கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக எதிரும் புதிருமான கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் குறிப்பிட்ட தலைவர்கள் அடைய விரும்பும் இலக்கு தெளிவற்றதால் கூட்டு ஒப்பந்தம் பற்றிய அவர்களின் நகர்வுகள் மீண்டும் எவ்வித பலனையும் தொழிலாளர்களுக்கு பெற்றுத்தராத வேடிக்கைக்குரியதாகவே முடிவுறலாம். அல்லது கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமா என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கலாம் என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவிக்கிறார். இது தொடர்பில் கேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வி.
கேள்வி: பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டு ஒப்பந்தம் பற்றி ஏறக்குறைய எல்லா தொழிற்சங்கங்கத் தலைவர்களும் மீண்டும் தற்போது பேச ஆரம்பித்துள்ளனர். இவை காத்திரமானவையாக எடுத்துக் கொள்ளக்கூடியவையா அல்லது வழமைபோல் வேடிக்கைக்குரிய விடயமாக முடிவுறுமா?
பதில்: 2018ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் பற்றி கூறும் போது தொழிலாளர்களுக்கு இ.தொ.கா மூலமே கூடிய சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முடியுமென்று அதன் தலைவர் இராமநாதன் ஆறுமுகன் கூறியுள்ளார்.
அடுத்த ஒப்பந்தத்தை நன்றாக வாசித்துப்பார்த்தே கையெழுத்திடுவேன் என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தவைர் வடிவேல் சுரேஸ் கூறியுள்ளார். லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் மத்திய நிலையத்தின் செயலாளருமான எஸ். இராமநாதன் கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு பாக்கி சம்பளம் கிடைக்காதது பற்றி தற்போது கவலை கொள்வதுடன், அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்காக 1000ரூபா நாட்சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவை எல்லாவற்றையும் விட கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகளுக்கு வெளியில் இருக்கும் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் அழிவை ஏற்படுத்தகூடியனவாகும். அதாவது இனிமேல் குத்தகை அடிப்படையிலான வெளியாள் முறைமைக்குள் தொழிலாளர்கள் இணைக்கப்படவுள்ளதால் கூட்டு ஒப்பந்தத்தின் தேவையில்லாமல் போய்விடும் என்று கூறுவதுடன் தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க போராடப் போவதாகவும் முரண்பாடான கருத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளின்படி சம்பளம் தொடர்பான ஏற்பாடுகள் ‘குறைந்தது’ இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இவ்வருடம் ஒக்டோபர் மாதம் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமா என்பது சந்தேகமே. இந்நிலையில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக எதிரும் புதிருமான கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் குறிப்பிட்ட தலைவர்கள் அடைய விரும்பும் இலக்கு தெளிவற்றதால் கூட்டு ஒப்பந்தம் பற்றிய அவர்களின் நகர்வுகள் மீண்டும் எவ்வித பலனையும் தொழிலாளர்களுக்கு பெற்றுத்தராத வேடிக்கைக்குரியதாகவே முடிவுறலாம்.
கேள்வி: வெளியாள் உற்பத்தி முறையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் விடயங்கள் எதிர்வரும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக இ.தொ.கா. கூறுகிறது. இது பற்றி என்ன கூறுவீர்கள்?
பதில்: 2016 ஒக்டோபர் மாதத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம். 2003ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள், தொழில் நிபந்தனைகள், தொழில் உறவு, சம்பள உயர்வு போன்ற விடயங்களை உள்ளடக்கிய தான அல்லது அடிப்படை கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியான சம்பள உயர்வு பற்றிய உடன்பாடே இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்து கொள்ளப்பட்டன.
18 மாதங்கள் கழிந்த நிலையில் செய்து கொள்ளப்பட்ட 2016 ஒக்டோபர் மாத கூட்டு ஒப்பந்தத்தினூடாக போதிய சம்பள உயர்வு உறுதி செய்யப்படவில்லை. அத்துடன் பாக்கி சம்பளம் பெறுகின்ற, இதுவரை காலமும் இருந்து வந்த உரிமை பறிபோனது. எதிர்காலத்தில் வெளியாள் வேலை முறையின் அடிப்படையில் உற்பத்திக்கேற்ற ஊதியத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவிக்கும் ஏற்பாடொன்றும் 2016ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் இருக்கிறது. இதனால் 2003ஆம் ஆண்டு அடிப்படை கூட்டு ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள வருடத்திற்கு 300 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்ற உரிமையும் பறிபோகும்.
இதற்கு எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்துவிட்டு எதிர்வரும் கூட்டு ஒப்பந்தத்தில் வெளியாள் உற்பத்தி முறையினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதாக கூறுவது தொழிலாளர்களின் கண்களில் மண்ணை தூவும் முயற்சியாகும்.
கேள்வி: 1992ஆம் ஆண்டு வரை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் சேர்க்கப்பட்டு வந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு கூட்டு ஒப்பந்தத்தின் விளைவாக இல்லாமலாக்கப்பட்டது. தற்போது இலங்கையின் அரச துறை தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி, தனியார் துறை தொழிலாளர்களின் சம்பளத்துடனும் வாழ்கைச் செலவு அதிகரிப்பதற்கு ஏற்ப கொடுப்பனவு சேர்க்கப்படுகிறது. வேலைக்கேற்ப சம்பளம் அல்லது நியாயமான சம்பளம் எவ்வாறு அமைய வேண்டும்.
பதில்: ஊதியம் என்பது உழைப்புக்கேற்றதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். கூட்டு ஒப்பந்த முறைகளில் அதிகமாக ஒன்று சேர்க்கப்பட்ட சம்பளமுறையே பேணப்படுகிறது. அதில் அடிப்படைச் சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு உட்பட பல கொடுப்பனவுகள் ஒன்று சேர்க்கப்படும். கூட்டு ஒப்பந்த சம்பளத் திட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தில் மட்டுமே வாழ்கைச் செலவு கொடுப்பனவு நீக்கப்பட்டுள்ளது. 1992 முதல் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களும் அதற்கு இணக்கம் தெரிவித்தே ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன.
அரச, தனியார் துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வு என்பதில் வருடாந்த சம்பள உயர்வு, வரவு செலவுத் திட்ட சம்பள உயர்வு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப கொடுப்பனவு போன்றவை உள்ளடக்கப்படுகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரச தொழிலாளர்களாகவோ, தனியார் தொழிலாளர்களாகவோ அரசால் வகைப்படுத்தப்படாததால் மேற்படி சம்பள திட்டங்களுக்குள் தோட்டத் தொழிலாளர்கள் அடக்கப்பட்டவில்லை. இதனால் பெருந்தோட்டக் கம்பனிகளின் தயவிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுகின்ற நீதி, நியாயமற்ற போக்கு தொடர்கிறது.
அரச தனியார் துறை தொழிலாளர்களின் சம்பளத்திட்டங்களுக்கு ஒப்பான சம்பளத்திட்டத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் உறுதி செய்வதால் உழைப்புக்கேற்ற நியாயமான சம்பளமும், சம்பள உயர்வும் உறுதி செய்யும் வாய்ப்பை பெற முடியும்.
கேள்வி: 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டுமென நீங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்துள்ள ரிட் மனுவின் தற்போதைய நிலை என்ன?
பதில்: அவ்வழக்கு விசாரணை இன்றும் முடிவுறாத நிலையில் இருப்பதனால் அதன் உள்ளார்ந்த விடயங்களை அலசுவது இலங்கையின் நீதிமுறைமையை பாதிப்பதாக கொள்ளப்படும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. 2016 கூட்டு ஒப்பந்தம் நாட்டின் தொழிற்சட்ட எற்பாடுகளுக்கு முரணாகவும், தொழிலாளர்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த பாக்கி சம்பளத்தை பெறும் உரிமை உட்பட பல உரிமைகளை பறிப்பதாகவும் இருப்பதால் அதனை இரத்து செய்யுமாறு கோரி அவ்வழக்கு தொடுக்கப்பட்டது.
பரந்தளவில் இந்நாட்டின் தொழிலாளர் வர்க்க அரசியல், தொழிற்சங்க நடவடிக்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருபவன் என்ற அடிப்படையிலும் குறிப்பாக பெருந்தோட்டத் தொழிற்துறையின் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக செயற்பட்டு வரும் அமைப்பின் பொதுச் செயலாளர் என்ற ரீதியிலும் இவ் வழக்கை பொது மக்கள் அக்கறைக்கான வழக்காக எனது பெயரில் தொடுத்து நானே முன்னிலைப்பட்டு வாதாடி வருகின்றேன்.
வழக்கு தொடுக்கப்பட்டு ஒன்றரை வருடம் கழிந்த நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகளின் சார்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் மட்டுமன்றி இ.தொ.கா. இ.தே.தோ.தொ.சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க மத்திய நிலையம் ஆகியனவும் இவ்வழக்கை தொடுக்க எனக்கு சட்டபூர்வமான தகுதி இல்லை என முன்வைத்த முதன்நிலை ஆட்சேபனை மீதான கட்டளை நாளை மறுதினம் (12ஆம் திகதி) மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கும். எனக்கு தகுதி இருக்கிறது என்ற கட்டளை தீர்ப்பாக வழங்கப்படுமாயின், வழக்கில் ஏனைய விடயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு வழங்கப்படும். இறுதி தீர்ப்பு 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட தீர்ப்பு சட்டரீதியானதாக இல்லையா என்பதை பற்றியதாக இருக்கும்.
கேள்வி: வழக்கு அல்லது நீதிமன்ற நடவடிக்கை பாதகமாக அமைந்தால் அது தொழிலாளர்களுக்கு ஆரோக்கியமாக இராதல்லாவா?
பதில்: ஜனநாயக அமைப்பொன்றில் உரிமைகளை வென்றெடுக்கவும், பாதுகாத்து உறுதி செய்து கொள்ளவும் பல வழிமுறைகள் இருக்கின்றன. அதில் ஒன்றே நீதிமன்ற நடவடிக்கை. அது ஒன்றே முடிவானதல்ல. நீதிமன்ற தீர்ப்பு அல்லது சட்டம் என்பது சாட்சியம், விவாதம் நடுநிலைமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். சமூக நீதி, நியாயம் என்பது மிகவும் பரந்தது. இவ்வழக்கில் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி எடுத்துக்கூறி இருக்கின்றோம். அவை எதிர்வரும் காலங்களிலாவது நிவர்த்தி செய்யப்படுமாயின் தொழிலாளர்களினதும் பெருந்தோட்டத் தொழிற்துறையினதும் எதிர்காலம் ஒப்பீட்டளவில் முன்னேற இடமுண்டு.
கேள்வி: கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களினதும் ஏனைய தொழிற்சங்கங்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் தொழிலாளர்களினதும் கருத்தையும் அறிந்து பேரம் பேச்சில் ஈடுபட்டால் என்ன?
பதில் இதைத்தான் நாமும் 1992ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகின்றோம். கைச்சாத்திடும் தொழிற்சங்கள் ஏகபோகத்தையோ மேலாதிக்கத்தையோ கொண்டிருக்ககூடாது. ஜனநாயகமாக பிறர் கரத்தையும் அறிந்து செயற்பட வேண்டும். பேரம் பேச்சில் வெற்றி பெற எல்லா சக்திகளையும் இணைத்து செயற்படும் பொறிமுறையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
அரசாங்கம் எப்போதும் கம்பனிகளின் நலனையே பாதுகாக்கும். அண்மையில் கூட அமைச்சர் நவீன் திசாநாயக்க தொழிற்சங்கங்கள் அடுத்த கூட்டு ஒப்பந்தத்திற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் கம்பனிகள் அது பற்றி கவனமில்லாது இருக்கக் கூடாதென கம்பனிகளை உசார்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் பெருந்தோட்டத் தொழிற்துறையையும் தொழிலாளர்களையும் பாதிக்கும் செம்பனை செய்கை போன்றவற்றை கம்பனிகள் முன்னெடுத்து வருவது குறித்தும் தொழிலாளர்களும் அவர்களின் சார்பான அமைப்புகளும் கவனஞ்செலுத்த வேண்டும்.
நேர்காணல் : சி.சி.என்
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...