உரிமைகளுக்காக போராட்டங்கள் செய்து தொழிலாளர்கள் உயிர்நீத்த சம்பவங்கள் மலையக வரலாற்றில் இடம்பிடித்துள்ளன, ஆனால் தற்போது நிலைமை முற்றாக மோசமடைந்துள்ளது. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் போராட்டங்கள்,சத்தியாகிரகங்கள் அல்லது பணிப் பகிஷ்கரிப்புகள் என ஏதாவது இடம்பெற்றால் அவை தொழிற்சங்கங்களின் சுயலாபத்திற்காகவும் ,அரசியல் இருப்புக்காகவும், தனி மனித செல்வாக்கை தக்க வைத்துக்கொள்வதற்கும் செய்யப்படுவனவாகவே உள்ளன.
உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் தொழிற்சங்கங்கள் ,அரசியல் கட்சிகளுக்கிடையே வார்த்தை மோதல்கள் தேர்தல் மேடைகளில் எதிரொலித்தன. அது வழமையானதொன்று என மக்களும் அதைக் கடந்து சென்றனர் ஆனால் இப்போது சபைகளை அமைப்பதற்கான நேரத்தில் கோஷ்டி மோதல்களும் ,அடிதடிகளும் துரோகச்சம்பவங்களும் தாராளமாக அரங்கேறுகின்றன.யாருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலில் அடி எடுத்து வைத்தார்களோ அந்தப் பிரதிநிதிகளே உயரிய சபையின் கௌரவத்தை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டார்கள். இவ்வாறான சம்பவங்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே இடம்பெறுவது தான் வேதனையாகும் .ஏனெனில் சகல அம்சங்களிலும் பின்தங்கித் தட்டுத்தடுமாறி முன்னேறி வரும் பெருந்தோட்ட சமூகம் அதிகமாக உள்ள இம்மாவட்டத்தில், நாகரிகம் வளர்ச்சியடைந்த இக்காலகட்டத்திலும் தொழிலாளர்களை பகடைக்காய்களாக்கி அரசியல் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் பிரதிநிதிகளை என்னவென்பது?
நுவரெலியா மாவட்டம்
இலங்கை முழுவதும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற்றாலும் ,இந்திய வம்சாவளி தமிழர்களின் பார்வை நுவரெலியா மாவட்டத்திலேயே இருந்தது. ஒரு மாநகரசபையையும், இரண்டு நகரசபைகளையும், ஒன்பது பிரதேச சபைகளையும் கொண்டிருந்த இம்மாவட்டத்தில் கணிசமான சபைகளை தமிழர்களே ஆளும் நிலைமைகள் கடந்த காலங்களில் உருவாகியிருந்தன. இதற்குப்பிரதான காரணம் இங்கு அதிகாரத்தில் இருக்கும் மலையக அரசியல் கட்சிகள். கொள்கைகள், தனிப்பட்ட விரோதங்கள் போன்றவற்றால் தாமும் பிரிந்து நிற்பது மட்டுமல்லாது தொழிலாளர்களையும் பிரித்து வைத்து அரசியல் செய்யும் வித்தைகளை இந்த மாவட்டத்தின் தமிழ் அரசியல்வாதிகள் நன்கு கற்று வைத்திருக்கின்றனர். அதைத் தேர்தல் காலங்களிலும் அதற்கு பின்னரும் அவர்கள் காட்ட நினைப்பது வேடிக்கை என்றால் ,அதை இத்தனை காலங்களாக இம்மாவட்ட மக்களும் நம்பி அவர்கள் பின்னால் செல்வதும் ஒரு வகையில் துரதிர்ஷ்டமான சம்பவம் தான்.
பிரிந்து நின்றே ஆட்சியமைக்க விரும்பினர்
இம்முறை இடம்பெற்ற தேர்தல் பெறுபேறுகளின் படி 9 பிரதேச சபைகள் 2 நகரசபைகள் ஒரு மாநகரசபை ஆகியவற்றில் மொத்தமாக 151 தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 33 பேர் பெண்கள் (தமிழ்) என்பது முக்கிய விடயம். இம்மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு பிரதேச சபைகளிலும் தமிழ் பிரதிநிதித்துவமானது 80 வீதத்திற்கும் மேல் பெறப்பட்டமை குறிப்பிட்டுக்கூற வேண்டிய விடயமாகும். நாமே எம்மை ஆள்வோம் என்பதே தேர்தல் காலங்களில் தொழிற்சங்கங்களின் பிரதான பிரசாரமாக அமைந்தது. அதன் படியே பெறுபேறுகளும் இருந்தன, எனினும் கட்சிகளால் வேறுபட்டு நின்றாலும் தேர்தலுக்குப்பின்னரும் கூட ஒரே இன மக்களுக்குத்தானே சேவையாற்றப்போகிறோம், ஒன்றிணைந்து ஆட்சியமைத்தால் என்ன என்ற சிந்தனை மலையகக்கட்சிகள் எவற்றிற்கும் ஏற்படவில்லை. மாறாக பெரும்பான்மையினக் கட்சிகளுடன் இணைந்து தாம் தனித்து இயங்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தன. பேரினவாதமும் இந்த பிளவுகளை தமக்கு சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டன. அதற்கு சிறந்த உதாரணம் தலவாக்கலை லிந்துலை நகரசபையாகும். இங்கு தெரிவு செய்யப்பட்ட 12 உறுப்பினர்களில் 7 பேர் சிறுபான்மையினத்தவர்களாவர். ஆனால் துரோகங்களாலும் சலுகைகளுக்காக பின் நின்று செயற்பட்ட வேறு பிரதேச பிரமுகர்களாலும் சபை தலைவர் பதவி பெரும்பான்மையினத்தவருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளது. இது தலவாக்கலை – லிந்துலை வாழ் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என விமர்சிக்கப்படுகிறது. மட்டுமன்றி சிறுபான்மை பிரதிநிதிகள் தமது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் அளவிற்கு அரசியல் முதிர்ச்சியை இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கட்சிகளால் பிளவு பட்டு நிற்கும் ஒரே மண்ணின் மைந்தர்கள்
ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபையில் தமிழர்களே ஆட்சியமைக்கும் நிலை உருவான போதும் அவர்களுக்கிடையிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டு இறுதியில் நடு வீதிக்கு வந்து அடித்துக்கொள்ளும் கேவலமான அரசியல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இங்கு தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்களில் 8 பேர் இ.தொ.காவுக்கும், மிகுதி 8 பேர் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஆதரவு தர முடிவு ஏற்பட்டிருந்தது. எனினும் ஐ.தே.கவின் ஒரு பெண் உறுப்பினர் அன்று வருகை தராத காரணத்தினால் எதிரணியினர் அவரை மறைத்து வைத்திருக்கலாம் என்ற வாதப் பிரதிவாதங்கள் எழுந்ததால் குழப்ப நிலை உருவானது. இதனிடையே தமிழ் முற்போக்குக்கூட்டணி உறுப்பினர்கள் சபையின் மேடை மீது ஏறி நின்று மத்திய மாகாண உள்ளூராட்சி விசேட ஆணையாளர் மானல் ஹேரத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தனர். இறுதியில் ஐ.தே.க உறுப்பினர்களும் ஆதரவாளர் ஒருவரும் கூட்டத்தை பகிஷ்கரிக்க முடிவு செய்ததையடுத்து ஆணையாளர் இ.தொ.கா ஆதரவாளர்கள் 8 பேரோடு சபையை நடத்தி தலைவர் உபதலைவர்களை தெரிவு செய்தார். இதில் இ.தொ.காவின் உறுப்பினர் செண்பகவள்ளி தலைவராகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பிரதீபன் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். இதையடுத்து தமது வெற்றியைக் கொண்டாட இ.தொ.கா உறுப்பினர்கள் ஊர்வலமாக செல்ல முற்பட்டதையடுத்து கல் வீச்சு சம்பவம் இடம்பெற்றது. இ.தொ.கா மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்கள் சரமாரியாக கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதோடு வீதியில் கைகலப்பில் ஈடுபட்டனர். அவ்விடத்திற்கு விசேட அதிரடிப் படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் ஐந்து பேர் வரை காயமுற்றதோடு இரண்டு வாகனங்களும் சேதமுற்றன. மஸ்கெலியா பிரதேசம் பெருந்தோட்டப்பகுதியை சூழவுள்ள நகராகும். இச்சபைக்கு 81 வீதமான தமிழ் பிரதிநிதிகளை இப்பிரதேச மக்கள் தெரிவு செய்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபை வரலாற்றில் முதன் முறையாக தமிழ்ப்பெண் ஒருவரை தலைவராகக்கொண்ட பெருமையையும் இப்பிரதேச சபை பெற்றுள்ளது. ஆனால் இவை அனைத்தையும் வைத்துப் பெருமை கொள்ளும்படியாகவா சம்பவங்கள் அங்கு இடம்பெற்றுள்ளன ? தமது சுயநலங்களுக்காக ஒரே மண்ணின் மக்களை பிரித்து வைத்து அரசியல் செய்யும் கலாசாரத்துக்கு என்று தான் முடிவு வரப்போகின்றதோ தெரியவில்லை.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...