99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 26
ஒரு தொடர் துரோகத்துக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளாகிவந்த ஒரு சமூகம் தமக்கான தலைவிதியை தாமே தீர்மானித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்திருந்த ஒரு காலப்பகுதி அது. இன்னொருவகையில் சொல்லப்போனால் தனிநாட்டுக் கோரிக்கைக்கு அம்மக்களை தள்ளிக்கொண்டு வந்து நிறுத்திய காலம் அது. பிரிவினையே ஒரு தீர்வு ஒற்றையாட்சிக்குள் இனி தீர்வு சாத்தியமில்லை என்கிற முடிவுக்கு வந்த அம்மக்களை மீண்டும் ஒரு தடவை தீர்வு என்கிற பெயரில் திசை திருப்பிவிடலாம் என்கிற நப்பாசை தென்னிலங்கை சிங்களத் தலைமைகளுக்கு.
அதை சமாளிப்பதற்கான பொறிமுறையாகவே அன்று மாவட்ட அபிவிருத்தி சபைகள் (DDC) உருவாக்கப்பட்டன. மாவட்ட சபை தீர்வு என்பது ஒரு காலம் கடந்த ஞானம். யானைப் பசிக்கு சோளப்பொரி. இதுவே 50களில் முன்வைக்கப்பட்டிருந்தால் கூட சிலவேளை அது தமிழர் தரப்பில் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.
1978 அக்டோபர் மாதம் மாவட்ட அமைச்சர் என்ற புதிய பதவியை அறிமுகப்படுத்தினார். மாவட்ட அமைச்சுப் பதவிகளைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அவர் வழங்கத் தயாராக இருந்தபோதும், கூட்டணி அதனை ஏற்க மறுத்தது. ஜே.ஆர். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான முன்மொழிவாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்கிற முறைமையை முன்வைத்தார். இது ஏற்கெனவே முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்க ஆட்சியின் போது உரையாடப்பட்ட எண்ணக்கரு தான்.
தன் கையாலேயே கண்களை குருடாக்கள்
மாவட்ட சபைக்கான சாத்தியங்களை ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை 1979 ஓகஸ்ட் மாதம் ஜே.ஆர் நியமித்தார். அதை தென்னகோன் ஆணைக்குழு என்றும் அழைப்பார்கள். குற்ற விசாரணை ஆணைக்குழு சட்டம் என்கிற ஒன்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர் விக்டர் தென்னகோன். 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது அவர்களை தனித்து விசாரிப்பதற்கான பொறிமுறையாக அந்த சட்டத்தை 1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கொண்டுவந்தார். இன்றைய அரசாங்கத்தில் நிதி மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு அந்த ஆணைக்குழு தான் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆணைக்குழு விக்டர் தென்னக்கோன் தலைமையில் ஏ.சீ.எம்.அமீர், பேராசிரியர் ஏ.ஜே.வில்சன், கலாநிதி நீலன் திருச்செல்வம், என்.ஜீ.பீ.பண்டிதரட்ண, எம்.ஆர்.தாஸிம், கலாநிதி ஜே.ஏ.எல்.குரே, கணபதிப்பிள்ளை நவரட்ணராஜா, பேராசிரியர் கே.எம். டி சில்வா மற்றும் எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் ஆணைக் குழுவில் நியமிக்கப்பட்டார்கள்.
நீலன் திருச்செல்வம் - ஏ.ஜே.வில்சன் |
வழமைபோல தமிழர்களின் கரங்களைக் கொண்டே தமிழர்களின் கண்களை நோண்டும் கைங்கரியத்தை லாவகமாக நிறைவேற்றினார்கள். தமிழ் மக்களின் நீதியான அரசியல் உரிமைக்காகவே வாழ்ந்து மடிந்த செல்வநாயகத்தின் மருமகன் ஏ.ஜே.வில்சன், தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த முருகேசன் திருச்செல்வத்தின் மகன் நீலன் திருச்செல்வம் போன்றோர் இந்த மாவட்ட சபை முறைமையை உருவாக்குவதில் பிரதான பங்கை வகித்தார்கள் என்பது நம்பத்தான் முடிகிறதா? ஆனால் அது தான் நடந்தது. கூட்டணி சார்பில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலும் இவர்கள் இருவரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால் அந்த ஆணைக்குழுவுக்கு நீலன் திருச்செல்வத்தை ஜனாதிபதி ஜே.ஆருக்கு பரிந்துரைத்ததே அமிர்தலிங்கம் தான். இதனை பிற் காலத்தில் நீலன் திருச்செல்வம் எழுதி ICES வெளியிட்ட “சிவில் ஒத்துழையாமையும் ஏனைய கட்டுரைகளும்” என்கிற நூலில் அவர் விபரிக்கிறார். ஜே.ஆர்.பற்றி அந்த நூலில் எழுதிய கட்டுரையொன்றில் ஜே.ஆரை மிகவும் புகழ்கிறார். ஓரிடத்தில்
“தமிழ் அரசியல் தலைமைத்துவத்தில் புதிய பரம்பரை பிரவேசித்த போது அவர்களோடு இயைபாக செயலாற்றுவதற்கு ஜெயவர்த்தனாவுக்கு கஷ்டமாக இருந்தது. அவரது தனிப்பட்ட தொடர்புகள் மூன்று பிரத்தியட்சமான தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், எம்.திருச்செல்வம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகியோருடன் இருந்தன. இவர்கள் மூவருமே தேர்தலுக்கு முந்திய 6 மாத இடைவெளிக்குள் இறந்து போனார்கள்.” என்று குறிப்பிடுகிறார்.
படிப்பினைகள் போதாதா
அதுபோல இந்த மாவட்ட அபிவிருத்திச் சபை யோசனைக்கு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை இணங்கச் செய்வதில் தான் பிரதான பாத்திரம் வகித்தத்தை ஏ.ஜே.வில்சன் எழுதிய “The Break-up of Sri Lanka: The Sinhalese-Tamil Conflict” (இலங்கையின் உடைவு) நூலில் ஒப்புக்கொள்கிறார். இந்த ஆணைக்குழுவுக்குத் தலைவராக வில்சனைத் தான் ஜே.ஆர். நியமிக்க இருந்தார். செல்வநாயகத்தின் மருமகனை நியமிப்பதால் அன்றைய இனவாத சக்திகள் சந்தேகிக்கும் என்பதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. என்.ஜீ.பீ.பண்டிதரத்ன நீதியான தீர்வுக்கு முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் ஏ.சீ.எம்.அமீர் மற்றும் எம்.ஏ.அஸீஸ் ஆகியோரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் வில்சன் அந்த நூலில் தெரிவிக்கிறார். இதன் உச்சமாக ஆணையாளர் தென்னகோன் இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்தை வகுப்பதில் பெருந்தடயாகவே இருந்தார் என்றும் அதில் குறிப்பிடுகிறார். நீதியரசர் விக்டர் தென்னகோன் ஜே.ஆரின் உறவினர் என்பதும் இத இடத்தில் சுட்டிக் காட்டவேண்டும்.
1980 பெப்ரவரி நடுப்பகுதியில் அறிக்கை வெளியானது. ஏற்கெனவே நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி முறையை ஆராய்வதுடன், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஸ்தாபித்தல், அதன் அமைப்பு, அதிகாரங்கள், இயங்குமுறை உள்ளிட்ட அனைத்து விடயங்கள் பற்றியும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது அந்த ஆணைக்குழு. தொடர்பிலும் விரிவானதொரு அறிக்கையை அளிப்பதாக இருந்தது.
1979ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தென்னகோன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் 1980ஆண்டின் 35ஆம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபை சட்டமாக பிரதமர் ரணசிங்க பிரமதாசவால் பாராளுமன்றத்தில் ஓகஸ்ட் 8 சமர்ப்பிக்கப்பட்ட மசோதா 20 அன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. சுதந்திரக் கட்சி இந்த மாவட்ட சபையை பகிஸ்கரித்து அந்த விவாதத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. தேர்தலையும் பகிஸ்கரிப்பதாக அறிவித்தது. வழமைபோல சிங்கள பௌத்த இனவாத சக்திகளின் பலத்த எதிர்ப்பு பிரச்சாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் மத்தியில் இது நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் 24 சபைகள் உருவாக்கப்பட்டன.
கூட்டணி எதிரியாக ஆனது
அமிர்தலிங்கத்துக்கும், கூட்டணிக்கும் எதிராக பலமான எதிர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் உருவெடுத்தது. அமிர்தலிங்கத்தின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. அன்றைய தமிழ் இளைஞர் முன்னணியின் தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா அப்போது தான் அவரசகால சட்டத்தின் கீழ் சிறை சென்று விடுதலையாகியிருந்தார். தமிழரசுக் கட்சியின் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் கோவை மகேசன் கூட்டணியின் இந்தப் போக்கை விமர்சித்ததற்காக பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்டார். கூடவே எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசன், டொக்டர்.தர்மலிங்கம், ஈழவேந்தன் ஆகியோரும் விலகினார்கள். அவர்கள் தமிழீழ விடுதலை முன்னணி (TELF) என்கிற அமைப்பையும் தொடங்கினார்கள். இப்படித்தான் கூட்டணியின் மீது நம்பிக்கையிழந்து, ஆத்திரம் மேலெழுந்து, கூட்டணியின் மீதான எதிர்ப்புநிலையும் வளர்ந்து; தீவிரப் போக்கு மிக்க மாற்று அரசியல் தலையெடுத்தது.
கூட்டணி இந்த எதிர்ப்புகளை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. அமிர்தலிங்கம்; நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதனை நடைமுறைப்படுத்தத் தான் போகிறார்கள் என்றும் இதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்கிற தொனியில் தமிழ் மக்களை ஆசுவாசப்படுத்த முயன்றபோதும் அது எடுபடவில்லை.
1970கள் வரை நடைமுறையிலிருந்த கிராமிய சபைகள், சிறு நகர சபைகள், மாநகர சபைகள் அத்தனையும் 1980 ஆண்டின் மாவட்ட அபிவிருத்திச் சட்டத்தின் கீழான திருத்தத்திற்கு உட்பட்டது. அவை உப காரியாலயங்களாக ஆக்கப்பட்டு அபிவிருத்திச் சபைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது. 1988ஆம் ஆண்டு மாவட்ட சபைகள் முறைமை நீக்கப்பட்டு சிறு நகர சபைகளும், கிராமிய சபைகளும் நீக்கப்பட்டு பிரதேச சபை முறை கொண்டுவரப்பட்டது. 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் அந்த பிரதேச சபைகள் அத்தனையும் மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 83 நகர சபைகளும் 549 கிராமிய சபைகளும் கலைக்கப்பட்டு 1981 ஆம்ஆண்டு ஜூலை 1 இலிருந்து இயங்கத் தொடங்கின
வெற்று மாவட்ட சபை
மாவட்ட அபிவிருத்தி சபையும் அதிகாரமில்லாத வெற்றாகவே இருந்தது. அது ஒவ்வொரு மாவட்ட அமைச்சரின் கிழ் இயங்கும். மாவட்ட அமைச்சருக்கு உதவியாக செயலாளர் காணப்படுவார். மாவட்ட அமைச்சரையும், செயலாளரினையும் ஜனாதிபதி நியமிப்பார். இவ் மாவட்ட அமைச்சர் பாராளுமன்ற குழுவிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் எனும் நியதி பின்பற்றப்பட்டது. மேலும் இம் மாவட்ட அபிவிருத்தி சபைகள் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டோர் ஆகிய உறுப்பினர்களை கொண்டு காணப்படும்.
முதலாவது தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்து வந்த வடக்கு கிழக்குக்கான சமஷ்டி கோரிக்கையை அரசியல் தீர்வாக தமிழ் மக்கள் முன்மொழிந்து வந்திருந்த சூழலில் மாவட்டங்களாக கூறுபோட்டது இதன் முதலாவது தோல்வி. அடுத்ததாக இச் சபை அதிகாரப்பரவலாக்கத்துக்கான பொறிமுறையாக கூறப்பட்டபோதும் இது முழு அதிகாரத்தையும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கபட விதிகளையே கொண்டிருந்தது.இந்த சபையில் ஆண்கம் வகிக்கும் மாவட்ட அமைச்சரையும், செயலாளரையும் ஜனாதிபதியே நியமிப்பார். ஆக அவர்கள் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குக்கு உரியவர்களே. நடைமுறையிலும் அது தான் நிகழ்ந்தது.
இம் மாவட்ட அமைச்சர் தமது செயற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு பெறுப்பு கூற வேண்டியவராகவும் காணப்பட்டார். இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மாவட்ட அமைச்சரின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு இயல்பாகவே கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன. பாராளுமன்ற குழுவிலிருந்து மாவட்ட அமைச்சர் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் அமைச்சரவை சாராத அமைச்சர்களில் இருந்தே தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அபிவிருத்தி தொடர்பான சகல அதிகாரங்களும் அமைச்சரவை சார்ந்த அமைச்சர்களிடமே காணப்பட்டது. இதனால் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கு மாவட்ட அமைச்சர் அமைச்சரவை சார்ந்த அமைச்சர்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையே இருந்தது. அதாவது எந்தவொரு அபிவிருத்தி செயற்பாடுகளையும் மாவட்ட அமைச்சர் தான் திட்டமிடும் விடயங்களை கூட மேற்கொள்ள முடியாது இருந்தன. மொத்தத்தில் மக்களால் தெரிவு செய்யப்படாதவர்கள் கைகளிலேயே ஒட்டுமொத்த அதிகாரங்களும் குவிக்கப்பட்டிருந்தன. அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதற்குப் பதிலாக, அதிகாரங்கள் அனைத்தையும் பிடுங்கி மையப்படுத்தி தன்னகத்தே குவித்துவைத்துக் கொண்டது. அதை இனப்பிரச்சினைக்கு தீர்வு என்றது.
ஜே.ஆர். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை பற்றி கூறும்போது “ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர மற்றெல்லா அதிகாரங்களையும் ஜனாதிபதியாகிய தனக்கு இந்த அரசியலமைப்பு வழங்கியுள்ளது” என்று தெரிவித்திருந்ததை இங்கு நினைவு படுத்த வேண்டும் ஜே.ஆரின் அதிகார வெறி நிறைவேற்று அதிகாரத்தை தன்னகத்தே ஏற்படுத்திக் கொண்டதுடன் மட்டும் தணியவில்லை. கூடவே மாவட்ட சபை விடயத்திலும் மொத்த அதிகாரத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார்.
மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தலை 1981 ஜூன் 4 அன்று நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
தமிழர்க்கு வேறு தெரிவில்லை.
வடக்கில் அபிவிருத்தி சபையின் அதிகாரத்தை அம்மக்களுக்கு வழங்காது பலாத்காரமாக கைப்பற்றிவிட அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி விபரீதத்தில் தான் முடிந்தது. பெருமளவு தேர்தல் முறைகேடுகளை செய்தும், யாழ்ப்பாண நூல் நிலையத்தைக் கொழுத்தியும் தான் சாதித்தது. அதன் விளைவு ஆளும் அரசாங்க கட்சியை தோற்கடிப்பதற்காக வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட்டணியை வெற்றி பெறச் செய்தார்கள் மக்கள்.
கூட்டணி 263,369 வாக்குகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் 10ஆசனங்களைக் கைப்பற்றியது. அத்தனை தேர்தல் மோசடிகளை செய்தும் கூட ஐ.தே.க 23,302 மட்டுமே பெற்றுக்கொண்டது. குமார் பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் 21,682 வாக்குகளைப் பெற்றது.
தாம் விரும்பாத மாவட்ட சபைக்கு நடைமுறை வடிவம் கொடுத்தார்கள். வரலாறு முழுவதும் இந்தபோக்கை காணலாம். தமக்கெதிரான கட்சியைத் தோற்கடிப்பதற்காக தாம் விருப்பப்படாத கட்சியை ஆதரிப்பதே ஒரே தெரிவாக கொண்டார்கள். பேயிலேயே எது மோசமான் பேய், எது சுமாரான பேய் என்பதை அளந்து வாக்கிடும் மரபு மிதவாத ஜனநாயகப் போக்கின் அம்சமாகவே காலங்காலமாக தொடர்ந்து வருகிறது.
ஐ.தே.க மிகவும் மோசமான தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டது. பல வாக்குப் பெட்டிகள் காணாமல் போயின. ஆனால் அந்த தேர்தல் செல்லுபடியானது என்று தேர்தல் ஆணையகம் அறிவித்தது. தேர்தலுக்காக தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பட்டிருந்த தேர்தல் ஊழியர்கள் ஐ.தே.கவின் ஆதரவாளர்களாக இருந்தார்கள்.
ஐ.தே.க. அம்பாறையில் மாத்திரம் வென்றது. இந்தத் தேர்தலில் ஐ.தே.க யாழ் மாவட்டத்தில் களமிறக்கிய அ.தியாகராஜா 24.05.1981இல் துவிச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1970 இல் வட்டுக்கோட்டைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமிர்தலிங்கத்தையே தோற்கடித்து வென்றவர் தியாகராஜா. அதன் பின்னர் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு கொடுத்து 1972 அரசியலமைப்புக்கும் ஆதரவளித்த அவர் தமிழ் மக்களின் அதிருப்தியையும், தமிழ் போராளிகளின் இலக்குக்கும் ஆளாகியிருந்தார்.
ஏற்கெனவே 1977 பொதுத் தேர்தலில் கூட்டணியால் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் புதல்வர் குமார் பொன்னம்பலம் அத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியித்திருந்தார். அதன் பின்னர் அகில இலங்கைதமிழ் காங்கிரசை 1978இல் ஆரம்பித்திருந்தார். அதே கட்சியின் கீழ் மாவட்ட சபைத் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.
தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) முதற்தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் வாக்கு கேட்டு வந்தது இந்தத் தேர்தலில் தான். ஜே.வி.பியை ஒரு கட்சியாக தேர்தல் திணைக்களம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சுயாதீன குழுவாகவே போட்டியிட்டனர். சுதந்திரக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சிஆகியன தேர்தலை பகிஸ்கரித்த நிலையில் நாடளாவிய ரீதியில் ஐ.தே.க வுக்கு சவாலாக இருந்த ஒரே கட்சி ஜே.வி.பி தான். மொத்த வாக்குகளில் 10 வீதத்தை அவர்கள் கைப்பற்றினார்கள். முதல் தடவையாக தேர்தல் அரசியலுக்கு இந்த மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலின் மூலம் அவர்கள் பிரவேசித்து மொத்தமாக 13 உறுப்பினர்களை பெற்றுகொண்டார்கள்.
நம்ப நட! நம்பி நடாதே!
இந்த சபை எப்படி ஒரு கேலிக்கூத்தாக முடிவடைந்தது என்பதைப் பற்றி மகிந்த தீகல்ல எழுதிய “நவீன இலங்கையில் பௌத்தமும், பிணக்கும், வன்முறையும்” என்கிற நூலில் விளக்குகிறார்.
ஏ.ஜே.வில்சன் இது பற்றி தனது கட்டுரைகளிலும், நூல்களிலும் விளக்கியிருக்கிறார். ஜே.ஆரை நம்பி தாமும் மோசம் போனதாகவே அவரது தொனியில் எதிரொலித்தன. மாவட்ட சபையைக் கூட நடைமுறைப்படுத்தும் எண்ணம் ஜே.ஆருக்கு இருக்கவில்லை என்றும், கூட்டணியை அரசியல் அரங்கில் தணித்து வைத்திருப்பதே ஜே.ஆரின் உள்நோக்கமென்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் கேலிக்கூத்து நாடகம் அரசாங்கத்தால் அரங்கேற்றப்பட்டது இப்படித்தான். இந்த வரலாறு மீண்டும் இன்று 2017இல் நினைவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. கண்துடைப்புக்காக ஒரு தீர்வு, அதே எதிர்க்கட்சி தலைமை பதவியில் தமிழர், வெற்றுத் தீர்வு யோசனை, அந்த வெற்றுத் தீர்வில் தமிழ் தலைமையும் நேரடி பங்கேற்பு. 37 வருடங்களின் பின்னர் வரலாறு சுழற்சிமுறையில் அதே புள்ளியில் வந்து நிற்கின்றது. இந்த இடைக்காலத்தில் பெரும் இழப்பை விலையாகக் கொடுத்த ஒரு சமூகத்தால் இதனை சகிக்கத் தான் முடிகிறதா?
இந்தத் தேர்தல் எப்பேர்பட்ட அழிவுகளை ஏற்படுத்தியது என்பதை தனியாக பார்ப்போம்
துரோகங்கள் தொடரும்..
+ comments + 1 comments
very usefull
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...