Headlines News :
முகப்பு » » மலையக மக்களை ஏமாற்றுகிறதா ஐக்கிய தேசியக் கட்சி? - எஸ்.தியாகு

மலையக மக்களை ஏமாற்றுகிறதா ஐக்கிய தேசியக் கட்சி? - எஸ்.தியாகு


மலையக பெருந்தோட்ட மக்களை தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றி வருவதாக மலையகத்தில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கருத்துகள் வெளிவருகின்றன.

உண்மையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி மலையக மக்களை மறந்து செயற்படுகின்றதா? ஐக்கிய தேசியக் கட்சி மலையக மக்களை மட்டுமன்றி அதனுடைய ஆதரவாளர்களையும் மறந்து செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு மலையக மக்கள் வழங்கிய வாக்குகள் பெரும் பங்கு வகித்திருப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் பல மேடைகளிலும் வெளிப்படையாக பேசி இருக்கின்றார்கள். நன்றி தெரிவித்திருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார்கள்.இப்படி எல்லா நேரங்களிலும் அக்கட்சிக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்ற போதும் அவர்களுக்கு இக்கட்சி இதுவரையில் என்ன செய்திருக்கின்றது?என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருக்கின்றது.

மலையக மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஒரு அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு முன்பு வரை தேசிய மட்டத்தில் செயற்படக்கூடிய கல்வி இராஜாங்க அமைச்சு இருந்தது.

அது தவிர, தேசிய மொழிக் கொள்கைகள் என்ற ஒரு அமைச்சு இருக்கின்றது. இதைவிட எந்த ஒரு பொறுப்பான அமைச்சுப்பதவியோ அல்லது திணைக்கள தலைவர்களாகவோ மலையக மக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்களா என்றால் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.

அடுத்ததாக, வடகிழக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் கட்சிகள் தங்களுடைய பேரம் பேசுகின்ற சக்தியின் மூலமாக தேசிய மட்டத்தில் வேலை செய்யக் கூடிய வகையில் பல அமைச்சு பதவிகளையும் இராஜாங்க அமைச்சுகளையும் பெற்றுக் கொண்டுள்ளமையானது அச்சமூகத்துக்குக் கிடைத்த ஒரு வெற்றியாக கருதவேண்டுமே தவிர அதை விமர்சிக்க தலைப்படக்கூடாது.

அத்துடன் வடக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.இவை எல்லாவற்றையுமே வரவேற்கக் கூடிய விடயங்களாகவே பார்க்க வேண்டும்.

மறுபுறம் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசிய ரீதியாக செயற்படுவதற்கு அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதில் ஐக்கிய தேசியக் கட்சி என்றுமே விரும்புவதில்லை என்பது உண்மை.அதற்கு காரணம் என்ன? எம்மவர்களுக்கு தேசிய அமைச்சுக்களை பெற்றுக் கொண்டு சிறப்பாக செயற்பட முடியாது என்ற எண்ணமா?அல்லது இவர்களுக்கு தேசிய அமைச்சுகள் தேவையில்லை இவர்களுக்கு வாகனமும் பெயரளவில் ஒரு அமைச்சும் வழங்கினால் போதும் என்ற அலட்சியமா ? இல்லாவிடின் அதைப்பெற்றுக்கொள்வதற்குரிய பேரம் பேசுகின்ற சக்தி இவர்களுக்கு இல்லையா?

அல்லது ஏதோ ஒரு அமைச்சுப் பதவி கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் எம்மவர்கள் கிடைத்ததைப்பெற்றுக்கொண்டு வாழ்கின்றார்களா? கட்சி இவர்களைக் கண்டு கொள்வதில்லையா போன்ற பல கேள்விகள் எங்கள் மத்தியில் எழுகின்றன.

நல்லாட்சி அரசாங்கம் அமைந்த போது உண்மையிலேயே மலையக மக்கள் தங்களுக்கு எல்லாமே கிடைத்துவிட்டது போல உணர்ந்தார்கள்.ஏனென்றால் அந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் அவர்களுடைய பங்களிப்பு முக்கியமாக அமைந்தது.

மலையக மக்களுக்காக மாத்திரம் உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு உள்ளது.இந்த அமைச்சின் மூலமாக பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு வசதிகளை செய்வதற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. அது வரவேற்கப்படவேண்டியதொன்று தான்.

ஆனால் மலையக மக்களுக்கு தனியே வீட்டுப் பிரச்சினை மாத்திரம் தான் இருக்கின்றதா?அவர்களுக்கு ஏனைய பிரச்சினைகள் இல்லையா?அப்படியானால் ஏனைய பிரச்சினைகளை அவர்கள் எவ்வாறு தீர்த்துக் கொள்வது?

நவீன் திசாநாயக்க பராமுகம்

ஏனைய அமைச்சர்களுடன் இணைந்து எங்களுடைய பிரதிநதிகள் செயற்பட வேண்டும் என்று பலரும் கூறலாம்.அது உண்மையிலேயே சாத்தியப்படுமா?அவர்கள் எங்களுடைய மக்களுக்கு எதனையும் செய்வதற்கு முன்வருவார்களா?அப்படியானால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருக்கின்ற அமைச்சர் நவீன் திசாநாயக்க இதுவரை மலையக மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அவர்களுக்காக என்ன செய்திருக்கின்றார்? அல்லது எங்கேயாவது மலையக மக்களுக்காக அவர் குரல் கொடுத்திருக்கின்றாரா? சம்பளப் பிரச்சினையின் போது கூட பெருந்தோட்ட கம்பனிகளுக்கு சார்பாகவே அவர் இருந்தாரே தவிர அவர் மக்கள் சார்பாக இருக்கவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

நுவரெலியா மாவட்டத்தை கண்டு கொள்ளாத அமைச்சு

சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற பிரதிநிதிதான் அமைச்சர் கபீர் ஹாசிம். இவருக்குக் கீழேயே பெருந்தெருக்கள் அமைச்சு இயங்குகிறது.

எமது பிரதேச பாதை அபிவிருத்திக்கு இவ் அமைச்சு ஏன் முக்கியத்துவம் வழங்குவதில்லை? அது குறித்து ஏன் கூட்டணி பிரதிநிதிகளும் கேட்பதில்லை? அந்த அமைச்சு மலையக பிரதேசங்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டு வருவதாக அண்மையில் அம்பேகமுவையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் விசேட பிரதேசங்களுக்கான அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார்.அது மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கிக்கு சரிவை ஏற்படுத்தும் எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தமை முக்கிய விடயம்.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் தமது திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான அளவு நிதி கிடைப்பதில்லை. அதனாலேயே அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது என்று தெரிவித்தனர்..அப்படியானால் ஏன் நிதி வழங்கப்படுவதில்லை என்ற கேள்வி எழுகின்றது.நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்காக பல இடங்களிலும் அடிக்கல் நாட்டப்பட்டும் இன்னும் பணிகள் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றது.

அதே போல பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் முறையாக கிடைப்பதில்லை.தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை.இப்படி பல வழிகளிலும் நுவரெலியா மாவட்டம் ஓரம் கட்டப்பட்டு வருகின்றது.இது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிகாலத்திலேயே அதிகமாக நடைபெறுகின்றது.மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அந்த நிலைமை இருக்கவில்லை என்றே கூற வேண்டும்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சு பதவியும் முத்து சிவலிங்கத்திற்கு பிரதி அமைச்சு பதவியும் தேசிய ரீதியில் செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.அதனை எந்தளவுக்கு அவர்கள் பயன்படுத்தினார்கள் என்ற கதை வேறு, ஆனாலும் தேவையான அளவில் வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக இன்னும் நிலைமை மோசமடைந்திருப்பதை காண முடிகின்றது.குழப்பமான நிலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையான ஆதரவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கியிருந்தாலும் அதன் பின்பு ஏற்படுத்தப்பட்ட புதிய அரசாங்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் இருவருக்குமே அதே அமைச்சுப்பதவிகளே கிடைத்தன.

மனோ கணேசனுக்கு மேலதிகமாக இந்து கலாசாரம் வழங்கப்பட்டுள்ளது.இராதாகிருஷ்ணனிடம் இருந்த இராஜாங்க கல்வி அமைச்சு பறிக்கப்பட்டு விசேட பிரதேசங்களுக்கான அமைச்சர் என ஒரு புதிய அமைச்சு ஏற்படுத்தப்பட்டு அது வழங்கப்பட்டிருக்கின்றது.ஆனால் அதில் என்ன இருக்கின்றது.என்ன செய்யலாம் என்பது யாருக்குமே தெரியாது.இன்னும் அந்த அமைச்சிற்கான வர்த்தமானி அறிவித்தலை கூட வெளியிடமுடியாமல் அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

கல்வி இராஜாங்க அமைச்சு ஏன் பறிக்கப்பட்டது?

இராஜாங்க கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட பின்பு அவர் நாடு முழுவதும் தேசிய ரீதியில் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.அதற்கு காரணம் அவருக்கு கல்வித்துறையில் இருந்த அனுபவம்.அவருடைய சேவைகள் வடகிழக்கு மலையகம் உட்பட அனைத்துப் பகுதிகளுக்கு சென்றடைந்தது.ஒரு கட்டத்தில் அவருடைய சேவையை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கூட வெகுவாக பாராட்டியிருந்தார்கள். அப்படியான ஒரு நிலையில் என்ன காரணங்களுக்காக அதனை பறித்துக் கொண்டார்கள் என்பது புரியவில்லை.ஆனால் தற்போது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இராஜாங்க கல்வி அமைச்சர் இதுவரை மலையக கல்வி பற்றி வாய்திறக்கவேயில்லை. மட்டுமன்றி தற்போது கொழுந்து விட்டெரியும் பத்தனை கல்வியியற் கல்லூரி விவகாரம் தொடர்பில் எந்தவித பிரதிபலிப்புகளையும் காட்டாது மௌனமாகவே இருக்கின்றார்.

அரசியல் குழப்ப நிலை இருந்த கால கட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு அமைச்சு பதவியும் ஒரு பிரதி அமைச்சு பதவியும் வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்த போதிலும் அதனை வழங்கவில்லை.மேலும் இராதாகிருஸ்ணன் எம்.பி எழுத்து மூலமாக தனக்கு ஏற்கனவே தான் வகித்த இராஜாங்க அமைச்சுடன் இந்து கலாசார அமைச்சை இணைத்து தருமாறு பிரதமரிடம் கோரியிருந்த போதிலும் அது வழங்கப்படவில்லை.அதனை பெற்றுக் கொடுப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் வெளிவராத உட்பூசல்

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொரு கட்சியும் தன்னுடைய தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வருவதாகத் தெரிகிறது.அங்கே கூட்டணி என்பது வெறும் பெயரளவிலேயே இருக்கின்றது.இதனை நாம் வெளிப்படையாகவே காண முடியும்.குறிப்பாக அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சின் மூலமாக செயற்படுத்தப்படுகின்ற வீடமைப்பு திட்டம் அவருடைய கட்சியை மையப்படுத்தியதாகவே அமைவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்;.அதே போல மனோகணேசனும் கட்சி ரீதியாக செயற்படுவதாகவும் இராதாகிருஷ்ணன் அதிகமாக வடகிழக்கு சார்ந்த பகுதிகளிலேயே அபிவிருத்திகளை முன்னெடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பொழுது மூன்று தலைவர்களும் இணைந்து கூட்டாக தங்களுக்கு என்னென்ன அமைச்சு வழங்கப்பட வேண்டும்.எந்தெந்த திணைக்களங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் முன்வைக்கவில்லை ?அப்படி முன்வைக்கப்பட்டு இதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாங்கள் யாரும் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற அழுத்தத்தை கொடுத்திருக்கலாமே ? ஆனால் அது நடைபெறவில்லை.

தமிழ் முற்போக்குக்கூட்டணியை ஏமாற்றுகிறதா ஐ.தே.க?

தமிழ் முற்போக்கு கூட்டணியை அரசாங்கம் பெரியளவில் கண்டு கொள்வதாக தெரியவில்லை. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்பு ஏனைய மாவட்டங்களைப் பொறுத்தளவில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அவை எதுவும் மலையக பகுதிகளில் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை.

சம்பள உயர்வு விடயத்திலும் கூட இதுவரையில் அரசாங்க தரப்பில் இருந்து எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை வெறுமனே காலம் இழுத்தடிக்கப்படுகின்றதே தவிர எதுவும் நடந்ததாக தெரியவில்லை. எதுவும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை. எனவே என்னதான் மலையக மக்கள் யானை சின்னத்துக்கு வாக்குகளை வாரி வழங்கினாலும் ஐ.தே.க பெருந்தோட்ட மக்கள் மீதோ அல்லது அவர்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் மீதோ அதிகளவில் கவனம் செலுத்துவதில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

 இந்நிலை தொடருமானால் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல்,ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல்களில் மலையக பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு வெகுவாக குறைவடையும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.அதனை நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் காணக்கூடியதாக இருந்தது.இதனை மாற்றி அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் நடவடிக்கை எடுப்பார்களா? மலையக மக்களின் அபிவிருத்திக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமா?

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates