நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டுமென்று மலையகக் கட்சிகள் விடுத்துவந்த கோரிக்கைகளுக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளன. கடந்த திங்கள் கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிருந்து அமைச்சர் மனோ கணேசன் வெளிநடப்பு செய்ததும், அதன்பின்னர் அமைச்சர் திகாம்பரம், ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கட்சித் தலைவர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியதன் அவசியம்பற்றி எடுத்துக்கூறியதன் விளைவாக இந்தக் கோரிக்கை வெற்றிபெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.
இதனிடையே, கடந்த 21ஆம் திகதி (திங்கள்) இரவு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அமைச்சர்களான லக் ஷ்மன் கிரியெல்ல, மங்கள சமரவீர, மலிக் சமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், ப.திகாம்பரம், கபீர் ஹாசிம், ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதன் பிரதான நோக்கம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்த உள்ளூராட்சி திருத்தச் சட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காகவே ஆகும். உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் 60வீதம் தொகுதி முறையிலும், 40வீதம் விகிதாசார முறையில் பிரதிநிதிகளை தெரிவு செய்வதும், ஒவ்வொரு கட்சியும் தத்தமது வேட்பாளர்கள் பட்டியலில் 25வீதம் பெண்களுக்கு இடங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் போன்ற திருத்தங்களே இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் பேசியபோது, தேர்தலுக்கு முன்னர் புதிய உள்ளூராட்சி சபைகளை அமைக்க முடியாதெனவும், நாடு முழுவதிலுமிருந்து புதிய பிரதேச சபைகளை அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வந்துள்ளதால் அதனை தற்போது செய்ய முடியாதென்று கூறியதாகவும் தெரியவருகிறது.
அப்போது இடைமறித்து பேசிய தேசிய சகவாழ்வு, நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன், நாட்டின் ஏனைய சபைகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம். நுவரெலியாவில் மட்டும் புதிய சபைகளை தேர்தலுக்கு முன்னர் அமைத்துத் தருவோம் என்று உறுதியளித்தபடி செய்து தாருங்கள் என்றும், ஒவ்வொன்றும் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட இரண்டு சபைகள் (நுவரெலியா, அம்பகமுவ) உள்ளன. ஆனால், 10,000 பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும்போது மலையக மக்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி என்று கூறியுள்ளார்.
பிரதமரின் உறுதிமொழியை நம்பி, மலையக தமிழ் மக்களுக்கு உறுதியளித்துள்ளதாக அங்கு அவர் சுட்டிக்காட்டியதோடு, கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்துள்ளார். தமது நிலைப்பாட்டுக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மட்டும் ஆதரவு தெரிவித்ததாகவும் அமைச்சர் மனோகணேசன் கூறியிருந்தார்.
அவர் வெளியேறிய பின்பும், தொடர்ந்து கூட்டம் நடைபெற்றதுடன், அமைச்சர் பழனி திகாம்பரம் அதில் இறுதிவரை கலந்துகொண்டிருந்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி சபைகளை அமைக்க வேண்டியதன் கட்டாயத்தையும், அங்குள்ள மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள படும் துயரங்களையும் தான் விபரமாக அங்கிருந்தவர்களுக்கு எடுத்துக்கூறியதாக அமைச்சர் பழனி திகாம்பரம் கூறினார்.
இரண்டு இலட்சம் மக்களுக்கு ஒரு பிரதேச சபை மாத்திரமன்றி, பிரதேச சபையில் ஒரு தேவையை செய்து கொள்ள வேண்டுமானால், ஒருவர் சுமார் 60 கிலோ மீற்றர் தூரம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளதையும், அதனால் அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் எடுத்துக் கூறியதையடுத்து அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
அத்துடன், தேர்தலுக்கு முன்னர் நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் அமைக்கப்படுவது உறுதி என்று மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். அமைச்சர் மனோகணேசன் கொடுத்த அழுத்தமும், வெளிநடப்பும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதும், புதிய பிரதேச சபைகளை அமைக்க மேற்படி கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டமைக்கு ஒரு காரணமாகும்.
நுவரெலியா மாவட்டத்தில் குறிப்பாக, நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டிய தேவை கட்டாயமாகும். 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ஒரு பிரதேச சபை என்ற அடிப்படையில் நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் அமைந்திருக்கின்றன. இதன் மூலம் தூர இடங்களிலுள்ள மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் எந்தளவு சிறமப்படுவார்கள் என்பதை இங்கு வந்து பார்த்தால்தான் புரியும்.
இதனடிப்படையில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று சகல மலையக கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி போன்ற பல கட்சிகள் அரசாங்கத்திடம் இது தொடர்பான சாட்சியங்களை முன்வைத்து வலியுறுத்தி வந்துள்ளன. அந்த வகையில் இவ்விடயத்தில் சகல மலையகக் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுத்திருக்கின்றன என்பதை மறுதலிக்க முடியாது.
ஆனால், தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் இவ்விடயம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வந்தனர். குறிப்பாக, அமைச்சர் மனோகணேசன் நுவரெலியா மாவட்டத்தில் 10 புதிய பிரதேச சபைகள் அமைக்கப்படும் அதேவேளை, ஹட்டன் – டிக்கோயா மற்றும் தலவாக்கலை – லிந்துலை நகர சபைகளை மாநகர சபைகளாக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்பட தெரிவித்திருந்தார். அவரது முயற்சி வரவேற்கத்தக்கது.
எவ்வாறாயினும், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு இதுவே தகுந்த தருணமாகும். இதனை தவறவிட்டால் இனிவரும் காலங்களில் ஒருபோதும் இவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்காது. நல்லாட்சி அரசு அமைவதற்கு மலையக மக்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்புக்கு நல்லாட்சி அரசு செய்யப்போகும் கைமாறாக இது அமைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை எவ்வளவு விரைவில் நடத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக நடத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாகின்றன. ஜனநாயக அரசின் அடிப்படை அமைப்புக்களான உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகள் தெரிவை வருடக்கணக்கில் பிற்போடுவது ஜனநாயக மரபுகளை மீறும் செயலாகும்.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கொடுத்துவரும் அழுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்பனவும் மற்றைய காரணங்களாகும். எதிர்க்கட்சியோ அல்லது ஆளும் கட்சியோ என்றில்லாமல் ஜனநாயகத்தை விரும்பும் அனைவருமே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை பிற்போடப்படுவதை விரும்பாதவர்களாகவே உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தேர்தல் பற்றி அவ்வப்போது, 3 மாதங்களில் நடைபெறும், வருட இறுதியில், அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறும் என்றெல்லாம் அரசியல் தலைவர்கள் கூறிவந்தனர். இப்போதும்கூட இவ்வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட முற்பகுதியிலோ நடைபெறுமென்று தெரிவித்து வந்துள்ளனர்.
இதில் ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டாலும்கூட ‘இவ்வருட இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றும், தேர்தல் ஆணையகம் எதிர்நோக்கியுள்ள நடைமுறைப் பிரச்சினைகளே இதற்கு காரணமென்றும்’ தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 271 பிரதேச சபைகள், 41 நகரசபைகள் மற்றும் 23 மாநகர சபைகள் என மொத்தமாக 335 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான திருத்தச் சட்டமூலம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்த சட்டத்திருத்தம் சபையில் நிறைவேற்றப்பட்டு, தேர்கல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு குறைந்தபட்சம் 3 மாத காலமாகலாம். அதன் பின்னரே தேர்தல் குறித்து ஒரு திகதியை தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்க முடியும். அதுமட்டுமன்றி, தேர்தல் நடைபெறும் தினத்தைத் தீர்மானிப்பதிலும் (க.பொ.த. சாதாரண தர பரீட்சை காரணமாக) தேர்தல் திணைக்களத்துக்கு சிக்கல் நிலை ஏற்படலாம்.
இதுபோன்ற பல நடைமுறை பிரச்சினைகள் காரணமாகவே இந்த வருட இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி காலை தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்துப் பேச்சவார்த்தை நடத்திள்ளனர் இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான யோசனைத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இதற்கமைய உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதியளித்ததாக தெரியவந்துள்ளது.
- செழியன் நல்லதம்பி
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...