இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் மலையகப்பிரதேசங்களை பாதித்தது மட்டுமல்லாது, இப்பிரதேச மக்களின் தற்கால வாழ்வியலை வெளிச்சம் போட்டுக்காட்டியது எனலாம். குறிப்பாக, இம்மக்களின் குடியிருப்புகள் அவர்கள் வாழ்ந்துவரும் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் எந்தளவிற்கு இன்னும் சீர்செய்யப்படாது இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தின. இது இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருபவர்களுக்கு தர்மசங்கடங்களைக் கொடுத்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
ஏனென்றால், இந்த மக்கள் இன்னமும் நூறு வருட லயன் குடியிருப்புகளிலும், உட்கட்டமைப்புகள் இல்லாத வெள்ள அனர்த்தம் ஏற்படும் இடங்களிலுமே வாழ்ந்து வருவதை அறிந்தும் தெரிந்தும் இவர்கள் மௌனம் காத்து வருவதை எந்த மக்கள் தான் பொறுத்துக்கொள்வர்?
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காணச்சென்ற பிரதிநிதிகள் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி விட்டு மட்டும் திரும்பி விட்டனர். வேறு சிலரோ தாம் அவ்விடம் சென்றால் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டி வரும் என செல்வதை தவிர்த்துக்கொண்டனர். இதே வேளை இம்மக்களின் உழைப்பை பெற்று வரும் தோட்ட நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நிவாரணங்களையும் வழங்க முன்வரவில்லை. சேதங்களை பார்வையிட்டதோடு சரி. கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்புக்களையே திருத்திக்கொடுக்காத தோட்ட நிர்வாகங்கள் ஒவ்வொரு வருடமும் இது வழமையாக ஏற்படும் சம்பவம் தானே என மௌனம் காக்கின்றன.
இப்படியும் ஒரு வாழ்க்கை
நுவரெலியா மாவட்டத்தின் பல பெருந்தோட்டப்பகுதிகள் கடந்த வாரமளவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டன. கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல பல தொழிலாளர் குடியிருப்புகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு போயின இவை 50 வருடங்களுக்கும் பழைமையானவை. பல கூரைத்தகரங்கள் பல வருடகாலமாக மாற்றப்படாதிருப்பதால் அதன் மீது கறுப்பு இறப்பர் சீட்கள் மற்றும் நகராதபடி கற்களை அடுக்கி வைத்து மழையினால் பாதிக்கப்படாது தமது வாழ்க்கையை முன்னெடுக்கின்றனர். பல குடியிருப்புகள் அவ்வாறு இருந்தாலும் அக்கரபத்தனை ஊட்டுவள்ளி பச்சை பங்களா தோட்டப்பிரிவில் உள்ள சில குடியிருப்புகளின் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது.
இவர்கள் வாழும் வீட்டுக்கூரைகளுக்கு மேல் தகரத்திற்கு பதிலாக பொலித்தீன்களும் கற்களுமே காணப்படுகின்றன.இது குறித்து தோட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தால் 500 கிராம் கறுப்பு பொலித்தீன் மட்டுமே தரப்படுவதாக இவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த கூரைத்தகரங்களை மாற்றிக்கொள்ள கூடிய அளவுக்கு தங்களுக்கு வருமானம் இல்லாததால் வேறு வழியின்றி பழுதடைந்த கூரைகளின் வழியே தண்ணீர் குடியிருப்புக்குள் வராதிருக்க மானா புற்களை பரப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த குடியிருப்பின் மற்றுமொரு தொகுதியோ பல தசாப்தங்களாக மாற்றப்படாதிருக்கும் தகரங்களைக்கொண்டிருக்கின்றது. இவற்றை மாற்றும்படி கேட்டால் தோட்ட நிர்வாகமோ கறுப்பு பொலித்தீனை தருகிறது. அரசியல் பிரமுகர்களும் எட்டிப்பார்ப்பதில்லை. அப்படியானால் இந்த மக்களின் நிலை தான் என்ன?
வீட்டுத்திட்டங்களின் பயனாளிகள் யார்?
இந்திய அரசாங்கத்தினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் பெருந்தோட்டப்பகுதி வீட்டுத்திட்டங்கள் யாருக்கு வழங்கப்படுகின்றன என்ற கேள்வி இங்கு எழுகிறது. மிக மோசமான குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லையா? இவர்கள் இந்தத்திட்டத்திற்கு அடையாளம் காணப்படவில்லையா ? இதற்கு பதில் கூறத்தக்கவர்கள் யார்? ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் தொழிற்சங்க பாரபட்சங்கள் காணப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியே காலத்தை கடத்துவது தான் அரசியல் பிரமுகர்களின் பணியா?
அக்கறையின்மை
இதே வேளை பல தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அருகாமையிலுள்ள ஆபத்தான மரங்களைப்பற்றியும் தோட்ட நிர்வாகங்கள் கண்டு கொள்வதில்லை. கடந்த சில வாரங்களாக பெய்த கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக தொழிலாளர் குடியிருப்புகளின் மீது பாரிய மரங்கள் சரிந்து விழுந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இப்படியான சம்பவங்களில் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விடயம். ஆனால் மழைக்காலம் ஆரம்பித்தவுடன் குறித்த ஆபத்தான பகுதியிலிருக்கும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் செய்தல் அல்லது அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தல் போன்ற விடயங்களில் தோட்ட நிர்வாகங்கள் அக்கறை காட்டுவதில்லை. அது குறித்து நிர்வாகங்களுக்கு பிரதிநிதிகளும் எடுத்துக்கூறுவதில்லை. ஒவ்வொரு வருடமும் பருவ காலத்தில் மழை பெய்கிறது ஆனால் பெருந்தோட்டப்பகுதிகளில் பாதிப்பு இருக்கக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டும் கூட எவருக்கும் அக்கறையில்லாத நிலைமைகளே காணப்படுகின்றன.
சேதமடையும் பாலங்கள்
தோட்டக்குடியிருப்புகளை கடக்கும் பாலங்கள் குறித்து எவருமே அக்கறை கொள்வதில்லை. ஏனென்றால் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் பாலங்கள் யாருக்கு சொந்தம் என்ற குழப்பம் இன்றும் பலருக்கு நிலவுகிறது. தோட்ட நிர்வாகமா அல்லது உள்ளூராட்சி சபைகளா இவற்றை பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு தடவையும் கடும் மழை பெய்யும் போது மழை வெள்ளம் குறித்த பாலங்களை சேதமாக்கி விட்டுச்செல்கின்றன. பிறகு அவை தற்காலிகமாக மனித செயற்பாடுகளுக்கு சீர் செய்யப்படுகின்றன.
அவற்றை நிரந்தரமாக அமைக்கவோ அதற்கு நிதி ஒதுக்கவோ எவரும் முன்வருவதில்லை. கடந்த வாரம் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக இப்படியானதொரு பாலம் சேதமுற்றது. வட்டவளை லோனக் தோட்டத்தில் அமைக்கப்பட்ட பாலமே இவ்வாறு அடித்துச்செல்லப்பட்டது.
இப்பாலத்தின் வழியே பாடசாலை செல்லும் மாணவர்கள், தொழிலுக்கு செல்வோர் மிகவும் பாதிப்பை எதிர்நோக்கினர். லொறி மூலம் பலர் இந்த ஆற்றைக் கடந்தனர். மிக ஆபத்தான நிலையிலேயே வாகனங்களும் ஆற்றைக் கடந்தன என்பது முக்கிய விடயம்.
மண் சரிவு அபாயம்
மண் சரிவு அபாயம் இருக்கக்கூடிய பல தோட்டப்பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டும் அபாய எச்சரிக்கை வழங்கினாலும் குறித்த பிரதேசத்தின் குடியிருப்புகளில் வாழ்ந்து வருபவர்கள் தமக்கு வேறு பாதுகாப்பான இடத்தை எவரும் பெற்றுக்கொடுக்காத காரணத்தினால் உயிரையும் துச்சமெனக் கருதி ஆபத்தான குடியிருப்புகளில் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் இவர்களை எந்த அரசாங்கமும் கண்டு கொள்ளவில்லை. அதே வேளை இவர்களிடம் வாக்குகளைப்பெற்றுக்கொள்ளும் பிரதிநிதிகள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனரே ஒழிய இவ்வாறான காலகட்டத்தில் இவர்களின் துன்பங்களில் பங்கு கொள்வதில்லை. இந்நிலையில் அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகவே தோட்டத்தொழிலாளர்கள் உள்ளனர். இது மட்டுமன்றி இந்த நவீன காலத்திலும் இம்மக்களின் வாக்குகளைப்பெற்றுக்கொண்டும் இச்சமூகத்தை இன்னும் லயன் குடியிருப்புகளில் வாழ வைத்துக்கொண்டும் வேறு அடிப்படை வசதிகளைக் கூடப் பெற்றுக் கொடுக்காது அவர்களின் மத்தியிலேயே வாழ்ந்து வரும் அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் இந்நிலை கண்டு வெட்கித் தலை குனிய வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...