Headlines News :
முகப்பு » , , , , » பகுத்தறிவையும் பட்டறிவையும் சீண்டும் "சிங்கள பௌத்த பாசிசம்" - என்.சரவணன்

பகுத்தறிவையும் பட்டறிவையும் சீண்டும் "சிங்கள பௌத்த பாசிசம்" - என்.சரவணன்


“பாசிசம் மதத்திற்குக் காவலாக  நிற்கிறது. காரணம் மத நம்பிக்கையானது அறியாமையை உயர்வாகப் போற்றுகிறது. மக்களை எளிமையாக ஏமாற்ற முடிகிறது.” என்கிறார். “பாசிசம்” என்கிற ஆய்வு நூலை எழுதிய பிரபல ஆய்வாளர் எம்.என்.ரோய்.

இலங்கையில் மதப் பாசிசம், இனப்பாசிசத்தொடு கூட்டாக சமாந்தரமாகவும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. பாசிசத்துக்கு விஞ்ஞானமோ, விஞ்ஞான பூர்வமான தர்க்கமோ அவசியமில்லை. புனிதப்படுத்தப்பட்ட ஐதீகங்களும், புனைவுகளும் தாராளமாக போதுமானவை.

அம்பாறை உணவுக் கடையில் கொத்துரொட்டியில் இருந்ததாக கூறப்படும் அந்தக் (மலட்டு மருந்து என கூறப்பட்ட) கட்டியை இரசாயன பகுப்பாய்வு செய்தவர்கள் அது வெறும் மாவுத்துண்டு தான் என்று நிரூபித்திருக்கிறார்கள். பகுத்தறிவுடையவர்கள் பலரும் உண்மை அறிந்தபோதும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிப்பதற்காகவே இந்த பகுப்பாய்வு தேவைப்பட்டது.

உண்மைக்குப் புறம்பான ஒரு போலி வதந்தி அம்பாறையில் ஒரு கலவரத்தை உண்டுபண்ணி அது இன்று அடுத்தடுத்த கலவரங்களுக்கு தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறது.

தனிப்பட்ட பிரச்சினையொன்று ஒரு மதப் பிரச்சினையாக பரிவர்த்தனை பெறுவதன் ஆபத்து மிக்க இனக்குரோத பதட்ட அரசியல் இலங்கையில் நெடுங்காலமாக நிலவி வருகிறது. சமீப காலமாக அது மேலும் தீவிரமடைந்திருக்கிறது.

ஒரு கொலையைப் புரிபவருக்கு "கொலைஞர்" (murderer) எனலாம், "குற்றவாளி" (Criminal) எனலாம். அந்த கொலைஞருக்கு இன அடையாளம் குத்தப்படுவதன் அரசியல் என்ன. அப்படிப்பட்ட குற்றவாளி முஸ்லிம் ஆகவும், சிங்களவர் ஆகவும், தமிழர் ஆகவும் அடையாளம் குத்தப்படுவது இலங்கையில் தான். திகன சம்பவம் அப்படிப்பட்ட ஒன்று.


மரணத்தின் பின்னால் உள்ள சதி?

இது ஒரு திட்டமிட்ட சதியோ என்கிற சந்தேகங்கள் இன்னமும் நிலவுகின்றன.

பெப்ரவரி 22 அன்று நள்ளிரவு தெல்தெனியவில் முச்சக்கர வண்டியொன்றை முன்னால் சென்ற லொறி முன்கடந்து செல்ல வழிவிடவில்லை. இறுதியில் லொறியுடன் விபத்துக்குள்ளானது. பெட்ரோல் நிரப்பும் நிலையத்தினருகில் இரு வாகனங்களும் நிறுத்தப்பட்ட நிலையில் லொறி சாரதி உடைந்த போன முச்சக்கர வண்டியின் கண்ணாடியை திருத்த பணம் கொடுத்திருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ளாத முச்சக்கர வண்டியில் வந்த நால்வரும் லொறி சாரதியை தாக்கியதாக குற்றச்சாட்டு. லொறி சாரதி சிங்களவர், தாக்கியதாக கூறப்படும் நால்வரும் முஸ்லிம்கள். மற்றும்படி இந்த சம்பவத்துக்கும் இனத்துவத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

மேலும் இந்த சம்பவத்துக்கு ஆதாரமாக கூறப்படும் பெட்ரோல் நிலைய சீசீடிவி ஆதாரங்களில் எதிலும் தாக்கியதற்கான ஆதாரங்கள் இல்லை. சர்ச்சையில் ஈடுபடுவோரிடமும் எந்த ஆயுதங்களும் கூட இருக்கவில்லை. லொறி சாரதி அன்றே பொலிசுக்குச் தனியாகச் சென்று ஒரு முறைப்பாட்டையும் செய்துவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சைப் பெற்றிருக்கிறார். லொறி சாரதியின் தாயார், மனைவி ஆகியோரின் தகவலின் படி முதல் மூன்று நாட்கள் அவர் அவரச சிகிச்சை அவசியப்படவில்லை என்றும் அவர் நன்றாகவே பேசி, உணவுண்டு இருந்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். மூன்று நாட்களுக்குப் பின் அவருக்கு திடீரென்று என்ன நிகழ்ந்தது என்கிற சந்தேககங்கள் இப்போது எழுப்பப்படுகின்றன. கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் மார்ச் 3 சனியன்று ஒரு சத்திரசிகிச்சைக்கு உட்பட்ட நிலையில் இறந்திருக்கிறார். 

சர்ச்சை நிகழ்ந்த நான்காவது நாள் (26) தான் அம்பாறையில் மலட்டுமருந்து விவகாரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த அசம்பாவிதங்களும் பதட்ட நிலையும் தணியும் முன் மூன்றாவது நாள் திகன பிரதேசத்தில் தொடங்கியது கலவரம். ஞானசார தேரர், ஆம்பிடியே சுமண ரதன தேரர், டான் பிரசாத், “மகாசொன் பலகாய”  அமைப்பைச் சேர்ந்த அமித் வீரசிங்க, சாலிய போன்றோர் கண்டியில் கூடினர். அந்த இடத்துக்கு பஸ்களிலும், வாகனங்களிலும் வந்து சேர்ந்தனர் அவர்களின் தொண்டர்கள்.


ஞானசார தேரர் சாரதியின் வீட்டுக்குச் சென்று திரும்பிய சில மணிநேரங்களில் இது தொடங்கியது. சாரதி தாக்கப்பட்ட அன்று நிகழாத வன்முறைகள், சாரதி இறந்த அன்று நிகழாத வன்முறை 4 ஆம் திகதி தான் நிகழ்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த தயாரிப்புகளை கணக்கில் எடுக்க வேண்டும். வன்முறையைத் தொடக்கியவர்கள் அந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையென்பதும், பிற பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் என்பதும் இன்று நிரூபிக்கப்பட்டது.

இதில் இனவாத, மதவாத சக்திகள், அரசியல் வாதிகள், கொள்ளையர் கூட்டம் என அவரவர் தமது பங்குக்கு பெருப்பித்து, ஏனைய இடங்களுக்கும் பரப்பி லாபம் சம்பாதித்தனர். இதே வடிவத்தில் தான் கடந்த கால சகல கலவரங்களும் நிகழ்ந்ததையும் நினைவுறுத்த வேண்டும்.

எரிக்கப்பட்ட வீடொன்றினுள் சிக்கிய 27 வயதான முஸ்லிம் இளைஞர் ஒருவர் இறந்து போனார்.

சம்பவத்தில் ஈடுபட்ட சிலர்  கைது செய்யபட்டார்கள். ஆனால் 5ஆம் திகதி அவர்களை விடுவிக்கக் கோரி இனவாதக் கோஷ்டியினர் போலிசை சுற்றி வளைத்தனர். 6 ஆம் திகதி அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மேலதிக இராணுவம் பாதுபாப்புக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போதே வன்முறைகள் தொடர்ந்தன. 7ஆம் திகதி இணையப் பாவனை கட்டுப்பாடு அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.


தீர்வுக்கு அவசரகால சட்டம்?

யுத்தத்தைக் சாட்டாக வைத்து 28 வருடகாலமாக நடைமுறைப்படுத்திவந்த அவசரகால சட்டம் 2011ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அதன் பின் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது இந்த அவசரகால சட்டம் 10 நாட்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையேற்பட்டால் அது நீடிக்கப்படலாம். கடந்த கால சுற்றிவளைப்பு, அனாவசிய கைது, கடத்தல், விசாரணயின்றி தடுத்து வைப்பு உள்ளிட்ட பல அரச பயங்கரவாதச் செயல்களுக்கு இந்த சட்டம் தான் லைசன்ஸ் வழங்கியது என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம். தற்போது இன வன்செயல்களை கட்டுப்படுத்த என்கிற பேரில் அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் அப்பாவி நிரபராதி தமிழ் மக்களே இச்சட்டத்தால் அதிகமாக நசுக்கப்பட்டார்கள். ஆனால் இம்முறை கண்டி அசம்பாவிதங்களின் பின்னணியில் இருந்த முக்கிய சக்திகளை விட்டுவிட்டு பெயரளவில் சிலர் கைது செய்யப்பட்டிருப்பது கண்துடைப்பன்றி வேறென்ன. அவசரகால சட்டம் இன – மத – வர்க்க அடையாளம் பார்த்துத் தான் பாயுமா என்கிற கேள்வி எழாமலில்லை.

ஊரடங்கு சட்டம், சில கைதுகள், கண்டன அறிக்கைகள் இந்த நிலைமையை தற்காலிகமாக கட்டுப்படுத்த ஓரளவு துணைபுரியும். நிலையான அமைதிக்கு அது போதுமானதல்ல.


எங்கே பிழைத்தது?

2500 வருடகால இலங்கையின் சரித்திரத்தில் இனப்பிரச்சினை என்கிற ஒன்று 1915 வரை நிகழவில்லை. மகாவம்சத்துக்கு பொழிப்புரை எழுதிய பின்வந்தவர்கள் தான் எல்லாளன் – துட்டகைமுனு அரசர்களுக்கிடயிலான சண்டையை இனச் சண்டையாக திரித்தே மகாவம்ச மனநிலை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் இலங்கையில் தமிழ் – சிங்கள அரசாட்சி நிகழ்ந்தபோதும் அவர்களுக்கிடையில் இன மதச்சண்டைகள் எதுவும் நிகழ்ந்ததுமிலை.

ஆனால் இந்த ஒரு நூற்றாண்டுக்குள் இலங்கை பெரிதும் சிறிதுமாக பல நூற்றுக்கணக்கான இன – மத – சாதிய சண்டைகள் பலவற்றை எதிர்கொண்டிருக்கிறது என்றால்; காலனித்துவத்துக்கு இருக்கும் வகிபாகத்தை தட்டிக் கழித்துவிட முடியாது.

காலனித்துவத்துக்கு எதிரான “சுதேசிய சிந்தனை”யானது  “சிங்கள - பௌத்த” தேசத்தைக் கட்டியெழுப்பும் சித்தாந்தமாக குறுகியதில் தான் இலங்கைக்கு பிழைத்துப் போன அரசியலாக ஆகியிருக்கிறது.

1915 கண்டி கலவரத்தில்  முஸ்லிம்களை ஆங்கிலேய ஆட்சி பாதுகாத்தது அவர்களின் பால் இருந்த கருணையோ, நீதியாலோ அல்ல. மாறாக பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவும் தான். சுதேசிகளிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டு போனதன் பின் சக சகோதர இனங்கள் பரஸ்பரம் தங்களுக்கிடையில் பாதுகாத்துக்கொள்ள முடியாது போனதேன். 


பாசிசத்தின் போக்கு

பிரபல கூற்றொண்டு உள்ளது. “King is dead long live the king” அரசர் இறந்துவிட்டார். அரசர் நீடுழி வாழ்க. அதாவது அரசர்கள் வருவார்கள், ஆழ்வார்கள், போவார்கள், சுழற்சியில் அடுத்தடுத்து அது நிகழும். ஆனால் ராஜ்ஜியம் இருக்கும். ராஜ்ஜியத்தின் மீதான புனித வழிபாட்டு மரபு இறப்பதில்லை. என்பதே அதன் அர்த்தம். நாளாந்தம் பாசிச வடிவத்தின் உச்சத்துக்கு சென்றுகொண்டிருக்கும் சிங்கள பௌத்த வாதத்த்துக்கும் அப்படி ஒரு மரபு உண்டு. காலத்துக்கு காலம் தலைமைகள் மாறும். சித்தாந்தம் அப்படி நிலைத்து நிற்கும்.

பாசிசம் நேரடியாக இயங்க வேண்டியதன் அவசியம் இல்லை. அது ஒரு நேரடி அதிகாரமாகவோ, நேரடி ஆட்சியாகவோ கூட இருக்கத் தேவையில்லை. அது ஒரு சித்தாந்தமாக நிலைகொண்டாலே போதும் பலமான வினையை ஆற்ற வல்லது. சித்தாந்தமாக நிலை பெற்றதன் பின்னர் வரும் விளைவுகளுக்கும் அநியாயங்களுக்கும் பொறுப்பேற்பார் இன்று எவருமில்லை.

எந்த சக்தியின் மீதும், எந்த தனிநபரின் மீதும் கூட ஒட்டுமொத்த குற்றத்தையும் சுமத்திவிட முடியாது. ஏனென்றால் இதன் பின்னால் இயங்கும் நிறுவனமயப்பட்ட சித்தாந்தம் தனி நபர்களையோ, தனி அமைப்புகளையோ அடையாளம் காட்டாது. நேற்று ஒரு பெயரில் இயங்கியவர்கள் இன்று இன்னொரு கூட்டணியாக வேறொரு பெயரில் பாய்வார்கள், நாளை இன்னொரு பெயரில் அடையாளம் காட்டுவார்கள். அதில் சம்பந்தப்படும் நபர்களும், கூட்டணியும், பெயர்களும் வரலாறு முழுக்க மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதற்கான சித்தாந்தமும், அதன் பண்பும் அதே இலட்சியத்தில் புதுப்பித்துக் கொண்டு வரும். நமது முழு எதிரி அந்த சித்தாந்தமும் அதனை பாதுகாக்கும் அமைப்புமுறையும், சக்திகளுமே. இதன் இடையில் உள்ள அநியாயக்காரர்கள் யார் என்றால் சந்தர்ப்பவாதிகளும், இனவெறியேற்றப்பட்டவர்களும் தான். அவர்கள் நமது இலக்கு அல்ல.

தேசத்தைக் காக்க வந்த தேசபக்தர்களின் கைவரிசை. முஸ்லிம்களின் சொத்துக்களை முதலில் சூறையாடிவிட்டுத் தான் கொழுத்துகிறார்கள்

ஞானசார தேரர், சுமனரதன தேரர், சம்பிக்க போன்றோரின் மீது நேரடியாக நம்மால் இந்த கலவரத்தின் மீதான பொறுப்பை சுமத்திவிட முடியாது. போதாததற்கு இவர்கள் அனைவரும் கலவரத்தை கண்டித்து அறிக்கை வேறு விட்டிருக்கிறார்கள். கலவரத்தை நிறுத்தக் கோரி அறைகூவலையும் விடுத்திருக்கிறார்கள்.

தமக்கு போதுமான அளவுக்கு இழப்புகளையும், பீதியையும், மிரட்டல்களையும் ஏற்படுத்தியதன் பின்னர் வருத்தம் தெரிவிப்பது கண்கட்டி வித்தையல்லவா?

ஆக இவர்களின் வகிபாகத்தை எப்படி அளவீடு செய்வது? இவர்கள் தமது வகிபாகத்தை கச்சிதமாக எப்போதோ ஆற்றிவிட்டர்கள் என்பது தான் உண்மை. அவர்களின் முன்னோரின் பாதையில் அவர்கள் தமது காலத்து வகிபாகத்தை ஆற்றிவருகிறார்கள்.

அவர்கள் இந்த பேரினவாத கருத்தியலை கட்டமைப்பதற்கும், கருத்துருவாக்கத்துக்கும் போதுமான அளவு பங்கை ஆற்றி சித்தாந்த ரீதியில் பலமாக மக்கள் மத்தியில் நிருவனமயப்படுத்திவிட்டார்கள். மக்கள் மயப்படுத்திவிட்டார்கள். இலங்கையில் உள்ள நடைமுறை சட்டங்கள் இத்தகைய சக்திகளால் ஏற்பட்டுவரும் விளைவுகளின் வகிபாகத்தை அடையாளம் காட்ட போதுமானவை அல்ல.

தன்னை புதுப்பித்துக் கொண்டு வடிவத்தாலும், அளவாலும் காலத்துக்கு காலம் வெவ்வேறு தோற்றத்தோடு இயங்கினாலும் அதன் பண்பில் மாற்றத்துக்கு உள்ளாவதில்லை என்பது பாசிசத்தின் முக்கிய கூறு என்போம்.

பாசிஸ கூட்டு மனநிலை என்பது கூட்டு செயற்திறனை பெற்ற போதும் அது கூட்டாக இயங்க வேண்டியதில்லை. தனி நபர்களாக, சிவில் அமைப்புகளாக, ஊடகங்களாக, மத நிறுவனங்களாக, அரச அங்கங்களாகவும் வெவ்வேறு தளங்களில் கூட இயங்கி வினையாற்ற முடியும். இலங்கையில் அது நிகழ்கிறது.

சிங்கள பௌத்தர்களின் நாடாக கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துருவம்;  சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களை அந்நியர்களாக உருவகப்படுத்தி மனித அறத்துக்கும் ஒவ்வாத செயல்களை ஆற்றும் வலிமையைப் பெற்றிருக்கிறது. பௌத்தத்தைக் காக்க புத்தர் தெரிவு செய்த நாடாக ஒரு ஐதீகத்தை நிறுவி, இலங்கை முழுவதும் சிங்களவர்களின் நாடு என்று புனைந்து, சிங்கள பௌத்தர்களை புனிதப்படுத்தி, இனத் தூய்மைவாத தோற்றப்பாட்டை கச்சிதமாக கட்டமைத்து ஏனையோரை அந்நியர்களாக ஆக்கியிருக்கிறது இந்த சித்தாந்தம். நிறுவனமயப்படுத்தி இயக்குகிறது. அரச கட்டமைப்பு அதற்கு அனுசரணை வழங்கி வருகிறது. இப்படித்தான் இதனை சுருங்கச் சொல்லலாம்.

சிங்கள – பௌத்த பேரினவாத கட்டமைப்பின் பரிணாமத்தையும், பரிமாணத்தையும் இப்படித்தான் விளங்கிக் கொள்ளலாம்.

அதன் நிகழ்ச்சி நிரலின் திசைவழியை அவ்வப்போதைய அரசியல், பண்பாட்டுச் சூழல் தீர்மானிக்கின்றன. ஆனால் பண்பளவில் அதன் சித்தாந்த இலக்கில் மாற்றம் இல்லை. நடைமுறை தந்திரோபாயத்தில் மாற்றம் கண்டாலும் மூலோபாயத்தில் உறுதியாகவே இருக்கிறது.

இனவாதத்தையும் இனவெறுப்புணர்ச்சியின் வளர்ச்சியையும் இன்று அதிக கூர்மையுடன் அணுக வேண்டியிருக்கிறது. 


மார்ச் 2 அன்று மட்டக்களப்பில் சுமண ரதன தேரர், ஜனாதிபதிக்கு ஒரு மிரட்டலை விடுத்தார். அடுத்த நாள் மட்டக்களப்பு வரும் ஜனாதிபதி தமது விகாரைக்கு வராமல் மாமாங்கம் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றால் தீக்குளித்துச் சாவதாக அறிவித்து வருகையை எதிர்த்து கருப்புக்கொடி ஏற்றினார். அடுத்த நாள் மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி தனது பயணத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்து மங்களாராம விகாரைக்குச் சென்று சுமண ரதன தேரரை சந்தித்ததன மூலம் ஜனாதிபதி அந்த மிரட்டலுக்கு அடிபணிந்தார். இதையே இலங்கையில் இன்னொரு மதத் தலைவர் மேற்கொள்ள முடியுமா? செய்தாலும் ஜானாதிபதி தான் அடிபணிவரா? இலங்கையில் பௌத்தத்தின் பேரால் எதையும் நிறைவேற்றலாம் என்பது தான் இதன் செய்தி.

வதந்திகளின் வகிபாகம்

மேலும் இதுவரை நிகழ்ந்த அத்தனை கலவரங்களின் போதும் வதந்திகள் பெரும் பங்கு வகித்திருக்கிறது. வெகுஜன ஊடகங்கள் மக்களுக்கு முழுமையாக சேராத காலத்திலேயே காதுக்கு காது பரப்பட்ட வதந்திகள் வன்முறைகளுக்கு இட்டுச் சென்றதை ஓரளவு விளங்கிக் கொள்ளலாம். ஆனால் இன்று இணைய வசதிகளும், நவீன தொலைபேசிகளும் பரவலான பயன்பாட்டில் இருக்கிறது. தகவலை உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் முன்னறி விட வாய்ப்புகள் அதிகமிருந்தும் இவை நிகழ்கின்றன என்றால், இனவாத வதந்திகளுக்கு அந்தளவு வலிமை இருக்கிறது என்பது தான் பொருள். இந்த இடத்தில் தான் மக்கள் மத்தியில் ஊறிப்போயுள்ள பாசிச சித்தாந்தத்தின் வகிபாகத்தை நாம் உணர வேண்டியிருக்கிறது.

முகநூல், வட்ஸ் அப், வைபர், ட்விட்டர் போன்ற இணையப் பாவனை மற்றும் சமூக வலைத்தளங்களின் பாவனை மீது அரசாங்கம் கொண்டு வந்த இடைக்கால கட்டுப்பாடுகள் சரியானதே என்று ஊடகங்களும், கருத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகளும் கூட வரவேற்கும் நிலையை முதற் தடவையாக இலங்கையில் இம்முறை பார்த்தோம்.
அடுத்த மாதம் வரப்போகும் சிங்கள புதுவருடத்துக்காக சிங்கள கடைகளில் மாத்திரம் பொருட்களை கொள்வனவு செய்யுங்கள் என்கிற சமூக வலைத்தள விளம்பரங்களை இப்போதே தொடங்கி விட்டார்கள்
இலங்கையில் இனவாதத்தைப் பரப்பும் சமூக வலைத்தளங்களானவை சமூக நல்லிணக்கத்துக்காக குரல் கொடுக்கும் வலைத்தளங்களை விட பலமானவை என்பது தற்போது உணரப்பட்டும் நிரூபிக்கப்பட்டும் வந்திருக்கிறது. போலிப் பெயர்களில் பல்லாயிரக்கணக்கான கணக்குகள் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன. பேரினவாத சித்தாந்தத்தை உருவாக்குவதிலும், பரப்புவதிலும், பலப்படுத்திவதிலும் பெரும் பங்கை வகித்து வருகின்றன.

முஸ்லிம்கள் மிலேச்சத்தனமான அரக்க குணம் படைத்தவர்கள் என்று பிரச்சாரப்படுத்துவதற்காக அந்த நாடுகளில் நிகழும் கொலை வடிவங்களைக் காட்டி பிரச்சாரம் செய்வது, இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது நிகழ்த்தப்படும் கொலைகளை திரும்பத் திரும்ப காண்பித்து மிலேச்சர்கள் என்று காண்பிப்பது தொடர்ந்து நிகழ்கின்றன.

கடந்த 5 வருடங்களாக இனவாத இணையப் பக்கங்களையும், முகநூல் கணக்குகளையும் தினசரி கண்காணித்தும், பின்தொடர்ந்தும் வருபவன் என்கிற வகையில் இதன் பாரதூரமான போக்கைப் பற்றி பீதியடைந்திருக்கிறேன். வதந்திகளுக்கும், புனைவுகளுக்கும், திரிபுகளுக்கும் சற்றும் பஞ்சமில்லாத முகநூலில் ஒரு தடவை சிங்கள மொழியில் இப்படி ஒரு வாசகம் இருந்தது.
“முகநூலில் வெளிவரும் அனைத்தையும் நம்பாதீர்கள்”
-ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னன்-
இலங்கையின் முதலாவது இனக்கலவரமான 1915ஆம் ஆண்டு நிகழ்ந்த சிங்கள - முஸ்லிம் கலவரம் தொடக்கம் இன்று வரை நிகழ்ந்த கலவரங்கள் குறித்து நீதியான விசாரணை நிகழ்ந்ததில்லை. அதற்கான காரணங்களை ஆராய்ந்து நிலையான தீர்வுக்கான வழிகள் கண்டதில்லை. சில தடவைகள் விசாரணை என்கிற பெயரில் கண்துடைப்புக்காக சில அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும் கூட அவை அறிக்கைகளோடு நின்றுவிட்டன. தற்காலிகமாக இவை சீராக்கப்பட்டிருக்கிறதே தவிர அதன் தணல் முற்றாக அணைக்கப்பட்டதில்லை. இந்த கலவரங்களுக்கு உள்ளாகி படுகாயத்துக்குள்ளாகி இருக்கும் இந்தக் குட்டித் தீவுக்கு ஒத்தடங்கள் போதாது. மாற்று சத்திரசிகிச்சையே தேவை.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates