மலையக அரசியல் களத்தில் என்றுமில்லாதவாறு மலையக மக்களுக்கான காணி மற்றும் காணி உறுதி முதலான விடயங்கள் செயற்பாட்டு ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பேசுபொருளாகியிருப்பது அவதானத்துக்குரியது. நாட்டில் சிங்கள பெரும்பான்மை இனம் தவிர்ந்த ஏனைய இலங்கைத் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது மீள் குடியேற்றத்துக்கான காணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காலத்தில் மலையக மக்கள் இப்போதுதான் தமது குடியேற்றத்திற்கான காணிப் போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். வடக்கில் படையினர் வசம் இருக்கும் காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாபுலவு, வலிவடக்கு என பல்வேறு இடங்களில் காணி மீட்புப் போராட்டம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல முஸ்லிம் மக்கள் வில்பத்து பிரதேசத்தை அண்மித்து தமது முன்னைய குடியிருப்புகளில் மீண்டும் குடியேற பொராட்டம் நடாத்துகின்றனர். இந்த இரண்டு போராட்டங்களிலும் அரசாங்கமும் ஆக்கிரமிப்பு வாதமும்தலை தூக்கியுள்ளதோடு இரண்டும் யுத்தத்தின் விளைவுகளானது.
வடக்கு காணிகள் இராணுவ வசம் இருப்பது இன்னும் நில ஆக்கிரமிப்பு நிகழ்ந்து வருவதற்கான சான்று. வில்பத்து விடயத்தில் சூழலியலாளர்களும் அக்கறை காட்டுவது போல தெரிந்தாலும் முஸ்லிம்கள் தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்த தடயங்களை ஆதாரமாகக் கொண்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எது எவ்வாறெனினும் இவை இரண்டும் மீள் குடியேற்றத்துக்கான போராட்டங்கள். ஆனால், மலையக மக்களைப் பொறுத்த வரையில் இப்போதுதான் அவர்கள் தமது குடியிருப்புக்கான காணி போராட்டத்தையே ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றில் இதுவரை காலமும் இப்போதைய எழுச்சிபோல தமக்கான வாழ்விட காணி தொடர்பான எழுச்சி ஒன்றினை இதற்க முன்னர் காண்பதற்கு அரிது.
தலவாக்கலையில் சிவனு லட்சமணன் உயிர் நீத்த போராட்டம் காணிக்கானது எனினும் அது மக்களின் குடியிருப்பு காணிகளை இலக்கு வைத்து நடந்தது அல்ல. தொழிலாளர்கள் தாம் தொழில் செய்யும் காணிகளை பெரும்பான்மையின வெளியாருக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிராக நடத்திய போராட்டத்திலேயே சிவனு லட்சுமணன் உயிர் நீத்தார். ஆனால், அதற்கு பின்னரான இன்றைய நாள்வரை எவ்வித எதிர்ப்புகளும் இன்றி பெரும்பான்மை இன மக்களுக்கு மலையகப் பெருந்தோட்டக்காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுக்கொண்டு வருவது திட்டமிட்ட அடிப்படையில் பரவலாக இடம்பெற்றுக்கொண்டு வருகின்றது.
மலைப்பாங்கான நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் அதன் தாக்கம் குறைவு எனினும் ஓரளவு சமதன்மை கொண்ட மலைச்சரிவுகள் குறைந்த தமிழ் மக்கள் செறிவு குறைவாக வாழும் கண்டி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மாவட்டங்களில் மிக வேகமாக மலையக பெருந்தோட்ட காணிகள் பெரும்பான்மை இன மக்களுக்கும் அவர்கள் சார்ந்த சிறு கம்பனிகளுக்கும் திட்டமிடப்பட்ட மறைமுகமான நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் இடம்பெற்றுவருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலகப் பகுதிகளிலும் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி பிரதேசத்திலும் அதேபோல மகாவலி அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு காணி பகிர்வுகள் இடம்பெற்றும் வந்துள்ளது.
இது இவ்வாறிருக்க மலையகப் பெருந்தோட்ட மக்களின் லயன் குடியிருப்பை மாற்றி அவர்களுக்கு தனிவீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஏழுபேர்ச்சஸ் காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் அவற்றுக்கும் காணியுறுதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படடு வருகின்றமையை ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைக்கின்றது. இதற்காக குறிப்பிட்ட அமைச்சு மேற்கொள்ளும் காத்திரமான முயற்சிகளைப் பாராட்டவே வேண்டும். அண்மையில் கூட சுமார் 2800 வீட்டுக்காணிகளுக்கு காணியுறுதி வழங்கவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதியை அழைத்து வந்து தலவாக்கலை நகரில் தனிவீட்டுக் காணிகளுக்கான காணியுறுதிப்பத்திரங்களை குறிப்பிட்ட அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் திகாம்பரம் வழங்கிவைத்திருந்தார்.
இதற்கு முன்னரும் கூட சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக இருந்த காலத்தில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் வீட்டு உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதேபோல அமைச்சர் சந்திரசேகரன் காலத்திலும் அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் வீட்டுறுதிகள் வழங்கிவைக்கப்பட்டன. அதேபோல 2015 ல் உருவான 100 நாள் ஆட்சிக் காலத்திலும் காலம் சென்ற அமைச்சர் க. வேலாயுதம் ஏற்பாட்டில் 'பசுமை பூமி' காணியுறுதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவை அனைத்தும் எதோ ஒரு வகையில் சட்ட வலு குறைந்த உறுதிகளாகவே அமைந்திருந்தன. ஒன்றில் லயன் வீடுகளை சொந்தமாக்குதல் அல்லது அதிகாரமற்ற அரச நிறுவனங்களினால் காணி உறுதிகள் பெற்றுக்கொடுக்கப்படுதல் போன்றனவே நடந்து வந்துள்ளது.
மறைந்த அமைச்சர் சந்திரசேகரன் காலத்தில் அவரது அமைச்சின் கடிதத்தலைப்பில் காணி உரிமம் வழங்கப்பட்ட வீட்டுரிமையாளர்களும் மலையகத்தில் உள்ளனர். இன்றும் கூட அவரது காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக தொழிலாளர்களின் ஊழியர் சேலாப நிதியை ஈடாக வைத்து கடன் பெற்று கட்டப்பட்ட சுமார் மூவாயிரம் வீடுகளுக்கு உரிய காணியுறுதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. பயனாளிகள் கடனை முழுமையாக செலத்தியும் இன்னும் அவர்களுக்கு உறுதி வழங்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் தொழிலாளர்களுக்கு கட்டி வழங்கப்பட்ட மாடி வீட்டுத்திட்டத்திற்கு எவ்வாறான உறுதியினை வழங்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குரியே. 100 நாள் ஆட்சிக் காலத்தில் அமரர் வேலாயுதம் ஏற்பாட்டில் வழங்க்பட்ட பசுமை பூமித்திட்டக் உறுதிப்பத்திரங்களும் முழுமையான உறுதிப்த்திரங்கள் இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அது உண்மையும் கூட. ஆனால், 100 நாட்களுக்குள் ஏதாவது ஒரு வடிவத்தில் மலையக மக்களுக்கு காணியுறுதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என எடுத்த முயற்சியை வரவேற்க வேண்டும்.
இவ்வாறான பின்னணிகளுக்கு மத்தியில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் மலைநாட்டில் புதிய கிராமங்களை உருவாக்கும் பொறுப்பினை ஏற்ற அமைச்சர் திகாம்பரம் தனது முன்னெடுப்பில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய காணி உறுதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முயற்சி மேற்கொண்டார். முன்னைய நிலைமைகள் போல் அல்லாது அரசியல் ரீதியானதாக அல்லாமல் காணி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சும் இணைந்து அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து ஏழு பேர்ச் காணிக்கான காணியுறுதிகளை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் ஊடாக காணி உறுதிகள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.
தலவாக்கலையில் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நடைபெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்வில் இத்தகைய காணி உறுதிகளைக் காண முடிந்தது. இப்போது தமது அமைச்சினால் இரண்டு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் இதுவரை முன்னெடுக்ப்பட்டுள்ள இந்திய வீடமைப்பு திட்டக்க காணிகள் என்பனவற்றுக்குமாக சுமார் 2800 காணியுறுதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவையை அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதற்கான விழா நடாத்துவதற்கான எற்பாடுகளும் இடம்பெறுவதாக அமைச்சு வட்டாரங்கள் மூலம் வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி பாராட்டி வரவேற்கத்தக்கதே
ஆனால், மலையக மக்களின் வீட்டுத் தேவையுடன் ஒப்பிடுகின்றபோது இந்த வேகம் போதுமானதா இப்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் இலக்குகளை எளிதாக எட்டுவதற்கு போதுமானதா? எனும் கேள்விகள் எழாமல் இல்லை.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பெருப்பிதற்கான ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் சுமார் ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகள். பெரந்தோட்டப்பகுதிக்குள் அமைக்கப்படல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு நடைமுறையில் இதனை விட அதிகளவான வீடுகள் அவசியம் எனவும் கூறப்படுகின்ற நிலையில் இந்த 160000 வீடுகளையம் கட்டி முடித்து அவற்றுக்கு காணியுறுதிகளைப்பெற்றுக்கொடுப்பது எனில் இப்போதைய வேகத்துடன் பார்த்தால் இன்னும் எத்தனை வருடங்களில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வீட்டுக்காணி தேவை பூரத்தி செய்யப்படும் எனும் கேள்வி எழுகின்றது.
இரண்டு வருடங்களில் சுமார் 3000 வீடுகளுக்கே இந்த காணியுறுதிகள் பெற்றுக்கொடுக்க முடியும் எனில் 5 ஆண்டு திட்டம் நிறைவறும்போது சுமார் 15000 வீடுகளுக்கே காணியுறுதிகள் வழங்கப்படும். இது அமைச்சினால் முன்வைக்கபட்டுள்ள இலக்கில் பத்தில் ஒரு பங்கினை விட குறைவானதாகும். அதாவது 160000 வீடுகளைக் கட்டி அவற்றுக்கு காணி உரித்துக்களைப்பெற்றுக்கொடுக்க இன்னும் 50 வருடங்களாவது செல்லும் என்பதே பொதுவான கணிப்பாக வருகிறது. எனவே சமர்ப்பிக்கபட்டுள்ள திட்டம் ஐந்தாண்டுத்திட்டமா? ஆல்லது ஐம்பதாண்டு திட்டமா? எனும் கேள்வி வீடமைப்பு மற்றும் காணி உறுதி வழங்கும் விடயத்தில் எழுகின்றது. இது குறிப்பிட்ட அமைச்சு மீது வைக்கின்ற குற்றச்சாட்டு அல்ல. மலையயப் பெருந்தொட்ட மக்களின் காணி பிரச்சினையின் பாரதூரத்தன்மையை சுட்டிக்காட்டுவதற்கான கணக்கீடே ஆகும்.
மலையக மக்களின் அரசியல வரலாற்றை எடுத்துப்பாரத்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான போராட்ட கோஷங்களுக்கு அது உட்பட்டு வந்திருப்பதனை அவதானிக்கலாம். மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிற்சங்கம் உருவான 1920 கள் காலப்பகுதியில் அவர்கள் தமது தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்குவததையே தமது போராட்டமாகக் கொண்டிருந்தனர். பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் கொத்தடிமைகள் போல வைக்கப்பட்ட அந்த சமூகம் குறைந்தபட்சம் அமைப்பாக்கம் பெறும் ஒரே வழிமுiறாக இருந்த தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கவே அதிகமாக அவர்கள் ஆரம்பத்தில் போராட வேண்டியிருந்தது. எனினும் அந்த செயற்பாட்டில் அவர்கள் கொண்டிருந்த வேகமும் அதற்கு தலைமை கொடுத்த கோ.நடேசய்யரின் தலைமையும் 1930 களிலேயே சர்வஜன வாக்குரிமையுடன் கூடியதாக தமக்கான இலங்கை பிரஜை அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது.
1934 ஆம் ஆண்டுகளிலேயே கோ.நடேசய்யர் மலையக மக்களின் பிரதிநிதியாக சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் செய்து ஒரு அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார். எனவே 1920 – 1940 வரையான காலப்பகுதி என்பது மிக வேகமாக தொழிற்சங்க பலத்தின் ஊடாக அரசியல் அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்த காலமாக அமைந்தது. 1940 முதல் 1952 வரையான காலப்பகுதி அப்போது உருவான அரசியல் எழுச்சியை இன்னும் வேகப்படுத்தியிருந்தது. இலங்கை இந்திய காங்கிரஸின் தோற்றமும் அவர்களின் அரசியல் வியாபகமும் இலங்கை சுதந்திரமடையும் நாட்களில் 7 உறுப்பினர்களை மக்கள் அவையில் இறுத்தியது.
எனினும் சுதேச அரசாங்கம் கொண்டுவந்த குடியுரிமைச்சட்டம் மலையக மக்களை வாக்குரிமை அற்றவர்களாக ஆக்கிவிடவே 1948 முதல் 1978 வரையான 30 ஆண்டு காலப்பகுதியை அரசியல் சூனியமாக்கிவிட்டிருந்தது எனலாம். இந்த முப்பது ஆண்டுகளில் இவர்களின் போராட்டம் முழுவதும் பிரஜாவுரிமையைப் பெறுவது எனும் போராட்டத்திற்குள்ளேயே அடங்கிப்போனது. இடையில் 1964 ஆம் ஆண்டு இந்த மக்கள் மீது திணிக்கப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் இந்த மக்களை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் என பங்குபோட்டு பலம் கறைந்தவர்களாகக்கியது. எனவே இடையில் எது தமது நாடு என தீர்மானிப்பதிலும் மலையக மக்களது போராட்டம் அமைந்தது.
எனினும் 1977 க்குப்பின்னர் மலையக மக்கள் தமது நாடு இலங்கைதான் என்பதை ஓரளவு உறுதி செய்து கொண்டு பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதிலேயே தமது கவனத்தைக்கொண்டிருந்தனர். 1990 ஆண்டு ஆகுகையில் ஓரளவுக்கு பிரஜாவுரிமை பிரச்சினை தீர்வினை எட்டியது. தாங்கள் இலங்கை பிரஜைகள் என்ற அந்தஸ்து கிடைக்கத்தொடங்கியவுடனேயே அவர்களது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் காணியுரிமை பற்றிய கோஷம் அரசியல் ரீதியாக முன்வைக்கபட்டிருத்தல் வேண்டும். இப்போது இருப்பதைவிட அதிக பலம் பொருந்திய அரசியல் சக்தியாக பாராளுமன்றில் ஆட்சியை தீர்மானிக்கின்ற ரிமோட் கொண்டரோல் ஆக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திகழ்ந்த காலம் ஒன்று இருந்தது.
1977க்கும் 1994க்கும் இடையிலான கால ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொண்டிருந்த பலம் போல இனி ஒருபோதும் மலையக மக்களின் பலம் பாராளுமன்றில் அமையாது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது. வாக்குரிமை இழந்திருத்த மக்கள் தமக்கு வாக்களிக்கும் சக்தி கிடைத்தவுடன் தமது சக்தியை சரியா பாவித்திருந்தனர். அப்போது காணியுரிpமைக்கான கோஷம் அரசியல் ரீதியாக வலுவாக முன்வைக்கபட்டிருத்தல் வேண்டும். அது அவ்வாறானதாக அமையவில்லை என்பது துரதிஸ்டவசமானதாகும்.
இதனை உணர்ந்து கொண்ட அப்போதைய மலையகத்தின் எழுச்சி இயக்கமான மலையக மக்கள் முன்னணி காணி உரிமையையும் தனவீட்டு கோரிக்கையையும் அரசியல் சுலோகங்களாகக் கொண்டு 1994 ஆம் ஆண்டு ஒரே ஒரு ஆசனத்தை துரும்புச்சீட்டாகப்பெற்றது. அதுவரை இருந்த 17 அண்டுகால ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை தூக்கியெறிந்து சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு மலையக மக்கள் முன்னணி சயேட்சையாக பெற்றுக்கொண்ட அந்த ஒற்றை ஆசனமே கைகொடுத்தது. அந்த அரசியல் பலத்தினைக் கொண்டு மலையக மக்களின் காணி, தனிவீட்டு விடயத்தை ஒரு பிரகடனமாகக் கொண்டு சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்திய இருக்கவேண்டும். அதற்கான தொலைநோக்கு சிந்தனையும், அரசியல் பலமும் மலையக மக்கள் முன்னணிக்கு இருந்தது. துரதிஸ்டவசமாக பாராளுமன்ற ஆசனம் கிடைத்தும் ஆடிப்போன அரசியலாக அது மாறியது.
அதன் பின்னரும் கூட 1996 ஆம் ஆண்டு சந்திரிக்காவினால் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டபோது காணி, வீட்டுக்கொள்கைகள் உறுதியாக முன்வைக்கப்பட்டிருக்கலாம். அந்த வாய்ப்பும் நழுவவிடப்பட்டது என்றே சொல்லலாம். அதன்பிறகு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இ.தொ.கா வசமானது. 2009 ஆம் ஆண்டு ஆகும்போது மகிந்த ஆட்சிக் காலத்தில் அந்த அமைச்சு இல்லாமல் ஆக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 11 பேர் பாராளுமன்றில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக 1977 – 1994 மற்றும் 1994 க்கும் 2014 க்கும் இடைப்பட்ட சமார் 35 வருட காலப்பகுதி மலையக மக்கள் குறித்த தீர்க்கமான அரசியல் கோரிக்கைகள் எதுவும் எழுப்பப்டாத காலப்பகதியாக அமைந்தது என்றே கொள்ள வேண்டும். இந்த 35 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2000 காணியுறுதிகள் என வழங்கப்பட்டிருந்தால் இப்போதைக்கு 70000 வீட்டுக்காணியுறுதிகள் வழங்கப்பட்டிருக்கும் எனவே 2015 ல் உருவாக்கப்பட்ட அமைச்சின் இலக்கு இலகுபடுத்தப்பட்டிருக்கும். எனவே மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு தற்போது பெரும் சுமையொன்றை தூக்குவதற்கான முயற்சி மேற்கொள்கின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இந்த அமைச்சு உருவாக்க பின்புலத்தில் கூட ஒரு கூட்டணியும் அதனை நோக்கிய மக்களின் ஆதரவும் கிடைத்திருக்கின்றது என்பதன் அடிப்படையில் மக்கள் எப்போதும் தமது முடிவுகளை தெளிவாக முன்வைக்கிறார்கள் என்பதையும் தலைவர்கள் தமது திட்டங்களை சாத்தியமான திட்டங்களாக முன்வைத்து மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்த வேண்டியுள்ளது.
நன்றி தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...