Headlines News :
முகப்பு » » கிடைத்ததையும் தக்க வைத்துக்கொள்ள முடியாதா?

கிடைத்ததையும் தக்க வைத்துக்கொள்ள முடியாதா?


நுவரெலியா மாவட்டத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்துக்கு இரண்டு உயர்கல்வி நிறுவனங்களே இருக்கின்றன. கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை மற்றும் பத்தனை தேசிய கல்வியியற்கல்லூரி என்பனவே அவை. கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியாகின்றன. பத்தனை கல்வியியற் கல்லூரி உருவாகி 27 வருடங்களாகின்றன. இந்த இரண்டு கல்வி நிறுவனங்களிலும் கற்கை நெறிகளையும் ஆசிரியர் பயிற்சி நெறிகளையும் பூர்த்தி செய்தவர்கள் மலையக பிரதேசங்களில் ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும் , ஆசிரிய ஆலோசகர்களாகவும் , கல்வி பணிப்பாளர்களாகவும் தமது பணியை செவ்வனே முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இரண்டு கல்வி நிறுவனங்களினதும் பீடாதிபதிகளாக பெண்களே இருப்பது மற்றுமொரு சிறப்பம்சம்.

 ஆனாலும் பத்தனை கல்வியியற் கல்லூரி மட்டும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் ஒரு கல்வி நிறுவனமாக மாறி வருவது வேதனைக்குரிய விடயமாகும். ஆரம்ப காலத்திலிருந்தே இங்கு கற்கை நெறிகளை தொடரும் மாணவர்களுக்கு சுத்தமான உணவுகளை வழங்குவதிலிருந்து அவர்களுக்கான ஏனைய அடிப்படை வசதிகளை பெற்றுத்தருவதில் நிர்வாகம் மிகவும் அசமந்த போக்குடன் நடந்து கொள்வது வழமையாகியுள்ளது. உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு கல்வி நிறுவனத்தின் உணவக பிரிவை சுகாதார பிரிவினர் சீல் வைத்து மூடும் அளவிற்கு மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமா? மாணவர்களை வழிநடத்த வேண்டிய கல்லூரியின் நிர்வாகப் பிரிவின் சிலர் கல்லூரிக்குள்ளேயே மது அருந்தும் ஒளிப்பட காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி கல்லூரியின் நிர்வாகப்போக்கு குறித்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.

1992 ஆம் ஆண்டு GTZ எனும் ஜேர்மன் நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட பத்தனை கல்வியியற் கல்லூரியின் உருவாக்கத்துக்கு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பங்களிப்பு அளப்பரியது.

பெருந்தோட்ட மாணவர்கள் 75 வீதம் உள்ளீர்க்கப்படல் வேண்டும் , தமிழ்ப்பெயரை கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது. இறுதியில் முதலாவது கோரிக்கை நிறைவேறியது. மற்றையதை பிறகு பார்க்கலாம் என அவர் பொறுமை காத்தார்.

அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவினால் இக்கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.

நீச்சல் தடாகத்திலிருந்து மாணவர்களுக்குரிய விடுதி, மைதானம், சிற்றுண்டிச்சாலை, பொழுதுபோக்கு அம்சங்கள்,கணனி பிரிவு, நூலகம் என சகல வளங்களையும் கொண்டு ஒரு பல்கலைக்கழகத்துக்குரிய அம்சங்களுடன் இக்கல்லூரி பரிணமித்தது.

மலையக பல்கலைக்கழக யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது , இங்கு பயிலும் டிப்ளோமா தாரிகளின் கற்கை காலத்தை மேலும் 3 வருடங்கள் நீட்டித்து இளமானிப் பட்டத்தை வழங்கும் வகையில் இக்கல்லூரியையே பல்கலைக்கழகமாக மாற்றினால் என்ன என்ற ஆலோசனை அப்போது மலையக கல்விமான்களால் முன்வைக்கப்பட்டது. எனினும் அது சாத்தியப்படவில்லை. சகல வளங்களுடன் மலையக சமூகத்துக்கு இக்கல்லூரி கிடைக்கப்பெற்றாலும் அவ்வப்போது இங்கு பெரும்பான்மை மற்றும் தமிழ் மாணவர்களிடையே புகைச்சல் நிலவி வந்ததை மறுக்க முடியாது. பகிடிவதை, சிற்றுண்டிச்சாலை பிரச்சினைகள், சுற்றுச் சூழல் பராமரிப்பு தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படவில்லை.

நேரடியாக கல்வி அமைச்சின் கீழ் இது இயங்கி வந்ததால் உள்ளூர் அரசியல்வாதிகளும் இக்கல்லூரியின் உட்பூசல்கள் குறித்து அக்கறை காட்டவில்லை. அரசாங்கம் கூட வழமையாக மலையக மக்களின் விடயத்தில் எவ்வாறு பராமுகமாக நடந்து கொள்கின்றதோ அதே போன்று இவ்விடயத்திலும் செயற்பட்டது. ஆனால், பெரும்பான்மையின பீடாதிபதி ஒருவரை தெரிவு செய்வதில் அது அக்கறை காட்டியது.

அவ்வப்போது இக்கல்லூரியில் எழுந்த பிரச்சினைகள் பிரதிநிதிகளாலும் அரசாங்கத்தாலும் கண்டு கொள்ளப்படாத நிலைமையிலேயே உச்ச கட்டத்தை தொட்டுள்ளது. கல்வியியற் கல்லூரியை விட வளப்பற்றாக்குறைகளுடன் அதாவது கட்டிடம் மற்றும் மலசலக்கூட வசதிகள் கூட இல்லாது கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை நிர்வாக கட்டமைப்புடனும் சிறந்த பெறுபேறுகளுடனும் வெற்றிகரமாக செயற்படும் போது சகல வளங்களும் கொண்ட பத்தனை கல்வியியற் கல்லூரியில் ஏன் இவ்வாறு இடம்பெறுகிறது என்பதை பற்றிய தேடல் அவசியமானது. ஏனென்றால் இது மலையக சமூகத்தின் எதிர்கால உயர்கல்வியோடு தொடர்பு பட்ட விடயமாகும்.

தற்போது உள்ளே இடம்பெறும் விடயங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும் அதை சீர்செய்வதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமா என்பது சந்தேகமே. மேலும் உள்விவகாரங்கள் சிலவற்றை வெளிக்கொணர்ந்த மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டிய அதே வேளை அவர்களின் கல்விப்பயணத்துக்கும் எவ்வித தடைகளும் ஏற்படாது என்ற உத்தரவாதம் நிர்வாகத்தால் வழங்கப்படல் அவசியம். நுவரெலியா மாவட்டமே தமது கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று மார் தட்டும் அரசியல் பிரமுகர்கள் இப்பிரதேசத்தில் மத்திய கல்லூரிகளையோ ,தேசிய பாடசாலைகளையோ அல்லது தனியான பல்கலைக்கழகங்களையோ இனியும் உருவாக்கப்போவதில்லை என்பது கண்கூடு. ஆனால் அரசாங்கத்தால் உருவாக்கி தரப்பட்டிருக்கும் இவ்வாறான உயர்கல்வி நிறுவனங்களையாவது பாதுகாப்பதற்கும் அதை தக்க வைத்துக்கொள்வதற்கும் முன் வரவேண்டும். இல்லாவிட்டால் சமையலறைக்கு சீல் வைக்கப்பட்டது போன்று நாளை கல்லூரிக்கே சீல் வைக்கப்படும் நிலை ஏற்படலாம். அதைத்தான் பேரினவாதமும் எதிர்ப்பார்த்துள்ளது. இந்த நிலைமை எமது சமூகத்துக்கு தேவை தானா? உரியோர் சிந்திப்பார்களா?

சிவலிங்கம் சிவகுமாரன்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates