Headlines News :
முகப்பு » , » மலையகத்தின் முன்னணி எழுத்தாளர் சாரல் நாடன் - ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன்

மலையகத்தின் முன்னணி எழுத்தாளர் சாரல் நாடன் - ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன்


மலையகத்தின் மறைந்தும் மறையாத பிரபல்ய எழுத்தாளர் சாரல் நாடனின் இயற்பெயர் நல்லையா. இவரின் தாத்தா, பாட்டி தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் மாவட்டத்து உறங்கான்பட்டி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் தமிழகத்தில் அன்று நிலவிய கடும் பஞ்சம் காரணமாக இலங்கை வந்து சாமிமலை சிங்காரவத்தையில் குடியேறினார்கள். இவர்களின் மகனான கருப்பையாவிற்கும் மருமகளான சிவகங்கைக்கும் பிறந்தவர்தான் நல்லையா என்ற சாரல் நாடன் 09.5.1944 அன்று பிறந்த இவருக்கு ஐந்து சகோதரிகள்.

நல்லையா தமது ஆரம்பக் கல்வியை மின்னா தோட்டப் பாடசாலையில் கற்றார். நான்காம் ஆண்டுவரை அங்கு கற்றவர், ஐந்தாம் ஆண்டிலிருந்து பிரசித்திபெற்ற ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கற்கத் தொடங்கினார். கல்வியில் சிறந்து விளங்கிய நல்லையா அந்தக் கல்லூரியிலிந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் மாணவராவார் என்பது அனைவரதும் கவனத்திற்குரியது.

அவரது கல்லூரி வாழ்க்கையில் அன்னாரது திறமைகளைக் கண்டு அவரை ஊக்கப்படுத்தியவர்கள் என திருவாளர்கள் இர. சிவலிங்கம், திருச்செந்தூரன், பீ.ஏ.செபஸ்டியன், நவாலியூர் நா. செல்லத்துரை, நயினை குலசேகரம், ஹற்றன் ந.அ. தியாகராஜன் போன்ற ஆசிரியர்களைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அதன் நன்றிக் கடனாக சாரல் நாடன் அவர்கள் இளைஞர் தளபதி இர. சிவலிங்கம் என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் தமது கல்லூரிப் படிப்பின்போதே பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கான பயிற்சியையும் பெற்றுக் கொண்டார். இதனால் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். அத்துடன் கல்லூரியின் சுவர்ப் பத்திரிகையான ‘தமிழ்த் தென்றலிலும், விடுதிப் பத்திரிகையான தமிழோசையிலும் கட்டுரை, கவிதைகள், எழுதும் பழக்கத்தினைக் கொண்டிருந்தார். அத்துடன் இவர் தமது கல்லூரி வாசிகசாலைக்குப் பொறுப்பாகக் காணப்பட்ட காலகட்டத்தில் வாசிகசாலைக்கு வரும் அதிகமான நூல்களை வாசிப்பதனூடாக தமது வாசிப்புப் பழக்கத்தினையும் மென்மேலும் வளர்த்துக் கொண்டார்.

கல்லூரிப் படிப்பு முடித்ததும் தமது பரீட்சைப் பெறுபேறு வரும்வரை கண்டி அசோகா கல்லூரி மாணவர் விடுதியில் விடுதி மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் 1963 ஆம் ஆண்டில் சாமிமலை குயில்வத்தைத் தோட்டத்தில் தேயிலைத் தொழிற்சாலை அதிகாரியாகத் தமது பணியை ஆரம்பித்து அப்பணியிலேயே தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். அத் தொழில் தொடர்புடைய பல நூல்களை நுணுக்கமாகக் கற்றுத் தேர்ந்து பல பரீட்சைகளிலும் சித்தியெய்தி 1972 ஆம் ஆண்டில் தலைமைத் தொழிற்சாலை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.

தொடர்ந்து முப்பத்தேழு ஆண்டுகளாக டன்சினேன், கெலிவத்தை நியூபீகொக், டிரைட்டன் என பல தோட்டங்களில் செவ்வனே கடமையாற்றினார். 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி தமது அத்தை மகள் புஷ்பம் என்பவரைத் திருமணம் செய்து ஸ்ரீ குமார், ஜீவகுமாரி என இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையானார். 

 இவர் தொழிற்சாலை அதிகாரியாகப் பணிபுரியும் காலகட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். பல தோட்டங்களில் கடமையாற்றியமையாலும் மலையக மக்களின் பல்வேறு பகுதி மக்களுடன் இணைந்து செயற்பட்டமையாலும் அம் மக்களின் வாழ்க்கையோடு தொடர்பான அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதனாலும் அன்னார் மனித நேயம் மிக்க ஒருவராக இருந்தமையால் மலையக மக்களின் பிரச்சினைகளைப் பற்றி உணர்வுபூர்வமாகச் சிந்தித்தார். அதுவே அன்னார் படைத்த பல நூல்களுக்கும் காரணமாக இருந்ததென்றால் அது சற்றும் மிகையாகாது.
சாரல் நாடன் தமது 55 ஆவது வயதில் 2000 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். அதன் பின்னர் முற்று முழுதாகத் தம்மை இலக்கியத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் கொட்டகலை இலக்கிய வட்டத்தை உருவாக்கினார். பின்னர் மலையக கலை இலக்கியப் பேரவையின் தலைவராகவும் பணிபுரிந்தார். அவ்வேளை ஹட்டன், பதுளை, நாவலப்பிட்டி, கண்டி, கொழும்பு என பல இடங்களுக்கும் சென்று சேவை புரிந்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் தமிழுக்கென ஒரு அலை வரிசையை ஆரம்பித்தபோது அதன் முதலாவது ஒளிபரப்பில் சாரல் நாடனைப் பேட்டி கண்டு பெருமை கண்டது. அன்னார் தொடர்ந்து ரூபவாஹினியிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தார். அனைத்தும் நல்ல நிகழ்ச்சிகள்!

வாசிப்பைத் தமது வாழ்நாள் பழக்கமாக்கிக் கொண்ட சாரல் நாடன் தன்னைப் போலவே ஏனையோரும் வாசிப்பின் மகத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் தமது இல்லத்திலேயே நல்லதொரு நூலகத்தையும் அமைத்திருந்தார்.
அமரர் சாரல் நாடன் தமது எழுபதாண்டு வாழ்வில் நிறைய எழுதிக் குவித்தார். அவற்றுள் பின்வருபவை குறிப்பிடத்தக்கவை; போற்ற த்தக்கவை;
சி.வி. சில சிந்தனைகள் (1986), தேசபக்தன் கோ. நடேசய்யர் (1988), மலையகத் தமிழர் (1990), மலையக வாய் மொழி இலக்கியம் (1993), மலையக கொழுந்தி (1994), மலையகம் வளர்த்த தமிழ் (1997), பத்திரிகையாளர் நடேசய்யர் (1998), இன்னொரு நூற்றுக்காண்டாய் (1999), மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் (2000), பிணம் தின்னும் சாத்திரங்கள் (2001), மலையகத் தமிழர் வரலாறு (2003), பேரெட்டில் சில பக்கங்கள் (2004), சண்முகதாசன் கதை (2005), புதிய இலக்கிய உலகம் (2006), குறிஞ்சித் தென்னவன் கவிச்சரங்கள் (2007), கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடான இளைஞர்  தளபதி இர.சிவலிங்கம் (2009), கோ. நடேசய்யர் (2009), சிந்தையள்ளும் சிவனொளிபாதமலை (2009) சி.வி. வேலுப்பிள்ளை (2013), இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள் (2014), 

மலையகத்தின் மூத்த மகன் சாரல் நாடன் 31.07.2014 அன்று காலமானார். 

நன்றி வீரகேசரி சங்கமம்


Share this post :

+ comments + 1 comments

9:03 AM

Excellent sir

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates