Headlines News :
முகப்பு » » தனித்துவத்தை இழந்துவிடக்கூடாது - துரைசாமி நடராஜா

தனித்துவத்தை இழந்துவிடக்கூடாது - துரைசாமி நடராஜா



மலையக பெருந்தோட்டங்களில் வெளியாரின் ஆதிக்கம் தொடர்பாக இப்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை தோட்டப்புற தொழில் வாய்ப்புகளில் தோட்டத்து இளைஞர், யுவதிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இந் நிலையானது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். இதனால் தோட்டப்புறங்களின் நிகழ்காலமும், எதிர்காலமும், இருப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் தேயிலை தொழிற்துறையின் வகிபாகம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகின்றது. இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதிகளில் அது ஏற்றுமதி செய்த பொருட்களின் மூலம் பெற்ற அந்நிய செலாவணியில் பெரும் பங்கினை தேயிலையே பெற்றுக்கொடுத்திருப்பதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். 1948 ஆம் ஆண்டினை அடுத்த காலப்பகுதிகளில் தேயிலை சுமார் 60 வீதம் வரையான ஏற்றுமதி வருவாயினை பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையின் அந்நிய செலாவணி உழைப்பில் 1959 ஆம் ஆண்டில் 59.6 சதவீதமாக தேயிலையின் பங்கு இருந்துள்ளது. இந் நிலையானது 1976 இல் 43.6 சதவீதமாகவும், 1980 இல் 35.1 சதவீதமாகவும் 1986 இல் 27.2 சதவீதமாகவும், 1990 இல் 24.9 சதவீதமாகவும் இருந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை இலங்கையின் தேயிலை உற்பத்தி நிலைமைகளை நோக்குகின்ற போது அது பின்வருமாறு கடந்த காலத்தில் அமைந்துள்ளதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதனடிப்படையில் 1945 இல் 125.6 மில்லியன் கிலோவாக தேயிலை உற்பத்தி இருந்துள்ளது.

1976 ஆம் ஆண்டில் 196.6 மில்லியன் கிலோவும், 1982 இல் 187.8 மில்லியன் கிலோவும், 1984 இல் 207 மில்லியன் கிலோவும், 1990 இல் 233 மில்லியன் கிலோவுமென தேயிலை உற்பத்தி இலங்கையில் இடம்பெற்றுள்ளது. தேயிலை பயிரிடப்பட்ட நிலப்பரப்பினை பொறுத்த வரையில், 1985 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 650 ஹெக்டெயர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டது. இலங்கையின் தேயிலை தொடர்பாக நாம் பேசுகின்ற போது பெருந்தோட்டங்களின் ஆதிக்கத்தினையும் நாம் குறிப்பிட்டாதல் வேண்டும். பெருந்தோட்டங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருந்து வந்த காலம் மிக நீண்டதாகும்.

இலங்கையின் தற்கால பொருளாதார அமைப்பும் தொழிற்பாடுகளும் காலனித்துவ காலத்துடன் குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உருவாக்கம் பெற்றன. இக்காலப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட பெருந்தோட்ட பொருளாதாரமும் அதனை தழுவிய வெளிநாட்டு வர்த்தகமும் ஒரு நவீன பொருளாதார முறைமையினை அறிமுகப்படுத்தியது என்கிறார் பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன். மேலும் , பெருந்தோட்ட விவசாயம் அதன் அடிப்படையிலான வெளிநாட்டு வர்த்தகம் அவற்றுடன் தொடர்புடைய வியாபார நிறுவனங்கள், நிதி வங்கி நிறுவனங்கள் மற்றைய துணை நடவடிக்கைகள் முதலானவை சேர்ந்த ஒரு நவீன பொருளாதார துறை விருத்தியடைந்துள்ளது. ‘பெருந்தோட்ட பொருளாதாரம்’, ‘ஏற்றுமதி ,இறக்குமதி பொருளாதாரம்’, ‘இரட்டை பொருளாதாரம்’ என்றெல்லாம் விபரிக்கப்பட்டு வந்துள்ளது. பல தசாப்தங்களாக இலங்கையின் அந்நிய செலாவணி தேயிலை, இறப்பர், தெங்கு ஆகிய விவசாய ஏற்றுமதிகளில் இருந்தே பெறப்பட்டு வந்துள்ளது. உணவுப் பொருட்கள், மூலப் பொருட்கள் முதலானவற்றின் இறக்குமதிகளை நிதிப்படுத்துவதற்கு ஏற்றுமதி வருவாய்கள் தேவைப்பட்டன.

ஏற்றுமதி விவசாய பொருட்களுக்கான கிராக்கி உலக சந்தையில் கூடுதலாக அதிகரிக்காத நிலையில் மற்றைய முதல் விளைவு ஏற்றுமதி நாடுகளுடன் இலங்கை கடுமையாக போட்டியிட வேண்டிய சூழல் மேலெழுந்தமை தேயிலைக்கு ஒரு சவாலாக அமைந்தது. மேலும் உற்பத்தி திறன் தேங்கிய நிலையிலும், உற்பத்தி செலவுகள் அதிகரித்து சென்றதாலும் ஏற்றுமதி துறையின் குறிப்பாக தேயிலை உற்பத்தியில் இலாப தன்மையும் அறுபதுகளுக்கு பின்னர் பாதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1950 இல் நிக்கலஸ் கால்டர் என்பவர் இலங்கைக்கு வந்திருந்தார். அவர் கூறிய விடயங்கள் பின்வருமாறு அமைந்தன. ‘இப் பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுபீட்சம் பெருந்தோட்ட பொருளாதாரத்திலேயே தங்கி இருக்கின்றது. பெருந்தோட்ட பொருளாதாரமே தேசிய வளத்தின் துரித வளர்ச்சிக்கு உதவ முடியும்’ என்று நிக்கலஸ் தெரிவித்திருந்தார். நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பெருந்தோட்ட துறையின் வகிபாகம் மிகவும் முக்கியமானது என்பதனை நாம் இதிலிருந்து உணர்ந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.

முக்கியத்துவம் இழப்பு

 பெருந்தோட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் மிக்கனவாகவும், பொருளாதார அபிவிருத்தியில் கணிசமான வகிபாகத்தினை கொண்டனவாகவும் ஒரு காலத்தில் விளங்கின. எனினும் பின்னரான காலப்பகுதியில் இவற்றின் செல்வாக்கில் படிப்படியான வீழ்ச்சி நிலை ஏற்பட்டமையையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதற்கென பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கிராமிய மக்களின் சமூக நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கின்ற திட்டங்களினதும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட கைத்தொழில் வளர்ச்சி, திட்டங்களினதும் பின்னணியில், பெருந்தோட்ட விவசாய துறையானது தனது முக்கியத்துவத்தினை இழந்து நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பெருந்தோட்ட நிர்வாகமும் உடைமையும் இலங்கையர் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற போக்கின் வெளிப்பாடாக 1970–1975 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நில சீர்திருத்த செயற்பாடுகள் பெருந்தோட்ட பயிர் செய்கைக்கு உட்பட்ட பிரதேசங்களை தேக்க நிலைக்கு தள்ளி இருந்ததாக கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் குறிப்பிடுகின்றார். சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசுகள் வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டன. இதனடிப்படையில் பெருந்தோட்ட துறையில் முதலீடுகள் முடக்கப்பட்டன. பெருந்தோட்ட துறை நிர்வாகத்தினரிடையே ஏனோ தானோ என்ற அக்கறை இல்லாத மனப்பாங்கு நிலவியது. பல வெளிநாட்டு நிறுவனங்களும் ,தனியார் நிறுவனங்களும் தமக்கு சொந்தமான பெருந்தோட்டங்களை கூறுபோட்டு விற்க தொடங்கின. ‘நில உச்ச வரம்பு சட்டம்’ பெருந்தோட்டங்கள் மீது கணிசமான தாக்கத்தினை செலுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

1972 இல் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் இன்னும் பல பாதக விளைவுகளும் ஏற்பட்டன. வேலையின்மை, உணவு பற்றாக்குறை என்பன மேலோங்கின. இதனால் இந்திய வம்சாவளியினர் பலர் வடமாகாணத்திற்கு சென்று குடியேறும் நிலைமையும் மேலோங்கியது. இவ்வாறு சென்றவர்கள் இலங்கை தமிழர்கள் செறிந்து வாழும் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் காலப்போக்கில் தமது இந்திய, மலையக அடையாளங்களை கைவிட்டு உள்ளூர் மக்களுடன் கலந்து விடும் போக்குகளே அதிகமுள்ளதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தனது கட்டுரை ஒன்றிலே சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

பெருந்தோட்ட துறையானது இன்று பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. இத் துறையின் எதிர்காலம் குறித்து சந்தேகங்கள் பலவும் மேலெழுகின்றன. தேயிலையின் விளை நிலம் சுவீகரிக்கப்படுதல், கம்பனியினரின் மேலாதிக்கம், ஊதிய பற்றாக்குறை, நவீன மயப்படுத்தப்படாமை, தொழில் முன்மாதிரியாக இல்லாமை, தொழிற் துறையில் காணப்படும் பல்வகைமைசார் நெருக்கீடுகள் என்பன உள்ளிட்ட பல காரணிகள் இத் துறையின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வைத்துள்ளது. தொழிலாளர்களின் இடப்பெயர்வு சமூக நகர்வு என்பனவும் இக் காரணிகளுள் உள்ளடங்குகின்றன என்பதையும் கூறியாதல் வேண்டும்.

தொழிலாளர் தொகை வீழ்ச்சி

பெருந்தோட்டங்களில் பல்வேறு தொழில் நிலைகளிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொழுந்து பறிக்கும் பணி இதில் முக்கியமானதாக உள்ளது. தேயிலை பராமரிப்பு செயற்பாடுகள், தொழிற்சாலை பணிகள், தோட்டக்காவல் என பல வேலைகளும் இங்கு இடம்பெறுகின்றன. களை மற்றும் பீடைகொல்லிகள் தெளிப்பு நடவடிக்கைகளிலும் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த வகையில் தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் அண்மை காலத்தில் சடுதியான ஒரு வீழ்ச்சி போக்கினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 1985 ஆம் ஆண்டில் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் என்பவற்றில் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை (பதிவு செய்தது) நான்கு இலட்சத்து 58 ஆயிரத்து 617 ஆக இருந்தது. இதனடிப்படையில் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை தோட்டங்களில் இரண்டு இலட்சத்து 38 ஆயிரத்து 321 தொழிலாளர்களும், அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபன தோட்டங்களில் இரண்டு இலட்சத்து இருபதாயிரத்து 296 தொழிலாளர்களும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாயிரமாம் ஆண்டில் பெருந்தோட்ட பதிவு தொழிலாளர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 11 ஆயிரத்து 773 ஆக இருந்துள்ளது.

2005 ஆம் ஆண்டில் இத் தொகையானது இரண்டு இலட்சத்து 91 ஆயிரத்து 289 ஆகும். எனினும் 2008 ஆம் ஆண்டில் இத் தொகையில் மேலும் சறுக்கல் நிலையினையே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் தனியார் பெருந்தோட்டங்கள் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் என்பவற்றில் பதிவு தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 42 ஆயிரத்து 266 ஆக இருந்தது. இத் தொகையில் இப்போது மேலும் வீழ்ச்சி நிலை ஏற்பட்டிருப்பதனையே அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. இவ் வீழ்ச்சி நிலைக்கு ஒப்பந்தங்கள், இன கலவரங்கள், நில சீர்திருத்தங்கள் என பல காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

1992 இல் பெருந்தோட்டங்கள் மீள தனியார்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட தன்னார்வு ஓய்வு ஊக்குவிப்பு திட்டத்தின் அடிப்படையில் பல தொழிலாளர்கள் வயதுக்கு முன்னர் ஓய்வு பெற்றனர். இந் நிைலமையும் தொழிலாளர்களின் வீழ்ச்சியில் தாக்கம் செலுத்தியிருப்பதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தன்னார்வு ஓய்வு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தற்காலிகமாக ஓய்வு பெற்றவர்கள் அதே தோட்டங்களில் ‘கைக்காசு’ தொழிலாளர்களாக மீண்டும் வேலை செய்வதனையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்கள் நிரந்தர பதிவு தொழிலாளர்களாக கணக்கெடுக்கப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கதாகும்.

வெளியாரின் ஆதிக்கம்

பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஒரு குழுவாக தோட்டங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. தமது கலை கலாசாரங்களை பாதுகாத்து முன்னெடுக்கவும், இன அடையாளத்தை உறுதிப்படுத்தி கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது ஒரு சிறப்பம்சமாகும். எனினும் இம் மக்கள் சிதறி வாழுகின்ற போதோ அல்லது வெளியாரின் ஊடுருவல் அதிகரிக்கின்ற போதோ மேற்கண்ட விடயங்களை பேணுவதில் ஒரு குழப்பகரமான சூழ்நிலை உருவாகக் கூடும். மேலும் அரசியல் துறை சார்ந்த விடயங்களிலும் சிக்கல் நிலைகள் மேலோங்குவதற்கு இடமுண்டு. தோட்டத் தொழிலாளர்களின் இருப்பினை சிதறடிக்கும் முயற்சியில் அல்லது நடவடிக்கைகளில் இனவாதிகள் நீண்டகாலமாகவே ஈடுபட்டு வருகின்றனர். இதன் பின்னர் இம் மக்களை எல்லா துறைகளிலும் ஓரம் கட்டுவதேயாகும். இதை நாம் மறந்து விடலாகாது.

இந்திய வம்சாவளி மக்கள் சிங்கள பாணியை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைமைகள் தொடர்பில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன், கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஷ், கலாநிதி ரமேஸ் போன்றவர்கள் தமது உள்ளக்குமுறலை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் உரையாடலின் போது சிங்கள சொற்களை புகுத்துதல் அல்லது கையாளுதல், கிரியைகளை சிங்கள பாணியில் நடத்துதல், நடை, உடை பாவனைகளில் சிங்கள பாணியினை கையாளுதல் என்பனவும் இதிலடங்கும். இத்தகைய நிலைமைகள் எம்மவர்களின் கலை கலாசாரத்தினை கேள்விக்குறியாக்கு வதாகவே அமையும். நாம் வலிந்து சிங்கள பாணியை பின்பற்றி சிங்களவர்கள் சார்பானவர்களாக இனங்காட்டி கொள்ள முற்பட்டாலும் அவர்கள் எம்மை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதனை பேராசிரியர் சந்திரசேகரன் சற்று ஆழமாகவே வெளிப்படுத்தி இருந்தார். இது குறித்து நாம் சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழ் உணர்வுடன் செயற்படுதல் வேண்டும். எனினும் வெளியாரின் ஆதிக்கம் தோட்டங்களில் மேலோங்குகின்ற போது இத்தகைய குழப்ப நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது போய்விடும்.

மலையக இளைஞர் யுவதிகள்

மலையக மக்களிடையே கல்வி குறித்த நாட்டம், அக்கறை என்பன இப்போது அதிகரித்து வருகின்றது. இது வரவேற்கத்தக்க ஒரு விடயமாக உள்ளது. கல்வி மேம்பாடு காரணமாக சமூக நகர்வுகள் இடம்பெறுகின்றன. நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வு இடம்பெறுகின்றது. சமூக நகர்வின் காரணமாக அம்மக்களிடையே பல்வேறு மாற்றங்கள், அபிவிருத்திகள் ஏற்படுவதனையும் எம்மால் நோக்கக் கூடியதாக உள்ளது. மலையக இளைஞர், யுவதிகள் இன்று பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆசிரியர்கள், கிராமசேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், கல்வியதிகாரிகள் என தொழில்கள் விரிந்து செல்கின்றன. யுவதிகள் ஆடை தொழிற்சாலைகளில் தொழில் புரிகின்றனர். மேலும் வர்த்தக நிலையங்களில் இளைஞர் மற்றும் யுவதிகள் தொழில் புரிவதனையும் அவதானிக்க முடிகின்றது. இதேவேளை கொழும்பில் தொழில் தேடி செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கு திருப்தியில்லாத நிலையில் மீண்டும் தோட்டங்களுக்கு திரும்பி வந்து தொழில் இல்லாதவர்களின் பட்டியலில் இணைந்து கொள்கின்றார்கள். பெருந்தோட்டத்தில் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு இருப்பினும் அவர்கள் அதனை உரியவாறு பயன்படுத்தி கொள்வதில்லை என்று ஒரு ஆய்வின் முடிவு வெளிப்படுத்தி இருக்கின்றது. இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இதேவேளை இந்த ஆய்வில் மேலும் சில விடயங்களும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. கல்வி கற்ற சில இளைஞர்கள் தேயிலை பயிர் செய்கை மற்றும் உற்பத்தி அம்சங்களில் போதிய பயிற்சி இல்லாதவர்களாக விளங்குகின்றார்கள். அவர்களுக்கு இத்துறையில் விஞ்ஞான பூர்வமான பயிற்சியளிப்பதன் மூலம் போதிய அறிவினை பெற்றுக்கொடுக்க வேண்டும். மண் வள முகாமைத்துவம், போஷணை, தேயிலை உற்பத்தி சந்தைப்படுத்தல் போன்ற விடயங்கள் பயிற்சிக்கான பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்பட வேண்டும். அத்துடன் அதற்கான தனிநிறுவகம் அமைக்கப்படவும் வேண்டும். இடைநிலை கல்வியுடன் இடை விலகுபவர்களும், பாடசாலை செல்லாதவர்களும் பெருந்தோட்டங்களில் பயிற்சியற்ற தொழில்களில் இணைந்து செயற்படுகின்றனர். இத்தகையோருக்கு பயிற்சியளிக்க வேண்டும். பயிற்சி பெற்ற தொழிலாளர்களாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழில்நுட்ப கல்லூரிகள் மலையகத்தின் பல பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தல்கள் மலையக இளைஞர் ,யுவதிகளின் நலன் கருதி இடம்பெற்றுள்ளன. இவற்றை செயல் வடிவம் பெற செய்வதில் மலையக அரசியல் வாதிகளின் பங்களிப்பே மிகவும் அவசியமாக உள்ளது.

புறக்கணிப்பு

தோட்ட பகுதிகளில் உத்தியோகத்தர் நிலை சார்ந்த பல தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன. அலுவலகம், தொழிற்சாலை, சிறுவர் அபிவிருத்தி நிலையம், முகாமைத்துவம் சார்ந்த தொழில் வாய்ப்புகள் பலவும் இதில் உள்ளடங்கும். இத்தகைய தொழில் வாய்ப்புகளுக்கு முன்னர் அதிகமாக தோட்டப்புறத்தை சார்ந்த படித்த இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு இணைந்து கொண்ட பலர் இன்று நல்ல நிலையில் தோட்டங்களில் தொழில் புரிந்து வருகின்றனர். இன்னும் சிலர் ஓய்வு பெற்றும் சென்றுள்ளனர். இந்த நிலையில் அண்மை காலங்களில் தோட்டத்தில் மேற்கண்ட தொழிற் துறைகளுக்கு புதியவர்கள் இணைத்து கொள்ளப்படுகையில் பெரும்பாலும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. தோட்டப்புறங்களில் தொழில் நிலைகளில் வெற்றிடங்கள் ஏற்படுமிடத்து அத்தோட்டங்களில் உள்ள படித்த இளைஞர், யுவதிகளுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வெற்றிடங்கள் விளம்பரம் செய்யப்பட்டு தகைமையுடைய தோட்ட இளைஞர், யுவதிகள் சேவைக்கு சேர்த்து கொள்ளப்படல் வேண்டும்.

தோட்டப் புறங்களில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் காணப்படுகின்றன. இந் நிலையங்களில் அதிகமான தமிழ் சிறுவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்படுகின்றார்கள். இவர்கள் பாடசாலைக்கு செல்லும் வயதை அடையாதவர்களாக உள்ளனர். இங்கு முன்பள்ளிக்குரிய சில நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. எனினும் பல நிலையங்களில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பெண்களே முன்பள்ளி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பள்ளி பருவ கல்வி ஏற்பாடுகள் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றலின் முழுமையான வளர்ச்சிக்கும் வாழ்க்கை நீடித்த கல்விக்கும் தேவையான அத்திவாரத்தை இடுகின்றன. பிற்காலத்தில் உருவாகும் சிறந்த உளப்பாங்குகள், கற்றலை விரும்பும் மனநிலை என்பன உருவாக இப் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சி முக்கியமானதாகும் என்கின்றனர் கற்றறிவாளர்கள்.

எஸ்.விஜயசந்திரனின் கருத்து

தோட்டப்புற இளைஞர், யுவதிக ளின் சமகால தொழில் நிலைமைகள், போக்குகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேராதனை பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் பின்வருமாறு தனது நிலைப்பாட் டினை தெளிவுபடுத்தினார். மலையக இளைஞர், யுவதிகளிடையே ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சி பல மாறுதல்களு க்கு வித்திட்டுள்ளது. இதனால் தொழில் சார்ந்த மற்றும் துறை சார்ந்த நகர்வுகள் இடம்பெற்றுள்ளன. எனவே தோட்ட தொழில் அல்லாத ஏனைய தொழில்களை நாடி செல்லும் நிலை அதிகரித்து வருகின்றது. க.பொ.த. சாதாரணம் பயின்ற ஒரு தொகையினர் தொழில் தேடி வெளிச்செல்லும் ஒரு நிலை காண ப்படுகின்றது. குறைவான கல்வி தரத்தை உடைய பெண்கள் ஆடை தொழிற்சாலை உள்ளிட்ட ஏனைய பல தொழில்களை நாடிச்செல்கின்றனர்.

இளைஞர்கள் நகர் புறங்களில் கட்டட தொழில் மற்றும் கடை தொழில்களுக்கு செல்கின்றனர். இந் நிலையில் க.பொ.த உயர்தரம் சித்தி பெற்றவர்களுக்கான தொழில் வாய்ப்பு என்பது இப்போது ஒரு பிரச்சினையாக இருப்பதனையும் அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது. இலங்கையின் அரச துறைகளில் மலை யக இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறைந்தளவிலேயே வழங்கப்படுகின்றன. ஆசிரியர் தொழில் தவிர்ந்த ஏனைய தொழிற்துறைகளில் போதிய இட மளிக்கப் படுவதில்லை என்பது வருந்தத் தக்க ஒரு விடயமாகவே உள்ளது. தனியார் துறை வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வதும் இலகுவான ஒரு காரியமாக இல்லை. கல்வி தகைமையுடன் ஏனைய பல தகைமைகளும் தனியார் துறை தொழில் வாய்ப்புக்காக தேவைப்படு கின்றது. உதாரணமாக ஆங்கில மொழி புலமை, நேர்கணிய மனப்பாங்கு, தொடர் பாடும் திறன், மென்திறன் தொடர்பான திறன்கள், தலைமைத்துவ ஆளுமை, விளையாட்டு போன்ற பல்வேறு துறை களிலும் தனியார் துறை தொழிலுக்காக செல்லும் ஒருவர் ஆளுமையை நிரூபிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை மலையக இளைஞர் கள் தொழில்நுட்ப மற்றும் தொழில் சார் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதிலும் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன. தனியார் துறை தொழில்களை பெற்றுக்கொள்வதில் காணப்படும் தடங்கல்கள் இதிலும் காணப்படுகின்றன. சுயதொழில் நட வடிக்கைகளை பொறுத்தவரையில் உடனடியாக இவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவதென்பது கடினமான ஒரு விடயமாகவே தென்படுகின்றது. பாரிய நிதி, சொந்த இடம் என்பன சுயதொழிலுக்கு அவசியமாகும். எனினும் தோட்ட இளைஞர்களுக்கு சொந்தமாக இடம் இல்லை. தோட்ட நிர்வாகமும் சுயதொழில் வாய்ப்புகளுக்கு எந்தளவு இடமளிக்கின்றது என்றும் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. சுயதொழில் கடன்களை பெறுவதிலும் இழுபறியான நிலைமைகளே காணப்படுகின்றன. உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத் துவதும் சிரமமான காரியமாகவே உள்ளது. இந் நிலையில் மலையக இளைஞர், யுவதிகள் தகுதிக்கு குறைந்த தொழில்களை புரிகின்றனர். அல்லது பெற்றோரில் தங்கி வாழுகின்றனர் என்பதே உண் மையாக உள்ளது. திருமணம் முடிந்த பிறகும் கூட சிலர் பெற்றோரிடம் தங்கி வாழ்வ தென்பது கொடுமை யிலும் கொடுமையாகும். மலையக பகுதிகளில் இளைஞர், யுவதி களின் நலன் கருதி பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பெருந் தோட்டங்களில் அதிகளவு காணிகள், மனித வளங்கள் காணப்படுகின்றன. இதனை மையப்படுத்தி தோட்டத்திற்கு உள்ளேயே பல தொழில் வாய்ப்புகள் உரு வாக்கப்படுதல் வேண்டும். காலநிலை, நீர் வசதியும் உண்டு. மலையக அரசியல் வாதிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

தோட்டங்களில் சுமார் 37 ஆயிரம் ஹெக்ெடயர் தரிசு நிலங்கள் காணப்படுகின்றன. இவற்றை இளைஞர்களின் சுயதொழில் விருத்திக்காக வழங்க முடியும். இளைஞர்கள் சுயதொழிலில் தம்மை ஈடுபடுத்தி கொள்வதற்கான மனோ நிலையை வளர்த்து கொள்ள வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates