Headlines News :
முகப்பு » , , » தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யும் வகையில் இம்முறை கூட்டுஒப்பந்தம் அமையவேண்டும் - எம்.செல்வராஜா

தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யும் வகையில் இம்முறை கூட்டுஒப்பந்தம் அமையவேண்டும் - எம்.செல்வராஜா


பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையிலான கூட்டு ஒப்பந்தம் செப்டெம்பர் மாதம் கைச்சாத்திடப்படவிருப்பதாக, தெரியவருகின்றது.

இக்கூட்டுஒப்பந்தமும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்துகொள்ளப்பட்டு, தொழிலாளர்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவு உயர்வினை ஈடுசெய்யும் வகையில் அமைய வேண்டும் என்பது பலரினதும் எதிர்பார்ப்பாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியதோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி என்றவகையிலான முப்பெரும் தொழிற்சங்க அமைப்புக்கள், பெருந்தோட்டமுதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கையே, இக்கூட்டு ஒப்பந்தமாகும். இக்கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சேமநலன்கள் , மேம்பாடுகள் ,பெருந்தோட்டத் தொழில்துறை பாதுகாப்பு உள்ளிட்ட பராமரிப்பு விடயங்கள் பல்வேறு சரத்துக்களாக உள்ளடக்கப்படுகின்றன.

ஆனால், தொழிலாளர்களின் சம்பள விடயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தியதாகவே, இக்கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு வருகின்றது. அதே வேளை அச்சம்பள விடயமும், தொழிலாளர்களின் வாழ்க்கைச்செலவை ஈடு செய்யும் வகையில் அமைவதில்லை என்பது தொழிலாளர்கள் உட்பட பலரினதும் கருத்தாகும். அதில் உண்மை இல்லாமலில்லை..

 இக்கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தொழிலாளர் சார்பில், அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் விருப்புக்கள், தேவைகள், அபிலாஷைகள் ஆகியவற்றிற்கிணங்கிய நிலையில், தோட்டமுதலாளிமார் சம்மேளனத்துடன் பேரம்பேசி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். முதலாளிமார் சம்மேளனத்திற்குத் துணைபோகும் நிலையிலிருந்து, தொழிற்சங்கங்கள் விலகிக்கொள்ளல் வேண்டும். தமக்கு சந்தா வழங்கும் தொழிலாளர்கள் சார்பாகவே, தொழிற்சங்கங்கள் செயற்படவேண்டியது முக்கியமாகும்.

காலதாமதம் வேண்டாம்

கடந்த கூட்டுஒப்பந்தம் 18 மாதங்கள் காலதாமதமாகியே, கைச்சாத்திடப்பட்டது. அக்காலதாமதங்கள் ஏற்பட்டபோதிலும், தொழிலாளர்களின் அபிலா ைஷகள், தேவைகள்,விருப்புக்கள் ஆகியன பூர்த்திசெய்ய முடியாமலேயே, ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. நிலுவை சம்பளமும் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. இந் நிலுவைச் சம்பளமானது இரண்டரை இலட்சம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 840 கோடி ரூபாவென்றும், அதனை தொழிலாளர்கள் இழந்துள்ளதாகவும்,பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் அண்மையில் அறிக்கையொன்றின் மூலம் வெளியிட்டிருந்தார்.

 அதுபோன்றதோர் நிலை கைச்சாத்திடபடவுள்ள கூட்டுஒப்பந்தத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது. குறிப்பிட்டமாதத்தில்,எவ்வித காலதாமதங்களுமின்றி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமேயானால்,அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுதோட்டத் தொழிலாளர்களுக்கு நேரடியாகவே கிடைத்துவிடும். இதனைபுரிந்துகொண்டு,தொழிற்சங்கங்கள் செயற்படல் வேண்டும்.

தொழிற்சங்கங்களிடையே புரிந்துணர்வு அவசியம் 

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முப்பெரும் தொழிற்சங்க அமைப்புக்களிடம் புரிந்துணர்வுகள் இருக்கவேண்டும். இத்தொழிற்சங்க அமைப்புக்கள் சமநிலையில் இருக்கவேண்டுமேயன்றி,தானே பெரியவன் என்ற அகங்கார தோரணை எந்ததொழிற்சங்கத்திற்கும் இருக்கக்கூடாது. அத்துடன், மூன்று தொழிற்சங்க அமைப்புக்கள் மட்டுமன்றி,மலையக தொழிலாளர் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தொழிலாளர் ஐக்கியமுன்னணி,விவசாயதோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களும் ,மலையகத்தில் பலவுள்ளன. இத்தொழிற்சங்கங்களினது அபிப்பிராயங்களையும், பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும். அத்துடன், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத மலையகத் தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் அழைத்து ஒருகுடையின் கீழ்,தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து,பொதுத் தீர்மானங்களை எடுக்கவேண்டியது மூன்று தொழிற்சங்க அமைப்புக்களினதும் கடப்பாடாகும்.

 மலையகத்தின் அனைத்துபெருந்தோட்டதொழிற்சங்கங்களும் ஓரணியிலிருந்து முன்வைக்கும் கோரிக்கைகளை, பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஏற்றேயாகவேண்டும். ஆகையினால், சுயநில அரசியலை கைவிட்டு,மலையகத் தோட்டத் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஓரணியில் இருந்து, தோட்டத் தொழிலாளர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி பொதுத் தீர்மானங்களை முன்னெடுக்கவேண்டும். இவ் ஒன்றுகூடல் நிகழ்வினை உடன் ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுவே, கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு பெரும்பலமாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

கூட்டு ஒப்பந்தம் குறித்தும்,சம்பள உயர்வு தொடர்பாகவும் ஏட்டிக்குப் போட்டியாக வெறுமனே அறிக்கைகளை விட்டுக்கொண்டும்,காலத்திற்கு ஒவ்வாத முடிவுகளை முன்வைத்து,தொழிலாளர்களைத் தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டுசெல்வதற்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு உயர்வு அடிப்படையில்,அத்தியாவசியப் பொருட்களின் விலைஉயர்வு,போக்குவரத்து பஸ் கட்டணங்கள் அதிகரிப்பினால்,தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பாடசாலைகளுக்குசெல்லும் போது, கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை,மண்ணெண்ணை விலை உயர்வு,போன்ற இன்னோரன்ன விடயங்களினால்,வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாத அவல நிலை தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனைதோட்டத் தொழிற்சங்கங்கள் உணர்ந்துசெயற்படல் வேண்டியது அவசியமாகும்.

கடந்த கூட்டுஒப்பந்தத்தின் போது, இ.தொ.கா தன்னிச்சையாக ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், இவ் ஆயிரம் ரூபா தினச்சம்பளம் கோரப்படுவது சாத்தியமற்றது என்றும் உலக சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் உள்ளுர் தேயிலை உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதென்றும் அச்சந்தர்ப்பத்தில் கூட்டு ஒப்பந்தம் சார் தொழிற்சங்கமொன்றின் பொதுச் செயலாளர், முதலாளிமார் சம்மேளனத்திற்கு சார்பானவகையில் கருத்தக்களை வௌியிட்டிருந்தார். இதனை, தோட்டமுதலாளிமார் சம்மேளனம்,தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் ஆயிரம் கோரிக்கையை நிராகரித்தது.

விவசாயதோட்டத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைதொழிலாளர் ஐக்கிய முன்னணிபோன்ற தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்யும் வகையில்,நியாயமான சம்பள உயர்வு வழங்கவேண்டுமென்று,கடந்த மேதின தீர்மானங்களாக எடுத்துள்ளன.

மலையகதொழிலாளர் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசியசங்கம், ஆகியன கைச்சாத்திடப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம்,வாழ்வாதாரங்களை மேற்கொள்ள நியாயமான கொடுப்பனவு என்ற வகையில்,சம்பளஉயர்வைப் பெற்றுக்கொடுக்க வௌியிலிருந்து அழுத்தங்களை பிரயோகிக்கப்போவதாகத்தெரிவித்துள்ளன.

 மேலும் சில தோட்டக் கம்பனிகள் தன்னிச்சையாக காலத்திற்கு ஒவ்வாதவகையில் பத்திரங்களை தயாரித்து தொழிலாளர்களிடம் கையொப்பங்களைப் பெற்று தேயிலைக் காணிகளைப் பகிர்ந்தளித்து வருகின்றன. இதன் பாதிப்புக்களை உணராத தொழிலாளர்கள் தேயிலைக் காணிகளைப் பெற்றுவருகின்றனர். பகிர்ந்தளிக்கப்படும் இத் தேயிலைக் காணிகளுக்கானமுழுமையான உரிமை பத்திரங்களையும் தொழிலாளர்களுக்கே பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இதன்மூலம் சிறுதேயிலை தோட்டசொந்தக்காரர்களாக தொழிலாளர்கள் மாற்றம் பெறும் ஆரோக்கிய சூழல் ஏற்படும் என்ற விடயம் இம்முறை ஆராயப்படல் வேண்டும்.

மேலும் கடந்த முறை இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தம் செல்லுபடியற்றது என்ற தனது தரப்பு நியாயங்களை முன்வைத்து சட்டத்தரணி தம்பையா வழக்கொன்றையும் தாக்கல் செய்திருக்கின்றமை முக்கிய விடயம்.

கூட்டு ஒப்பந்த விவகாரம் குறித்து விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம். கிருஸ்ணசாமி கருத்துத் தெரிவிக்கையில், “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, இக் கூட்டுஒப்பந்தத்தின் ஊடாக, நாட் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அமைய வேண்டும். நிபந்தனைகள், இணைப்புகொடுப்பனவுகள் எதுவுமேஅவசியமில்லை. ஆயிரம் ரூபாஅடிப்படைச் சம்பளமாக இருக்கும் போது,ஈ.பி.எப், ஈ.டி.எப், என்ற வகையில் ,ஆயிரம் ரூபாவைவிட கூடுதலாகவே, தொழிலாளர்களுக்கு கிடைக்கும். சாதாரணமாக இன்று ஒரு கூலித் தொழிலாளிக்கு ஆயிரம் ரூபாவைவிட கூடுதல் சம்பளம் கிடைக்கின்ற போது,கடின உழைப்பாளிகளாக இருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பளஅதிகரிப்பு அவசியமேயாகும்”என்றார்.

 கடந்தமுறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட 18 மாதங்கள் தாமதமாகியும்,இறுதியில் தோட்டத் தொழிலாளர் எதிர்பார்த்த ஆயிரம் ரூபா தினச்சம்பளம் கிடைக்காமல், ஐநூறு ரூபா அடிப்படை சம்பளமாகவும் வருகைக்கான கொடுப்பனவு 90 ரூபாவாகவும் ,மேலதிக தேயிலை கொழுந்துக்கு நூற்று நாற்பது ரூபாவுமாக 730 ரூபா என்று கூறப்பட்டாலும் கூட ஒரு சில தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் கைக்காசு முறையில் பணிக்கு அமர்த்தப்பட்டு நாளாந்தம் 500 ரூபாவையே பெற்று வருகின்றனர்.

இம் முறைகைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தத்தில், தொழிலாளியொருவருக்கு நாட்சம்பளமாக குறைந்தது ஆயிரம் ரூபா கோரிக்கை முன்வைத்தாலே 850 ரூபா என்ற தொகைக்கு முதலாளிமார் சம்மேளனம் வந்து நிற்கும் ஆனால் தற்போதுள்ள விலைவாசியில் நாட்சம்பளம் ஆயிரம் ரூபா என்பது எந்த வகையிலும் போதுமானது அல்ல. ஆகவே பேரம் பேசுகிறோம் என்ற போர்வையில் நாட்களை கடத்தாது உறுதியாகவும் இறுதியாகவும் ஒரு தொகையை தீர்மானித்து தமது தரப்பு நியாயங்களை தொழிற்சங்கங்கள் முன்வைக்க வேண்டும். அதை விடுத்து மெதுவாக பணி செய்தல் ,தொழிலாளர்களை வீதிக்கு இறக்குதல் போன்ற சம்பவங்களுக்கு தொழிற்சங்கங்கள் காரணகர்த்தாக்களாகி விடக்கூடாது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates