Headlines News :
முகப்பு » , , , » “நோமோபோபியா” : நாசத்திலிருந்து நம்மைக் காத்தல்! - என்.சரவணன்

“நோமோபோபியா” : நாசத்திலிருந்து நம்மைக் காத்தல்! - என்.சரவணன்


நோமோபோபியா இன்று உலகத்தின் மாபெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்துவருகிறது..

அதென்ன நோமோபோபியா? உங்கள் கைத்தொலைபேசியில் அலைவரிசை சரியாகக் கிடைக்காமல் போனாலோ, பேட்டரி தீர்ந்து விட்டாலோ, செல்பேசியைக் காணவில்லை என்றாலோ, மிகவும் அதிகமாகப் பதட்டப்படுகிறீர்களா?அடிக்கடி அதனை பார்த்துவிட வேண்டும் என்கிற உணர்வு மேலிட்டவரா நீங்கள் அப்படியென்றால் உங்களுக்கு 'நோமோபோபியா' இருக்கிறது என்பது உறுதி. அப்படி அனாவசியமாக பயப்படுவதை ''நோ மொபைல் போன் போபியா'' (Nomophobia -"no-mobile-phone phobia") என்று வரைவிலக்கணப்படுத்தியிருக்கிறார்கள்.

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு மாதிரியான பயம் இருக்கும். ஆனால் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பயப்படுவதையே போபியா (Phobia) என்று அழைப்பர். போபியா என்பது இயற்கைக்கு மாறான பயம் ஆகும். போபியா உள்ளவர்கள் சாதாரணமாக பயப்படுபவர்களைக் காட்டிலும், அதிக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஒரு வகையில் போபியாவை ஒரு மனநோய் என்றும் கூறலாம். பலவகை போபியாக்களை (Phobia) மருத்துவ உலகம் அடையாளம் கண்டு வரைவிலக்கணப்படுத்தியுள்ளது.

தொடர்பாடலுக்கு பயன்ப்படுத்தத் தொடங்கி, இன்று தேடலுக்கும், ஆய்வதற்கும், பொழுதுபோக்குக்கும், இன்னும் பல தேவைகளை கண்டடைவதற்கும் செல்பேசியைப் பயன்படுத்தி வருகிறோம். இதன் நீட்சி இன்று அதில் தங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். பலர் அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதன் விளைவு நமது வாழ்க்கை உறவுகள் அருகில் இருக்காமல் கூட இருக்கலாம் ஆனால் செல்பேசி அருகில் இல்லையென்றால் பித்து பிடித்தவர்கள் போல ஆகிவிடுகிறார்கள். நாளுக்கு நாள் இந்தப் பித்து அதிகரித்து ஒரு வித மன நோய்க்கு ஆளாகிவிடிகிறார்கள். அதனை அடையாங்கண்டு அதற்கு இட்டிருக்கிற பெயர் தான் நோமோபோபியா.

நோமோபோபியாவை நம்பியே இன்று பெரும் வர்த்தகங்கள் உலகில் தோன்றியுள்ளன. காசு பண்ணுவதற்காகவே பெரும் முதலீடு செய்யும் ஒரு தொழிலாக இந்த செல்போனுக்கு அடிமையாக்கும் வர்த்தகம் உஎலகமெந்கும் கோலோச்சத் தொடங்கியிருக்கிறது. 

காலையில் எழுந்ததும் வாட்ஸ்அப்பில் வணக்கம் சொல்வதையும், இரவில் கண்கள் சொருகும்வரை செல்போனை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதையும், அடிக்கடி சரி பார்ப்பதையும், படுக்கைக்கு அருகிலேயே செல்போனை வைத்திருப்பதையும் பலரும் வழக்கமாக்கி வருகின்றனர். இதில் சிறியவர், பெரியவர் என்ற பேதம் இல்லை. ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏராளமான பிரச்சினைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. குற்றங்கள் அதிகரிக்கின்றன. உறவுகள் கூட வேறு வடிவங்களைப் பெற்று வருகின்றன.

முகநூலில் அடுத்த “லைக்” வந்து விட்டதா? வாட்ஸப்பில்  புதிய தகவல் என்ன? ட்விட்டரில் போடப்பட்டிருக்கிற பின்னூட்டமென்ன? என்று பதட்டத்துடன் காத்திருப்பதும். வராத செய்தியை வந்திருப்பதாக கற்பனை செய்துகொண்டு திறந்து திறந்து பார்ப்பதும் ஒரு மன நோயாகவே கொள்ளப்படுகிறது. அரிக்காமலேயே அரிப்பதுபோலத் தோன்றுவதால், சொறிந்து கொள்வதுதான், இந்த தொழிநுட்ப யுகத்தில், புதிய நோய் அறிகுறியாக உருமாறியிருக்கிறது.

மதுபோதை பாவனையை நிறுத்த பல மருத்துவ நிலையங்களும், ஆலோசனை மையங்களும் இருப்பதைக் கண்டிருக்கிறோம். அதுபோலவே மேற்குல நாடுகளில் நோமோபோபியாவை ஒருவித நோயாக அடையாளம் கண்டு அதற்கு வைத்தியம் பார்க்கும் முறைமைகளும் மருத்துவ ஆலோசனை (Smartphone Addiction Therapy) வழங்கும் நிலையங்களும் (smartphone addiction treatment centers) கூட தோன்ற ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினரும், சிறுவர்களும் கூட இதன் பாதிப்புக்கு ஆளாகி வருவது பற்றி உலகமே பேசத் தொடங்கியிருக்கிறது.

குழந்தைகள் அழுதால் கூட தாலாட்டுப் பாடி அழுகையை நிறுத்தும் வழி மாறி, இப்போது செல்போனை கொடுத்து சமாதானப்படுத்தும் உலகத்தை காண்கிறோம்.

பிள்ளைகளுக்கு எந்த வயதில் செல்போன்களை வழங்கவேண்டும், ஒரு நாளைக்கு எந்தளவு நேரம் பயன்படுத்த அனுமதி வழங்கலாம்,  அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள், அதிகாரங்கள் என்பன பற்றியெல்லாம் இப்போது நிறைய பேசப்படுகின்றன.

முன்னர் எல்லாம் பஸ்களுக்கு காத்திருக்கும் நேரங்களில், அல்லது பயணங்களின் போதும் சூழலில் நிகழ்பவற்றை ஊன்றி கவனித்தோம். சக மனிதர்களின் முகங்களை வாசித்தோம். அவர்களை அறிய முற்பட்டோம். அவர்களின் தோற்றத்தை, உடைகளை, அவர்களின் உணர்வுகளை கவனித்தோம். சக பயணியுடன் கதைத்தோம். இப்போது அருகில் என்ன நிகழ்கிறது என்பதை சற்றும் பொருட்படுத்தாது தலையைக் குனிந்து செல்போனின் மூழ்கியிருக்கிறோம். மனித உறவுகள் அற்றுப் போய் இயந்திரங்களுடன் தொடர்பாடுவதோடு தம்மைக் மட்டுபடுத்திக் கொள்ளும் உலகம் உருவாகி வருகிறது.

வெளி உலகத்துடன் மாத்திரமல்ல தமது வீடுகளில் சொந்த உறவுகளுடனும் தான். சற்று நேரம் செல்போன் இல்லேயேல் பதட்டம், தவிப்பு, அமைதியின்மை, மன உளைச்சல், ஆத்திரம் - மூத்திரம் எல்லாமே வந்து தொலைகிறது. 

கணக்குகளை எல்லாம் நாம் கற்ற வாய்ப்பாடுகள்மற்றும் சூத்திரங்களுக்கு ஊடாக கணித்துச் சொல்லும் வழக்கம் கால்குலேட்டரின் ஆக்கிரமிப்புடன் எப்படி சுருங்கியதோ அது போல கூகிளின் ஏகபோகம் ஆக்கிரமித்தவுடன் ‘எல்லாம் நெட்டில் பார்த்துக்கலாம்’ என்கிற மனோபாவம் வளர்ந்துள்ளது. மூளையில் எதையும் தக்கவைத்துக் கொள்ளவோ, சேமிக்கவோ சிரமப்படத் தேவையில்லை என்கிற மனோபாவமும் வளர்ந்துவிட்டுள்ளது.

இது ஏற்படுத்தும் உளப் பிரச்சினைக்கு அப்பால் கண் அழற்சி, கண் சோர்வு, கண் மங்குதல், கண் நோவுடன் சேர்த்து தலை வலியும் ஏற்படுவதாக அடையாளம் காட்டப்படுகிறது. கூடவே கழுத்து குனிவின் காரணமாக ஏற்படும் வருத்தத்தை “எழுத்துக்கழுத்து” (text neck) என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறது மருத்துவ உலகம். இதை விட மணிக்கட்டு மற்றும் தோள்பட்டையில் வலி, எலும்பு மூட்டு நோ, இரத்த ஓட்டச் சிக்கல் (bloodstream), இருதய மற்றும் மூச்சுத் துவாரங்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகுவதாக அடையாளம் கண்டுள்ளனர். நோமோபோபியாவின் விளைவாக ஆண்களுக்கு விந்துற்பத்தி, விந்து வீரியம் கூட பலவீனப்படுகிறது என்கின்றனர்.


நோமோபோபியா பற்றி இன்று ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. வெளிவந்து கொண்டிருக்கின்றன. முடிந்தவர்கள் அதனை தேடிப்பாருங்கள், எத்தனை பெரிய ஆபத்துக்குள் தள்ளப்பட்டிக்கிறோம் என்பதை நம்மால் அறிய முடியும்.

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 53% வீதத்தினர் நோமோபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் மாத்திரம் 66வீதத்தினர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. பாதிக்கப்பட்டிருப்போரில் அதிகமானோர் இளம் பெண்கள்.

நோமோபோபியா என்கிற இந்த உயிர்க்கொல்லியிலிருந்து உலகைக் காக்கும் புதிய சிந்தனையின் அவசியம் அதி அவசியமாக – அவசரமாக உணரப்படும் இந்த சூழலை விளங்கி புதிய உத்திகளுடன் நம்மையும் நம்மை சூழ உள்ளவர்களையும் காப்போம்.

இலங்கையின் சனத்தொகையில்..
  • 32% இணைய பயனர்கள்.
  • 6 மில்லியன் சமூக ஊடக பயனர்கள் செயலில் உள்ளனர்.
  • 27.38 மில்லியன் கைத்தொலைபேசி இணைப்புக்கள் உள்ளன.
  • 20% கைத்தொலைபேசி இணைய பயனர்கள்.
  • இணைய பயனர்களில் 96% முகநூல் பாவனையாளர்கள் (2018 பெப்ரவரி)
  • 6 மில்லியனுக்கும் மேற்பட்ட சமூக ஊடக பயனர்கள், 29% சமூக ஊடக செயலில் பயனர்களாக உள்ளனர்.
  • மொபைல்கள் மூலம் சமூக ஊடகங்கள் பயன்படுத்தும் 5.5 மில்லியன் மக்களில், 26% தினசரி செயலில் ஈடுபடுகின்றன.
  • 6 மில்லியன் சமூக ஊடக பயனர்களில், 92% கைத்தொலைபேசிகளையே பயன்படுத்துகின்றனர்.
  • முகநூல் பயனர்களில் 68% ஆண்கள்
  • முகநூல் பயனர்களில் 32% பெண்கள்

நன்றி - அரங்கம்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates