Headlines News :
முகப்பு » , , » அழுதாறும் உரிமை - சூரியகந்தையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை - என்.சரவணன்

அழுதாறும் உரிமை - சூரியகந்தையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை - என்.சரவணன்

என்.சரவணன்

தென்னிலங்கை சிங்கள சாதாரண மக்களின் மனநிலையில் எந்தளவு விஷம் ஏற்றப்பட்டுள்ளது என்பதற்கு இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எதிர்த்து தென்னிலங்கையில் வெளிப்பட்ட எதிர்ப்பு முக்கிய உதாரணம்.

வடக்கு மாகாண சபை அதை நடத்த மேற்கொண்ட முடிவு, அதற்கு முதலமைச்சரே தலைமை தாங்குவது என்கிற முடிவுகள் வெளிப்பட்டவுடன் அதனை நிறுத்த சிங்கள இனவாத அமைப்புகள், சக்திகள் கடும் பிரயத்தனப்பட்டன. அவர்களுடன் எதிர்க்கட்சியும், சிங்கள ஊடகங்களும் கைகோர்த்து பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தன.

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் வாராந்த ஊடக மாநாட்டில் “மே 18ஆம் திகதி புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை நினைவுகூரி படையினரை கௌரவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த தினத்தில் புலிகளுக்கு ஆதரவாக நினைவு கூருவதற்கு அரசாங்கம் எப்படி இடமளிக்க முடியும்” என்று கேள்வி கேட்டு துளைத்தெடுத்தார்கள். ராஜித்த சேனாரத்தன சளைக்காமல் அத்தகைய இனவாத கருத்துக்களுக்கு பதிலளித்திருந்தார்.
“நினைவேந்தலை தமிழ் மக்கள் அனுஷ்டிப்பதில் எந்த தவறுமில்லை.ஜேவிபியினரும் இவ்வாறான தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்தவித தவறும் இல்லை.  அங்குள்ள மக்களும் எமது மக்களே.
ஒரு காலத்தில் ஜே.வி.பியும் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட இயக்கம் தான் அவர்கள் நினைவேந்தல் செய்வதில்லையா? ஏன் வடக்கு மக்களுக்கு மாத்திரம் செய்ய முடியாது, பிரபாகரன் பயங்கரவாதி என்றால் விஜேவீர யார்?
யுத்தத்தின் போது எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதிகள் மாத்திரம் இறந்ததில்லை. பொதுமக்களும் இறந்திருக்கிறார்கள். அதுபோலத் தான் இங்கும்.”
என்றார் அவர். அக்கருத்துக்கள் பெரும் சர்ச்சையை தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருந்தது.

மகிந்த தரப்பு ஒரு புறம் இதனை சாதகமாக ஆக்கிக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை கூறுவதுபோல தமிழ் நினைவேந்தலுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இலங்கையின் பல பாகங்களில் ஆங்காங்கே ராஜித்தவின் கூற்றை எதிர்த்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அவரின் உருவப்பொம்மையையும் எரித்தனர். பிரபாகரனின் முகத்துக்குப் பதிலாக ராஜித்தவின் முகத்தை மாற்றி பெரிய கட் அவுட்களை நிறுத்தினர்.

இழந்த தமது உறவுகளை நினைத்து அழுதாறக் கூட விட முடியாது என்கிற மனநிலை நாட்டின் பல முனைகளில் இருந்து வெளிப்பட்டதை கவனிக்க முடிந்தது. அந்த மனநிலை பிழையென்று கூறி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும் பல சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியிட்டனர். ஆனால் அந்த கருத்துக்கு பதிலைளித்த பலரும் இனவாத நோக்கிலேயே கருத்து வெளியிட்டிருந்தனர். சாரம்சத்தில் இக்கருத்து இப்படி இருந்தன.

  • போரில் தமது சிங்களப் படையினரால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகளே!
  • பொது மக்கள் எவரும் கொல்லப்படவில்லை. அது “டயஸ்போராவின்” பிரச்சாரம். "சர்வதேச சதி".
  • அப்படியும் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் சிவில் உடை தரித்த புலிகளே.

என்னுடன் ஜே.வி.பி செயற்பாடுகளில் 90களின் ஆரம்பத்தில் பணியாற்றி பின்னர் சில வருடங்களில் என்னோடு வெளியேறிய ஒரு தோழர் சிசிர யாப்பா. ஹிரு பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர் அவர்.

நினைவேந்தலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருந்த இதே சமயத்தில் கடந்த மே 18 அன்று சிசிர யாப்பா தனது முகநூல் பதிவில்; இசைப்பிரியா உள்ளிட்ட பலர் கொல்லப்படுவதற்கு முன்பாக பாரிய களிமண் புதைகுழியின் ஓரத்தில் உட்காரவைக்கப்பட்டிருந்த ஒரு படத்துடன் உருக்கமான கவிதையைப் பகிர்ந்தார்.

நூற்றுக்கணக்கான எதிர்ப்புகள் அவரது பதிவுக்குக் கீழ் கருத்தூட்டம் இடப்பட்டிருந்தன. அவற்றில் சில தூசனங்களும் கூட. நான் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட வயோதிபர், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் படங்கள் சிலவற்றை அங்கே பகிர்ந்தேன். இவர்கள் புலிகள் தானா சொல்லுங்கள் என்றேன். பதிலுக்கு புலிகளின் கொலைச்சம்பவங்களை நினைவுகாட்டி சிலர் படங்களை பகிர்ந்தனர்.

பெரும்பான்மை கருத்துக்கள் மக்களின் கண்ணீரின் பக்கமே இருக்கும் என்கிற எனது நம்பிக்கை சிதைவுற்றது. அந்த வேகத்தில் நான் அந்த பதிவுக்கு சிங்களத்திலேயே எனது கருத்தைப் பகிர்ந்தேன்.

“தோழனே! சாதாரண மக்கள் யுத்தத்தில் தமது படை தமிழ் மக்களைக் கொல்லவில்லை என்று நமது சக ஊடகவியலாளர்கள் கூறும்போது உண்மையில் ஏமாற்றமும், கவலையும் தான் மிஞ்சியது. மேற்படி படங்களை நான் பகிர்ந்தது அதற்காகத்தான்.
தோழனே சிசிர “சூரியகந்த” மலையில் மனிதப் புதைகுழிகளைத் தோண்டச் சென்றிருந்தபோது முதற் தடவை அங்கு நீயும் நானும் சந்தித்துக் கொண்டோம். அது நிகழ்ந்து கால் நூற்றாண்டு ஆகிறது. அன்று ஜே.வி.பி என்கிற பேரில் ஒன்றுமறியாத பாடசாலை மாணவர்கள் 31 பேரைக் கொன்று புதைத்த புதைகுழி அது. அந்தப் புதைகுழிகளில் அழுகிய சடலங்களின் சதைகள் வெள்ளை தயிர்போல ஆகி அதனை சவால்களைக் கொண்டு வெளியில் கொட்டினார்கள். அம்மாணவர்கள் இறுதியாக கட்டியிருந்த சாரத்தைக் அடையாளம் கண்ட தாய்மார் “அனே மகே புதே” (ஐயகோ என் மகனே!) என்று கதறி அழுத காட்சியை நேரில் பார்த்தோம். 
அவர்களின் ஒப்பாரியை மட்டுமல்ல, அவர்கள் படையினருக்கு இட்ட சாபத்தையும் கண்டோம். கண்டெடுக்கப்பட்ட மண்டையோடுகளையும், எலும்புகளையும், உடைகளையும் சாக்குகளில் எடுத்துச் சென்று அடுத்த நாள் இரத்தினபுரி நீதிமன்ற வளாகத்தில் வைத்திருந்தார்கள். கண்ணீருடன் அந்த சாக்குகளை தொட்டுத் தடவி, விரித்து பார்க்க முனைந்த தாய்மாரைப் பார்த்து நீயும் நானும் அடக்கமுடியாது கண்ணீர் விட்டோம். அப்படி எடுக்கப்பட்ட ஒரு தாயின் படத்தை “ஹிரு” பத்திரிகையில் “தமது பிள்ளையை சாக்குகளில் தேடும் தாய்மார்” என்று முன்பக்கத்தில் தலைப்பிட்டோம்.
இன்று அது போன்றே மேலும் பல தாய்மார் யுத்தத்தில் சிதறிச் சின்னாபின்னமாக கொல்லப்பட்ட தமது பிள்ளைகளையும், உறவுகளையும் நினைத்து அழுது தீர்க்கிறார்கள். அவர்களை அழுதாற அனுமதிக்க முடியாது என்கிற மன நிலை என்ன மனநிலை என்று ஆதங்கப்படுகிறேன். கண்ணீருக்கு சிங்கள – தமிழ் பேதமுண்டா தோழனே. அழுகை, கவலை, ஒப்பாரிக்கும் கூட இனபேதமுண்டா தோழனே. இதை நான் சிங்கள சகோதர்களிடம் கேட்டாக வேண்டும் என்பதால் இந்தப் பதிவு”
என்று முடித்திருந்தேன்.

சூரியகந்த - சாக்குகளில் கிடக்கும் பிள்ளைகள்
அந்த உருக்கமான பதிவைப் பல சிங்கள நண்பர்கள் பார்த்து சகோதரத்துவத்துடன் தமது ஆதரவை வெளியிட்டிருந்தார்கள்.

சிங்கள – தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பரஸ்பரம் மனித மன உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் சூழல் இன்று மட்டுமல்ல என்றுமே ஏற்பட்டதில்லை. மொழி ஒரு பெரும் தடை என்று இன்று தான் கடுபிடித்தது போல பல்லாண்டுகளாக பேசிக் கொண்டிருப்பது தான் மிச்சம். அதற்கான தளத்தையும், அமைப்புமுறையையும் (system) ஏற்படுத்துவதற்கான பொறிமுறை இன்னும் வெற்றியளிக்கவில்லை. இந்த இடைவெளி கூட கூட, அவ்விடைவெளியை இனவாத சித்தாந்தம் நிரப்பி வருகிறது. அவ்வினவாதம் பேரினவாதமயப்பட்டு மேலும் கெட்டியாகி ஜனரஞ்சகமயமாகிறது. இலகுவாக தீர்ப்பதற்கு இருக்கும் வாய்ப்பும் அவகாசமும் மேலும் கடினப்பட்டுப் போய்விடுகிறது.

சிங்களப் பேரினவாதத்தை “சித்தாந்தமாக” அடையாம் கண்டு, அதனை பாதுகாக்கும் அமைப்புமுறையையும், சக்திகளையும் அடையாளம் கண்டு சரி செய்வதற்குப் பதிலாக அதற்குப் பலியாகி வினையாற்றும் சிங்கள சிவில் சமூகத்தை நேரடியாக குறைகாண்பதில் பலனில்லை. சிங்கள சமூகத்திடம் நமது உணர்வுகளையும், அபிலாஷைகளையும் பகிர்வதற்கான வழிகளைத் தேடவேண்டும். அதுபோல சிங்கள சமூகத்தின் கருத்துக்களை பகிர்வதற்கும் ஏற்ற தமிழ் சூழலும் உருவாக வேண்டும்.

குறைந்தபட்சம் இனப் பிரச்சினைக்கு அப்பால் சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்களின் பொதுப் பிரச்சினைகளுக்கு கூட ஒன்றாக திரள்வதற்கான சகோதரத்துவம் இன்னமும் கட்டியெழுப்பப்படவில்லை. சரி செய்வதற்கான சரியான காலம் இதுவன்றி வேறெது. 

நன்றி - அரங்கம்
பத்திரிகையை முழுமையாக பார்வையிட...


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates