Headlines News :
முகப்பு » , , , , » போராட்டமின்றிய வாழ்வு சாத்தியப்பட்டதுண்டா? - என்.சரவணன்

போராட்டமின்றிய வாழ்வு சாத்தியப்பட்டதுண்டா? - என்.சரவணன்


“எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும்” ரஜினி சொன்ன இந்த வார்த்தை இன்று தமிழ் சமூகத்தில் முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது. அசுர பந்தாவுடன் அரசியலுக்கு வரும் ஒருவர் போராட்டம் என்பதன் பொருள் பற்றி கொண்டிருக்கிற விளக்கம் நம்மெல்லோரையும் விசனமடையச் செய்திருக்கிறது. சரி அதென்ன போராட்ட.ம்.

முதலில் போராட்டம் இன்றிய ஒரு வாழ்வு சாத்தியம் தானா? மனித இனம் தளைத்து நிற்பதற்கு போராட்டம் இன்றி சாத்தியப்பட்டிருக்குமா? உலகில் வாழும் சகல உயிரினங்களும் போராடித் தான் தம்மைத் தற்காத்திருக்கிறது. போராடித் தான் வளர்ச்சியுற்றிருக்கிறது. ஆதி மனித இனம் விலங்குகளிலிருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமன்றி தனது பசியை ஆற்றுவதற்கு வேட்டையாடுவதற்கும் சேர்த்து போராடித்தான் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளது. உலக உயிரினங்கள் அனைத்தின் பிறப்பும், ஆரம்பமும் போராட்டத்துடன் தான் இவ்வுலகுக்கு பிரவேசிக்கின்றன. 

முடிவுறாப் போராட்டமே மனித வாழ்க்கையை வளர்ச்சிக்கு கொண்டுவந்துள்ளது. சமூக மாற்றமும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. மனித வாழ்க்கையை தகவமைத்துக்கொள்ள வழியேற்படுத்தித் தந்துள்ளது. போராட்டத்தின் பயனாகத்தான் மனிதகுலத்தின் இருப்பைத் தக்கவைக்க; கண்டுபிடிப்புகளை இடையறாத் தந்திருக்கிறது. அது மனித பரிணாம வளர்ச்சி முழுவதும் நிகழ்ந்திருக்கிறது.

விரும்பியோ விரும்பாமலோ நாம் போராட்டங்களின் பங்காளிகள். "போராட்டம்" வாழ்க்கைப் பயணத்தின் அங்கம். போராட்டமே வாழ்க்கை வழிமுறை. அதுமனித இருப்புக்கு கொடுக்கப்படும் விலை. உலகில் சகல வெற்றிக்கும் போராட்டம் ஏதோ ஒரு வடிவத்தில் விலையாக கொடுக்கப்பட்டிருக்கும்.

எதிரியும் எதிரியின் வழிமுறையுமே நமது ஆயுதம் எது, போராட்ட வழிமுறை  எது என்பவற்றைத் தீர்மானிக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக காந்தியின் வழிமுறை அகிம்சை என்றால், சுபாஷ் சந்திரபோஸின் வழிமுறை ஆயுதவழிமுறையாக தெரிவதன் காரணம் விடுதலையை வென்றெடுப்பதற்கான அடிப்படை தந்திரோபாயம் பற்றிய இரு வேறு வழிமுறைகள். இந்திய சுதந்திரத்துக்கு இந்த இரண்டுக்குமே பங்குண்டு. போராட்டம் என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கிறது.

“கல் எறிவது” பாலஸ்தீனத்தின் போராட்ட வடிவக் குறியீடாக ஆகியிருப்பது அவர்களுக்கு கல்லெறியத் தெரியும் என்பதால் அல்ல. அல்லது கல்லெறிந்து விடுதலையைப் பெற்றுவிடலாம் என்பதால் அல்ல. மாறாக சொந்த நிலம் சுற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு, போரை எதிர்கொள்ள சகல ஆயுத விநியோக வழிகளும் மூடப்பட்ட நிலையில் சாமான்யர்களின் உச்சபட்ச ஆயுதம் கற்கள் மட்டும் தான் என்பதால் தான்.

பேரழிவை எதிர்த்துநிற்க கற்களை விட உச்சபட்ச ஆயுதம் இன்றிய சாமான்யர்களாக; எதிரியை எந்தளவும் எதிர்த்துநிற்கும் ஓர்மம் உள்ள மக்களாக அவர்கள் எப்போதோ ஆக்கப்பட்டுவிட்டார்கள்.

2014 ஆம் ஆண்டு நோர்வேயில் நிகழ்ந்த ஒரு இசைக்கச்சேரியொன்றின் போது மேடையில் தோன்றிய ஒரு இளம் சோடியினர் அம்மேடையில் வைத்து பாலுறவு புரிந்தனர். அந்த சம்பவம் அன்றே சகல செய்திகளிலும் இடத்தைப் பிடித்துக்கொண்டது. பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்கள் அவர்களிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று வினவினர்.

அவர்கள் இருவரும் சூழலியலாளர்கள். FFF (Fuck For Forest) என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்கள். காடழிப்புக்கு எதிரான இயக்கத்திற்கு பணம் சேர்க்க அதுவே சிறந்த வழியாக தெரிவு செய்துகொண்டவர்கள். காடழிப்புக்கு எதிரான தமது போராட்டத்தின் கவனயீர்ப்பு உத்தி அந்த சமபவம் என்றார்கள் அவர்கள். ஒருவகையில் அவர்களின் போராட்ட உத்தி கணிசமான அளவு வெற்றி பெற்றிருந்தது. அவர்களின் பின்னால் துரத்திய ஊடகங்களை, அவர்கள் காடழிப்பு பற்றிய கவன ஈர்ப்புக்கான பிரச்சாரத்திற்கு அதிகபட்சம் பயன்படுத்திக்கொண்டார்கள். சரி பிழைக்கப்பால் அது அவர்களின் போராட்ட வடிவம்.

போராட்டத்தில் எத்தகைய வீரியத்தைப் பாய்ச்ச வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்.

“உனது ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கிறான்”
என்கிற சேகுவேராவின் வசனம் உலகப் பிரசித்தம் பெற்றது.

போர்க்களங்கள் மாறுகின்றன, போர்த்தளபாடங்களும், போருக்கான நியாங்களும் மாறுகின்றன, போர் வடிவங்களும் மாறுகின்றன ஆனால் போர்கள் நின்றதில்லை. போர் உத்திகள் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன. போராட்டத்துக்கான அவசியம் நின்றுபோனதாக மனித வரலாற்றில் எங்கும் இருந்ததில்லை.

தனி மனித வாழ்க்கை தான் எத்தனை விதமான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறது. போராட்டத்தின் களங்கள் தான் மாறுகின்றன. அதன் பண்பு, வடிவம், அளவு என்பன மாறக்கூடும் ஆனால் போராட்டம் இருந்துகொண்டுதான் இருகின்றன.

நீதியும், ஜனநாயகமும், சமத்துவமும் இருந்துவிட்டால் போராடுவதற்கு ஏது தேவை. ஆனால் மெய்யுலகு அதுவல்ல. இதைத் தான் மாவோ சே துங்
“அனைத்து போராட்டங்களும் புரிந்து கொள்ளப்பட்டால், அற்புதங்கள் சாத்தியமாகும்”
(Once all struggle is grasped, miracles are possible) என்பார்.

எதிர்த்துப் போரிடும் சக்திகள் விரும்பிப் போரை ஏற்றுக்கொண்டதில்லை. தமது இருப்புக்கு பாதகம் விளைகையில் போராடி எதிர்கொள்வதற்கு தள்ளப்படுகிறது.

“தக்கன பிழைத்தல் அல்லன மடிதல்” என்பது ஒரு பிரபல்யக் கோட்பாடு. “இருப்புக்கான போராட்டம்”  (Struggle for Existence) என்று டார்வின் வெளிப்படுத்திய கோட்பாடானது “தக்கன பிழைக்கும்” (The survival of the fittest) என்கிற தலைப்பில் அக்கருத்தாக்கம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. மனித இனம் பரிணாமமடைந்ததன் இரகசியமே இந்த விதி தான்.

தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கின்றனர் மக்கள். அந்த அரசு மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில் மக்கள் விரோத சக்திகளை பாதுகாத்தால் மக்கள் எங்கு செல்வார்கள். அல்லது அரசே மக்கள் விரோத நடவடிக்கைளில் இறங்கினால் எங்கு போய்தான் முறையிடுவார்கள். மக்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்தால், நிராகரித்தால், மறுத்தால் மக்களின் தெரிவு தான் என்ன? அரச இயந்திரமே அடக்குமுறையை நேரடியாக மேற்கொண்டால் மக்களின் தெரிவுதான் என்ன? கையறு நிலைக்கு தள்ளப்பட்ட பாதிக்கப்பட்ட தரப்பு தமக்கான நீதியை தேடிக்கொள்ளும் வழிதான் என்ன? 

ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பில் சலுகை பெற்ற சக்திகளின் வாழ்வும் - அடக்கப்படும் மக்களின் வாழ்வும் ஒன்றல்ல. ரஜினியின் தேவையும் சாதாரண மக்களின் தேவையும் ஒன்றல்ல. ரஜினியின் போராட்டமும் மக்களின் போராட்டமும் ஒன்றல்ல. ஆக போராட்டம் பற்றிய ரஜினியின் புரிதலும் வாழ்வுக்காகவே போராடிப் பழகிய மக்களின் புரிதலும் ஒன்றல்ல.

மக்களின் போராட்டம் ரஜினிக்காவும் தான் என்கிற எளிய புரிதல் கூட ரஜினிக்கு இல்லை என்பது ரஜினியின் வர்க்கப் பார்வை. ஒடுக்கப்படும் மக்களின் நெஞ்சுறுதியை சீண்டிப்பார்த்து, கேலி செய்து அதிகார வர்க்கத்தை காப்பாற்றும் சொல்; அவரது “போராடாதே” என்கிற சொல். ரஜினியின் திரைப்படங்களைப் பார்த்தாவது அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும் ரஜினி. “போராட்டம்” என்பது ரஜினிக்கு என்னவாகவாவது இருக்கட்டும். மக்களுக்கு அது பொழுது போக்கல்ல. சுகமானதும் அல்ல.

சமூக அநீதிகளுக்கு எதிரான விடயத்தில் ரஜினி பார்வையாளன், மக்கள் பங்காளர். போராட்டம் என்பது எவரும் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. அவை திணிக்கப்பட்டவை. போராடியே வாழக் கற்றுக்கொண்ட மக்களுக்கு அதைப் புரிந்துகொள்வதில் எந்த மயக்கமும் இருக்காது. போராட்டத்துக்காகப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் அம்மக்கள். 

போராட்டமின்றி மாற்றமில்லை, போராட்டமின்றி வாழ்க்கையில்லை.

நன்றி - அரங்கம்

Share this post :

+ comments + 2 comments

Article added some value to think something in a practical way.Now most of da people will understand the difference between the cinema and reality.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates