இலங்கை மலையக மக்களின் வரலாற்றை ஒரு காவியமாக்கி அதற்குத் தேயிலைப் பூக்கள் என்று பெயரிட்டிருக்கின்றார் மலையகத்தின் கண்டி மாவட்டத்தின் இறங்கலை கொற்றகங்கைத் தோட்ட மண் தந்த படைப்பாளி சி. பன்னீர்செல்வம்.
தஞ்சை அகரம் பதிப்பகம் டிசம்பர் 2016 இல் வெளியிட்டிருக்கும் நூல் இந்தக் காவியம். அறுபதுகளில் மலையகத்தின் எழுந்த சினம் கொண்ட எழுத்தாளர் பரம்பரையின் ஒரு அங்கம் இவர். சிறுகதையும் கவிதையும் இவரது ஆளுமைக்குட்பட்ட இலக்கிய வடிவங்கள்.
எழுபதுகளின் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் பன்னீர் செல்வத்தை ஒப்பாரிக் கோச்சியில் ஏற்றி ஊர் போய்ச் சேர வைத்தது. 'என் வாழ்க்கையை மட்டுமல்ல அன்று பத்து இலட்சமாக இருந்த மலையக மக்களின் வாழ்க்கையையும் திசைக்கொன்றாய் விசிரி அடித்து சிதைத்த ஒப்பந்தம் அது. நான் ஒரு படைப்பாளியாக உருவாகிக் கொண்டிருந்த காலம் அது.
மலையகமும் அதன் மக்களும் எனது படைப்புலகத்தின் உயிர் நாடியாகத் திகழ்ந்தார்கள். அம் மக்கள் குறித்து நீண்டதொரு காவியம் படைக்க வேண்டும் என்ற அவா என்னை உந்திக் கொண்டே இருந்தது. 1973 மார்ச்சில் என் குடும்பத்தினருடன் தமிழ்நாடு வந்துவிட்டேன். ஆயினும் இன்றுவரை மனக்குதிரை அந்த மண்ணிலேயே பாய்ச்சலிட்டுக் கொண்டிருக்கிறது' என்று கூறுகின்றார் கவிஞர் பன்னீர்செல்வம். (என்னுரை)
இலங்கையிலேயே 1964 இல் தனது தந்தையை இழந்த இவர் குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய நிலைமையும் பிறகு தமிழகப் புலம்பெயர்வுச் சூழலும் ஏற்பட்டது. புதிய இடம், புதிய வாழ்வு முறைகள், கூடியபொறுப்புகள் ஆகியவற்றுடன் தனது எழுத்துப் பணிகளையும் ஒரு சமூக கடமையாக ஏற்று இங்கும் அங்குமாக ஏறத்தாழ அரை நூற்றாண்டு கால எழுத்துப் பணியாளர் இவர்.
ஒரு சிறுகதையாசிரியராகவே தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்த பன்னீர்செல்வத்தின் முதல் கதை கல்லூரி மாணவர்களுக்காக சாகித்திய மண்டலம் நடத்திய சிறு கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. 1965 நவம்பரில் வீரகேசரியில் வெளிவந்தது. இந்தியா செல்வதற்கு முன்பான இவருடைய பெரும்பாலான கதைகள் வீரகேசரியிலேயே வெளிவந்துள்மை குறிப்பிடக்கூடியதே.
துயரம் சுமந்து மலையக மக்களது இன வரலாற்றுக்காவியமான இந்தத் தேயிலைப் பூக்கள் 1990 களிலேயே எழுதி முடிக்கப்பட்டும் பிரசுரத்துக்கான களம் தமிழ்நாட்டில் கிடைக்காத நிலையில் அந்தனி ஜீவாவின் இலக்கியத் துணையால் வீரகேசரியின் மலையக சஞ்சிகையான சூரியகாந்தியில் 2014 ஆம் ஆண்டிலிருந்து 54 வாரங்கள் தொடராக வெளிவந்தது 2016 இல் நூலாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
கலைமகள் இதழின் கிவாஜ நூற்றாண்டு விழா நாவல் போட்டியில் இவருடைய 'விரல்கள்' என்னும் நாவல் முதல் பரிசு பெற்று 2007 ஜனவரி முதல் தொடர் கதையாக வெளிவந்து 2016 இல் நூலுரு பெற்றுள்ளது. சிறுகதை, நாவல் என்று உரைநடைப் புனைவிலக்கியத்தில் தனது ஆளுமையை நிரூபித்துள்ள இவர் தனது மக்களின் சோக வரலாற்றை ஒரு காவிய வடிவிலேயே தந்துள்ளார்.
200 பக்கங்களில் 52 உப தலைப்புகளுடன் வெளிவந்திருக்கும் இந்த நூலுக்கான முன்னுரையில் மு. நித்தியானந்தன் அவர்கள் மலையக மக்களின் முக்கிய அரசியல் சமூகக் கட்டங்களை, தொழிற்சங்க இயக்கங்களை, இன வன்முறையை, சிறிமாவோ –சாஸ்திரி ஒப்பந்தத்தினை எல்லாம் தனது காவியத்தில் விபரித்திருக்கின்றார்.
விடை காணாக் கேள்விகள் அவரது காவியத்தில் எதிரொலிக்கின்றன. வார்த்தைகள் அவருக்கு வசப்பட்டு நிற்கின்றன. ஆற்றொழுக்கு போன்ற அசலான நடை அவரது காவியத்துக்கு உயிர்ப்பூட்டுகிறது' என்று குறிக்கின்றார்.
'புதுக்கவிதை மரபுகளை உள்வாங்கி ஒரு காவியத்தைப் படைக்க முடியும் என்பதை மலையகக் கலை இலக்கிய வரலாற்றில் தேயிலைப் பூக்கள் முதல் பதிவாக்கிக் கொள்கிறது. மலையக இலக்கியத் தளத்தில் இது ஒரு சாதனை' என்று பதிவிடுகின்றது. மு.சி. கந்தையாவின் அணிந்துரை.
சி. பன்னீர்செல்வத்தின் நூல்கள் கீழ் வருபவை:
- திறந்தவெளிச் சிறைகள்
- ஜென்ம பூமி
- அகதிகள் தெரு
- இவை சிறுகதைத் தொகுதிகள்
- ஒரு சாலையின் திருப்பம்
- திறந்தே கிடக்கும் வீடு
- இரண்டும் கவிதை நூல்கள்
- விரல்கள்– நாவல்
- தேயிலைப் பூக்கள் –காவியம்
நன்றி வீரகேசரி, சங்கமம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...