பண்டைய ஏழு கோறளைகளுக்கு சொந்தமான குளக்கரை (வாவிகளையும், குளங்களையும் அண்டிய கிராமங்கள்) கிராமிய கலாசாரத்திலும் பிராந்திய அதிகார மையங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. குளக்கரை கிராமங்களில் கிராமிய மக்களின் பிரபுக்களாகத் திகழ்ந்தவர்கள், இந்தக் கோத்திரச் சபைகளின் அங்கத்தவர்களாக கடமையாற்றினார்கள். கிராமங்கள் சார்ந்த முடிவுகளை மேற்கொள்கையில், இவர்கள் நிறைவேற்று அதிகாரிகளாக செயற்பட்டார்கள்.
கோத்திர சபை விசாரிக்கக்கூடிய சாதிய வழக்குகளை 16 பிரிவுகளாக அடையாளம் கண்டோம் என்கிறார் பேராசிரியர் டீ.ஈ.ஹெட்டி ஆராச்சி. அவர் எழுதிய “சிங்கள சிரித் சங்ராய (1979)” (சிங்கள சட்டக் கோவை) என்கிற நூலில் இதைப் பட்டியல் படுத்தியிருக்கிறார்.
- பிற சாதியில் மணமுடித்து ஒன்று கலத்தல்
- சாதிக்கு ஒவ்வாததைச் செய்தல். (கீழ் சாதி என்று கருதப்படும் ஒருவரை திருமணம் முடித்தல் அல்லது அப்படிப்பட்ட ஒரு ஆணுடன் செல்தல்.)
- கணவர் இறந்ததும் இன்னொரு வெளி ஆணுடன் “கள்ளத் தொடர்புற்று” கர்ப்பமடைதல்
- தமிழ், முஸ்லிம் (மரக்கல) அல்லது வேறு வெளி பெண்ணுடன் பாலுறவு கொள்தல்.
- மாமியாரின் மகளைத் தவிர வேறெந்த உறவுப் பெண்ணுடனும் கூடுதல்.
- கோத்திர சபையால் தண்டனை பெற்று சாதிக்கு அவப்பேரை ஏற்படுத்திய ஒருவருடன் உறவைப் பேணுவது
- வேறு சாதிக்காரரின் திருமணப் பேச்சு சடங்கில் (பருசம்) உணவு உண்ணுதல்.
- தண்டனை பெற்று தடை விதிக்கப்பட்ட ஒருவருடன் சாதி சடங்குகளை பகிர்தல்.
- குறைந்த சாதிக்காரர்களுடன் சேர்ந்து சொந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை நிந்திப்பது.
- காரணமின்றி ஒருவரை நிந்திப்பது.
- கோத்திர சபையின் கௌரவத்தைப் பாதிக்கக் கூடியவகையில் அவமதித்தல்.
- கோத்திர சபையின் தீர்ப்புக்கு கீழ்படியாமை
- முன்னனுமதி பெறாமல் கோத்திர சபையில் பேசுதல்.
- சபையில் கைகால்களை உயர்த்திக் கதைத்தல்
- ஊர்த்தலைவரின் ஆணையின்படி சபையின் பிரதானிகளுக்கு வழங்கவேண்டிய உபசரிப்பை செய்யாமை
- சபையிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளுமுன் வேறொரு முறைப்பாட்டை முன்வைத்தல்.
கோத்திர சபை வழங்கும் தண்டனைகளும் – தண்டப்பணமும்
- 1 - 5 வரையான பிரிவுகளை மீறியவர்கள் 500 வெள்ளிகள்
- 6-7 ஐ மீறியவர்களுக்கு 50 வெள்ளிக்கு மேற்படாமல்
- 10 ஐ மீறியவர்களுக்கு 12 வெள்ளிகள்
- 11 ஐ மீறியவர்களுக்கு 7 வெள்ளிகள்
- 12ஐ மீறியவர்களை சாதியிலிருந்து (ஊரிலிருந்து) வெளியேற்றல்
- 12-14 ஐ மீறியவர்களுக்கு 2 வெள்ளிகள்
- 15 ஐ மீறியவர்களுக்கு 7 வெள்ளிகள்
- 16 ஐ மீறியவர்களுக்கு 2 வெள்ளிகளும் வெற்றிலைகளும்
வடமத்திய மாகாணத்திலுள்ள “புல் எளிய” (Pul Eliya) என்கிற கிராமத்தை 1954 அளவில் தனியாக ஆராய்ச்சி செய்த ஈ.ஆர்.லீச் (E. R. Leach) (1) அந்த கிராமத்தைப் பற்றிய 368 பக்கங்களைக் கொண்ட ஒரு முக்கிய நூலை 1961 வெளியிட்டார். இந்த நூல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பதிப்புகள் கண்டது. இந்த கிராமத்தை அவர் தெரிவு செய்ததற்கு முக்கிய வரலாற்றுக் காரணிகள் உண்டு.
இந்த நூலில் அவர் “வறிக சபா” பற்றிய தனியான ஒரு அத்தியாயத்தை எழுதி ஒரு வழக்கொன்றைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.
கொழும்பிலிருந்து வந்து குடியேறிய ஆர்லிஸ் என்கிற தச்சன் மணமுடித்திருக்கும் பெண் வேறு சாதியைச் சேர்ந்தவள் என்று ஒரு முறைப்பாட்டை இந்த கோத்திர சபைக்கு கொண்டு சென்றார் கிரிஹாமி என்கிற நபர். இந்த வழக்கு இரவு பகலாக நடந்திருக்கிறது. இறுதியில் 550 வெள்ளிகளை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு புலங்குலம திசாவவிடம் கோத்திர சபைத் தலைவர் ஒப்படைத்திருக்கிறார்.
அதன் பின் பெண் தரப்பைச் சேர்ந்த இரண்டு மைத்துனர்கள் கொழும்பிலுள்ள ஆர்லிஸின் வீட்டுக்கு விசாரிப்பதற்காகச் சென்றுள்ளார்கள். அங்கு அவர்கள் ஆர்லிஸ் ஒரு கொவிகம சாதியை (வெள்ளாள சாதியை) சேர்ந்தவர் தான் என்பதை உறுதிசெய்துகொண்டு திரும்பியிருக்கிறார்கள். அதாவது “வண்ணகுலசூரிய ஆர்லிஸ் பெர்னாண்டோ” என்கிற பெயர் கராவ சாதிக்குரிய பெயர் என்கிற புரிதலில் தான் இந்த வழக்கு நடந்திருக்கிறது. மனைவியின் அதே உயர்சாதியைச் சேர்ந்தவர் தான் ஆர்லிஸ் என்பது நிரூபனமான போதும் கோத்திரம் வித்தியாசம் என்கிற வாதத்தை அவர்கள் கிளப்பினார்கள். ஆக கோத்திர சபை தண்டப்பணத்தை 150 வெள்ளி ஆக குறைத்து கூடவே உபசரிப்புச் செலவு வெற்றிலை என்பவற்றை ஏற்கும்படி மறு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த பணத்தை கோத்திரசபை உறுப்பினர்களான ஆறுபேரும் பிரித்துக்கொள்வது வழக்கம்.
இந்த நூலைப் பற்றி 2015ஆம் ஆண்டு ராவய பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை வெளியாகியிருந்தது. கட்டுரையாளர் சில ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்துக்குச் சென்று சிறு கள ஆய்வொன்றை செய்திருக்கிறார். (2) இப்போது அங்கு நிலைமைகள் மாறிவிட்டன. புல் எளிய கிராமத்தில் 73வயதுடைய வன்னிஹாமிகே ஹெரத்ஹாமி என்பவர் இப்படி கூறியிருக்கிறார்.
“தண்டப்பணமாக இத்தனை வெள்ளிகளை கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிப்பார்கள். தண்டனைக்கு உள்ளானவர் அதை கேள்வியின்று செலுத்திவிடுவார். அத்தோடு பிரச்சினை தீர்ந்தது. பணத்தைப் பெற்றதும் கோத்திர சபைத் தலைவர்கள் அதை எடுத்துக்கொண்டு தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள். பணத்தைக் கொடுத்துவிட்டால் புறமணத் தடை எற்றுக்கொள்ளப்பட்டுவிடுகிறது. இல்லையென்றால் அது பிழை என்றாகிவிடுகிறது. இது விசித்திரமானதொரு முறைமை. இது ஒரு மோசடிமிக்க சுரண்டல் அல்லவா?
இந்த கோத்திர சபை வெறும் தமது குலக்கோத்திரங்களுக்கு இடையில் மட்டும் வேறுபாடு பார்ப்பதில்லை. மாறாக தமிழர் – சிங்களவர் போன்ற வேற்று இனத்தவருடன் கலப்பது கூட தண்டனைக்கு உரிய குற்றமாக கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.
லீச் இந்த நூலில் ஓரிடத்தில் இப்படி விளக்குகிறார்.
இனமும். சாதியும், கோத்திரம் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டவை. உதாரணத்திற்கு புல் எளிய, மருதமடு ஆகிய இரண்டு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இன, சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் கோத்திரம் வேறானதாக இருந்தால் அவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தான் பொருள். அவர்களுக்கு இடையில் மணமுடிக்க முடியாது.
காணி விற்பனை சம்பந்தப்பட்ட விடயத்திலும் அதே கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்குத் தான் முன்னுரிமை அதன் பின்னர் தான் அடுத்தடுத்த படிநிளைவரிசையில் பார்த்து கோத்திர சபை அனுமதியளிப்பது அன்றைய வழக்கம். காணிகள் எப்படி விற்கப்பட்டன என்பது பற்றிய சில சம்பவங்களை தனது நூலில் லீச் விளக்கியுள்ளார்.
உசாத்துணை:
- E. R. Leach – “Pul Eliya: A Village in Ceylon” - Cambridge University Press, Jan 2, 1961
- கே.சஞ்சீவ – “மல்வத்து ஓய்வுக்கு அண்மித்த ராஜகுருக்களின் புல் எளிய” (මල්වතු ඔය අසල රාජගුරුවරුන්ගේ පුල්එළිය) - “ராவய” பத்திரிகை – 21.06.2015
நன்றி - அரங்கம் - பட்டறிவு
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...