உமா ஓயா அபிவிருத்தித்திட்டம் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றுவரை அதன் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்தத் திட்டம் தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ‘உமாஓயா திட்டப் பிரதேசத்தில்’ வசிக்கும் மக்கள் தெரிவித்துவருகின்றனர்.
இது தொடர்பாக மேற்படி பிரதேச மக்கள் தொடர்ச்சியாகப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 28ஆம் திகதி புதன் கிழமை பண்டாரவளை நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், வர்த்தகர்களும், சிவில் சமூகத்தினரும், மதத்தலைவர்களும், பதினெட்டிற்கும் மேற்பட்ட பொது அமைப்புகளும், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்களும், அரசியல் வாதிகளும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் கறுப்பு உடை அணிந்தும்,கறுப்புக் கொடிகள் ஏந்தியும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். அப்புத்தளை பண்டாரவளை வீதி, பதுளை – பண்டாரவளை வீதி, வெலிமடை –பண்டாரவளை வீதி, பூனாகலை –பண்டாரவளை வீதி அத்துடன் கொழும்பு– பதுளை புகையிரத நிலைய வீதி ஆகிய வீதிகளை மறித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மூலம் பலமணி நேரம் போக்குவரத்து தடைபட்டதுடன் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கடைகள், வர்த்தக ஸ்தாபனங்கள் அனைத்தும் மூடப்பட்டதோடு வங்கிகள் மதுசாலைகள், தனியார் முதலீட்டு நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக பாடசாலைகள் உட்பட அனைத்து பிரதேசங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் பிரதான சுற்றுவட்ட சந்தியில் இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு எதிர்ப்பினை வெளிக்காட்டினர். இவ்ஆர்ப்பாட்டத்தினையடுத்து பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
உமா ஓயா திட்டத்தின் மூலம் பாதிப்புக்குள்ளானவர்கள் அங்கு கருத்துத் தெரிவித்தனர். இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களிலேயே அநேக பிரதேசங்களில் வெடிப்புகள் ஏற்பட்டன. அத்துடன் நீர் நிலைகளும் வரண்டு போக ஆரம்பித்தன. அன்று முதல் இதுவரை இந்நிலைமை அதிகரித்த வண்ணமே உள்ளது.
நாற்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன 7035 இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு நிலம் சரிவடைந்து காணப்படுகின்றது.
3120 கிணறுகள் அடங்கலாக நீர் நிலைகள் வரண்டு போயுள்ளன.
நாற்பதிற்கும் மேற்பட்ட வீடுகள் தாழிறங்கியும் வணக்கஸ்தலங்கள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், வீதிகள் என்பனவற்றில் வெடிப்புகள் ஏற்பட்டுமுள்ளன. இதனால் பொருளாதார ரீதியில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டும் உள்ளன. பலர் தமது தொழிலை இழக்கும் நிலைமை ஏற்பட்டு வருகின்றது.
அத்துடன் பண்டாரவளை நகரம் உட்பட சுற்றியுள்ள பிரதேசங்களுக்கும் குடி நீர் தட்டுப்பாடு அதிகளவில் நிலவி வருகின்றது. உமா ஓயா திட்டம் பண்டாரவளை, வெலிமடை, எல்ல, ஊவாபரணகம, டயரபா ஆகிய பிரதேசங்களை சூழவுள்ள கிராமங்கள் அனைத்தையும் பாதிப்படைய செய்துள்ளதோடு தொடர் நஷ்டங்களையும் ஏற்படுத்திவருவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலைக்கு தீர்வு கோரி பல்வேறு போராட்டங்கள் அரசியல் ரீதியான நகர்வுகள் என அனைத்து விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் இதுவரை இதற்கான தீர்வு கிட்டவில்லை. இந்நிலையிலேயே பண்டாரவளையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு அடுத்த படியாக இலங்கையில் நடைபெறும் பாரிய அபிவிருத்தித்திட்டம் உமா ஓயா அபிவிருத்தித் திட்டமாகும். உமா ஓயா, மாதெட்டில்ல ஓயா, மற்றும் புகுல்பொல, டயரபா ஆகிய பிரதேசங்களை உடறுத்து நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் இரண்டு நீர்த்தேக்கங்கள் ஊடாக நீரினைப் பெற்று மின்உற்பத்தி மற்றும் நீர் தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே உமா ஓயா திட்டமாகும்.
இதற்கான பிரேரணை 1991 ஆம் ஆண்டு முதல் தடவையாக கொண்டு வரப்பட்டது.
எனினும் பல்வேறு விதமான காரணங்களினால் அச்சந்தர்ப்பத்தில் பிரேரனை நிராகரிக்கப்பட்டது. எனினும் அடுத்தகட்டமாக அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வெள்ளவாய அலிகுற என்ற இடத்தில் உமா ஓயா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
ஈரான் அரசின் 85% வீத நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மாணப்பணிகள் தற்போது பெருமளவில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
உமா ஓயா திட்டத்தை ஊடறுத்து புகுல் பொல தீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்படுவதோடு அங்கு சேகரிக்கப்படும் நீர் சுரங்கப்பாதை ஊடாக டயரபா நீர் தேக்கத்திற்கும் கொண்டு செல்லப்படுகின்றது. இதன்மூலம் கரந்தகொல்லயில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
26 கிலோ மீற்றர் நிலத்தடி சுரங்கப்பாதையினை கொண்டுள்ள இத்திட்டத்தில் புகுல்பொலவில் இருந்து டயரபா வரையிலான சுரங்கத்தின் தூரம் 4 கிலோ மீற்றர் ஆகும். எஞ்சிய தூரம் ஏனைய பிரதேசங்களில் நிலக்கீழாக கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொறியியலாளர்களின் கருத்தின்படி ஒரு செக்கனுக்கு 1060 லீற்றர் நீர் வெளியேறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நீரின் மூலம் கரந்தகொல்லயில் நீர் மின் உற்பத்தி செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இதன்மூலம் 120 மெகா வோல்ட் மின்சாரத்தை உற்பத்திசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வேலைகள் முடிவுற்றதும் மின் உலைகள் நிறுவப்படும். இதன் நிர்மாணப்பணிகளை ஈரானிய நிறுவனம் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் அடுத்த அங்கமாக இலங்கையின் தெற்கு பகுதிகளுக்கு குடிநீர் வசதிகள் அத்துடன் தொழில்துறை நடவடிக்கைகள், நீர்ப்பாசன திட்டங்கள் என்பனவும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறியக்கூடியதாகவுள்ளது.
திட்டப்பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் நீர்கசிவு, நிலம் வெடிப்பு, கட்டட விரிசல், நிலம் தாழிறக்கம் என்பன பெருமளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரிய அபிவிருத்தித்திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா திட்டம் தற்போது பாரிய அழிவுத்திட்டமாக மாறிப் போயுள்ளது என்று பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் உரிய முறையில் திட்டமிடப்படவில்லை எனவும் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் பண்டாரவளை டயரபா பிரதேசங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் தற்போது ஆயிரம் காரணங்கள் கூறப்படுகின்றன.
அதேவேளை ஆரம்பிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டத்தினை இடைநடுவில் கைவிட முடியாது எனவும் அரசியல் தலைமைகள் கூறுகின்றன.
அரசியல் தலைவர்கள் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் தற்போதைய தலைமைகளை சாடியவாறு அறிக்கைகள் விடுக்கின்றனர். தற்போதைய தலைமைகள் முன்னைய தலைமைகளையும் அதிகாரிகளையும் சாடியவாறு பதில்களை கூறுகின்றனர். ஆனால் பாதிக்கப்படுகின்றவர்களுக்கும் எதிர்காலத்தில் பாதிக்கப்படவிருக்கின்றவர்களுக்கும் உரிய தீர்வு கடந்த பல வருடங்களாகவே கிடைக்காமல் இருக்கின்றது. இனியும் காலம் கடத்தாமல் காலத்திற்கு ஏற்ப உரிய தீர்வினை உமா ஓயா திட்டத்தில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும்.துரதிஷ்டவசமாக பாரிய அழிவு ஏற்பட சந்தர்ப்பம் நேர்ந்தால் அதன் பின்னர் பேசுவதாலும் மாற்றுத்திட்டம் மேற்கொள்வதாலும் எவ்விதத்திலும் பயனில்லை என்பது அனைவரினதும் கருத்தாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...