Headlines News :
முகப்பு » , , , , » பண்டைய சிங்களக் கோத்திர பஞ்சாயத்து இயங்கியது எப்படி? (3) - என்.சரவணன்

பண்டைய சிங்களக் கோத்திர பஞ்சாயத்து இயங்கியது எப்படி? (3) - என்.சரவணன்


1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ விடுதலைப் போராட்டத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்களப் படைகளை ஆங்கிலேயப்படைகள் மிகவும் கொடூரமாக ஒடுக்கின. இந்தக் கிளர்ச்சியை அடக்குவதாகக் கூறிக்கொண்டு நாட்டின் வளங்களை எப்படி எல்லாம் அழித்தொழித்தார்கள் என்பது தனிக்கதை அவற்றைப் பற்றி தமிழில் போதிய அளவு பதிவு செய்யப்படவில்லை. 

1833இல் இலங்கைக்கான நிர்வாக சீர்த்திருத்தத்தை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தும்போது ஏற்கெனவே இலங்கையில் கிராம சபைகள் நடைமுறையில் இருந்தன. கிராம சபைகளுக்கென்று இலங்கையில் நீண்ட வரலாறு உண்டு. அதை இல்லாதொழித்துவிட்டே ஆங்கிலேயர்கள் தமது ஆட்சி அலகை அமுலுக்கு கொண்டுவந்தார்கள். ஆனால் இலங்கை மக்களை வெறுமனே தமது ஆங்கிலேய பாணியிலான அதிகார அமைப்புக்குள் அடக்கிவிடுவது அவர்களுக்கு இலகுவானதாக இருக்கவில்லை எனவே அவர்கள் மீண்டும் 1848இல் பழைய கிராம சபையையே மீண்டும் அமுல்படுத்த நேரிட்டது. அந்த முறையை மீண்டும் சீர்திருத்தி 1856இல் அன்றைய ஆங்கிலேய தேசாதிபதி ஹென்றி வோர்ட் கிராம சபைக்கு மீண்டும் புத்துயிரளித்தார். அதன் பின்னர் உள்ளூராட்சி சபைகள் இலங்கையில் ஆங்கிலேயர்களால் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டபோதும் ஆங்கிலேயர்கள் இலங்கையைக் கைவிட்டுவிட்டுச் சென்றதன் பின்னரும் கூட சுதேச ஆட்சியாளர்களால் கிராம சபை முறை அப்படியே பேணப்பட்டது. இலங்கையின் ஆட்சி அதிகார முறையின் ஒரு அங்கமாக 1980 மாவட்ட அபிவிருத்தி சபை வரும் வரை இந்த கிராம சபை நீடித்தது. மாவட்ட அபிவிருத்தி சபை கூட இலங்கையின் இனக்குழுமங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியாகவே அறிமுகப்படுத்தினார்கள். குறிப்பாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதையே முன்மொழிந்தார்கள்.

1980களில் களனி பல்கலைக்கழகத்தின் சிங்களப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றுக்காக நுவரகலாவி என்கிற கிராமத்தில் இருந்த கோத்திர சபை சட்டங்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்தினார்.

“இந்த நிகழ்ச்சியை பார்த்த பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று அந்த கிராமத்தில் நிலவிய கோத்திர சபை பற்றிய கள ஆய்வை மேற்கொள்வதற்காக சென்று அங்குள்ள பெரியவர்களை அணுகியிருக்கிறார்கள். அவர்களோ இவர்களைத் திட்டியிருக்கிறார்கள். இவை பாரம்பரியமாக காக்கப்பட்டுவரும் இரகசியம் என்றும், அந்த விபரங்களை பகிரங்கமாக தம்மால் கதைக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.” என்று பேராசிரியர் பள்ளியகுரு தெரிவித்திருக்கிறார்.

இந்த கோத்திர சபைகள் இறுதியில் பெரும்பாலும் குளங்களை அண்டிய கிராமங்களில் பேணப்பட்டு வந்திருக்கிறது. மேலும் கிராமங்கள் சாதிவாரியாக இருந்திருக்கிறது. அவற்றுக்கென்று தனி கோத்திர சபைகள் இயங்கியிருக்கின்றன. அந்தந்த கிராமத்துக்குரிய குலக் கட்டுப்பாடுகள் தனித்துவத்துடன் காணப்பட்டிருக்கின்றன. எனவே இந்த சட்டங்களை பொதுமைப்படுத்தி விளக்குவது ஆய்வாளர்களுக்கு சிரமங்கள் உண்டு.

பல்வேறு பட்ட நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் காலத்துக்கு காலம் முன்னெடுக்கப்பட்டவேளை கிராமங்களின் இயல்பு நிலை சீர்குலைந்தன. குடியேற்றங்களால் கிராமங்களில் பல்வேறு சமூகக் குழுவினரும், பல்வேறு சாதியினரும் விவசாய குடியேற்றங்களில் குடியேற்றப்பட்டு கலந்துபோயினர். எனவே “தூய” கிராமம் என்றோ, “தூய” சாதியென்றோ ஒன்று இன்று கிடையாது.” என்கிறார் சந்திரசிறி பள்ளியகுரு.

இலங்கையின் ஆதிவாசிகள் பற்றிய ஆய்வொன்றை கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2011 மேற்கொண்ட இருவர் (Premakumara De Silva Asitha G Punchihewa)  தமது கள ஆய்வுக்காக சில வேடுவர் பிரதேசங்களை தெரிவுசெய்திருந்தனர். (1) அதில் ஒரு பிரதேசம் ஹேனநிகல (Henanigala) என்கிற பிரதேசம். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின்  போது அவர்கள் இந்த இடத்துக்கு குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். 302 குடும்பங்களையுடைய 1078 பேரைக் கொண்ட அந்த சமூகத்தினர் மத்தியில் இருந்த கோத்திரங்களை அவர் அட்டவணைப்படுத்தியிருந்தார் அந்த ஆய்வில். ஆயிரம் பேரைக் கொண்ட ஒரு சமூகத்திலேயே எத்தனை கோத்திரக் குழுக்கள் உள்ளன என்பதைக் காணலாம். இந்த அட்டவணையில் ஏனையோர் என்று இருப்பவர்கள் தமது கோத்திரம் எது என்பதை அடையாளம் காண முடியாது போயுள்ளவர்கள்.



இந்த கோத்திர சபைகள் இறுக்கமான - உறுதியான சட்டத்தை நிலைநாட்டும் என்கிற நம்பிக்கை நீண்ட காலமாக மக்கள் மத்தியில் இருந்து வந்திருக்கிறது. அது தான் பல காலம் அதன் மீதான மதிப்பும், மரியாதையும் எக்காலத்திலும் இருந்திருக்கிறது.  செல்வாக்குள்ள ஒருவராலோ, நட்பைக் கொண்ட ஒருவராலோ குறித்த வழக்கொன்றின் தன்மை மாற்றப்படுவதோ அல்லது சீர்கெடுவதோ பெருங்குற்றம். அதனை அவர்கள் “புளத் வெறெத்த” (வெற்றிலைச் சாதி) என்று அழைத்தார்கள்.  கோத்திர சபை கூடுமிடங்களில் உபசரிப்பு செய்யும் பணிகளை ஒருவருக்கு ஒப்படைக்கும் பட்சத்தில் அதனை அலட்சியப்படுத்தினால் அதனை “பத் வெறெத்த” (சோற்றுச் சாதி) என்று அழைத்திருக்கிறார்கள்.

 “சாதி” என்பதைத் தான் அவர்கள் “வெறெத்த” என்றார்கள்.

கோத்திர சபைகள் கூடுவதற்கென்று நிரந்தர கட்டடம் எதுவும் இருந்ததில்லை. குற்றம் சுமத்த்தப்பட்டவர்கள் தமது உறவினர்களுடன் சேர்ந்து கோத்திர சபை கூடுவதற்கு அளவான இடத்தில் ஒரு மடுவத்தை ஏற்படுத்த வேண்டும். அதைச் சுற்றி கயிறு கட்டி எல்லையிட வேண்டும். சபை கூடும் நாள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தமது உறவினர்களுடன் அங்கு சமூகமளிக்க வேண்டும். கிராமத்து பன்சலையின் பிக்கு, மருத்துவர், விதானையார், பயிர்ச்செய்கை சேனைத் தலைவர், குலத் தலைவர் ஆகிய ஐவரும் அங்கு வந்து அமர்ந்ததும் விசாரணை ஆரம்பமாகும். சாட்சிகளை விசாரித்து குற்றத்தை அடையாளம் காண்பார்கள். இதன்போது நீதியைப்ப் பேணுவதற்காக விசாரணை முடியும்வரை குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து எந்தவொரு ஆகாரத்தையும் உண்பது சபையில் கலந்துகொள்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்.

குற்றம்சுமத்தப்பட்டவர்கள் கொவிகம சாதியைச் சேர்ந்தவர்களாயின் மேற்படி ஐவரும் அந்த விசாரணையை மேற்கொள்வார்கள். கொவிகம அல்லாதோர் என்றால் அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் அந்த வழக்கை நடத்தி கிராம சபையிடம் அதை ஒப்படைக்கவேண்டும்.

ஒரு பெண் சுயமாக வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடிப்பது “கராபு குலய” என்று சிங்களத்தில் அழைக்கப்பட்டது. அது பெருங்குற்றமாக கருதப்பட்டது. 
உசாத்துணை :
  1. Socio- Anthropological Research Project on Vedda Community in Sri Lanka By Premakumara De Silva Asitha G Punchihewa - August 2011 - Department of Sociology University of Colombo
நன்றி - அரங்கம்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates