Headlines News :
முகப்பு » » மலையகத்தில் தொழில் பேட்டைகள் வெறும் கனவா? - சிவலிங்கம் சிவகுமாரன்

மலையகத்தில் தொழில் பேட்டைகள் வெறும் கனவா? - சிவலிங்கம் சிவகுமாரன்



நாடெங்கினும் பல்வேறு துறைகளில் சுமார் 5 இலட்சம் வேலை வாய்ப்புகள் இருப்பதாக தொழிலாளர் தேவைக்கான கணக்கெடுப்பு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2017 ஆம் ஆண்டு முழுவதும் எடுக்கப்பட்ட இந்த புள்ளி விபரங்களின் படி சேவைகள், பாரியதொழிற்றுறை, வர்த்தகம், கட்டுமானத்தொழில், சுற்றுலா, விவசாயம் (பெருந்தோட்டம்) ஆகிய துறைகளில் சுமார் 497,302 வேலை வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இத்துறைகளில் பெண்கள் தொழிற்றுறை சார்ந்த ஆடை தொழிற்றுறை (தையல்) ஆடை வடிவமைப்பு, சிகையலங்காரம், அழகுக்கலை அதை விட முக்கியமாக தேயிலை தொழிற்றுறையில் கொழுந்து பறிப்பதற்கும் ஆட்கள் தேவையாக உள்ளன. இந்நிலையில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு குறித்த வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க என்ன செய்தல் வேண்டும் என்பது பற்றிய சிந்தனை இது வரை எவருக்கும் தோன்றாதிருப்பது ஏன் என்று தெரியவில்லை . அது குறித்த அக்கறை இல்லாமலிருப்பதற்கு இரண்டு காரணங்களே இருக்க முடியும்.

௧) வேலை வாய்ப்புகள் இருப்பது பற்றிய தெளிவின்மை

௨) அலட்சியத்தன்மை

 அரசதுறை வேலைவாய்ப்புகள் பற்றி வாய் திறந்தால் உடனடியாக ஆசிரியர் நியமனங்களை கைகளில் திணித்து அனுப்பி விடுவதே கடந்த காலங்களில் இடம்பெற்ற செயற்பாடாக இருந்தது. தனியார் துறை வேலை வாய்ப்பு என்பது மலையக இளைஞர் யுவதிகளுக்கு எட்டாக்கனியாக இருப்பதற்கு பிரதான காரணம் இப்பகுதிகளில் தொழிற்பேட்டைகளை உருவாக்காமை. அடுத்ததாக குறித்த இளைஞர் யுவதிகள் தமது தொழில் மற்றும் சுயதிறன் தகுதிகளை வளர்த்துக்கொள்ளாமையாகும். எனினும் அதற்குரிய பயிற்சி நிறுவனங்கள் இப்பகுதியில் உருவாகாததும் மற்றுமொரு விடயம்.

வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் தோல்வியடைந்த பிரதிநிதிகள்

மலையக பெருந்தோட்டப்பகுதிகளைப் பொறுத்தவரை தொழிற்பேட்டைகள் உருவானாலேயே வேலை வாய்ப்புக்களை பெற்றுத்தரக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் அதே வேளை அதன் மூலம் குறித்த பிரதேச அபிவிருத்தி குறித்தும் சிந்திக்க முடியும். உதாரணமாக இன்று நாடெங்கினும் சுதந்திர வர்த்தக வலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டு குறித்த வலயங்களுக்குள் ஆடை தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள், உதிரிப்பாகங்கள் பொருத்தும் தொழிற்சாலைகள் என பல்வேறு பட்ட தொழில் நிறுவனங்கள் உருவாகின. இதற்கு ஆயிரக்கணக்கில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்புகள் தேவைப்பட்டன. குறித்த வர்த்தக வலயங்கள் அமைந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி வெளியிடங்களிலிருந்த பெருந்தொகையானோருக்கும் அங்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. இதன் மூலம் மேலதிக பணியாளர்களின் தேவைகளுக்காக குறித்த பிரதேசத்தில் தங்குமிட வசதிகள், உணவகங்கள், போக்குவரத்து வசதிகள் உட்பட மற்றைய சேவைகளின் விரிவாக்கம் அதிகரித்தது. இதன் மூலம் மறைமுக வேலைவாய்ப்புக்களை பெற்றவர்களும் அதிகரித்தனர். இவ்வாறு அப்பிரதேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் பாரிய வித்தியாசங்கள் உருவாகின, ஆனால் இவ்வாறான சிந்தனைகள் எச்சந்தர்ப்பத்திலும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு தோன்றியிருக்கவில்லை அப்படி தோன்றியிருந்தால் இன்று நுவரெலியா அல்லது அட்டன் நகரில் பாரிய தொழிற்பேட்டை ஒன்று உருவாகியிருக்கும். இதை விட பெருந்தோட்டப்பகுதிகளில் உயர்தர தகைமை பெற்றவர்களுக்கு தோட்டப்பகுதிகளிலேயே மேற்பார்வை உத்தியோகத்தர் அல்லது காரியாலயங்களில் அலுவலக உதவியாளர் பதவிகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் எந்த அரசியல் பிரதிநிதிகளும் அக்கறை எடுக்கவில்லை.பெற்றுத்தருவோம் எனக்கூறியவர்கள் அப்படி எத்தனைப்பேருக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் கூறினால் எமக்கு செய்திகளாக பிரசுரிப்பதற்கும் புள்ளி விபர வரைபடங்களுக்கும் உதவியாக இருக்கும். ஆனால் கடந்த நான்கு தசாப்த காலமாக அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் அரசியல் பிரமுகர்கள் இச்சமூகத்தின் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுத்தருவதிலும் அதன் மூலம் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதிலும் தோல்வியையே தழுவி வருகின்றனர்.

வேலைவாய்ப்புகள்

தொழிலாளர் தேவைக்கான கணக்கெடுப்பு புள்ளி விபரங்களின் படி குறித்த தொழிற்றுறைக்கு தேவைப்படும் தொழிலாளர்களை இலங்கையின் எந்த பிரதேசத்திலிருந்து அதிகம் தெரிவு செய்யலாம் என்ற ஆய்வும் அவசியம். புள்ளி விபரங்களின் படி இலங்கையில் ஆடைத்தயாரிப்பு துறையின் தையல் இயந்திர திருத்துனர்களுக்கே அதிக தொழில்வாய்ப்புகள் காணப்படுகின்றன. இத்துறைக்கு 2017 ஆம் ஆண்டு 77,189 பேர் தேவையென புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு அடுத்த படியாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான வேலை வாய்ப்புகள் 57,000 வரை காணப்படுகின்றன. அதற்கடுத்து பல்வேறு உற்பத்தி சார் தொழிலாளர்களுக்கான தேவை 39 ஆயிரம் வரை இருக்கின்றன. நாடெங்கினும் சுதந்திர வர்த்தக வலயங்களில் ஆடைத்தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன ஆனால் அத்தொழிற்சாலைகளில் இயங்கும் தையல் இயந்திரங்களை பராமரிக்கவோ பழுதானால் திருத்துவதற்கோ உரிய இயந்திர திருத்துனர்கள் பற்றி எவரும் அக்கறைகொள்ளவில்லை . அதே போன்று அதிகரித்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இத்துறைகளுக்கே அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இவை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் கிடைத்த தகவல்களாகும். இவ்வருட ஆரம்பத்தில் இவற்றில் சிறிய அளவே நிரப்பப்பட்டிருக்கும் என்பதே உண்மை.

தனியார் துறை வேலைவாய்ப்புகள்

அரச துறை வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் வர்த்தமானியில் பிரசுரமாகும் போது சில அக்கறை கொண்ட அரசியல் பிரதிநிதிகள் அது குறித்து ஊடகங்களுக்கு தகவல் வழங்குவர். ஆனால் தனியார் துறையில் இருக்கும் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பற்றி அவர்கள் அறிவதில்லை. அல்லது வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டங்களை வகுப்பதில்லை. அவ்வாறான திட்டங்களை வகுப்பவர்களையும் அருகில் வைத்திருப்பதில்லை. இது வரை மலையக பிரதேசங்களில் பாரிய அளவிற்கு இல்லாவிட்டாலும் சிறிய அளவான வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் எந்த திட்டங்களையும் எந்த பிரதிநிதிகளும் முன்னெடுத்திருக்கவில்லை. இதன் காரணமாகவே சுமார் இரண்டு இலட்சம் வரையான இளைஞர் யுவதிகள் இன்று தமது சொந்த இடத்தை விட்டு தொழில் நிமித்தம் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தலைநகரிலும் அதனை அண்டிய நகரங்களிலும் பல்வேறு தொழில்களில் தம்மை ஈடுபடுத்தி பல்வேறு துயரங்களுக்கும் ஆபத்துகளுக்கும் முகங்கொடுத்து சொந்தங்களை பிரிந்து தமது வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை இன்றும் தொடர்கிறது.

இச்சமூகத்திலிருந்து தொழில் தேடி புறப்பட்ட இளைஞர் குழாமின் ஒரு தலைமுறை கடந்து விட்ட நிலையில் அடுத்த தலைமுறையினரும் தயாராக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த தலைமுறையினரின் கணிசமானோர் தமது பதிவையும் தலைநகரிலேயே ஏற்படுத்தி தமது உரிமைகளை கேட்டுப்பெற முடியாத யாருக்கோ தமது வாக்குகளை அளித்து வருகின்றனர். இந்த பட்டியலில் சேர காத்திருக்கும் அடுத்த தலைமுறையினரையாவது கருத்திற்கொண்டு அவர்களுக்கு அவர்களது மண்ணிலேயே வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டங்களை இந்த பிரதிநிதிகள் முன்னெடுக்க வேண்டும். 

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates