(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 28)
இலங்கைத் தேயிலையின் 150 வருட பூர்த்தி குறித்தும் இந்தப் பயணத்தில் இணைந்து அழைத்துச் செல்லப்படாத மக்கள் குறித்தும் கடந்த வாரம் பார்த்தோம். தொழிலாளர் மக்கள் நேரடியாக இந்த தொழில் துறையுடன் தொடர்பு கொண்டிருக்கின்றபோது தேயிலைத் தொழிலுடன் தொடர்புடைய ஏனைய தொழில் துறையினர் நிறுவனங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கைத் தேயிலையின் தந்தை என போற்றப்படும் ஜேம்ஸ் டெயிலர் 1852 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்ததாக அறியப்படுகின்றது. ஏறக்குறைய 15 வருடங்கள் தேயிலை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட அவர் 1867 ஆம் ஆண்டிலேயே வர்த்தகப்பயிராக தேயிலையை அறுவடை செய்துள்ளார். மிகவும் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தேயிலைத் தொழில் துறை கண்டி – நுவரெலியா மாவட்ட எல்லையில் 'லூல்கந்துர' எனும் தோட்டத்தில் 19 எக்கரில் இடம்பெற்றுள்ளது.
முதலாவது எற்றுமதியாக 23 கிலோ கிராமுடன் ஆரம்பமான தொழில்துறை இன்று சுமார் வருடாந்தம் 300 மில்லியன் கிராம்களை ஏற்றுமதி செய்கிறது. சுமார் இரண்டு இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் தேயிலைப்பயிர்ச்செய்கை இடம்பெறுகின்றது. இவற்றுள் முறையே நுவெரலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, காலி, கேகாலை, மொனராகலை, களுத்துறை என ஒன்பது மாவட்டங்களில் பரப்பளவு ரீதியாக தேயிலை பயிரப்படடு வருகின்றது. கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பகுதியிலும் குருநாகல் மாவட்டத்தில் சிறு அளவிலும் கூட தேயிலை பயிரிடப்படுகின்றது.
இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் 2 வீதமாக அமைந்துள்ள தேயிலைக் தொழில்துறையானது வருடாந்தம் சராசரியாக 1.25 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாகப் பெற்றுத் தருகின்றது. இந்த தேயிலைத் தொழில்துறையில் நாட்டு சனத்தொகையில் 20 சதவீதமான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் ரீதியாக தங்கியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் ஒன்றரை இலட்சம் பேர் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளிலும் ஜனவசம, எஸ்பிசி தோட்டங்களில் சுமார் ஐயாயிரம் பேரும் நேரடி தொழிலாளர்களாக இருக்கின்றபோது தெற்கு பகுதிகளில் நான்கு லட்சம் பேர் சிறுதோட்ட உடமையாளர்களாக உள்ளனர்.
இவை தவிர தேயிலை வியாபாரத்துடன் தொடர்புடையதாக ஏற்றுமதித்துறை, கப்பல்துறை, போக்குவரத்துத்துறை, அச்சிடல் பொதி செய்தல் என பல்வேறு உப தொழில் வாய்ப்புகளை தேயிலை தொழில்துறை வழங்கி வருகின்றது. நாட்டின் அந்நிய செலாவணியில் 15 சதவீத வருமானத்தைப் பெற்றுத்தரும் தேயிலைத் தொழில் துறையானது விவசாய எற்றுமதி வருமானத்தில் 65 சதவீதமாகவும் உள்ளது.
ஜேம்ஸ் டெயிலரினால் வர்த்தக பயிராக அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் 'சிலோன் டீ' எனும் வர்த்தக நாமம் உலகில் பிரபலமாகத் தொடங்கியது. சிங்கம் பொறிக்கப்பட்ட சிலோன் டீ லட்சினை உலக சந்தையில் பெரும் வரவேற்புக்கு உள்ளானது. பிரித்தானியர் இலங்கையை தமது ஆட்சியில் வைத்திருக்க இந்த தேயிலைத் தொழில்துறையே காரணமானது. இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னரும் கூட பிரித்தானியரகள் தங்களது கம்பனிகள் உடாக தேயிலைத் தொழில் துறையில் நிலைத்திருந்தனர்.
1965 ஆம் ஆண்டு முதன் முறையாக உலகில் தேயிலை ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடு எனும் பெயரை இலங்கை தனதாக்கிக் கொண்டது. இன்று சீனா, இந்தியா, கென்யா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டுக்கொண்டு நான்காவது இடத்தில் இருக்கின்ற போதும் 'சிலோன் டீ' எனப்படும் வர்த்தக நாமம் கொண்டிருக்கும் நற்பெயர் காரணமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது.
இலங்கையில் தேயிலை தொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கு என 1976 ஆம் ஆண்டு முற்றுழுதாக அரசுக்கு சொந்தமான சபையாக இலங்கைத் தேயிலை சபை உருவாக்கப்பட்டது. சர்வதேச வர்த்தக நாமத்தைக்கொண்ட இந்த தொழில்துறையை முறைமையான முறையில் நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கபட்ட தேயிலை சபையானது நான்கு முக்கிய நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்டு செயற்படுகின்றது.
இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையம், இலங்கைத் தேயிலை பிரசார சபை, தேயிலைக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், தேயிலை எற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் திணைக்களம் என்பனவே அந்த நான்கு பிரதான நிறுவனங்களுமாகும்.
இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையம், இலங்கைத் தேயிலை பிரசார சபை, தேயிலைக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், தேயிலை எற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் திணைக்களம் என்பனவே அந்த நான்கு பிரதான நிறுவனங்களுமாகும்.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இலங்கைத் தேயிலை சபையானது திட்டமிடல், நெறிப்படுத்தல் பணிகளை மேற்கொள்வதுடன் தேயிலை உற்பத்தி தொடர்பான ஒழுங்கு விதிகளை மேற்கொள்வதுடன் அறுவடை, மீளபயிரிடல், தேயிலைத் தொழிற்சாலைகளை விருத்தி செய்தல் பராமரித்தல், தேயிலையின் தரத்தினைப் பேணுதல், களஞ்சியததை உறுதிப்படுத்தல் மற்றும் உரிய முறையில் பொதியிடலை உறுதிப்படுத்தல் என்பனவற்றை தேயிலை சபையே மேற்பார்வை செய்யும் பொறுப்பைக்கொண்டுள்ளது.
தேயிலை பிரசார சபையானது உலகம் முழுவதும் 'சிலோன் டீ' எனப்படும் வர்த்தக நாமத்தை பரப்புவதை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேயிலை சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் ஊடாக சந்தைப்படுத்தல் , மேம்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு இந்த நிறுவனத்துக்கு உரியது.
தேயிலைச் சபையின் ஏற்றுமதி பிரிவு தேயிலை விநியோகம், களஞ்சியப்படுத்தல், பொதியிடல் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் ஏலத்தினை மேற்பார்வை செய்யும் பொறுப்பினை கொண்டுள்ளது. இலங்கையில் இருந்து எற்றுமதியாகும் எல்லா வகை பண்டக்கு றிகளிலும், ISO 3720 தர நிரண்யம் இருப்பதை உறுதி செய்வதும் தேயிலை ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் திணைக்களத்தின் பொறுப்பாகும்.
1986 ஆண்டு உருவாக்கப்பட்ட தேயிலைச் சபையின் ஆராய்ச்சி ஆய்வு கூடம் இலங்கைத் தேயிலையின் தரத்தினை உறுதிசெய்யும் பொறுப்பை உடையது. சர்வதேச தரங்களுடனான ஆய்வுகூடங்களின் ஊடாகவும் முறைமைகளின் ஊடாகவும் தனது ஆய்வு பணியினை முன்னெடுக்கும். இந்த நிறுவனம் இலங்கை தர அங்கீகார சபையின் நியம அங்கீகாரத்தையும் 2014 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டுள்ளது.
இதனோடு இணைந்ததாக தேயிலை சுவை பார்க்கும் அலகு ஏலத்திற்கும் எற்றுமதிக்கும் முன்பதாக அதனை சுவைபார்த்து ஆய்வ செய்யும் பொறுப்பினைக்கொண்டுள்ளது. குறிப்பாக ஒப்பீட்டுத் தேவைக்காகவும் பண்டக்குறியீட்டுக்காகவும் வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேயிலையினை ஆய்வு செய்து அனுமதி அளிப்பது இந்த அலகின் பொறுப்பு. எந்த நாட்டில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்படாலும் அவை எற்றுமதி செய்யப்படும்போது சிங்கம் சின்னம் பொறிக்கப்பட்ட 'சிலோன் டீ' என ஏற்றுமதி செய்யப்படுவதை இந்த தேயிலைச் சுவை பார்க்கும் அலகு உறுதிப்படுத்துதல் வேண்டும்.
மேற்படி இலங்கை தேயிலை சபையுடன் தொடர்புடையதாக அல்லாமல் கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கம், இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் சங்கம் என்பனவும் தேயிலைத் தொழில்து றையுடன் தொடர்புடைய அமைப்புகளாக உள்ளன. தேயிலையை ஏலத்தில் வாங்கும் - விற்கும் வர்த்தகர்கள், தேயிலையை எற்றுமதி செய்யும் கம்பனிகள் தமது நலன்களை இலக்காகக் கொண்டு இவ்வாறு அமைப்புகளாக இயங்கி வருகின்றன.
இவ்வாறு பன்மைத்துவ பங்காளிகளால் இயங்கிவரும் தேயிலைத் தொழில் துறையின் ஆணிவேராக இருப்பவர்கள் தேயிலைத் தொழில் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள். இந்த தொழிலாளர்கள் கடும் குளிரிலும், மழையிலும் காடு மலைகளில் ஏறி இறங்கி அறுவடையைப் பெற்றுத்தாரத போது மேற்சொன்ன எந்த நிறுவனமும் இயங்குவதற்கான ஆதராம் அற்றுப்போய்விடும்.
என்னதான் இலங்கையின் தேயிலை 150 ஆண்டுகளை எட்டியிருந்தாலும் இந்த தொழில் துறையின் போக்கு வீழ்ச்சியையே காட்டிநிற்கின்றது. இலங்கையின் அந்நிய செலாவனி வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் வரமான மூலங்களில் முதலாவது இடத்தை இப்போது வெளிநாட்டில் வேலை செய்து இலங்கைக்கு பணம் அனுப்பும் தொழிலாளர்களே பிடித்துக்கொண்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின் படி வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றோர் அனுப்பும் அந்நிய செலாவணியின் தொகை 7.2 பில்லியன் டொலர்களாக உள்ள நிலையில் உல்லாச பயணக்கைத்தொழில் மூலம் 3.5 பில்லியன் டொலர்கள் வருமானமாகப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இதற்கு அடுத்த நிலையில் தைத்த ஆடைகளின் ஏற்றுமதி மூலமான வருமானமாக அமைய நான்காம் இடத்தில் 1.25 பில்லியன் டொலர்கள் வருமானத்தையே தெயிலை ஏற்றுமதி பெற்றுக்கொடுக்கின்றது.
தேயிலைத் தொழில் துறையின் வீழ்ச்சிக்கு சர்வதேச ரீதியாக தேயிலைக்கு பிரதியீடாக வெறு பானங்கள் அறிமுகமானமை, பிரதான இறக்குமதி நாடான ரஷ்யாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் அந்த நாட்டு நாணயமான ரூபிலில் ஏற்பட்ட பெறுமதி வீழ்ச்சி போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் இலங்கைத் தேயிலையை முந்திக்கொண்டு சீனா, இந்தியா, கென்யா போன்ற நாடுகள் தேயிலை உற்பத்தியில் போட்டியிட்டு செயற்படுகின்றமை இன்னும் உலகில் தேயிலைக்கு உரிய சந்தை வாய்ப்பு இருக்கின்றது என்பதனையே காட்டுகின்றது.
1977 ஆம் ஆண்டுக்குப் பின்னரான இலங்கையின் திறந்த பொருளதார கொள்கைகள் இறக்குமதிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கிய நிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் எல்லாத் தொழில் துறைகளிலும் ஒரு வீழ்ச்சிப்போக்கை உருவாக்கியது. ஆடை ஏற்றுமதி தேயிலையை முந்திக்கொண்டபோதும் அதற்கு தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதனால் ஏற்றுமதி வருமானத்தில் பெரும்பகுதி வெளிநாட்டுக்கே திரும்பி சென்றுவிடும்.
இலங்கையின் தனித்து வத்துடன் இயங்கி வந்த தேயிலைத் தொழில் துறையையை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பொறுப்பின்றி தனியார் வசம் ஒப்படைத்து அந்த தொழில் துறையின் தேசிய முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது எனலாம். இதனால் தேயிலைத் தொழில் துறை மாத்திரமல்ல அதில் தங்கிவாழும் தோட்டத் தொழிலாளர்களினதும் தேசிய முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டது.
குறைந்த வேதனம், பராமரிப்பு இல்லாத தோட்டங்கள், என தொழிலாரையும் இறக்குமதி செய்து கலப்படம் செய்த ஏற்றுமதியினால் சிலோன் டீ எனப்படும் வர்த்தக நாமத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி இலங்கை நாடு தங்க முட்டையிடும் வாத்தாக வளர்த்திருக்க வேண்டிய சொந்த கைத்தொழிலை தாரைவார்த்து வருகின்றது. இனி மீண்டும் தேயிலைக் கைத்தொழில் துறையை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் என்பது இன்னுமோர் ஜேம்ஸ் டெயிலர் வேண்டப்படுகின்றார்.
நன்றி சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...