Headlines News :
முகப்பு » » உள்ளூராட்சிக்குள் உள்வாங்கப்படாத மலையகம் - ஜீவா சதாசிவம்

உள்ளூராட்சிக்குள் உள்வாங்கப்படாத மலையகம் - ஜீவா சதாசிவம்



என்னதான் நீண்டகால வரலாற்றை கொண்டவர்களாக மலையக மக்கள் இருந்தாலும் இன்று வரை முழுமையாக தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். சாதாரண அடிப்படை வசதிகள் சிலவற்றை பெற்றுக்கொடுக்கும்   உள்ளூராட்சி சபைகளே உறுதியாக மலையகத்தில் இல்லாத நிலையில் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படுவதென்பது  இன்னும் முழுமையாக சாத்தியமாகவில்லை என்பதை புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கின்றது.  

 இந்த உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலும் அதன் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பிலும்  கடந்த ஐந்து வருடங்களாக பல தரப்பிலும் விதந்துரைப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அது பற்றி முழுமையான முடிவு இல்லை என்பது வருந்தக்கூடிய விடயம்.  அந்த வகையில், உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் விரைவில் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுவும் கலப்பு முறை எனும் புதிய ‘குழப்பம்’. இந்த புதிய முறையில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் குறித்து கடந்த வார அலசலில் ஆராய்ந்திருந்தோம்.

மலையக மக்களுடன் தொடர்புடையதாக உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் இன்னுமொரு குழப்பம் இருக்கிறது. அதுதான் அந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்றபோதும் உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றான பிரதேச சபைகளில் இருந்து மலையகப் பெருந்தோட்ட மக்கள், சேவையைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கலாகும்.  பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்ட அரசியல் கலந்துரையாடல் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்று கடந்த வார இறுதியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் 'உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்படாத மலையகப் பெருந்தோட்ட மக்கள்'   என்பது குறித்தே இருவரதும் உரையாடல் அமைந்தது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விருவரும் தெரிவித்த கருத்துக்களையும் உள்வாங்கியதாக தேசிய நீரோட்டத்தில் இன்னும் முழுமையாக இணைக்கப்படாத மலையகப் பெருந்தோட்ட மக்கள் குறித்து இந்த வார 'அலசல்' ஆராய்கிறது.

இலங்கைத் தீவுக்குள் இன்னுமொரு தீவாக அமைந்ததே மலையகப் பெருந்தோட்டங்கள்.  தேயிலை, ரப்பர் ஆகிய பணப்பயிர்களை ஆதாரமாகக் கொண்டது மலையகம். இதில் முதன்மை ஏற்றுமதி பயிரான தேயிலை இலங்கையில் வர்த்தக நோக்குடன் அறிமுகப்படுத்தி 150 வருடங்களை அடைந்துள்ள நிலையில் அதனை மையப்படுத்தி வாழும் தொழிலாளர் சமூகத்தின் வரலாறும் 150 வருடங்களுக்கு மேலாகிறது.   

மலையக மக்களின் பரம்பல் இன்று தொழிலாளர் அல்லாதோரின் எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகின்றது. அண்மைய தரவுகளின் படி 15 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட இந்திய வம்சாவளி மலையக மக்களில் சுமார் 10 வீதமானவர்கள் மாத்திரமே அதாவது ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் அளவானவர்களே தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். அதிலும் வெறும் 5ஆயிரத்துக்கு குறைவான தொழிலாளர்களாக அரசாங்கத்துக்கு சொந்தமான கூட்டுத்தாபன தோட்டங்களில் வாழ்கின்றனர். ஏனையோர் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் எனப்படும் தனியார் நிறுவனங்களின் முகாமையில் இயங்கும் தோட்டங்களிலேயே தொழிலாளர்களாக உள்ளனர். ஒட்டு மொத்தமாக இந்த தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள் ஒரு புறமிருக்க அவர்களின் நாளாந்த நிர்வாக பிரச்சினைகள் வேறாகவுள்ளன.

பொதுவாக இலங்கை நாட்டின் பொதுநிர்வாகம் என்பது கிராமசேவகர் மட்டத்தில் இருந்து ஆரம்பித்து பிரதேச செயலாளர் பிரிவு, மாவட்ட செயலகம், அமைச்சு என விரிவடைந்து செல்கின்றது.  நிர்வாக   அமுலாக்கத்திற்கு தேவையான தீர்மானங்களை நிறைவேற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அதிகாரமிக்க சபைகளாக உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், பாராளுமன்றம் என்பன காணப்படுகின்றன.  உள்ளூராட்சி மன்றங்களில் பிரதானமானது பிரதேச சபைகள். அதற்கடுத்து நகரசபைகளும் மாநகர சபைகளும் அடங்குகின்றன.

மலையகப் பெருந்தோட்டங்களைப்பொறுத்தவரையில்   பெரும்பாலும் பிரதேசசபை நிர்வாகத்துக்குள்ளேயே அடங்குகின்றன. ஆனாலும் 1987 ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு பிரதேச சபைகள் செயற்படுவதை அனுமதிக்கவில்லை. இந்த சட்டம் தெரியாமலேயே பெருந்தோட்டப்பகுதி மக்கள் இன்றுவரை பிரதேச சபைத் தேர்தல்களில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை அனுப்பி வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவை, நுவரெலியா பிரதேச சபைகளை மலையகக் கட்சிகள் தேசியக் கட்சிகளுடன் இணைந்தோ அல்லது கூட்டணியாக போட்டியிட்டோ ஆட்சியமைத்துள்ளன. 

அதேபோல கண்டி, கேகாலை, பதுளை, மாத்தளை மாவட்டங்களில் ஒரு சில பிரதேச சபைகளின் உப தலைவர்களாக பெருந்தோட்ட மக்களின் வாக்குகளினால் தெரிவான உறுப்பினர்கள் தெரிவாகியுமுள்ளனர். இவர்கள் ஆங்காங்கே சிற்சில அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் சட்டத்தின் பிரகாரம் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு பிரதேச சபையினால் பணியாற்ற முடியாது. இவை கேள்விக்கு உட்படாத வரை சிற்சில பணிகளை முன்னெடுத்து வந்துள்ளன.

அதிர்ஷ்டவசமாக கண்டி, மாவட்டத்தின் உடபலாத்த பிரதேச சபையை இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி கைப்பற்றி 2006இல் ஆட்சியமைத்தபோது இந்தச்சட்ட சரத்தைக் காரணம் காட்டி நீதிமன்ற ஆலோசனையைப் பெற்று மத்தியமாகாண சபை இந்த பிரதேச சபையை கலைக்கும் வரை பிரதேச சபைச் சட்டத்தில் இத்தகைய ஒரு சரத்து இருப்பது தெரியாமலேயே காலம் கடத்தப்பட்டுள்ளது. 

எனினும் கடந்த பொதுத் தேர்தலின்போது உதயமான தமிழ்முற்போக்குக் கூட்டணியின்   தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக பிரதேச சபைச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவோம்  என வாக்குறுதி அளித்ததற்கமைய   கூட்டணியின்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் 2015 ஆண்டு டிசம்பர் மாதமளவில் பாராளுமன்றில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்து விரிவான விளக்கங்களுடன் ''பிரதேச சபைச் சட்டம் பெருந்தோட்ட மக்களுக்கு பணியாற்றுவதற்கு ஏற்றவாறு திருத்தம் செய்யப்படல் வேண்டும்'' என கோரியிருந்தார். குறித்த பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றிய மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா திருத்தம் செய்வதற்கு உடன்பாடு தெரிவித்து அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்து அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.

அமைச்சரவையில்,  கூட்டணி சார்ந்த அமைச்சர்களான மனோகணேசன், திகாம்பரம் ஆகியோரும் இதனை வலியுறுத்தியதோடு குறித்த சட்டத்திருத்தம் தொடர்பாக அமைச்சர் திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சிடம் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அதற்கு உரிய முன்மொழிவுகளும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இவையெல்லாம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்தச் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. 

இந்நிலையில், பிரதேசசபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சட்டத்திருத்தம் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தம்மால் உரிய முறையில் இந்தச் சட்டத்திருத்த நடவடிக்கை பாராளுமன்றிற்கு முன்வைக்கப்பட்டபோதும் அவை இன்னும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படாதமை குறித்து தமது விசனத்தைத் தெரிவித்தார்.  

இதன்போது, கருத்துரைத்த   வடிவேல் சுரேஷ் எம்.பி., மகிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகள் 72 மணித்தியாலத்துக்குள் இடம்பெற்றதை சுட்டிக்காட்டினார். தாம் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த 2006 – 2010 ஆண்டு காலப்பகுதியில் பெருந்தோட்ட பகுதி மக்கள் செறிவாக வாழ்ந்த பசறை பிரதேச சபையை இரண்டாகப் பிரித்து பசறை, லுணுகலை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களாகவும் அதன் தொடர்ச்சியாக அவை இரண்டையும் தனித்தனி பிரதேச சபைகளாகவும் உருவாக்க முடிந்ததாகவும் தெரிவித்தார். 

அப்போதைய மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கு ஜனாதிபதி மகிந்த விடுத்த பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.  அமைச்சர் அதாவுல்லா காலத்தில் தனது ஊரான அக்கரைப்பற்று நகர் மாநகர சபையாக மாறியதையும் மறைந்த அஷ்ரப் காலத்தில் கல்முனை மாநகரசபை உருவானதையும் கூட நாம் இங்கு நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. அண்மையில் அமைச்சர் மனோகணேசன் ஹட்டன், தலவாக்கலை நகரங்கள் மாநகர சபையாக மாற்றப்படும் என அறிக்கை விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

மலையக நகரங்கள் மாநகர சபையாவது ஒருபுறம் இருக்கட்டும். இப்போதைக்கு திருத்தம் கோரி சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரதேசசபைகள் சட்டத்தின் திருத்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பெருந்தோட்டப்பகுதியில் தொழிலாளர்கள் ஒன்றரை லட்சம் ஆயினும் மக்கள் ஒரு மில்லியன் அளவில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் எல்லா மாவட்டங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களோ மாகாணசபை உறுப்பினர்களோ அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. எனவே அவர்கள் அங்கம் வகிக்கக் கூடிய பிரதேச  சபைகளைத் தானும் அதிகாரமுள்ள சபையாக மாற்ற வேண்டிய பொறுப்பு அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு உண்டு.   

மலையக மக்களுக்கான வீட்டுக்காணி உறுதி, தனிவீட்டுத்திட்டம், 25 விஞ்ஞான பாடசாலைகள் விருத்தி என அபிவிருத்தி சார் விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுபோல பிரதேச சபைகள் சட்டத்திருத்தத்தை விரைவுபடுத்தவும் மலையக மாவட்டங்களில் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவசர நடவடிக்கை எடுக்கவும் கூட்டணி தலைவர்கள் முன்வர வேண்டும். 

மகிந்த அரசு 72 மணித்தியாலத்தில் செய்து முடித்த காரியங்களை நல்லாட்சி அரசு 72 வாரங்களுக்கு மேலாக இழுத்தடிப்பது நல்லாட்சிக்கும் அதற்கு ஆதரவளிக்கும் கூட்டணிக்கும் அழகல்ல. மகிந்த அலை  மீண்டும் அடிக்கத்தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் அலை எந்தப்பக்கம் செல்லும் என யாரும் எதிர்வுகூற முடியாது. 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates