Headlines News :
முகப்பு » , , » சிங்கத்திலிருந்து சிங்களம் வரை - என்.சரவணன்

சிங்கத்திலிருந்து சிங்களம் வரை - என்.சரவணன்


இந்த வாரம் மகிந்த குடும்பத்தின் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அணிதிரண்ட பலரின் கைகளில் சிங்கம் மட்டுமே தாங்கிய தேசியக் கொடி காணப்பட்டது. தேசியக்கொடியில் தமிழ்-முஸ்லிம்களை அடையாளப்படுத்தும் செம்மஞ்சள், பச்சை நிற கோடுகள் நீக்கப்பட்ட வெறும் சிங்கத்தை மட்டுமே கொண்ட “தேசியக் கொடி” சூழ பறக்கவிடப்பட்டபடி கோத்தபாயவின் பேச்சுக்கள் அமைந்தன. ராவணா பலய, சிங்கள ராவய, சிங்கள தேசிய முன்னணி, பொது பல சேனா போன்ற சிங்கள பேரினவாத அமைப்புகள் மட்டுமல்ல மகிந்த தரப்புக்கு ஆதரவளிக்கும் பெரும்பாலான சக்திகள் பேரினவாத தரப்பே என்பது நாம் அறிந்ததே. சமீப காலமாக இந்த சக்திகள் முன்னெப்போதையும் விட அதிகமாக பேரினவாத நிகழ்ச்சிநிரலை நிர்ப்பந்திப்பதில் முனைப்பு காட்டிவருகின்றன.


இலங்கையின் பெயர் “சிங்ஹலே” என்று மாற்றப்படவேண்டும் என்றும், தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவேண்டும் என்றும், சிங்கக் கொடி சிங்கள பௌத்தத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.

“சிங்கம்” சிங்களவர்களை மட்டுமல்ல “சிங்கள பௌத்தர்களை” குறிக்கும் குறியீடாக நிறுவப்பட்டு வந்திருக்கிறது. நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதமென்பது அரச அதிகாரம் வரை ஆழ நிறுவப்பட்டுள்ளது என்பதை அதிகம் விளக்கத்தேவையில்லை. அரச இலட்சினைகள், கொடிகள், நாணயங்கள், கட்டட அலங்காரங்கள் என சர்வவியாபகமாக சிங்கம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வருகிறது. அப்பேர்பட்ட அந்த சிங்கம் எங்கிருந்து வந்தது? அது எதன் ஊற்று, எத்தன தொடர்ச்சி என்பவை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய விடயம் மட்டுமல்ல பதிவு செய்ய வேண்டியதும்.

சிங்கத்துக்கு பிறந்தவர்களே சிங்களவர்கள் என்று சிங்கள மக்களின் வழித்தோன்றல் குறித்து ஒரு ஐதீகம் உண்டு. அது வெறும் ஐதீகம் மட்டுமல்ல. பெரும்பாலான சிங்கள மக்கள் தம்மைக் குறித்து சுயப் பெருமிதம்கொள்ளும் ஒரு விடயமாகவும் பார்க்கப்படுகிறது.

சிங்கள பௌத்தர்கள் தமது வரலாற்றைக் கூறும் புனித நூலாக நம்பும் மகாவம்சம் சிங்கத்துக்கு பிறந்தவர்களே சிங்கள வம்சம் என்று தெட்டத் தெளிவாக கூறிவிட்டது. மகாவம்சத்தை இன்று எந்த சிங்கள பௌத்தர்கள் மறுக்கிறார்கள்.

சமீப காலமாக சிங்களப் பேரினவாதம் சிங்கம் – சிங்களம் என்பவற்றை முன்னிறுத்தி சிங்களமயமாக்கும் போக்கிற்கு கருத்தாக்கமாக முன்வைக்கின்றவற்றை சற்று ஆழமாக ஆராய வேண்டியிருக்கிறது. எப்படி இராமர் – இராமாயணம் குறித்த புனைவிலக்கியங்களை நம்பும்படி நிர்பந்திக்கின்ற போக்கு மேலேறி இந்து அற்றவர்களின் மீது அநீதி இழைக்கப்படுகின்றதோ. அதனை விட ஒரு படி மேலே போய் மகாவம்ச புனைவுகளை உண்மையான வரலாறாக புனைந்து நிறுவும் பணி நடக்கிறது.
இலங்கையின் நவீன வரலாற்றாசிரியர்கள் கூட கணிசமான அளவிற்கு மகாவம்சத்தில் தங்கியிருக்கிறார்கள். இதனை அடிப்படையாக வைத்தே இலங்கை வரலாறு தொடர்பான வெகுஜன மட்டத்திலான உரையாடல்களும் நிகழ்த்தப்படுகின்றன. பாடசாலை வரலாற்றுப் பாடங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வெகுஜன சொல்லாடல்களிலும் அரசியல் சொல்லாடல்களிலும் கூட மகாவம்சம் பாத்திரம் செலுத்துகிறது. மகாவம்சம் சித்திரிக்கும் இனவாத கருத்தேற்றப்பட்ட துட்டகைமுனுவின் கதையானது பாடசாலையில் பயன்படுத்தப்படும் சிங்கள மொழிப் பாட நூல்களிலும் பௌத்த சமய பாட நூல்களிலும் சிங்கள நாடக அரங்கிலும் ஜனரஞ்சக இலக்கியங்களிலும் பிரயோகிக்கப்படுகின்றன.

மகாவம்சத்தில் சிங்களவர்களின் பெருமித வரலாற்றைக் கூறும் கதைகளில் விஜயனின் வருகை, துட்டகைமுனு-எல்லாளன் போர் ஆகிய இரண்டு கதைகளும் முக்கியமானவை. சிங்களவர்களின் சரித்திரம் விஜயனிலிருந்து ஆரம்பிப்பதாக கொள்ளப்படுகிறது. விஜயன் வரும் போது சிங்கக் கொடியுடன் வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல துட்டகைமுனு சிங்கக் கொடி ஏந்திய படையுடன் சென்று எல்லாளனுடன் போர் தொடுத்ததாகக் கூறுகிறது. இவை இரண்டுக்குமே போதிய உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் பலர் கூறிவிட்டனர்.

சிங்கத்துக்கு பிறந்தவர்களா..?
மகாவம்சத்தின் 6வது அத்தியாயத்திலிருந்து சிங்கத்தின் கதை தொடங்குகிறது. அதன்பபடி வங்க நாட்டு அரசனுக்கும் கலிங்க இளவரசிக்கும் ஒரு புதல்வி பிறந்தாள். ஆரூடத்தின் படி “இளவரசி மிகுந்த காமவெறி கொண்டவளாயிருப்பாள். மிருகராஜனைக் கூடுவாள்' என்று தலைமைச் சோதிடரால் கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த மன்னன் இதனால் வெறுப்பும் அவமானமும் அடைந்து தன் மகள் எப்படியோ போகட்டும் என்று விதிப்படி விட்டுவிட்டு அமைதியானான். சுதந்திர வாழ்வை விரும்பி தன்னந்தனியே அரண்மனையை விட்டுப் புறப்பட்டாள் இளவரசி. மகதநாட்டுக்குச் சென்று கொண்டிருந்த வணிகக் கூட்டமொன்றுடன் அவர்கள் அறியாத விதத்தில் சேர்ந்து கொண்டாள்.

அப்போது பயங்கரமான சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டு அந்த கும்பலைத் தாக்கியது. சிங்கத்திற்குப் பயந்து அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இளவரசி மட்டும் சிங்கம் வந்துகொண்டிருந்த பாதையில் சென்றாள்.

அவளுக்கு ஆரூடம் நினைவுபடுத்தியபடி சிங்கத்தின் அங்கங்களை ஆரத் தழுவினாள். அதனால் உக்கிர காமவசப்பட்ட அந்த சிங்கம் இளவரசியை முதுகில் ஏற்றிக்கொண்டு தனது குகைக்கு சென்றது. சிங்கத்தினது கூடலின் விளைவாக இளவரசி கருவுற்றாள். ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். ஆண் குழந்தையின் கைகளும் கால்களும் சிங்கத்தைப்போன்று அமைந்திருந்ததால்  சிங்கபாகு என்றும், பெண் குழந்தைக்கு சிங்கவல்லி (சிங்களத்தில் சிங்ஹசீவலி என்பார்கள்) என்றும் பெயரிட்டாள்.

சிங்கபாகுவிற்கு பதினாறு வயதானபோது தன் மனதிலெழுந்த சந்தேகம் பற்றித் தாயிடம் கேட்டான்.

"தாயே நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள். தந்தை மட்டும் ஏன் வேறுபட்ட தோற்றத்துடன் இருக்கிறார். ''

இளவரசி நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். சிங்கபாகு, "நாம் இந்தக் குகையை விட்டு ஏன் போய்விடக் கூடாது?'' என்றான்.

"எனக்கும் அந்த எண்ணம் உண்டு. ஆனால் இந்தக் குகையின் வாயிலை உன் தந்தை பலமான பாறையினால் அடைத்து வைத்திருக்கிறார்.'' என்றாள்.

இது கேட்டதும் சிங்கபாகு தன் பலம் முழுவதும் செலுத்தி, குகையின் வாயிலை அடைத்துக் கொண்டிருக்கும் தடையைத் தூக்கிக் தன் முதுகில் ஐம்பது யோசனை தூரம் சென்று எறிந்துவிட்டு வந்தான். பிறகு தன் தாயை வலத் தோளிலும், தங்கையை இடத் தோளிலுமாகச் சுமந்தவாறு வெளியேறினான்.

தாயாரின் யோசனைப்படி இலைத்தழைகளை ஆடையாகத் தரித்துக்கொண்டு காட்டை விட்டு வெளியே வந்தனர். ஒரு மரத்தினடியில் படைவீரன் ஒருவன் இளைப்பாறிக்கொண்டிருந்தான். அவன் இளவரசியின் மாமன் மகனும், வங்க அரசனின் படையில் ஒரு தலைவனாகவும் விளங்குபவன் என்பதை இளவரசி கண்டுகொண்டாள்.

சத்தம் கேட்டு கண்விழித்த படைத்தலைவன் இவர்களைப் பார்த்து யாரென்று விசாரித்தான். இளவரசி தனது வரலாற்றை அவனிடம் கூறினாள். படைத்தலைவன் மிகுந்த மகிழ்ச்சியுற்று இளவரசியையும் அவளது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றான். பறையறிவித்து அவளை தனது மனைவியாக்கிக் கொண்டதாகவும் அறிவித்தான்.

இளவரசியும் தனது முன்னாள் கணவனான சிங்கத்தை மறந்து தனது புதிய கணவனுடன் வாழ்ந்து வந்தாள்.

காட்டில் இரை தேடப் போயிருந்த சிங்கம் குகைக்கு வந்ததும் தனது பிள்ளைகளையும் மனைவியையும் காணாமல் துயருற்றது. உணவு, நீரை மறுத்தது. அவர்களைத் தேடி எல்லையோரக் கிராமங்களுக்குச் சென்று கோபத்தில் போவோர் வருவோர் எல்லாரையும் தாக்கியது.

"சிங்கம் எங்களைத் தாக்குகிறது; எங்களை அதனிடமிருந்து காப்பாற்றும்படி வேண்டும்'' என்று எல்லைவாசிகள் அரசரிடம் முறையிட்டார்கள்.

ஆயிரம் பொற்காசுகளை யானையின் முதுகில் வைத்து, "அந்தச் சிங்கத்தைக் கொண்டுவருபவன் இவற்றைப் பெறக் கடவன்'' என்று முரசறிவித்தான் அரசன்.

எவரும் முன் வராத நிலையில், பரிசுத் தொகையைப் பன்மடங்கு கூட்டினான். இந்த நிலையில் சிங்கபாகு தானே சிங்கத்தின் கொட்டத்தை அடக்குவதாக அறிவித்தான். அத்துடன் அதற்கு முன்னர் இரண்டு தாய் தடவைகள் தடுத்திருந்தாள். இம்முறை தாயின் அனுமதியின்றி யானை முதுகின் மேலுள்ள பரிசுத்தொகையை எடுத்துக் கொண்டான். பொதுமக்கள் சிங்கபாகுவை அரசன் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தினர்.

"சிங்கத்தைக் கொன்றால் என் ராஜ்ஜியத்தையே உனக்குத் தருவேன்'' என்றான் அரசன்.

சிங்கத்தைத் தன் தந்தையென்றும் பாராமல் அதனை வீழ்த்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றான் சிங்கபாகு. தூரத்தில் சிங்கபாகுவைக் கண்டதுமே தனது மைந்தன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் வாஞ்சையுடன் நெருங்கியது சிங்கம். சிங்கபாகுவோ தான் எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் அம்பு எய்து சிங்கத்தைக் கொல்ல முயன்றான். இரண்டு முறை முயன்றும் சிங்கத்தின் வாஞ்சையின் காரணமாக அம்பு திரும்பி வந்து விழுந்தது. தந்தை சிங்கம் சினம் கொண்டது. மூன்றாவது முறையாக சிங்கபாகு எய்த அம்பு சிங்கத்தின் உடம்பைத் துளைத்தது.

சிங்கபாகு தான் கொய்த தகப்பன் சிங்கத்தின் தலையுடன் அரண்மனைக்குப் போனான். பொதுமக்கள் அவனது வீரத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். ராஜ்ஜியத்தைத் தருவேன் என்று கூறிய மன்னன் மரணித்து ஏழு நாட்களாகியிருந்தன. இருப்பினும் இளவரசி மூலம் சிங்கபாகு மன்னனின் பேரன்தான் என்பதைப் பொதுமக்களும், மந்திரிமார்களும் அறிந்ததனால் சிங்கபாகுவை அரசனாக்கினார்கள். அரசனாகப் பதவி ஏற்றுக்கொண்டு, பின் ராஜ்யத்தை தனது தாயாரின் கணவரிடம் ஒப்படைத்தான்.

பின்னர் தனது தங்கையை அழைத்துக்கொண்டு தான் வாழ்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றான். அங்கே தனக்கென சிங்கபுரி (சிங்ஹபுர) என்கிற நகரை நிர்மாணித்துக் கொண்டான். தங்கையை (சிங்ஹசீவலி) தனது மனைவியாக்கிக் கொண்டான். இவர்களுக்குப் பதினாறு முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

தமது முப்பத்திரண்டு குழந்தைகளில் மூத்தவனுக்கு “விஜய” என பெயரிட்டனர். உரிய காலத்தில் விஜயனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டினார்கள். ஆனால் விஜயனும் அவனது கூட்டாளிகளும் மக்களை துன்புறுத்தினார்கள். கோபமுற்ற மக்கள் பலமுறை முறையிட்டார்கள் இறுதியில்  "உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும் அவனது தோழர்களையும் நாடு கடத்துங்கள்'' என்று முறையிட்டனர்.

தனது மந்திரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை செய்தான் சிங்கபாகு. அவர்களும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே முடிவு சொன்னார்கள்.வேறுவழியின்றி மன்னன் சிங்கபாகு, விஜயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்து தலையில் பாதி முடியை சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். விஜயனும் அவனது நண்பர்களும் இலங்கையில் தாமிரபரணி (சிங்களத்தில் தம்பபன்னி) என்னும் பகுதியில் கி.மு.483இல் கரையேறினார்கள். அந்த விஜயனே இலங்கையின் முதல் சிங்கள மன்னன் என்கிறது மகாவம்சம். அந்த விஜயனின் வழித்தோன்றலே சிங்களவர்கள் என்கிறது மகாவம்சம் ஆனால் அதுபோன்றே இலங்கை வந்த ஏனையோரை "பரதேசிகள்" (பறையோ) கள்ளதொணிகள் என்று அழைப்பது தான் அயோக்கியம் கலந்த முரண்நகை. விஜயன் வந்தபோது இலங்கையில் இருந்தவர்கள் நாகர்களையும் இயக்கர்களையும் கொண்ட அதிவாசி இனங்களே. அவர்கள் இன்றும் சிங்களவர்களை பரதேசிகள் என்று கூறி விரட்டுகின்ற நிலை இல்லை.

சிங்க இரத்தம்

கிறிஸ்துவுக்குப் பின்னர் ஆறாவது நூற்றாண்டில் புனையப்பட்ட மகாவம்சம் அதற்கு முன்னர் எழுதப்பட்ட சிங்கள வரலாறான தீபவம்சத்தின் திரிபுபடுத்தப்பட்ட வடிவம். மகாவம்சத்தில் இரண்டே இரண்டு இடத்தில் மாத்திரமே "சிங்களம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சிங்கத்தின் வழித்தோன்றலாக வந்ததாலும், சிங்கத்தின் இரத்த பந்தத்தாலும் சிங்ஹ+ளே (சிங்க+இரத்தம்) சிங்கள என்று அழைக்கப்படுகிறது சிங்கள இனம். சிங்கத்தைக் கொன்றதால் சிங்கபாகு “சிஹல” என்று அழைக்கப்பட்டான் என்று மகாவம்சம் கூறுகிறது. அதன் வழியே விஜயனும் அவனது பரிவாரங்களும் கூட “சிஹல” என்று அழைக்கப்பட்டார்கள் என்கிறது அது. இலங்கைத் தீவு சிங்கத்தை அடிப்படையாக வைத்து சிங்களம் என்று அழைக்கப்பட்டது என்கிறது தீபவம்சம். அதே வேளை சிங்கள என்பதன் தோற்றுவாய் குறித்து வேறும் பல புனைகதைகளும், வரலாற்றுக் கதைகளும் நிரம்பவே உள்ளன. ஆனால் மகாவம்ச புனைவுக்கு கட்டுண்டு இருக்கும் சிங்கள சமூகம் சொல்லும் சிங்கத்தின் வழித்தோன்றல் என்கிற ஐதீகத்தை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

சிங்கள தேச உருவாக்கம் குறித்து மகாவம்சம் கட்டியெழுப்பியுள்ள ஆரிய மாயை வெகுஜன மட்டத்தில் ஜனரஞ்சகமாக மதக்கருத்தேற்றி ஒப்பேற்றப்பட்டுள்ளது. மகாவம்ச மனோநிலைக்கு ஆட்பட்ட தூய சிங்கள கருத்துநிலை புனித நிலைக்கு உயர்த்தப்பட்டு ஏனைய இனங்களை அந்நியர்களாக தள்ளிவிட்டுள்ளது. அதுவே இனவிரிசல்களாக நீடித்து வருகிறது.

இந்த மகாவம்ச மனோநிலை என்பது தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து காலத்துக்கு காலம் வந்து ஆட்சிசெய்த ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறும் அதேவேளை, அதே இந்தியாவிலிருந்து 700 பேருடன் வந்து ஆளத் தொடங்கிய விஜயனை ஆக்கிரமிப்பாளனாக பார்ப்பதில்லை. மாறாக சிங்கள இனத்தின் தோற்றம் சிங்கள விஜயனிலிருந்து தொடங்குகிறது என்கிறது. இது ஒரு வேடிக்கையான முரண்நகை.

சிங்களவர்களின் வரலாற்று இருப்பு குறித்து சமீபகாலமாக பல அறிவுபூர்வமான விவாதங்களும் ஆரம்பித்துள்ள நிலையில் விஜயனுக்கு முற்பட்ட காலத்தில் இராவணனை மறுபுனைவுக்கு தள்ளும் வேலையில் பல சக்திகள் கிளம்பியுள்ளன. இராவணனே சிங்களத் தலைவனென்றும் இராவணனின் இருப்பை உறுதிசெய்யும் ஐதீகங்களைக் கட்டியெழுப்பும் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்துவருகின்றன. இராவணன் பற்றி வெளிவரும் பல நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள், தொல்பொருள்கள் என மீள உயிர்ப்பிக்கும் வேலைகளை சமீபகாலமாக பல இடங்களிலும் காணக் கிடைகின்றன. அது தனியாக ஆராயப்படவேண்டியவை.

“லங்காபுர”, “லங்கா”, “சிங்களதீப”, “ரத்னதீப”, “செரண்டீப்”, “தம்பபன்னி”, “ஸ்வர்ணதீப”, “தப்ரபோன்”. “சீஹலக” போன்ற பல பெயர்களில் இலங்கை குறிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இலங்கை “சிங்கள” என்று தான் அழைக்கவேண்டும் என்று நிர்பந்திக்கும் போக்கு சிங்கள பௌத்த தரப்பில் கூர்மையாக காணப்படுகிறது.

சிங்கம் பற்றிய கற்பிதமான புனைவை புனிதமாக்கி அதையே நம்பும்படி நிர்பந்தித்து அந்த மாயையை வரலாற்று மரபாக்கி கொண்டு வந்து சேர்த்தது தற்செயல் அல்ல. அது ஒரு வரலாற்று முயற்சியின் நீட்சி. அந்த நீட்சியே பகுத்தறிவுக்கு இடம்கொடாமல் ஏனைய இனங்களின் மீது இனவெறுப்புணர்ச்சியை வளர்த்துவிட்டுள்ளது என்பதே கண்முன்னுள்ள வரலாறு.

எழுத உதவியவற்றில் சில
  1. மகாவம்சம் - ஆர்.பார்த்தசாரதி, கிழக்கு பதிப்பகம் - 2007
  1. "மகாவம்ச" : சிங்களர் கதை - தமிழில் எஸ்.பொ, மித்ர வெளியீடு, 2009
  1. இலங்கையின் இனத்துவமும் சமூக மாற்றமும் - சமூக விஞ்ஞானிகள் சங்கம, 1985
  1. Dipavamsa - Translated by Hermann Oldenberg - (London: William & Norgate,1874)
  1. “බුදුසමය, ජනවාර්ගිකත්වය හා අනන්‍යතාව: බෞද්ධ ගැටළුවක්“ මහාචාර්ය ගණනාථ ඔබේසේකර
  1. මහාවංශය හොල්මන් කිරීම - තිසරණී ගුණසේකර
  1. විජයාගමනය මිථ්‍යාවක්‌ද? - විජයපාල වීරවර්ධන
  1. බුදුසමය සහ ශ්‍රී ලංකාවේ ජනවාර්ගික ඝට්ටනය. By මහින්ද හිමි, දීගල්ලේ
நன்றி - தினக்குரல்



இலங்கையில் அதிக தடவைகள் மேடையேற்றப்பட்ட "சிங்கபாகு" நாடகம்.
சிங்கபாகுவின் கதையா மையமாக வைத்து எதிரிவீர சரத்சந்திரவின் நெறியாள்கையில் கடந்த 54 வருடங்களில் பல நூற்றுககனக்கான தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் இது



பாளி மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது ஆங்கில வடிவம் 1912 


மகாவம்சம் தமிழில்
Share this post :

+ comments + 1 comments

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates