ஊடகவியலாளர் என்.சரவணனின் இருநூல்களின் அறிமுக நிகழ்வு 29.04.18 ஒஸ்லோவில் இடம்பெற்றது. «1915: கண்டி கலவரம்» (இலங்கையின் முதலாவது இனக்கலவரம்), «அறிந்தவர்களும் அறியாதவைகளும்» அவ்விரு நூல்களுமாகும்.
இரண்டும் கட்டுரைகளின் தொகுப்பு நூல்கள்.
இக்கட்டுரையாளரின் தலைமையில் இடம்பெற்ற நூல் அறிமுகவிழாவில், கலாநிதி சர்வேந்திரா, கவிஞரும் எழுத்தாளருமான கவிதா லட்சுமி, ஊடகவியலாளர்கள் ராஜன் செல்லையா, பர்ஸான் பசீர் ஆகியோர் அறிமுக-விமர்சன உரைகளை ஆற்றியிருந்தனர். கண்டி கலவரம் நூல் பற்றியதும் சரவணன் பற்றியதுமான சில அறிமுகக் குறிப்புகளைக் கட்டுரையின் இந்தப் பகுதியிலும், அடுத்த பகுதியில் கருத்தாளர்களின் உரைகளின் சாராம்சத் தொகுப்பினையும் பதிவுசெய்ய விழைகின்றேன்.
இந்த இருநூல்களும் பேசுபொருள் சார்ந்து தமிழ் அரசியலுக்கும், சமகாலத்திற்கும் முக்கியமானவை. “1915 – கண்டிக் கலவரம்” இலங்கையின் முதலாவது இனக்கலவரமான கண்டிக் கலவரத்தினை மையப்படுத்தியது. அக்கலகரம் நடந்தேறி 100 ஆண்டுகள் கடந்து நிலையில், 2014 இல் அதனையொத்த கலவரம் அளுத்கம, பேருவல பகுதிகளில் நடந்தன. இந்த ஆண்டு மார்ச் மாதமும் கண்டியில் அதனையொத்த கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இத்தகைய சூழலில் 1915இல், நூறாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கண்டி கலவரத்தின்; பின்னணி, தோற்றுவாய் பற்றிய வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ள நூல் இது. தினக்குரல் ஞாயிறு பதிப்பில் தொடராக வெளிவந்த 60 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.
கொலனித்துவத்திற்கு எதிரான அரசியல், முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியாகவும் பின்னர் அனைத்து இனங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியாகவும் எந்த அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதென்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பதிவுசெய்கின்றது இந்த நூல்.
சிங்கள பௌத்த பேரினவாதம் எந்த அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றது, அதன் நிறுவனமயப்பட்ட கூறுகளை தகவல், ஆதார, ஆய்வு ரீதியாக முன்வைக்கின்ற வரலாற்று ஆய்வாக இந்த நூல் அமைந்துள்ளது.
இரண்டாவது நூல் அறிந்தவர்களும் அறியாதவையும். இதில் இலங்கையோடு தொடர்புடைய 25 ஆளுமைகள் பற்றிய தனித்தனிக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வீரகேசரி வார இதழின் ‘சங்கமம்’ பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் இவை. இலங்கைத் தீவின் வரலாற்று, சமூக, அரசியல், பொருளாதார அம்சங்களோடு வௌ;வேறு காலகட்டங்களில் செல்வாக்குச் செலுத்திய நபர்கள் இவர்கள் என்பது இந்நூலின் சிறப்பம்சம்.
கொலனித்துவ வரலாற்றுக் கட்டுரைகளே, இந்த நபர்கள் பற்றிய விரிவான கட்டுரைகளுக்கு திறவுகோலாக உந்துதலாக இருந்துள்ளது என்பதை சரவணன் இந்நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.
சரவணன், 25 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை, ஊடக எழுத்துத்துறையில் இயங்கி வருபவர் சரவணன். அர்ப்பணிப்பு மனநிலையோடு நேரத்தையும் உழைப்பையும் எழுத்தில் செலவிடுபவர்.
சரிநிகர் பத்திரிகை மூலம் எழுத்துத்துறையில் ஒரு கட்டுரையாளனாக அறியப்பட்டவர் சரவணன். ஈழத்தமிழ் பத்திரிகைத் துறையில் சரிநிகர் பத்திரிகை தனித்துவம் மிக்கது. 1990ம் ஆண்டிலிருந்து 2001 வரை வெளிவந்த வாரப் பத்திரிகை. மாற்று இதழ் என்று சொல்லக்கூடிய காத்திரமான பங்களிப்பினை சரிநிகர் ஒரு பத்தாண்டு காலம் ஆற்றியிருக்கின்றது.
அப்பேர்ப்பட்ட சரிநிகர் பட்டறையில் ஊடகத்துறைப் பயிற்சி பெற்று, பட்டைதீட்டப்பட்டவர். அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் அவர் பணிபுரிந்தவர். புனைபெயர்களில் ஏராளமான கட்டுரைகளை அந்தக் காலகட்டங்களில் எழுதியிருக்கின்றார்.
90களின் இறுதி ஆண்டுகளில் சரிநிகர் பத்திரிகையினை மிகுந்த ஈடுபாட்டோடு வாசித்த ஒரு வாசகனாக நான் இருந்திருக்கின்றேன். அதன் வார இதழ்களை சேகரித்து வைக்குமளவிற்கு அதன் தரம், உள்ளடக்கப்பெறுமதி, பயன்பாடு சார்ந்த மதிப்பீட்டினைக் கொண்டிருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். ஊடகத்துறையில் மாறுபட்ட கருத்துகளுக்கு முக்கியத்துவமும் மதிப்பும் கொடுக்கின்ற ஒரு பண்பினைக் கற்றுக்கொடுக்கக்கூடியது சரிநிகர்.
சரிநிகரில் தொடங்கிய ஊடகப் பயணம், தினக்குரல், வீரகேசரி போன்றவற்றின் வாரப்பதிப்புகளிலும் சமகாலத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நமதுமலையகம்.கொம், பெண்ணியம்.கொம் போன்ற இணையத் தளத்திலும் அவருடைய கட்டுரைகளை, ஆய்வு எழுத்துகளை வாசிக்க முடியும்.
சரவணனின் சமூகப் பார்வை, அரசியல் பார்வை என்பது கூர்மை மிக்கது. சமூகநீதி சார்ந்த பார்வை அது. அது சமரசமற்ற பார்வையென்பதை அவருடைய எழுத்துகள் மூலம் கண்டடையலாம். அவருடன் உரையாடுவதன் மூலமும் உணர்ந்துகொள்ளலாம் என்பது என் போன்றவர்களின் அதவானிப்பு.
சிங்கள-பவுத்த பேரினவாதப் போக்கினை வெளிப்படுத்துவதை மையமாக் கொண்ட அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை 25 ஆண்டுகளில் அதிகமாக எழுதியவர்களில் ஒருவர். சரவணனின் சிங்கள மொழி ஆளுமையானது (சிங்களத்தில் எழுதப்பட்ட நூல்கள் மற்றும் சிங்கள மொழிப் பத்திரிகைகள், கட்டுரைகள் மீதான வாசிப்பும் தேடலும்) நிறுவனமயப்படுத்தப்பட்ட சிங்கள பவுத்த பேரினவாதத்தின் போக்கினை உள்ளார்ந்த பரிமாணத்தில் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் துணைநிற்கின்றது எனலாம்.
நோர்வே போன்ற புலம் பெயர் தேசத்தில் வாழ்ந்து கொண்டு பிரக்ஞைபூர்வமாகத் தொடர்ச்சியாக எழுதுவது என்பது எளிதல்ல. இயந்திரமயமான இந்த வாழ்க்கைச் சூழல் நிர்ப்பந்திக்கின்ற வருமான ஈட்டல், குடும்பம், ஏனைய நாளாந்தப் பணிகளுக்கு மத்தியில் எழுதுவதென்பது, அதுவும் தொடர்ந்து வாராவாரம் எழுதுவது என்பது மிகுந்த அர்ப்பணிப்பு மிக்க செயல். சமகால அரசியலை, அதன் போக்குகளை அவதானித்து எழுதுவதென்பது ஒரு வகை. ஆனால் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு, அதற்குரிய தகவல்களையும் மூல ஆதாரங்களையும் தேடியெடுத்து பகுத்து ஆய்ந்து முன்வைப்பதென்பது வேறுவகை. அதற்குரிய நேரம், உழைப்பு, தேடல் மிகப்பெரியதென்பதை நாம் அறிவோம்.
தவிர புதிய விடயங்களை, தமிழில் பற்றாக்குறையாக உள்ள விடயங்களை எழுதும் ஆர்வமும் உந்துதலும் கொண்டவராக இருக்கின்றார். இன்னொரு வகையில் சொல்வதானால் பேசாப்பொருளைப் பேசுவதை எழுதுவதை தனக்கான ஒரு இலக்காகவும் கொண்டிருப்பவர்.
ஒரு நாவலை வாசிப்பதற்கும் கட்டுரைத் தொகுப்பு நூலை வாசிப்பதற்கும் பெரிய வித்தியாசமுள்ளது. ஆயினும் சரவணனின் மொழி இலகுவானது. கதைசொல்லிக்குரிய லாவக மொழிநடையையும் அவரது எழுத்தில் காணமுடியும். சலிப்பின்றி வாசிக்கக்கூடிய எளிமையும் நேர்த்தியும் மிக்க சளரமான மொழிநடை. ஆர்வம் குறையாமல் வாசிப்பின் போக்கில் தடங்கல் இன்றி வாசிக்க முடிகிறது இந்நூல்களை.
அரசியல் சொல்லாடல்கள் மட்டுமல்ல. சமூக பொருளாதார, வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு எழுதும் எழுத்துகளிலும் பொருத்தமான சொல்லாடல்களைத் தெரிவு செய்து எழுதுபவர்.
இந்தத் தொடரில் உள்ள கட்டுரைகளின் நீளம் என்பது வாசகர்களை ஒன்றச் செய்யக்கூடிய அளவான நீளத்தில் அமைந்துள்ளன. தொடர் கட்டுரைகள் என்பதால் அவற்றிற்கிடையிலான ஒரு பிணைப்பு, அதாவது வாசகர்களை கட்டுரைகளின் போக்குடன் ஒன்றச் செய்வதற்குமான தொடுப்பு இன்றியமையாதது. ஒன்றிலிருந்து மற்றையதற்கான தொடர்ச்சி - இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் கட்டுரைகளின் கட்டமைப்பு அமைந்திருக்கின்றது.
இலங்கை அரசியலின் 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து, 19ஆம் நூற்றாண்டின் காலகட்டங்கள் இந்நூலில் பேசப்படுகின்றன. அது கொலனித்துவ ஆட்சியின் காலங்கள். எனவே இலங்கை நிலவரங்களைப் பேசுவதென்றால் இயல்பாகவே சர்வதேசம் பற்றியும் பேசவேண்டும். அதன் சூழல் பற்றிய வரலாற்று நிகழ்வுகள், திருப்புமுனைகள் பற்றிய அறிதல் அவசியப்படுகின்றது. இலங்கைத் தீவில் சர்வதேச சூழல் ஏற்படுத்திய தாக்கம், செல்வாக்கு பற்றியும் பேசவேண்டும். கண்டி கலவரம் ;நூலினை வாசிப்பவர்கள் இவற்றை விடயங்களை வாசித்து அறிய முடியும்.
வரலாற்றுப் பார்வையூடாக இடைப்பட்ட காலத்தினதும் சமகாலத்தினதும் எதிர்காலத்தினதும் போக்கினைப் புரிந்துகொள்ளுதல், அறிந்துகொள்ளுதல், கற்றுக்கொள்ளுதல் எனும் அடிப்படைகளில் இவ்விருநூல்களின் சமகாலப் பயன்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.
தொடர்ச்சியான ஆய்வுச் செயற்பாடுகளுக்கு, குறிப்பாக அரசியல் ஆய்வு மாணவர்களுக்கு பயனுடைய தகவல்கள், ஆதாரபூதரவுகள் நிறைய இதில் உள்ளன.
«தனது கட்டுரைகளுக்கு நான் எடுத்துக் கொள்ளும் நேரமும் உழைப்பும் சக்தியும் அதற்கான தகவலை மீள்உறுதி செய்துகொள்வதற்காக» என்று குறிப்பிடுகிறார். தகவல்களின் நம்பகத்தன்மைக்கும் தகவல்களின் துல்லியத்தன்மைக்கும் நேர்த்திக்கும் அவர்கொடுக்கும் முக்கியத்துவம் இது. தவிர அவர் எழுதும் விடயங்கள் அடுத்தநிலை ஆய்வுகளுக்கு உதவியாக அமைய வேண்டுமென்ற கரிசனையினையும் அவர் கொண்டிருக்கின்றார்.
இன்றைய காலம் தகவல் யுகத்தின் காலம். உலக ஒழுங்கினையும், அதன் அரசியலையும் தீர்மானிக்கும் சக்தியாக தகவல்களே விளங்குகின்றன. அனைத்துவகைக் கருத்துருவாக்கங்களிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தும் வகிபாகத்தினை தகவல்களே கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையில்; தகவல்கள், தரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சரவணனின் அணுகுமுறையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அரசியல், வரலாறு, சமூகம், மலையக மக்களின் வாழ்வியல், அவர்களின் உரிமைகள், பெண்ணியம், சாதியத்திற்கு எதிரான எழுத்துகள் எனப் பன்முகப்பரிமாணம் கொண்டவை சரவணனின் கட்டுரைகள், ஆய்வுகள்.
சிங்கள -பௌத்த தேசியவாதம் பலமான சித்தாந்த வடிவம் பெற்றுவிட்ட ஒன்று. அது படிப்படியாகப் பல்வேறு எதிர்மறையான பரிமாணங்களில் விரிவடைந்து இனவாதமாகவும் பேரினவாதமாகவும் ஈற்றில் பாசிசமாகவும் நீட்சிபெற்றுவி;ட்டது என்பது இந்த நூலில் நிறுவப்படுகின்றது. இந்தச் சித்தாந்தத்தை பாதுகாப்பதற்கு ஒரு பலமான அரச இயந்திரம் இருக்கின்றது.
இன்றைய கல்வி முறை, நீதி- நிர்வாகத்துறை, ஆட்சித்துறை என அனைத்திலும் இந்தச் சித்தாந்தத்தைப்பாதுகாக்கும் பொறிமுறை வலுவான கட்டமைப்பு வடிவமாக்கப்பட்டுள்ளன. நிறுவனமயப்பட்டுள்ளன என்பதையே இந்த நூற்றாண்டு வரலாற்றுப்பாடம் கற்றுத்தந்திருக்கிறது என்று இந்த நூலின் இறுதிக்கட்டுரையை நிறைவு செய்திருக்கின்றார் சரவணன். இந்த நூலின் சாரமும் இதுவே.
திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றினையும் தமக்குச் சாதகமான வரலாற்றினையும் பௌத்த சிங்கள பேரினவாத சக்திகள் தொடர்ச்சியாக முன்வைத்துவரும் ஒரு நிலையில் அதனை மறுதலித்து பக்கச்சார்பின்றி வரலாற்றை உள்ளபடி பதிவுசெய்யும் இதுபோன்ற நூல்களின் தேவை அதிகமிருக்கின்றது. இது ஒருவகையில் வரலாற்று மீட்பு என்ற வகைக்குள் அடங்ககக்கூடியது என்று சொல்லத்தோன்றுகிறது.
நூல் அறிமுகவிழாவில், கலாநிதி சர்வேந்திரா, ஊடகவியலாளர் பர்ஸான் பசீர் ஆகியோர் கண்டிக் கலவரம் நூல் பற்றியும், கவிஞரும் எழுத்தாளருமான கவிதா லட்சுமி, ஊடகவியலாளர்கள் ராஜன் செல்லையா ஆகியோர் ‘அறிந்தவர்களும் அறியாதவைகளும்’ பற்றிய அறிமுக-விமர்சன உரைகளை ஆற்றியிருந்தனர். அவர்களின் கருத்துரைகளோடு சரவணனின் ஏற்புரையிலிருந்தும் தொகுக்கப்பட்ட கருத்துகள் இந்தப்பதிவில் தொகுக்கப்படுகின்றது.
கலாநிதி சர்வேந்திரா
தகவல்களும், ஆதாரத்தரவுகளும் இற்நூலின் பலம். நாம் அறியாத, எமக்குத் தெரிந்திராத எங்களுக்குக் கீழ புதைந்து கிடக்கும் தகவல்களைத் கிண்டியெடுத்து சமூகத்திற்கு கையளிக்கிறார். அவருடைய தமிழ், சிங்களம், ஆங்கிலமாகிய மும்மொழி ஆளுமை இந்தப் பணிக்குப் பெரும் துணைநிற்கிறது என்றார் கலாநிதி சர்வேந்திரா.
அவருடைய கருத்துரையின் சாரம் பின்வருமாறு அமைந்திருந்தது:
1915 - கண்டிக் கலவரம் ஏன் ஏற்பட்டது. அதற்கான அரசியல் பின்னணி, கலவரம் எவ்வாறு அரங்கேறியது, கலவரத்தின் விளைவுகள் எவை என்பதான முழுமையான வரலாற்றுப்பார்வையை இந்நூல் பதிவுசெய்திருக்கின்றது. கிட்டத்தட்ட நூலின் மூன்றில் ஒரு பகுதி நேரடியாகக் கலவரத்திற்குள் செல்லவில்லை. எவ்வாறு பவுத்த சிங்கள பேரினவாதம் வளர்ச்சி பெற்றது, எவ்வாறு ஏனைய இனங்களுக்கு எதிரான வெறுப்புணர்வாக வளர்த்துச் செல்லப்பட்டதென்ற பின்னணி 17 வரையான கட்டுரைகளினூடாகப் பேசப்படுகின்றது. அதாவது கலவரம் நிகழ்வதற்கான வரலாற்று பூர்வமான சூழமைவுப் பின்னணிக்கான தகவல்களைத் தருகின்றது முதற்பகுதி.
முஸ்லீம்கள் மீதான வெறுப்புணர்வின் மூலங்களில் ஒன்றாக வர்த்தகப் போட்டி இருந்திருக்கிறது. கலவரம் பற்றிய நேரடி விடயங்கள், விபரிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவு. கலவரத்திற்குப் பின்னர் கலவரம் தொடர்பாக நடந்த நிகழ்வுகள் நீண்ட பகுதியில் பதிவாகியிருக்கின்றது.
பௌத்த மறுமலர்ச்சியின் காலகட்டங்கள், சம்பவங்கள், குறிப்புகள் உள்ளன. பஞ்சமா விவாதங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. (கத்தோலிக்க குருமார்களுக்கும் பௌத்த மதத் தலைவர்களுக்குமிடையில் நடைபெற்ற ஐம்பெரும் விவாதங்கள்). மதுஒழிப்பு, மாமிசம் உண்ணாமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட பிரச்சார செயற்பாடுகள் பதிவாகியிருக்கின்றன.
பௌத்த மறுமலர்ச்சிக்குப் பங்காற்றியவர்கள் பற்றிய தகவல்கள், மற்றும் அது சார்ந்த வரலாற்று நிகழ்வுகள் விபரிக்கப்பட்டுள்ளன. கேணல் ஒல்கொட்ட, அநாகரிக தர்மபால போன்ற பௌத்த சிங்கள இனவாதத்தை நிறுவனமயப்படுத்திய தலைவர்கள் பற்றிய விரிவான தகவல்கள் காணக்கிடைக்கின்றன.
அக்கால அரசியலை மனக்கண்களில் கொண்டுவந்து நிறுத்தும் வகையில் விபரமான, விரிவான தகவல்களை ஆதரங்களோடு சரவணன் பதிவு செய்திருக்கின்றார்.
1915 மே 28 வெசாக் அன்று கலவரம் வெடிக்கிறது. ஜூன் 2ம் திகதி இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது. ஓகஸ்ட் 30 வரையான 100 நாள் இராணுவச் சட்ட காலகட்டத்தில் மிக மோசமான கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இதில் பழிவாங்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினர் சிங்கள பௌத்த தேசியவாதிகள்.
பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியில் அரசியல் நோக்கங்களுக்காக சிங்களத் தலைவர்கள் பலர் மிகக் கொடூரமான முறைகளில் பழிவாங்கப்பட்டனர். அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காக கப்பலில் பிரித்தனியா சென்று வாதாடி அவர்களை விடுவித்தவர் பொன்.இராமநாதன்.
கலவரம் இடம்பெற்ற காலம், முதலாம் உலகப் போரின் காலகட்டம் என்பதால் இந்தக் கலவரம் பிரிட்டீஸ் கொலனி ஆட்சிக்கு எதிரானது என்றும், இதற்குப் பின்னால் ஜேர்மன் அரசின் சதி இருக்கக்கூடுமென்ற ஆட்சியாளர்களின் கருதுகோளின் இந்தப் பழிவாங்கல்களுக்கு காரணமாகின. தவிர அநாகரிக தர்மபால உட்பட்ட பௌத்த சிங்கள தேசியவாதத்தை தூண்டி வளர்த்தவர்கள் அந்நிய ஆட்சிக்கு எதிரான கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தமையும் மற்றொரு காரணமாகும்.
கலவரத்தை வைத்து பௌத்த சிங்கள தேசியவாதிகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் இராணுவச்சட்டம் கொண்டுவரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேடித்தேடிக் கொல்லப்பட்டனர். கைதுசெய்யப்பட்டனர். உரிய விசாரணைகளின்றி இராணுவ நீதிமன்றங்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டனர்.
‘எட்வேட் ஹென்றி பேதிரிஸ்’ பற்றிய ஒரு கதை. திரைப்படமாகவோ நாடகமாகவோ ஆக்கக்கூடியது. அந்தக் கதையில் இருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டே அத்தகையை திரைப்பட அல்லது நாடக முயற்சியைச் செய்யமுடியும். கொலனித்துவ ஆட்சிபீடத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட எட்வேட் ஹென்றி பேதிரிஸ் பற்றிய கதை.
சேர். போன் இராமநாதன் முஸ்லீம்களின் இனத்துவ அடையாளத்தை நிராகரித்தவர். ஆனால் கண்டினக் கலவர சம்பவங்களிலும் அதற்குப் பின்னரும் அவர் முஸ்லீம்களுக்கு எதிராகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சான்றுகளும் இல்லை, எனவே அத்தகைய குற்றச்சாட்டுக்க அவரை உள்ளாக்குவது ஏற்புடையதில்லை என்பதைப் பதிவு செய்திருக்கின்றார். சில இடங்களில் ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். சிங்களத் தலைவர்களுக்கு நடந்த கொடூரங்களை உள்ளபடி பதிவுசெய்துள்ளார். இதன் மூலம் சரவணனின் அறிவியல் நேர்மை வெளிப்படுகிறது. கலவரம் தொடர்பான ஒரு முழுமையான பார்வைப் பரிமாணத்தை இந்நூல் நூல் தருகிறது.
இந்நூலின் மற்றுமொரு சிறப்பு தகவல்களை ஒழுங்கு படுத்திக் கொடுக்கும் முறை.
அதேவேளை தகவல்களைச் சுருக்குதலும் இத்தகைய நூல்களுக்கு முக்கியமானது. (னுயவய சுநனரஉவழைn), விபரணநூலுக்குரிய தன்மை அதிகமுள்ளது. நிலைமைகளை அலசுகின்ற அணுகுமுறை குறைவாகவுள்ளது. ஆய்வுசெய்கிற அணுகுமுறை இன்னும் கூடுதலாக அமைந்திருப்பின் மேலும் சிறப்பாக இந்நூல் வந்திருக்கும்.
இக்கட்டுரைகளை நூலாகத் தொகுக்கும் போது, கோட்பாட்டு ரீதியான விடயங்களை இன்னும் ஆழமாக விவாதித்திருக்கலாம். உதாரணமாக ‘கலவரம்’, ‘இனவாதம்’, ‘தேசியவாதம்’, ‘பாசிசம்’ போன்றவற்றின் வரையறை, வரவிலக்கணம் பற்றிய கோட்பாட்டு விளக்கங்கள், விவாதங்களை மேற்கொண்டிருக்கலாம்.
ஊடகவியலாளர் பர்ஸான் பசீர்
இது ஒரு முக்கிய வரலாற்றுத் தொகுப்பு. வாசகர் மத்தியில் புதிய சிந்தனைக்கும் அறிதலுக்கும் தேடலுக்கும் வழிகோலும் நூலாக அமைந்துள்ளது.
ஓலைச் சுவடிகளிலிருந்து பழைய பத்திரிகைள், தகவல்களை, அதிலும் குறிப்பாகச் சிங்களம் சார்ந்த தகவல்களைத் தமிழர் ஒருவர் தேட முற்படும் போது எதிர்கொள்ள நேரும் சிக்கல்கள், சவால்களை ஒரு ஊடகவியலாளனாக நான் அறிவேன். அதிலும் தகவல்கள் உரியமுறையில் கணினி மயப்படுத்தப்படாத இலங்கை போன்ற நாடுகளில் தகவல் திரட்டும் முயற்சியில் ஏற்படும் சிரமங்கள் அதிகம். பௌத்த மதம் நிறுவனமயமாக்கப்பட்ட நிலை தோற்றுவிக்கப்பட்ட பின்னணி இந்நூலின் முதற்பகுதி நேர்த்தியாகச் சித்தரிக்கின்றது.
சித்தாந்தத்திற்குள் மறைந்துள்ள அதிகாரம் பௌத்த மயப்பட்ட சித்தாந்த உருவாக்கத்தின் உள்ளார்ந்த பரிமாணத்தை இந்நூல் ஆழமாக வெளிப்படுத்துகின்றது. கொலனித்துவத்திற்கு எதிராகவோ, எந்தவொரு போராட்டத்தை உருவாக்கவோ அதற்கான ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி வைத்துள்ளது சிங்கள பெருந்தேசியவாதம். பலநூறு வருடங்களுக்கு முன்னரிருந்தே அத்தகையை நிறுவனமயப்படுத்தலை அது கொண்டிருப்பதை சிறுபான்மையினத்தவராகிய நாம் கண்டுகொள்ளவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.
கலவரம் பற்றிய பகுதி, நேரடிச் சம்பவங்களுக்கான பகுதி சுருக்கமாக இடம்பெற்றுள்ளது. கலவரத்திற்கு முன்னான பின்னணியும், கலவரத்திற்குப் பின்னான விசாரணை, இராணுவச் சட்டம், அது சார்ந்த நிகழ்வுகள் கூடுதல் விபரிப்புகளுடன் இடம்பெற்றுள்ளன.
சித்தாந்த மயப்பட்ட போக்கும் சிந்தனையும் மக்களைக் கலவரங்களுக்குத் தூண்டுகிறது. மதவாதத்தை உசுப்பிவிடும் போக்கினை இன்றும் காண்கிறோம். அதே போல் கண்டிக்கலவரத்திற்குப் பின்னரான இராணுவச் சட்டம் மற்றும் விசாரணை அணுகுமுறையின் தொடர்ச்சியை, அதே போக்கினை சமகால விசாரணை அணுகுமுறை மற்றும் பரிகாரநீதி சார்ந்த அணுகுமுறைகளிலும் அவதானிக்க முடிகிறது.
அறிந்தவர்களும் அறியாதவைகளும்:
கொலனித்துவ இலங்கையில் செல்வாக்குச் செலுத்திய ஆளுமைகள் பற்றிய வரலாற்றுப்பதிவு!
ராஜன் செல்லையா
25 ஆளுமைகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், சுவாரஸ்யமான தகவல்களோடு விபரிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 24 பேர் மேற்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டும் இலங்கையைச் சேர்ந்தவர். கொலனித்துவ நாடுகளிலிருந்து சென்று இலங்கையில் தங்கியிருந்தவர்கள், கொலனித்துவ இலங்கையில் அதிகாரத்தில் இருந்தவர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இதில் அடங்குகின்றனர்.
சரவணன், இலங்கை வரலாறு பற்றிய ஆழமான வாசிப்பு அனுபவமுள்ளவர். முழு இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் தொடர்பான ஈடுபாடுடையவர். சிங்களப் பகுதிகளின் வரலாற்றுக்கூறுகளை அறிந்திருப்பவர். சமூகக் கட்டமைப்புகள் பற்றிய புடம்போடப்பட்ட அறிவு அவருக்கு இருக்கின்றது. இந்நூலில் 25 ஆளுமைகள் பறறிய தனித்தனிப் பதிவுகள் இருப்பினும் சிறியதும் பெரியதுமாக 200க்கு மேற்பட்டவர்களின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
வரலாற்றுப் படிப்பினை என்பது, மனித வாழ்வின் மேம்பாட்டிற்கானது. குற்றுக் கொண்ட பாடங்கள் எங்களை வழிநடத்துகின்றன. அனுபவங்களும் பாடுகளும் நாம் கடந்துவந்த பாதைகளும் எம்முன்னுள்ள பாதையைச் செப்பனிட உறுதுணையாக உள்ளன.
கொலனித்துவ ஆட்சிக்காலத்தில் செல்வாக்குச் செலுத்திய நபர்களின் வரலாற்றினை அருகில் சென்று பார்த்தல், வரலாற்று நபர்களை நெருங்கிச் சென்று அணுகுதல், அதனூடாக மூலங்களை பின்னணிகளை அறிவதன் மூலம் வலராறு பற்றிய வேறொரு பரிமாணம் கிட்டும். முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அந்த வகையில் அறிந்தவர்களும் அறியாதவைகளும் முக்கியத்துவம் பெறுகினறது.
இதற்குள் மனிதாபிமானம் கொண்ட ஐரோப்பியர்கள், தமது கொலனித்துவத்தலைமைக்கு எதிராகப் போராடத்துணிந்த மனித ஆளுமைகள், காதல் வயப்பட்டு அதிகாரத்தை இழந்த பேராளுமைகள், சமூக அடக்குமுறைகளின் பல்வேறு கூறுகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தவர்கள், அறிவியல் தளத்தில், ஆய்வுத்தளத்தில் இலங்கை மக்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் எனப் பன்முக ஆளுமைகளை இந்நூலில் தரிசிக்கக் கிடைக்கிறது. பல காலங்களுக்கு முந்திய இலங்கை சமூகங்களையும் அவற்றின் வாழ்வியல், அரசியல் கூறுகள் பற்றிய புரிதல்களுக்கும் வழிவகுக்கிறது.
மேலெழுந்தவாரியாக இலங்கை வரலாற்றை அணுகுகின்ற போக்கு நம்மில் பலரிடம் உள்ளது. அது ஒரு தட்டையான அணுகுமுறை. வரலாற்றை ஆழமான பரிமாணத்துடன் நோக்கவேண்டிய தேவையுள்ளது. அந்தவகையில் சரவணனின் இந்நூல்மேலதிக தேடலுக்கும் வாசிப்பிற்கும், குறிப்பாக கொலனித்துவ காலம் பற்றிய மேலதிக அறிதலுக்கு உந்துதலாக அமைகின்றது.
கவிஞர், எழுத்தாளர் கவிதா
உலக ரீதியிலும் சரி தமிழர்களின் போராட்டமெனினும் சரி, இனி ஆயுதமென்பது அறிவுதான். அது தகவல்களை அடிப்படையாகக் கொண்ட அறிவு. எவர் ஒருவர் ஒரு விடயம் தொடர்பாக தகவல்களையும் அதுசார்ந்த அறிவையும் கொண்டிருக்கின்றாரோ, அவரே அந்த இடத்தின் ஆளுமையாக உருவெடுக்கிறார். இதில் சந்தேகம் அவசியமற்து. ஏனெனில் இது தகவல் யுகம். சரவணனின் நூல் வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ளது.
இந்நூலில் இலங்கைத் தீவு பற்றி எழுதிய ஆளுமைகள் இடம்பெற்றிருக்கின்றனர். தமிழர்களுக்குச் சாதகமான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன.
இந்நூல் புறப்பொருளைப் பேசுகின்றது. எனினும் சரவணனின் அகச்சீற்றத்தை, அகத்தின் ஏக்கத்தை, அகத்தின் வேண்டுதலை அகத்தின் ஏக்கத்தின் வெளிப்பாடாக இந்த நூலைப் பார்க்கிறேன். இந்த ஏக்கம்தான் இந்த நூலை எழுதத்தூண்டிய உந்துசக்தி என எனக்குத் தோன்றுகிறது.
வெறும் உணர்வுகளை மட்டும் வைத்து நாம் எந்த இடத்தையும் அடையமுடியாத காலம் இது. இவ்வாறான எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் உரிய மதிப்போடு நடாத்தவேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது. சமூகமாகச் சிந்திப்பதும் இவ்வகை முயற்சிகளை உற்சாகப்படுத்துவதும் இன்றியமையாதது.
அறியப்படவேண்டிய தனிநபர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமானவை. அறியப்படவேண்டியவர்கள் எழுதிய மூலநூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டியவை. தகவல்களும் வரலாறும் எமது சமூகம் கொண்டிருக்கப்போகும் அறிவைத் தீர்மானிக்கும் அம்சங்கள். சமகால, எதிர்கால அரசியல் பொருளாதார விடயங்களை விளங்கிக் கொள்வதற்கும் அவைசார்ந்து செயலாற்றவும் இம்மாதிரியான ஆய்வெழுத்தாக்கங்கள் உபயோகப்படுகின்றன.
சரவணனின் எழுத்துநடை எளிமையானது. சீராகக் கதை சொல்லும் ஆற்றல் அவரிடம் உள்ளது. அது அவருடைய அனுபவத்தின் சான்றாகக் கொள்ளக்கூடியது.
பேரினவாதத்தைப் பேசும்போது நான் தடக்குவதில்லை : நூலாசிரியர் சரவணன் ஏற்புரை
லண்டன், அவுஸ்ரேலியா, இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வுகளிலும், சமூக ஊடகங்கள் வழியாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை உள்வாங்கியுள்ளதாகத் தனது ஏற்புரையைத் தொடங்கிய சரவணன் அந்தக் கருத்துகளையும் சேர்த்து அதற்குரிய தனது அபிப்பிராயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
அரசியல் செயற்பாடுகளுக்கான ஆயுதமாக எழுத்துத்துறையைத் தெரிவுசெய்தேன். இந்த இரண்டு நூல்களும்கூட வருமான எதிர்பார்ப்புகளுக்காக எழுதப்படவில்லை. பேசாப்பொருளைப் பேசுபொருளாக்குவதென்பதை எனது எழுத்துகளுக்கான தாரகமந்திரமாகக் கொண்டிருக்கிறேன். பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விடயத்திற்காக எனது நேரத்தை உழைப்பினை விரயமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.
இலங்கையின் மையப்பிரச்சினை இனப்பிரச்சினை என்பது யதார்த்தம். எழுதத்தொடங்கிய காலத்திலேயே இதன் மூலம் பௌத்த சிங்கள பேரினவாதம் என்பதை அடையாளம் கண்டுகொண்டேன்.
சிங்களச் சூழலில் தமிழர்களின் பிரச்சினை சார்ந்து எப்படிச் சிந்திக்கிறார்கள், இயங்குகினறார்கள், அவர்களின் உளவியல் எத்தகையது எப்படி சிங்கள உளவியலைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்கள் போன்ற விடயங்களை அவர்களது மொழியில் சென்று பார்த்தால் மாத்திரமே தேடி அடையாளம் காணமுடியும் ஆனால் அதனை நோக்கித் தொடர்ச்சியாகச் செயற்படாமல், எம்முடைய மூலங்களாக நாம் வேறு விடயங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.
இந்த அடிப்படையில் முக்கிய பத்திரிகையில் (சரிநிகர்) இனப்பிரச்சினை சார்ந்து எழுதுவதற்கான வாய்ப்பு அமைந்த போது அதனைச் சரியான முறையில் பயன்படுத்தவேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது. அந்த மொழியில் தேடி பேசாப்பொருளைப் பேச முனைந்தேன். அதற்காக வலுக்கட்டாயமாக சிங்கள மொழியைக் கற்க நேர்ந்தது
இனவாதப் போக்கினைத் தொடர்ந்து அவதானித்தல், அதனை அம்பலப்படுத்தல் என்பது என் கட்டுரைகள், கட்டுரைத்தொடர்களின் அடிப்படையாக வரித்துக்கொண்டிருக்கிறேன்.
சிங்கள உளவியலைத் தொடர்ந்து அவதானிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் அதுவொரு நிறுவனமயப்பட்ட கட்டமைப்பு. அதன் சகல கூறுகளையும் ஆணித்தனமாக அம்பலப்படுத்திக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதனைச் செய்யும் போது பல்வேறு விமர்சனங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. தமிழ்த் தேசியவாதி எனவும் இன்னும் வேறு பல பேர்களிலும் என்னை நோக்கி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அடிப்படையில் நான் ஒரு மார்க்சியவாதி. மார்க்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டவன். வர்க்க மாற்றமே அடிப்படையான பல்வேறுபட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று நம்புபவன். அதேநேரத்தில் அதனைத்தாண்டி, சமகாலத்தில் நிலவுகின்ற கூர்மையான மற்றப்பிரச்சினைகளை நிராகரித்துவிட்டு, வர்க்கப்பிரச்சினையைக் கதைக்க முடியாது என்பதிலும் நம்பிக்கை கொண்டவன்.
பேரினவாதத்தைப் பேசும்போது நான் தடக்குவதில்லை. அதில் ஒரு தெளிவான வர்க்கப்பார்வை, பெண்ணியப் பார்வை, ஒரு தலித் பார்வை இழைந்திருக்கும். இந்த இருநூல்களிலும் அதனைக் கூர்மையாக அவதானிக்கமுடியும்.
நன்றிகள் :
இக்கட்டுரையின் சுருக்க வடிவம் 09.06.2018 அன்று வீரகேசரியில் வெளியானது
இக்கட்டுரையின் முழுமையான வடிவம் இரு தொடராக பொங்குதமிழ் இணையத்தில் வெளியாகின
- என்.சரவணனின் 1915: கண்டி கலவரம் - பேரினவாத வேரை ஆவணப்படுத்துகிறது!
- என்.சரவணனின் இருநூல்கள் - அறிமுகக் கருத்துரைகளின் தொகுப்பு!
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...