Headlines News :
முகப்பு » , , , , , » 1800களில் இலங்கை: காலனித்துவ நூல்கள் வழியாக... - என்.சரவணன்

1800களில் இலங்கை: காலனித்துவ நூல்கள் வழியாக... - என்.சரவணன்


இந்த பத்தி 1800களில் (19வது நூற்றாண்டில் இலங்கை பற்றிய அரிதான விபரங்களை வெளிப்படுத்திய காலனித்துவக் கால வெளியீடுகள் அறிக்கைகள் என்பவற்றை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து வைப்பதற்காக தொடங்கப்படுகிறது. இலங்கையில் அரசியல், சமூக, பொருளாதார, வரலாற்று விடயங்களை ஆராய்பவர்களுக்கு உதவும் ஒரு வழிகாட்டி உசாத்துணையாக பதிவு செய்வதற்கும், கூடவே அவை வெளியிட்ட முக்கிய விபரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவுமே இந்தப் பத்தி சில வாரங்களுக்குத் தொடரும்.

காலனித்துவ கால இலங்கை பற்றிய குறிப்புகளை ஆராய்பவர்களுக்கு உதவும் பல்வேறு முக்கிய ஆவணங்களின் வரிசையில் “இலங்கை நாட்காட்டி” (The Ceylon Calendar - almanac for the year OF OUR LORD «....»), “பெர்குசன் டிரக்டரி” (The Ceylon Almanac and Ferguson‟s Directory) ஆகிய இரண்டும் முக்கியமானவை. இவை இரண்டுமே ஆண்டுதோறும் அன்றைய அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டு வந்த பல நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட பெரிய அறிக்கைகள். இவற்றை இன்று காண்பதும் தேடிக்கண்டுபிடிப்பதும் லேசான வேலையல்ல. இலங்கையின் சுவடிகூடத்திணைக்களத்திலும், நூதனசாலை நூலகத்திலும் இன்னும் சில பழைய நூல் சேகரிப்பு இடங்களில் மாத்திரமே காணக்கிடைக்கூடியவை.

இலங்கையின் தொகைமதிப்பு புள்ளிவிபர சேகரிப்பும், வெளியீடும் 1871 இலேயே ஆரம்பித்துவிட்டன. அதேவேளை 1944 டிசம்பர் மாதம் தான் டொனமூர் அரசியல் திட்டம் அமுலில் இருந்த காலத்தில் இலங்கை குடிசன மதிப்பீட்டு திணைக்களம் (Census Department) ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது வரை இலங்கையின் மக்கள், சமூகம், வர்த்தகம், விவசாயம், மருத்துவம், வரலாற்றுக் குறிப்பு, நாட்டின் மொத்த வரவு செலவு என அத்தனையையும் துல்லியமாக பல நூற்றுக்கணக்கான பக்கங்கங்களில் பல வருடங்களாக தந்தவர் தான் பெர்கியுசன்.

“The Ceylon Calendar - almanac for the year” என்பதை இலங்கையின் பஞ்சாங்க நாட்காட்டி என்று அழைக்கலாம். ஆனால் அது ராசிபலன்களை அறிவிக்கும் வைதீக அர்த்தத்திலல்ல. மிகவும் விஞ்ஞானபூர்வமான ஏராளமான நடைமுறைத் தகவல்களைக் கொண்டிருப்பது இது. வருடாந்தம் இந்தத் தகவல்கள் கிராமமாக புதுப்பிக்கப்பட்டுவந்ததால் ஆரம்பத்தில் இதனை தொகுப்பதற்கு கொடுக்கப்பட்ட விலை அதற்குப் பிறகு அந்தளவு தேவைப்பட்டிருக்காது.

முக்கியமான வரலாற்றுக் குறிப்புகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், குடித்தொகை புள்ளிவிபரங்கள், அரச நீதி, நிர்வாகத்துறைகள் மட்டுமன்றி பொது விடுமுறை நாட்கள், பௌர்ணமி நாட்கள், பிறப்பு, இறப்பு, திருமணம் பற்றிய விபரங்களைக் கூட காணக் கிடைக்கின்றன. ஆங்கிலேயர்கள் இலங்கையை 1818இல் தான் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். ஆனால் 1833இல் தான் இலங்கையை ஆட்சி செலுத்துவதற்கான முதலாவது அரசியல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

“இலங்கை பஞ்சாங்க நாட்காட்டியை” அவர்கள் அதற்கு முன்னரே வெளியிட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. எனது சேகரிப்பில் ஒரு சில உள்ளன அதில்  பழமையானது 1827 ஆம் ஆண்டு வெளிவந்தது. எனவே இது எப்போது முதன் முறை வெளியிடப்பட்டது என்று அறியக்கிடைக்கவில்லை. 1827ஆம் ஆண்டு வெளிவந்த அறிக்கை 327 பக்கங்களைக் கொண்டிருக்கிறது.

ஆங்கிலேயர்கள் இலங்கைக்குள் வந்ததன் பின்னர் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நினைவுபடுத்தும் நாட்குறிப்பும் 12 மாதங்களிலும் குறிப்பிடப்படுகின்றன. நாளாந்த சூரிய உதயம், அஸ்தமனம், சந்திர உதயம், அஸ்தமனம் என்பவை பற்றிய கால அட்டவணையும் அடங்குகிறது.

இலங்கையில் தரித்துநிற்கும் கப்பல்கள், போக்கப்பல்களின் விபரங்கள், அவற்றின் கப்டன்கள், கப்பலில் அடங்கியுள்ள பீரங்கிகளின் எண்ணிக்கை என்பவை கூட பட்டியலிடப்பட்டுள்ளன. 
இந்தியாவில் இருந்து கப்பல்கள் மூலமும் தோணிகள் மூலமும் இலங்கைக்கு கொண்டுரவரப்படும் பொருட்களுக்கான இறக்குமதி தீர்வை வரி பற்றிய நீண்ட பட்டியல் ஒன்றும் உள்ளது. சாராயம் என்பவற்றுடன் கஞ்சாவுக்கும்  தீர்வை விதித்திருப்பதன் மூலம் ஆங்கிலேய ஆட்சியில் கஞ்சா அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருப்பதும் தெரிகிறது.

இலங்கையில் அப்போது இயங்கிய மிஷனரி அமைப்புகள் அவை நடத்திய பாடசாலைகளின் எண்ணிக்கை, அவை கொண்டிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி பிரதேச வாரியாக பட்டியலிட்டிருக்கிறார்கள்.

1821-1853 வரையான இலங்கைக்கான வரவு செலவு
85ஆம் பக்கத்தில் காலனித்துவ அடிமைகளை (Registy of Colonial Slaves) பதிவு செய்யும் காரியாலயம் பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளன.

தூரப் பயணங்கள் மேற்கொள்கையில் தாண்ட வேண்டிய பிரதேசங்கள், அந்தந்த பிரதேசங்களை அடைவதற்கு எடுக்கும் மைல் தூரம், இடையில் தங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்கள் அவற்றுக்கு உள்ள தூரம் என்பன பற்றிய விபரமான நீண்ட பட்டியல் சில பக்கங்களை நிறைத்துள்ளன. உதாரணத்துக்கு கண்டியிலிருந்து யாப்பானத்துக்கு தம்புள்ளை, மிஹிந்தலை வழியாக செல்லும் வழியில் உள்ள இடங்களில் தங்குமிடங்களாக கூலிக் கொட்டகைகள் (Cooly shed), தங்குவிடுதிகள் பற்றிய விபரங்களும் எதிர்கொள்ளக்கூடிய ஆறுகள், பாலங்கள், நெல்வயல்கள், மிஷனரி நிலையம், பொலிஸ் நிலையம், எல்லைகள், துறைமுகங்கள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.

அன்றைய காலிமுகத் திடல் வழியாக போக்குவரத்துக்காகவும், பொருட்களை கொண்டு செல்வதற்காகவும் பயன்படுத்தப்பட்ட மாட்டுவண்டில்கள்
மாட்டு வண்டில்களுக்கும் அவற்றை ஓட்டும் கூலிகளுக்குமான வரிகள், சட்ட விதிகள் பற்றி இரு பக்கங்களில் சில விபரங்கள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு
  • கூலிக்கு ஒரு நாள் சம்பளம் - 6 பென்னிகள்
  • கொழும்பு – மாத்தறை கூலி – 6 சில்லிங்கள்
  • கொழும்பு - மட்டக்களப்பு – ஒரு பவுன், 4 சில்லிங்கள்
  • கொழும்பு – யாழ்ப்பாணம் – 18 சில்லிங்கள்
விதிகளில் சில...
  • 40 இறாத்தல் பொதிக்கு மேல் எந்தவொரு கூலியும் எற்றிச்செல்லக் கூடாது.
  • கூலிகளின் வேளை நேரம் காலை 7 – மாலை 5.30 வரை. இரண்டு மணித்தியால உணவுநேர ஓய்வுண்டு
  • சகல மாட்டு வண்டில்களுக்கும் இலக்கத்தகடு இருக்கவேண்டும்.
  • முறைப்பாடுகள், அல்லது மேலதிக உரிய கொடுப்பனவுக்கு மேல் கேட்கும் கூலிகள் தண்டிக்கப்படுவார்கள்.
இங்கிலாந்தின் பணம் தான் இலங்கையிலும் புழக்கத்தில் இருந்தது 1971ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை பிரித்தானிய பணம் இப்படித்தான் கணக்கெடுக்கப்பட்டது .
12 பென்னிகள் = 1 சில்லிங்
20 சில்லிங் 1 பவுன்
அதாவது 1 பவுன் 240 பென்னிகள்
12 Pennies (Pence) = 1 Shilling | 20 Shillings = 1 Pound | So 1 Pound = 240 Pence 

இந்த விதிகள் உருவாக்கப்பட்ட ஆண்டு 1800என்று காணப்படுகிறது. அதாவது கண்டியைக் கைப்பற்றி இலங்கை முழுமையும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்னர்.


1856 இல் வெளியான பதிப்பில் 110வது பக்கத்திலிருந்து தேசாதிபதி சுதேச மொழிப் பரீட்சை பற்றி வெளியிட்ட குறிப்புகளை காண முடிந்தது. சுதேச மொழிகளைக் கற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களுக்கு அப்போது பதவிகளும், பதவி உயர்வுகளும், சம்பள உயர்வுகளும் வழங்கப்படும் வழக்கம் இருந்ததால் அதை ஊக்குவிக்கும்வகையில் இந்த பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது. இந்தளவு கடினமான ஒரு மொழிப் பரீட்சை வேற்று மொழிக் காரர்களுக்காக அன்று இருந்திருக்கிறது என்பது வியப்பைத் தருகிறது.

கீழ்வரும் இரண்டு அல்லது மூன்று நூல்களை மாணவர்கள் மொழிபெயர்த்திருக்கவேண்டும். ஓலைச்சுவடிகள் பரீட்சையாளரால் வழங்கப்படும். அவை சீல் செய்யப்பட்டு காலனித்துவ செயலாளருக்கு அனுப்பப்படவேண்டும்.
சிங்களத்தில் இருந்து:
  • பால பிரபோதன
  • பாடசாலை ஆணையகத்தால் பிரசுரிக்கப்பட்ட வரலாற்று நூல்கள்
  • சிங்களச் சட்டம்
  • பாலியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட தம்ப்பியாவ
  • பன்சிய பனஸ் ஜாதக 
  • தூபவன்ச
  • ராஜாவலிய

தமிழில் இருந்து:
  • நீதிவெண்பா
  • திருக்குறள்
  • தேசவழமை சட்டம்
  • சைமன் காசிச்செட்டியின் இலங்கை வரலாறு
  • கல்லாடம்
  • அரசாங்க சட்டங்கள்
  • கம்பராமாயணம்
  • மகாபாரதம்

இந்த பரீட்சை பற்றிய விபரங்கள் அன்றைய ஆளுனரால் உத்தியோகபூர்வ அரச வெளியீடுகளினூடாக அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும். ஜேம்ஸ் 1852 ஆம் ஆண்டு வெளியிட்ட “The sidath sangarawa” என்கிற சிங்கள இலக்கணம் பற்றிய ஆய்வு நூலிலும் மேலதிக அடிக்குறிப்புகளோடு இந்த அறிக்கையைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

சிவில் சேவைக்கான இந்த மொழிப் பரீட்சை ஆண்டுதோறும் இரண்டு தடவைகள் ஜனவரி, யூலை ஆகிய மாதங்களில் இடம்பெற்றிருக்கிறது.

32ஆம் பக்கத்தில் லெயார்ட் (Layard) என்பவர் சந்தித்த வெவ்வேறு 35 சாதியினர் பற்றிய பட்டியல் காணப்படுகிறது. சிங்களம், தமிழ் சமூகங்களை கலந்து பட்டியலிடப்பட்டிருக்கிறது.

காலனித்துவ காலத்தில் முதலீட்டாளர்களைக் கவர்வதற்காகவும், ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் என்போருக்கு துல்லியமான தகவல்களையும், தரவுகளையும் வழங்குவதற்கான வழிகாட்டியாக இந்த வெளியீடு பெரிதும் பயன்பட்டன.

அடுத்த நூல் அடுத்த இதழில்...

நன்றி - அரங்கம்


Share this post :

+ comments + 1 comments

Thanks for informing interesting histories!

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates