Headlines News :
முகப்பு » , , , » செம்பனை: உயிர்க்கொல்லி! உலகக்கொல்லி! - என்.சரவணன்

செம்பனை: உயிர்க்கொல்லி! உலகக்கொல்லி! - என்.சரவணன்



"செம்பனை" (Palm oil tree) இலங்கையிலும், உலகளவிலும் ஏற்படுத்திவரும் விபரீதம் பற்றிய தொடர் இது. சுகாதாரம், ஆரோக்கியம், வாழ்வியல், சுற்றுச் சூழல் என்பவற்றில் இதுவரை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளையும், இனி எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து பற்றியதும் இத்தொடர் விபரிக்கவிருக்கிறது. 

இதன் பின்னால் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் வெகுஜன பிரசாரங்களுக்கு பலியாகியுள்ள மக்கள் பற்றியும் தனித்தனியாக ஆராயும் இத்தொடர். உலக அளவில் மாபியா வர்த்தகமாக வளர்ந்திருக்கிற இத்தொழில் இலங்கையிலும் மாபியாக்களின் கைகளில் சிக்கியிருப்பது அதிர்ச்சிகரமான தகவல். செம்பனை பற்றி தமக்கு சாதகமான கருத்துக்களை பரப்புவதற்காக சூட்சுமமாக ஊடகங்களைக் கூட கார்ப்பரேட் மாபியாக்கள் பயன்படுத்திவந்திருக்கின்றன.

இலங்கையின் பெருமளவு வளமான காடுகளையும், பயிச்செய்கைகளையும் அழித்து வரட்சிக்குள்ளாக்கி, நீர் வளத்தையும், மண் வளத்தையும் அழித்து, வளிமண்டலத்தை மாசுபடுத்தி, உலகத்துக்கே கேடான “கார்பன்-டை-ஆக்சைட்”  வாயுவை வளிமண்டலத்தில் அதிகரிக்கச் செய்தும், உடலாரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் இந்த செம்பனை இலங்கையை அழிக்கும் புதியவகைக் கொல்லி என்றே கொள்ளவேண்டும். இதற்கு உதாரணங்கள் பலவற்றை இத்தொடரில் ஆதாரங்களாகக் காணலாம்.

உலகம் முழுவதும் செம்பனைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இலங்கையில் புதிது புதிதாக செம்பனைச் செய்கைகள் விரிவாகி வருகின்றன. ஏற்கெனவே செம்பனை உற்பத்தியில் தமது பொருளாதார பலத்தை உறுதிசெய்துகொண்ட நாடுகள் செம்பனை எதிர்ப்பு நாடுகளின் மீது கடுப்பாகியுள்ளன. செம்பனையை நிறுத்தினால் நாங்கள் உங்கள் நாட்டிலிருந்து வரும் பொருட்களுக்கு இறக்குமதித் தடையை விதிப்போம் என்று சென்ற ஆண்டு மலேசியப் பிரதமர் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை செய்திருந்ததும் கவனிக்கத்தக்கது.


“நாங்கள் விற்பதில்லை” வாசகம்

ஐரோப்பாவில் அன்றாடம் பயன்படுத்தும் உணவிலும், அழகுசாதனப் பொருகள், இனிப்புப்பண்டங்கள் என்பவற்றில் கிட்டத்தட்ட 50% வீதம் செம்பனை எண்ணெய் கலந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சோப்பு, ஷாம்பூ, சலவைத்தூள், பற்பசை, லிப்ஸ்டிக் போன்றவைத் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. “பாமாயில்” கொழுப்பு அதிகம் கொண்டது’ என்று அதனை வாங்க மறுப்பவர்கள் கூட தம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சாக்லேட், ஐஸ்கிரீம், உடனடி நூடுல்ஸ், லேஸ், குர்குரே பொட்டலங்கள், என்பவற்றிலும், மெக் டொனால்ட்ஸ், பேர்கர் கிங், கே.எப்.சி போன்றவற்றில் வாங்கும் பீட்சா, கே.எஃப்.சி கோழி வறுவல் அனைத்திலும் பாமாயில் இருப்பதை அறிவதில்லை.


ஐரோப்பிய நாடுகளில் பெரிய பலசரக்கு அங்காடிகள் பலவற்றில் “எங்கள் கடைகளில் செம்பனை எண்ணெய் கலந்த பொருட்களை விற்பனை செய்வதில்லை” என்கிற  வாசகம் பொறித்த விளம்பரங்களை தமது வாடிகையாளர்களுக்கு அறிவிப்பதான் மூலம் தமது கடைகளுக்கு வரச் செய்கிறார்கள்.

இலங்கையில் செம்பனை வேளாண்மை பெரும்பாலும் தென்மாவட்டங்களிலேயே பயிரிடப்பட்டுள்ளன. அவை சிங்கள பிரதேசங்களிலேயே அதிகமாக ஆக்கிரமித்திருப்பதால் தமிழ் சூழலில் இது பற்றிய போதிய விளக்கங்களை அறியமாட்டார்கள். ஆனால் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இலங்கையில் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் கூட கேகாலை மாவட்டத்திலுள்ள தெஹியோவிட்ட பகுதியில் செம்பனை உற்பத்தியை நிறுத்தக்கோரி பெரும் எதிர்ப்பு ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் அங்குள்ள மக்களால் நடத்தப்பட்டது. சிங்களப் பிரதேசங்களில் தற்போது ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சி தமது சொந்த அனுபவங்களால் ஆனது. ஆனால் மலையகத் தமிழ் சூழலில் இதற்கு எதிரான விழிப்புணர்ச்சி இன்னமும் மேலெழத் தொடங்கவில்லை.

அதுபோல யுத்தத்தின் காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் நுழைய முடியாதிருந்த “செம்பனை” உற்பத்தியாளர்கள் இனிமேல் அங்கும் நுழைய வாய்ப்பிருக்கிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. செம்பனைக்கு உகந்த சீதோஸ்ன நிலையும், காலநிலையும், மண்ணும் அங்கு அவர்களுக்கு தாராளமாகவே இருக்கிறது. இந்த அபாயத்துக்கு முன்னர் எச்சரிக்கைகொள்ள வேண்டியிருக்கிறது.

சமீப காலமாக மலையகப் பகுதிகளில் வேகமாக இறப்பர், தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு செம்பனை நட்டுக்கொண்டு வருவதால் இப்போது தான் அங்கு செம்பனை பற்றிய ஆரம்ப அறிவு பெறப்பட்டு வருகிறது. அதுவும் சிங்களப் பெயரான “கட்டுபொல்” என்கிற பெயரில் தான்.


“கட்டுபொல்”

செம்பனை என்று இன்று குறிக்கப்படும் மரமானது “பாம் ஒயில்” எனப்படும் எண்ணெயைத் தரும் எண்ணெய்ப்பனையாகும். பெரும்பாலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இந்த மரத்தின் ஆக்கிரமிப்பு இன்னமும் பாரிய அளவில் தொடங்கப்படாததால்  சிங்களத்தில் அழைக்கப்படும் “கட்டுபொல்” என்கிற சொல்லைத்தான் தமிழர்கள் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை சிங்களத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கும்போது அதற்கு “முள்ளுத் தேங்காய்” என்று மொழிபெயர்க்கவும் முடியும்.

இலங்கையில் சமீப காலமாக “முள்ளுத் தேங்காய்” என்கிற பிரயோகத்தையும் ஆங்காங்கு காண முடிகிறது. ஆனால் இதற்கு செம்பனை என்று பல்லாண்டுகாலமாக மலேசியா போன்ற நாடுகளில் தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மலேசியாவில் சென்ற 2017இல் தான் செம்பனை அறிமுகமாகி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினார்கள். மலேசியாவின் பிரதானமான வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித் தரும் வேளாண்மை அது. மலேசியாவில் செம்பனையிலிருந்து தயாரிக்கப்படும் பாமாயில் (Palm oil) தொழிலில் அதிகளவு தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு நீண்டகாலமாக தமிழர்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள சொல் “செம்பனை”.

செம்பனையைப் பற்றி சற்று ஆழமாக அறிவதாயின் இலங்கையில் உள்ள பனை வகைகளையும், பனை இனங்கள் வளர்வதற்கு சாதகமான அம்சங்களை இலங்கை எந்தளவு கொண்டுள்ளது என்பதையும் அறிவது முக்கியம்.

செம்பனை என்பது பனைக் குடும்பத்தைச் சேர்ந்த தாவர வகையினம். பனைக்குடும்பத்தில் ஏறத்தாள 217 பேரினங்களும், 2,50-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் உள்ளதாக குறிப்படப்படுகிறது. தென்னை கூட பனையினத்தை சேர்ந்தது தான். பாக்கு, ஈச்சை போன்றனவும் கூட இக் குடும்பத்தைச் சேர்ந்தவை தான். இக்குடும்பத் தாவரங்கள் உலகிலுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

இலங்கையிலும் கூட தென்னை, பாக்கு, பனை, ஈச்சை அனைத்தும் கிடைக்கிறது. இலங்கையின் செல்வங்களில் ஒன்றாக தென்னை கருதப்படுகிறது. அதுபோல வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் பனை கருதப்படுகிறது. பனை யாழ்ப்பாணத் தமிழர்களின் ஒரு குறியீடாக மட்டுமன்றி தமிழர்களின் குறியீடாகக் கூட அடையாளப்படுத்தப்படுகிறது.

காலனித்துவத்துவ காலத்தில்...

இந்த தென்னை - பனை வகைகள் இலங்கையின் அடையாளமாக உலகளவில் திகழ்கிறது. காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு காலத்தில் இலங்கைக்குள் நுழைந்ததும் வளமாக இருந்த பனை வகைத் தாவரங்களை மலைப்பாக பார்த்தார்கள். டச்சு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த இராணுவத் தளபதிகளின் சீருடையில் பனைச் சின்னம் படமாக பொறிக்கப்பட்டிருந்திருக்கிறது.

இலங்கைக்கே உரிய பாரம்பரியப் பனை வகையினங்களாக தென்னையும், பனையும், பாக்கும் இருந்து வந்திருக்கிறபோதும் பேரீச்சம் வகைக்கு கிட்டிய செம்பனை கடந்த அரை நூற்றாண்டுக்குள் தான் இலங்கைக்குள் நுழைந்தது. ஆங்கிலேயர்கள் அவர்களின் காலனித்துவத்துக்குட்பட்ட மலேசியா போன்ற நாடுகளில் நூற்றாண்டுக்கு முன்னரே அறிமுகப்படுத்திவிட்டார்கள். ஆரம்பத்தில் அலங்காரத்துக்காகவே அவர்கள் அங்கெல்லாம் நட ஆரம்பித்தார்கள்.  பின்னர் அது பணம் கொழிக்கும் மரமாக அடையாளம் கண்டுகொண்டார்கள்.

இலங்கையிலோ அவர்கள் ஏற்கெனவே தேயிலை, இறப்பர், கோப்பி போன்ற விடயங்களில் கருத்தூன்றிவிட்டிருந்தனர். செம்பனைக்கு உகந்த காலநிலையைக் கொண்ட மத்திய கோட்டுக்கு அண்மித்த நாடுகளில் அவர்கள் செம்பனைப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்தபோதும் இலங்கைக்கு அவர்கள் கொண்டுவருமுன் இலங்கை சுதந்திரம் அடைந்துவிட்டது என்றே கூற வேண்டும்.

பனையின் பெருமையைப் பற்றி ஒல்லாந்தர் காலத்தில் இலங்கைக்கு வந்து மதப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிலிப்பு பால்டேஸ் 1672 எழுதிய “A true and exact description of the most celebrated East-India coasts of Malabar and Coromandel; as also of the isle of Ceylon” முக்கிய நூலில் பல விபரங்களை எழுதியிருக்கிறார்.

இலங்கையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியது பற்றிய நேரடி சாட்சிகளாக இருந்து பல பதிவுகளை நமக்கு விட்டுச் சென்றவர்களில் முக்கியமான இவர்களாக ஜோன் டொயிலி, மற்றும் ஹென்றி மர்ஷலைக் குறிப்பிட முடியும். கண்டியைக் கைப்பற்றுவதற்கான போரின் போது மருத்துவராக அவர் தலைமை தாங்கியவர். கூடவே பலவித பணிகளில் இலங்கையில் ஈடுபட்டவர். அவர் இலங்கைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். தென்னையைப் பற்றி 1836இல் தனிப் புத்தகத்தையே அவர் எழுதியிருக்கிறார். (Contributions to a natural history of the cocoa-nut tree, - H. Marshall) அதில் இலங்கை பனை வகை மரங்கள் வளர்ப்பதற்கான பௌதீக, புவியியல் எத்தனை சாதகமானது என்பது பற்றிய விஞ்ஞான பூர்வமான பல தகவல்களை அப்போதே எழுதிவைத்திருக்கிறார்.

1923 இல் ஜோன் பெர்கியுசன் எழுதிய “முற்றிலும் தென்னை பற்றியது” (Coconut Planter’s Manual – Ferguson’s - “All about the coconut palm) என்கிற 256 பக்கங்களைக்கொண்ட நூல் ஒரு பெரும் விபரத் திரட்டு என்றே கூறவேண்டும். இலங்கையில் திட்டமிட்ட தென்னம் பயிர்ச்செய்கை முதன் முதலில் பெரும் செலவில் யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் 1841ஆம் ஆண்டு ஆங்கிலேய காலனித்துவத்தால் ஆரம்பிக்கப்பட்டது என்கிறார். அந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களையும், சிறைக்கைதிகளையும் இந்தப் பயிர்ச்செய்கைக்கு ஊழியர்களாக ஆங்கில அரசாங்கம் பயன்படுத்தியிருக்கிறது. மேலும் யாழ் குடா நாட்டில் மாத்திரம் மக்களுக்குச் சொந்தமான எண்பது லட்சம் பனைமரங்கள் இருப்பதாக அந்நூலில் குறிப்பிடுகிறார். அதுபோல பண்டைய தமிழ் இலக்கியங்களில் பனை மரத்திலிருந்து 800 வகையான பயன்களைப் பெறமுடியும் என்று குறிப்பிட்டிருப்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலங்கையின் புனித சரித்திரமாக சிங்களவர்களால் போற்றப்படும் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்கள் பற்றி ஆய்வு செய்த அந்திரியாஸ் நெல் (Andreas Nell) தனது “மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் மரங்களும் செடிகளும்” (Some Trees and Plants Mentioned in the Mahavamsa) என்கிற ஆய்வில் பனை பற்றிய விபரங்கள் அதில் எந்தளவு விளக்கப்பட்டுள்ளது என்பதை விபரித்திருக்கிறார். 

செம்பனை அடுத்த இதழில் விரிவாகிறது...

நன்றி : தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates