்டு பேருக்கு வழங்கப்பட்டது.

நாயக்கர்களுக்கு எதிரான எழுச்சியும், சூழ்ச்சியும்!
கண்டி ராஜ்ஜிய காலம் என்பது மொத்தம் 225வருட காலங்கள். “ரதல” பிரபுக்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான இடைவெளி வலுப்பெற்ற காலம் என்பது நாயக்கர் வம்சத்து ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் தான். இலங்கையின் கடைசி சிங்கள மன்னனான ஸ்ரீ வீர பராக்கிர நரேந்திரசிங்கனின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சிக்கட்டிலேறிய விஜய ராஜசிங்கன், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன், ராஜாதி ராஜசிங்கன், ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் ஆகிய நால்வரும் தென்னிந்திய நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான். கண்டியை 1739 – 1815 வரையான 76 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ஆண்டார்கள். 
The reception hall in the palace of the King of Kandy 1785 JAN BRANDES
நாயக்கர்களின் ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்வதில் எந்தவித குழப்பமிருக்கவில்லை. ஆனால் “ரதல” குழாமினர் மத்தியில் எரிச்சலும், வெறுப்பும் இருந்து வந்தது. கண்டி ராஜ்ஜியத்தில் பலமாக இருந்த இந்த சொத்து படைத்த சிங்கள பௌத்த உயர்சாதி நிலப்பிரபுக்களும், மறுபுறம் பௌத்த பீடங்களும் பலமாக இருந்தன. இந்த இரண்டுமே இந்த நாயக்க வம்சத்து அரசாட்சிக்கு அதிருப்தியாளர்களாக வளர்ந்துவந்தார்கள்.

நாயக்கர் ஆட்சி மரபின் முதலாவது அரசனான விஜய ராஜசிங்கன் காலத்தில் இத்தகைய முரண்பாடுகள் தோன்றவில்லை. ஆனால் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் இந்த விரிசல் வலுத்தது. அதற்குக் காரணம் இருந்தது. கீர்த்திஸ்ரீ ராஜசிங்கன் பதவியேற்றபோது அவரின் வயது 16 மட்டுமே. எனவே முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அவரின் தகப்பனாரான நரனப்பாவுடன் தான் கலந்துரையாட வேண்டியதாயிற்று. நரனப்பா கண்டி ராஜ்ஜியத்தின் ஒரு நிழல் அரசராகவே இயங்கினார். அவரே செல்வாக்கு படைத்தவராக இருந்தார்.

இந்தக் காலப்பகுதியில் ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றி ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தனர். அவர்களால் ஒடுக்குமுறைக்குள்ளான கத்தோலிக்கர்கள் கண்டிப் பிரதேசத்துக்கு தஞ்சம் தேடி ஓடிவந்தபோது அவர்களுக்கு தஞ்சமளித்தார் நரனப்பா. ஒரு கட்டத்தில் நரனப்பாவின் இந்த நடவடிக்கைகயை எதிர்த்து “மகா அதிகாரமாக” இருந்த எஹெலபொல நிலமே (ஸ்ரீ விக்கிரமசிங்க காலத்து எஹெலபொலவின் தகப்பனார்.) அதிருப்தியுற்றார். அதன் நீட்சியாக அரசரது தகப்பனார் நரனப்பாவின் இந்த போக்கு நிறுத்தப்படாவிட்டால் நான் உட்பட சிங்களத் தலைவர்கள் சேர்ந்து அரசரை வீழ்த்துவோம் என்று அரசருக்கு எச்சரிக்கும் அளவுக்கு வளர்ந்தது. இறுதியில் அரசரின் முடிவின்பேரில் நரனப்பா ஒதுக்கப்பட்டார். அந்தளவுக்கு “ரதல” பிரபுக்கள் செல்வாக்குள்ளவர்களாக திகழ்ந்தார்கள். கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனும் அதன் பின் அரசராக பதவியேற்ற ராஜாதி ராஜசிங்கனும் உடன் சகோதரர்கள்.

இவர்கள் இருவருமே மிகச் சிறுவயதில் மதுரையிலிருந்து வந்தவர்கள். எனவே அவர்கள் ஒரு வகையில் சிங்களவர்களாகவே வளர்ந்தார்கள். சிங்களம், பாளி பாஷைகளையும் சிங்கள பௌத்த கலாசாரத்தையும் கற்று ஒழுகினார்கள். கண்டி ராஜ்ஜியத்தில் அதுவரை எவரும் மேற்கொள்ளாத அளவுக்கு பௌத்த மத வளர்ச்சிக்கும், அதன் கட்டமைப்புக்கும் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பல குறிப்புகள் உள்ளன. அது பற்றி தனியான சிங்கள நூல்கள் கூட உள்ளன.
ஆனாலும் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு தாய்லாந்திலிருந்து ஒரு அரச குமாரனை அரசராக்க “ரதல” பிரபுக்கள் 1760 ஆம் ஆண்டு சதி செய்தனர். இந்த சதி முறியடிக்கப்பட்டதுடன் அதில் சம்பந்தப்பட்ட “ரதல” பிரபுக்கள் பலர் அரச ஆணையின் பேரில் கொல்லப்பட்டனர். சதியில் சம்பந்தப்பட்டிருந்த பிக்குமாருக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட போதும் பௌத்த துறவிகளின் தலைவராக “சங்கராஜ” (ராஜகுரு) பதவியில் இருந்த சரணங்கர ஹிமியை அந்தப் பதவியில் இருந்து நீக்கினார் அரசர்.

பின்னர் ராஜாதி ராஜசிங்கன் காலத்தில் பிரதம அமைச்சராக இருந்த “மகா அதிகாரம் பிலிமத்தலாவ” அரசருக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தார். ராஜாதி ராஜசிங்கனின் மரணத்துடன் பிலிமத்தலாவவுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கும் பல வரலாற்று குறிப்புகளை இன்றும் காண முடிகிறது. 

கண்ணுசாமி விக்கிரமசிங்கவாக
ராஜாதி ராஜசிங்கன் மரணத்தின் பின்னர் அரச மரபின்படி சிம்மாசனத்துக்குரியவனாக மன்னரின் மூத்த மனைவி உபேந்திரம்மாவின் சகோதரன் முத்துசாமியே தெரிவாகி இருந்திருக்க வேண்டும். ஆனால் மன்னர் இறந்ததன் பின்னர் அந்த சம்பிரதாயங்களை மீறி அரசனின் இரண்டாவது மனைவியின் சகோதரியின் மகனான கண்ணுசாமியை (ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனாக) 18 வது வயதில் அரசனாக  முடிசூட்டினார் பிலிமத்தலாவ. (11) இதன் மூலம் தானே நிழல் அரசனாக நீடிக்க முடியும் என்று கனவு கண்டார் அந்த “ரதல” பிரதம அமைச்சரான பிலிமத்தலாவ.

ஆனால் பிலிமத்தலாவயின் திட்டம் நிறைவேறவில்லை. “ரதல” பிரதானிகளில் அதிகம் நம்பிக்கைவைக்காத அரசன் நாயக்க வம்சத்து பிரதானிகளின் ஆலோசனைகளை அதிகம் பெற்றான். வழமைக்கு மாறாக “அதிகாரம்” பதவியை பிலிமத்தலாவ, எஹெலபொல மொல்லிகொட ஆகிய மூவருக்கு வழங்கி அவர்களுக்கு இடையில் தந்திரமாக முரண்பாடுகளை உருவாக்கிப் பேணினார் மன்னர்.

தனது கட்டுப்பாட்டில் அரசன் இல்லையென்றதும் சிறிது காலத்தில் ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்து கண்டியைக் கைப்பற்ற எடுத்த முயற்சியும் தோல்வியடைந்தது. அரசன் பிலிமத்தலாவையை மன்னித்துவிட்டபோதும் மீண்டும் அரண்மனைக்குள்ளேயே மன்னரைக் கொல்ல ஹசன் ஜா என்கிற ஒரு முகாந்திரத்துக்கு ஊடாக ஒரு முயற்சி நிகழ்ந்தது. இந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டதன பின் மன்னர் ராஜசிங்கனின் ஆணையின் பேரில் பிலிமத்தலாவவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் காலத்தில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட 20 பிரதானிகளின் பெயர்களை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் “சம்பாஷா” இதழில் வெளியிட்டிருக்கின்றன. (12)

பிலிமத்தலாவவின் இடத்துக்கு பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டவர் அவரது மைத்துனரான எஹெலபொல ஆனால் பின்னர் எஹெலபொல, கெப்பட்டிபொல உள்ளிட்ட “ரதல” பிரபுத்துவ பிரதானிகள் கூட்டுச்சதி செய்து இலங்கையின் இறுதி அரசனையும், இறுதி ராஜ்ஜியத்தையும் ஆங்கிலேயர்களுக்கு காட்டிக்கொடுத்து நம்பிக்கைதுரோகம் இழைத்தது கூட தமக்கு அந்த ராஜ்ஜியம் மீண்டும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தான். ஆனால் ஆங்கிலேயர்கள் தமது காரியம் முடிந்ததும் மொத்தமாக அனைவருக்கும் துரோகமிழைத்து ஒட்டுமொத்த நாட்டையும் சுருட்டிக்கொண்டனர்.

அதை எதிர்த்து கிளர்ச்சி செய்த “ரதல” தலைவர்களின் கிளர்ச்சியை ஒட்ட நறுக்கினார்கள். 1815 ஒப்பந்தத்தின் மூலம் கொடுத்த பதவிகளையும் தம்முடன் எஞ்சியிருந்த ரதல பிரபுக்களிடமிருந்து 1818இல் திரும்பப் பிடுங்கிக்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள். 1818இல் எந்த “ரதல” பிரிவினரும் தமது “ரதல” அந்தஸ்தைப் பயன்படுத்தி அதிகாரம் செலுத்த முடியாதபடி ஆங்கிலேயர்கள் சட்டமியற்றி அந்த ஒட்டுமொத்த ரதல குழாமினரினதும் எதிர்காலத்துக்கே முடிவு கட்டினார்கள்.(13)

உசாத்துணை:
  1. Jiggins (1979), Ryan (1993), Pieris (2001), Silva (2002)
  2. A HISTORY OF SRI LANKA by K. M. DE SILVA - C. HURST & COMPANY - 1981
  3. பொதுவாக சிங்களத்தில் “லேக்கம்” என்றால் செயலாளர் என்று பொருள் ஆனால் கண்டி ராஜ்ஜியக் காலப்பகுதியில் “மொஹொட்டலா” என்போரைத் தான் செயலாளர் என்று அழைத்தார்கள். - The Ceylon Almanac and Annual register - WILLIAM SkEEN, GOVERNMENT PRINTER, CEYLON - 1856
  4. Ralph Pieris - Sinhalese social organization: the Kandyan period - Ceylon University Press Board, 1956
  5. Caste Discrimination and Social Justice in Sri Lanka: An Overview - Kalinga Tudor Silva, P.P. Sivapragasam, Paramsothy Thanges - Indian Institute of Dalit Studies New Delhi - 2009
  6. Asiff Hussein - Caste in Sri Lanka - From Ancient Times to the Present Day - Printel (Pvt) Ltd - 2013
  7. සුජීව දිසානායක  - උඩරට රජවරුන්ට අභියෝගයක්‌ වූ රදළ බලය - திவயின – 30.11.2011
  8. Robert Knox - An Historical Relation Of Ceylon – 1681 - London
  9. அதே நூல் பக்கம் 60.
  10. (இரண்டாம் ராஜசிங்கன் போர்த்துக்கேயரை விரட்டுவதற்காக ஒல்லாந்தரோடு ஒப்பந்தம் செய்துகொண்டதாள் ஏற்பட்ட உறவு அது என்பதையும் கருத்திற்கொள்க.)
  11. மகாவம்சம் - தொகுதி இரண்டு – (சிங்கள மொழி பிரதி) - 
  12. සම්භාෂා - பக்கம் 285, 10வது இதழ் – பிரிவென் பிரிவு – கல்வித் திணைக்களம், 1999
  13. பிற்காலத்தில் மீண்டும் பெயரளவில் கண்டியத் தலைவர்களாக நிலமே மார்களை ஆங்கிலேய அதிகாரிகள் நியமித்தார்கள். அதுமட்டுமன்றி ஆங்கிலேயர்கள் இந்த “ரதல” குழாமினருக்குப் பதிலாக முதலியார் குழாமினரை அவர்கள் தோற்றுவித்தார்கள்.
நன்றி - தினக்குரல்

மேலதிக பரிந்துரைக்கான கட்டுரைகள்:

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates