Headlines News :
முகப்பு » , , , , » 77 கலவரம்: “போர் என்றால் போர்” - என்.சரவணன்

77 கலவரம்: “போர் என்றால் போர்” - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 22

“ஆவணிக் கலவரம்” என்று அழைக்கப்படும் 77’ கலவரம் நிகழ்ந்து சரியாக 40 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

1977ஆம் ஆண்டு யூலை தேர்தலில் ஐ.தே.க பாரிய வெற்றி பெற்றபோதும், சுதந்திரக் கட்சி படுதோல்வியடைந்தது. வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி தமிழீழப் பிரகடன விஞாபனத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது. தமிழீழத்துக்கு சைகை செய்யும் மக்கள் ஆணையாகவே நோக்கப்பட்டது.

இலங்கையில் ஒவ்வொரு தேர்தல் முடிவுகளின் பின்னரும் சிறியதாகவோ, பெரியதாகவோ தோற்றோருக்கும், வெற்றியீட்டியோருக்கும் இடையில் ஆங்காங்கு அடிதடிச் சண்டைகளும், கலவரங்களும் இடம்பெறுவது ஒரு தேர்தல் மரபாகவே ஆகிவிட்டிருந்தது. அது இனக்கலவரமாக தம் மீது பாயாமல் இருப்பதை தவிர்ப்பதற்காக தமிழர்கள் ஒதுங்கி வீட்டில் முடங்குவதையும் நாம் அவதானித்தே வந்திருக்கிறோம்.

தேர்தலில் வெற்றி பெற்ற ஐ.தே.க ஆதரவாளர்கள் வெற்றியை வன்முறையுடன் கொண்டாடினர். நாட்டின் பல பாகங்களில் சுதந்திரக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசாசக் கட்சி ஆதரவாளர்களின் மீது மோசமான தாக்குதலை ஆரம்பித்தனர். அவர்களின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. கண்டி, கேகாலை, கம்பஹா மற்றும் குருநாகலை மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறிமாவின் 'அவசரகால' வல்லாட்சியை மாற்றுவேன் என்று உறுதியளித்து பதவியேற்ற ஜீ.ஆரின் பிரவேசம் இப்படி வன்முறையுடன் தான் ஆரம்பமானது. அதுவே மூன்று வாரங்களில் இனக் கலவரமாக உருவெடுத்தது.

இலங்கையில் சிறு இனவாத தீப்பொறியும், சட்டென்று பற்றியெரிந்து பெருந்தீக்காடாக பரவுவதற்கு முழு வாய்ப்பு உள்ள நாடென்பதை அனைவரும் அறிவோம். அந்தளவுக்கு பேரினவாதமயப்பட்ட சிவில் சமூகம் தயார் நிலையில் இருக்கிறது என்பது தானே அதன் பொருள். வரலாறு நெடுகிலும் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது அல்லவா.


கலவரத்தின் தொடக்கம்
1977ம் வருடம் ஆகஸ்ட் 12 மற்றும் 13 திகதிகளில் மாலை யாழ். புனித பற்றிக் கல்லூரி மைதானத்தில் கானிவெல் நிகழ்ச்சியொன்று நடந்தது. 12 அன்று இக் கண்காட்சிக்குச் சிவில் உடையில் வந்த யாழ்ப்பாணம் காவற்றுறை நிலையத்தைச் சேர்ந்த சிறீலங்காக் காவற்றுறையினர் நுழைவுச்சீட்டு வாங்காது உள்நுழைய முற்பட்டனர். அங்கு வந்திருந்த பெண்களோடு பாலியற் சேட்டைகளில் ஈடுபட்டு குழப்பம் விளைவித்தனர்.. இதனால் ஆத்திரமடைந்த யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கும் காவற்றுறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்தது. பொதுமக்களது எதிர்ப்புக்கு அஞ்சி சிவில் உடையில் நின்ற காவற்றுறையினர் ஒடித்தப்பினார்கள்.

இது பற்றி வோல்டர் ஷ்வாஸ் தன்னுடைய 'இலங்கைத் தமிழர்கள்' என்ற நூலில் (Walter Schwarz: Tamils of Sri Lanka, Minority Rights Group Report 1983) பின்வருமாறு குறிப்பிடுகிறார்: '1977 கலவரமானது, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில், தேர்தலில் தோல்வி கண்டிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு விசுவாசமான பொலிஸார் சிலர் அங்கு இடம்பெற்ற களியாட்டமொன்றில் புகுந்து தமிழ் மக்களுக்கு கோபமூட்டும் வகையில் நடந்து கொண்டனர்' எனக் குறிப்பிடுகிறார்.

யாழ்ப்பாணம் காவற்றுறை நிலையத்திற்குச் திரும்பிச் சென்ற பொலிசார் ஆயுதபாணிகளாகப் பல நூற்றுக்கணக்கான காவற்றுறையினரை இறக்குகளிலும், ஜீப் வண்டியிலும் ஏற்றிக்கொண்டு மீண்டும் பொருட்காட்சி நடைபெற்ற இடத்திற்கு வந்து குழப்பத்தில் ஈடுபட்டார்கள். பதிலுக்கு யாழ்ப்பாணப் பொதுமக்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடலானார்கள். யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியிலுள்ள மதுபானக் கடையை காவற்றுறையினர் உடைத்துவிட்டு மது போதையில் ஆடிப்பாடினார்கள். யாழ்ப்பாண நகரில் பல தீமூட்டல் சம்பவங்கள் இடம்பெற்றன. இது பற்றி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மறுநாள் பொலிஸார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்களை மறித்தபோது, அவர்கள் அந்தப் பொலிஸாரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

ஆத்திரமுற்ற பொலிஸார் கடைகளுக்குத் தீ வைத்ததுடன் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர். பொலிஸாரின் இந்தச் செய்கையால் நால்வர் பலியானதுடன், ஏறத்தாழ 30 பேர் வரை காயமடைந்ததுடன், பெறுமதி வாய்ந்த சொத்துக்களும் சேதமாகின. இதற்கு மறுநாள் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் இறங்கிய பொலிஸ் உடையில் இல்லாத பொலிஸார், யாழ். சந்தைக் கட்டடத்தின் பெரும்பகுதியை தீக்கிரையாக்கினர். அத்தோடு அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர்.

இந்த சம்பவத்தைப் பற்றி விசாரிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமிர்தலிங்கம் பொலிசாரால் அசிங்கமாக திட்டப்பட்டு தாக்கப்பட்டார். ஓகஸ்ட் 19 அன்று அவர் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணையின் கீழ் உரையாற்றியபோது,
“சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நான் சென்றபோது, பொலிஸார் என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டினர். நான் இங்கு உங்கள் முன் உயிருடன் நிற்பது எனது அதிர்ஷ்டமேயன்றி வேறில்லை. அவர்கள் பொலிஸ் உடையில் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்குரிய தனிப்பட்ட அடையாள எண்களை அணிந்திருக்கவில்லை.
நீங்கள் ஏன் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொலைசெய்கிறீர்கள் என்று வினவியபோது, அந்தப் பொலிஸார் என்னைத் தூஷண வார்த்தைகளால் திட்டியதுடன், என் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டார்கள். நான் எனது அடையாளத்தை அங்கிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் கூறியபோது, அவரின் பின்னால் நின்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியின் பின்முனையினால் என்னைத் தாக்கினார்... நாட்டை இப்படியா ஆள்கிறீர்கள்” என்று வினவிய போது,

போர் என்றால் போர்
அதற்கு பதிலளித்த பிரதமர் ஜே.ஆர்..,
'நீங்கள் தனிநாடு கோருகிறீர்கள். திருகோணமலை உங்கள் தனிநாட்டின் தலைநகர் என்கிறீர்கள். நீங்கள், வன்முறை வழியை நாம் வேண்டவில்லை. ஆனால் தேவையேற்படின், நேரம் வரும்போது வன்முறையைப் பயன்படுத்துவோம் என்கிறீர்கள். இதைக் கேட்டு மற்ற இலங்கையர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்கள் எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவார்கள்? நீங்கள் சண்டையிட விரும்பினால், இங்கு சண்டை நடக்கட்டும். நீங்கள் சமாதானத்தை விரும்பினால், இங்கு சமாதானம் இருக்கட்டும். இப்படித்தான் அவர்கள் பதில் சொல்வார்கள். இதை நான் சொல்லவில்லை, இலங்கை மக்கள் இதனைச் சொல்கிறார்கள்' 
என்றார். இதைத் தான் “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்று பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டது.

பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தன எதையும் கேட்கவில்லை. அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தவும் இல்லை. ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்கவும் இல்லை. மாறாகத் தமக்கு முன்னைய அரசாங்கம் போல் அவசரகாலச் சட்டத்தின் கீழ் நாட்டை ஆள விருப்பமில்லை என்றும் மாறாக சாதாரண சட்டத்தின் கீழேயே நாட்டை ஆளப்போவதாகக் கூறினார்.

இதன் விளைவு சிங்களக் காடையர்களுக்குத் தமிழ்மக்களைக் கொல்லவும், தமிழர் சொத்துக்களைச் சூறையாடவும் தமிழர் வீடுகளுக்குத் தீ வைக்கவும் ஜே.ஆர் அரசினால் வழங்கப்பட்ட பகிரங்க அனுமதியாகவே எடுத்துக்கொண்டனர்.

இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களும் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதற்காக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களைத் தென்னிலங்கைக்கு அனுப்பிவைத்தது. யாழ்ப்பாணத் திலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவுத் தொடருந்து அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் நின்றபோது, அதில் பயணம் செய்த சிங்கள மாணவர்கள், பெளத்த பிக்கு மாணவன் ஒருவனை இருக்கையில் படுக்கவைத்து வெள்ளைத் துணியால் மூடிவிட்டு அதன் மீது சிவப்பு மையை ஊற்றி தமிழர்கள் புத்த பிக்குவைக் கொன்று விட்டார்கள் என்றும் யாழ்ப்பாணத்தில் நயினாதீவுப் புத்த விகாரையை உடைத்து விட்டார்கள் என்றும் சத்தமிட்டு முழக்கமெழுப்பினர். இதனால் அந்த ரயிலில் பயணம் செய்த தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள்.

இதேவேளை கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் வந்த இரவுத் தபால் தொடருந்து அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் நின்றபோது, அந்தத் தொடருந்தும் சிங்களவரால் தாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான வன்செயல்கள் நாடு பூராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டன. திருகோணமலை, வவுனியா, பதுளை, இரத்தினபுரி, கொழும்புமற்றும் மலையகப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
சன்சோனி
சன்சோனி விசாரணை ஆணைக்குழு
1977ஆம் ஆண்டு இனக்கொலையைத் தொடர்ந்து, இக்காலம் பற்றி விசாரணை செய்வதற்காக இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியரசர் சன்சோனி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை ஜே.ஆர். நியமித்தார். விசாரணை முடிவில் சன்சோனி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிடுகையில், இந்த இனக்கொலைக்கு காவற்றுறையின் பொறுப்புணர்ச்சியற்ற போக்கும், அரசியல்வாதிகளின் பேச்சுக்கள், வதந்தி என்பனவே காரணமென அடையாளப்படுத்தினார். அரசாங்கம் இந்த முழு அறிக்கையையும் வெளியிட்ட போது அதன் பெருமளவு பிரதிகள் ஒரேயடியாக வாங்கப்பட்டு பலரின் கைகளைச் சென்றடைய விடாமல் கொளுத்தப்பட்டதாக ஹரிச்சந்திர விஜேதுங்க தெரிவிக்கிறார். பிரபல சிங்கள தேசியவாதியான அவர் அந்த அறிக்கையை மீண்டும் ஒரு தனியார் வெளியீட்டு நிருனவத்துக்கு ஊடாக கடந்த 2009ஆம் ஆண்டு வெளியிட்டதுடன், அதன் முன்னுரையில் இந்தக் கலவரம் தமிழர்களால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கலவரம் என்று நிறுவ முயல்வதைக் காண முடியும்.

தமிழர்கள் 300 பேர் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் காயப்படுத்தப்பட்டதாக இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்ட சன்சோனி ஆணைக்குழு (Sansoni Commission) 1980களில் அறிக்கை வெளியிட்டது. இருந்த போதிலும், கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,500ற்கும் அதிகம் என அரச சார்பற்ற மனிதநேய அமைப்புகளின் அறிக்கைகள் கூறுகின்றன.

கொழும்பில் வாழ்ந்துவந்த பல தமிழர்கள் கடுமாகப் பாதிக்கப்பட்டார்கள். தமது வீடுகளை, வியாபார ஸ்தலங்களை தாக்குதல்களுக்கு இரையாக்கிவிட்டு நிர்க்கதியாக நின்ற இந்தத் தமிழ் மக்கள் கொழும்பில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள். சிலர் பாதுகாப்பு தேடி முன்கூட்டியே அகதிமுகாம்களை சென்றடைந்தனர். பின்னர் அவர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். கொழும்பிலே வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், கலவரத்தில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நின்றபோது, அவர்களை கப்பலிலேற்றி வட மாகாணத்திற்குத் தான் அரசாங்கம் அனுப்பி வைத்ததையும் கவனிக்க வேண்டும். தமிழர் பிரதேசம் மட்டும் தான் அவர்களுக்கு பாதுகாப்பு என்று அரசு ஏன் முடிவு எடுக்கவேண்டும் என்பதையும் கவனித்தல் அவசியம்.
பாடசாலையில் தங்கியிருந்த அகதிகள் தண்ணீருக்கு வரிசையாக
அதுபோல மலையகத்தில் பாதிக்கப்பட்ட பல இந்தியாவம்சாவளி மக்களையும் அரசாங்கம் வவுனியாவுக்கும், திருகோணமலைக்கும் அனுப்பி வைத்தது. மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் தேடி வடக்குக்கு புறப்பட்டார்கள். மேலும் பலர் தமிழகத்துக்கு திரும்பினார்கள். இந்தியாவுக்கு திரும்பிச் சென்ற மலையகத் தமிழர்கள் அங்கு சிலோன்காரர்களாகவே அழைக்கப்பட்டார்கள். அவர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலும் அகதிகளானார்கள்.

பல நூற்றுக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்றும் கத்திக்குத்து, கத்திவெட்டு, இரும்புக் கம்பிகள், பொல்லுகள் என்பனவற்றால் இவை ஏற்படுத்தப்பட்டவை என்றும் அரசுசார்பற்ற அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டன. இனக்கொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும்படி விசாரணைக்குழு பரிந்துரை செய்தபோதும், எத்தகைய நட்டஈடும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசால் வழங்கப்படவில்லை.

'பிரபல இடதுசாரித் தலைவரான எட்மண்ட் சமரக்கொடி தனது தனது 'தமிழருக்கெதிரான பயங்கரவாதத்திற்குப் பின்னால்: இலங்கையின் தேசியப் பிரச்சினை' (Behind the Anti-Tamil Terror: The National Question in Sri Lanka) என்ற நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“முன்பு இடம்பெற்றவை போன்று இது சிங்கள - தமிழ் மக்களிடையேயான இனக்கலவரம் அல்ல, மாறாக தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனவழிப்புத் தாக்குதல். சில சிங்கள மக்களும் இதில் பாதிப்படைந்திருந்தாலும், பெருமளவுக்கு உயிரிழப்புக்களையும் படுகாயங்களையும் கடும் பாதிப்புக்களையும் அடைந்தவர்கள் தமிழ் மக்களே! பரவலாக நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே! தமது வீடுகளையும் கடைகளையும் இழந்தவர்களில் பெருமளவானவர்கள் தமிழர்களே! ஏறத்தாழ 75,000 பேரை அகதிகளானார்கள். இதில் இந்திய வம்சாவளி தமிழர்களும் உள்ளடக்கம்”

லங்கா ராணி கப்பல்
ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த அருளர் இந்த கலவரம் பற்றி எழுதிய நாவல் ஈழப் போராட்ட இலக்கியங்களில் முக்கிய நாவலாகப் பார்க்கப்படுகிறது. 220 பக்கங்களைக் கொண்ட அந்த நாவல் கலவரத்தில் பாதிக்கப்பட்டுசுமார் 1200 மக்கள் தென்னிலங்கையிலிருந்து’லங்கா ராணி’ கப்பல் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த சோகம் பற்றி வெளிப்படுத்துகிறது. தமிழ் அகதிகளைச் சுமந்து கொண்டு 'லங்கா ராணி' என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, தெற்கு நோக்கி வந்து, இலங்கைத் தீவைச் சுற்றிக் கொண்டு, வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறைத் துறைமுகத்துக்குச் செல்கிறது. கப்பல் கொழும்பில் புறப்படுவதுடன் தொடங்கும் கதை, மூன்று நாட்களில் காங்கேசன்துறையைச் சென்றடைவதோடு முடிகிறது. இது கற்பனைக் கதையல்ல. முற்றிலும் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த நாவலில் பாதிக்கப்பட்ட பலரது கதைகள் அடக்கம்.

அருட்திரு. திஸ்ஸ பாலசூரியவும்.  தி .திருமதி. பேர்ணடின் சில்வாவும் 1978இல் வெளியிட்ட இலங்கையில் இன உறவுகள் நூலில் (பாகம் 2) இப்படிக் குறிப்பிடுகிறார்.

“1977ம் ஆண்டு இனக் கலவரம் தோட்டத் தொழிலாளரை மிக மோசமாகப் பாதித்தது. 1958ம் ஆண்டைப் போலல்லாது தோட்டத் தொழிலாளரும், கொள்ளை, தீ வைத்தல் என்பவற்றிற்குப் பலியானார்கள். தொழிலாள வர்க்கத்திலே மிகவும் வறியவர்களும், மிக அதிகமாகச் சுரண்டப் படுபவர்களுமான பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் தமது அற்ப சொற்ப சொத்துக்களையும் இழந்தனர். அழுக்கடைந்து போன “லயன்” அறைகள் கூட தரை மட்டமாக்கப்பட்டன. தமக்காக வேண்டிய வியர்வை சிந்திப் பெறுமதி மிக்க அந்நியச் செலாவணியை உழைத்தது மாத்திரமன்றி தமது சொல்லாலோ, செயலாலோ தனி நாட்டிற்காக ஒரு விருப்பத்தையும் காட்டாத இப் பிரிவு மக்கள் மீது இவ்வளவு கீழ்த்தரமான முறையில் சிங்களவர்க்க தமது கைவரிசையைக் காட்டியது மிகவும் பாரிய ஒரு குற்றமாகும்.”

மலையக மக்கள் மீது இது வரை
இலங்கையில் 1939, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983 என தொடர்ச்சியாக நிகழ்ந்த கலவரங்களில் அதிகமான இழப்புகள் வடக்கு கிழக்குக்கு வெளியிலேயே நிகழ்ந்தன. சிங்கள மக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகளில் அவர்கள் மத்தியில் சிக்குண்டு வாழ்ந்த தமிழ் மக்களே அதிகளவில் இழப்புகளை சந்தித்தனர். சொத்துக்களை இழந்ததும், பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதும், அதிகளவு படுகாயங்களுக்கும், படுகொலைகளுக்கும் உள்ளனவர்களும், அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தவர்களும், இந்தியாவுக்கு நாடு திரும்பியவர்களிலும் பலர் இந்திய வம்சாவளியினரே.

ஒவ்வொரு தடவையும் இப்படியான கலவரங்களின் போது கொள்ளையர்களின் மீதும், காடையர்களின் மீதும் பழியைப் போட்டுவிட்டு சிங்கள ஆளும் வர்க்கம் தப்ப முயன்றிருக்கிறது. ஆனால் அரசாங்கத்தினதும், அரச இயந்திரத்தினதும் தயவுடனும், அனுசரணையுடனும் தான் அவை நிறைவேற்றப்பட்டமை நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு தடவையும் தமிழர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும், தலைதூக்க விடக்கூடாது என்கிற பாணியிலும், பயத்தையும் பீதியையும் அவர்களிடம் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்கிற வெறியிலுமே சிங்களத் தரப்பு இயங்கி வந்திருக்கிறது.

இது பற்றி சில மேலதிக விபரங்களுக்காக சன்சோனி ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய ஒரு சுருக்கத் திறனாய்வை அடுத்த இதழில் பார்ப்போம்.

துரோகங்கள் தொடரும்.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates