பெருந்தோட்டப் பகுதிகளில் சுகாதாரம் உடல் நலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலாளர் நலன்புரி விடயங்கள் மிக குறைந்தளவே பேணப்பட்டு வருகின்றன. விசேட மாக இயற்கை உபாதைகளுக்குக் கூட தோட்ட மலைகளில் போதிய பாதுகாப்போ வசதிகளோ இல்லாத நிலையில் பெண் தொழிலாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என பெண் தொழிலாளர் நலன் பாதுகாப்பு விடயங்களில் குரல் கொடுத்து வரும் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்க ஆலோசகர் திருமதி மேனகா கந்தசாமி தெரிவிக்கிறார். இது தொடர்பில் அவர் கூறும் விடயங்கள் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன.
தொழிலாளர் பாதுகாப்பு
உலகில் பல நாடுகளில் உடல் நல பாதுகாப்பு என்ற விடயம் ஒரு முக்கியமான விடயமாக கருதப்பட்டு வருகின்றது. ஆனால் ஆசிய நாடுகளில் உடல் நல பாதுகாப்பு என்பது ஒரு துச்சமாக கருதப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஒரு மனிதன் வேலைக்கு சென்று சுகதேகியாக மீண்டும் வீடு திரும்பும் நிலையை அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து அதிகபணத்தை ஆசிய நாடுகளில் முதலிட்டு அதி உயர் லாபத்தை அடையும் நோக்கில் எமது நாடுகளுக்கு வரும் கம்பனிகளுக்கு எமது நாட்டு தொழிலாளர்களின் உடல் நல பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் தொழில் தளங்கள் இருக்க கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். எனவே தொழிலாளர்களின் உடல் நல பாதுகாப்பு என்ற விடயம் மிக முக்கியமாக கருதப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
வேலையை ஆரம்பிப்பதிலிருந்து முடியும் வரை ஆபத்துகள்
பெருந்தோட்ட துறையில் தொழிலாளர்கள் வேலையை ஆரம்பிக்கும் நேரத்தில் இருந்து முடிக்கும் வரை பல்வேறு உடல் நல பாதிப்பு ஆபத்துக்களை சந்திக்கின்றார்கள். மலைகளில் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பல ஆபத்துக்களுக்கு மத்தியில் வேலை செய்தாலும் இவ் விடயக் கூறு தொடர்பாக தெளிவின்மையோடு காணப்படுகின்றார்கள். மலசல கூடம் என்பது ஒரு அடிப்படை தேவையாகும் எந்த ஒரு வேலைத்தளத்திலும் மலசல கூடம் இருக்க வேண்டும் என்பது கட்டாய தேவையாகும். ஆனால் 200 வருடங்களுக்கு மேலாகியும் இந்த தோட்டத் தொழிலாளர்களின் வேலைத்தளத்தில் மலசல கூடத் தேவை பற்றி எவரும் உணரவில்லை. அதே போல் இவர்களது தேநீர், உணவு இடைவேளைகள் அனைத்தும் தேயிலை புதர்களுக்குள்ளேயே புதைக்கப்பட்டுள்ளது. தூசுகளுக்கும் புகைகளுக்கும் மழை வெயிலுக்கு மத்தியில் உணவு உண்ணும் நிலை இந்த நூற்றாண்டிலும் காணப்படுகின்றது. இவை இவர்கள் முகம் கொடுக்கும் உடல் நல பாதுகாப்பு பிரச்சினைகளில் அடிப்படை பிரச்சினைகள் மட்டுமே. இவர்களின் வேலைத்தளம் மலைகளில் அமைந்திருப்பதனால் இவர்கள் கொழுந்துக் கூடைகளோடு கொழுந்து பறிக்கும் போதும், கொழுந்தை சுமந்து வரும் போதும் பல்வேறு ஆபத்துக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் தேயிலைப் பாரத்தை சுமக்கும் விதம் இவர்களது உடல் நலத்தில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வாறு மலையக தொழிலாளர்களுடைய உடல்நல பிரச்சினையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
செடிகளுக்கு மருந்து தெளிக்கும் போது உரிய பாதுகாப்பு அவசியம்
தோட்டங்களில் மருந்தடிக்கும் போதும், உரம் போடும் போதும் பாதுகாப்பு கவசங்களை அதிகமான தோட்டங்கள் வழங்குவதில்லை. அவ்வாறு பாதுகாப்பு கவசங்களை வழங் கிய தோட்டங்களில் இத் தொழிலாளர்கள் அவற்றை பயன்படுத்துகின்றார்களா என்பதும் மேற்பார்வை செய்யப்படுவதில்லை. மருந்தடிப்பதனால் ஆண் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல அதனை சுவாசித்துக் கொண்டு அருகாமையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. மேலும் மருந்தடிக்க பயன்படுத்தும் கருவிகளை கழுவதற்கு நீரை பெற்றுக் கொள்ளும் நீரோடைகளில் இம் மருந்து கலப்பதனால், நச்சுக்கலந்த இந் நீரை ஏனைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் குடிக்க மற்றும் குளிக்கப் பயன்படுத்தும் போது இம் மருந்துகளின் விளைவுகள் அவர்களையும் சென்றடைகின்றன.
மலையகத்தை பொறுத்தவரை உடல்நல பாதுகாப்பு ஆபத்துக்கள் சகல தொழிலாளர்களுக்கும் பொதுவான ஒன்றாக கருதினாலும் அதிகமான பெண் தொழிலாளர்கள் இத் துறையில் வேலை செய்வதனால் அதிக பாதிப்புகளுக்கு பெண் தொழிலாளர்களே உட்படுகின்றார்கள்.
குறிப்பாக கர்ப்ப காலங்களில் கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு ஏற்படும் இந்த உடல் நல பாதுகாப்பு ஆபத்துக்கள் அத்தொழிலாளிப் பெண்ணை மட்டுமல்ல அவள் சுமக்கும் சிசுவையும் தாக்கத்திற்கு உள்ளாக்குகின்றது. மேலும் இத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் வறுமையின் காரணமாக கர்ப்பகாலத்தில் சத்தான உணவுகளை உட்கொள்ள முடியாமை மற்றும் தோட்டத் தொழிலாளர்களுடைய தொழிலின் தன்மை என்பவற்றின் காரணமாக அதிகமாக கருச் சிதைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தோட்ட பராமரிப்பு என்பது தொழிலாளர்களையும் சேர்த்துத்தான்
மிக குறுகிய காலத்தில் விரைவாக அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்படும் கம்பனிகள் தோட்ட பராமரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்வதில் அக்கறை செலுத்துவது இல்லை. (3ஆம் பக்கம் பார்க்க)
இதன் காரணமாக அதிகூடிய பாதிப்பிற்கு உள்ளாவது இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களே. இன்று தோட்டங்களில் விச பாம்புகள், பன்றிகள், சிறுத்தைகள், குழவிகளின் பெருக்கத்தில் அதிகரித்த தன்மை காணப்படுகின்றது. இவற்றின் தாக்குதல் காரணமாக அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாலும் இவர்களுக்கு முறையான இழப்பீடுகள் நிர்வாகங்களினால் வழங்கப்படாது தொழிலார்கள் ஏமாற்றப்படுவதோடு இவ் விடயங்கள் தொடர்பாக யாரும் அக்கறை கொள்ளாத தன்மையும் காணப்படுகின்றது. தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் இப் பிரச்சினையில் இருந்து அவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு தொழிற்சங்கங்கள் முக்கிய பங்காற்ற வேண்டிய தேவை கட்டாயம் உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
செங்கொடிச்சங்கம் வலியுறுத்தும் விடயங்கள்
செங்கொடி சங்கத்தின் யாப்பில் உடல் நல பாதுகாப்ப என்ற ஒரு பிரிவு உள்ளடக்கப்பட்டுள்ளது. அப் பிரிவிற்குள் சேர்க்கப்பட்டுள்ள விடயங்களாவன ;
௧) தொழிலாளர்களின் உடல்நல பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தல்.
௨)சங்கத்தின் நிர்வாக குழுவிற்குள் விசேட உறுப்பினர்களை உடல் நல பாதுகாப்பு பிரிவிற்காக தெரிவு செய்தல்
௩) தோட்டக்கமிட்டிகளில் உடல் நல பாதுகாப்பு பிரதிநிதிகளை நியமித்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப் பிரச்சினையின் உண்மைத்தன்மையை வெளிக்கொணரும் நோக்கத்தில் கடந்த வருடம் எமது சங்கம் மலையகத்தில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இவ் ஆய்வில் வெளிவந்த ஆலோசனைகளுக்கு இனங்க சட்ட நகல் ஒன்று அரசுக்கு சமர்பிப்பதற்காக தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். அத்தோடு தோட்ட மட்டத்தில் உடல்நல பாதுகாப்பு பிரதிநிதிகள் தங்களுக்கு தோட்ட கமிட்டிக்கு ஊடாக நிர்வாகத்தோடு பேசி அடையாளம் கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடுகின்றார்கள். மேலும் எமது நாளாந்த கடமைகளான தொழில் திணைக்களத்தில் முறையப்பாடு செய்தல்’ போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
பொறுப்பு கூறுதல் வேண்டும்
தொழில் வழங்குனரின் கடமை வேலைத்தளத்தில் உடல் நல பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்துவது. வேலைத்தளத்தில் முகம் கொடுக்கும் ஆபத்துக்களை அடையாளம் கண்டு தொழில் வழங்குனருக்கு அறிவிப்பதோடு, அதனை தடுத்து நிறுத்தும் கடமை தொழிலாளிக்கு உண்டு. மேலும் நாட்டில் உள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் வேலை செய்கின்றார்களா என்பதை கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இம் மூன்று சாராரில் யார் தன்னுடைய கடமையை சரியாக செய்யாவிட்டாலும் பாதிக்கப்பட போவது தொழிலாளர்களாகும் எனவே இப் பிரச்சினையின் போது தொழிலாளர்கள் என்ற காரணத்தால் அவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய பிரச்சினையை தீர்க்க செயற்படுவது கட்டாய கடமையாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...