Headlines News :
முகப்பு » , , , , » 77 தேர்தல்: தமிழீழத்துக்கு மக்கள் ஆணை! - என்.சரவணன்

77 தேர்தல்: தமிழீழத்துக்கு மக்கள் ஆணை! - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 20

இலங்கையின் வரலாற்றில் பலவகையிலும் முக்கியத்துவம் மிக்கது 1977ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தல். 1970 ஆம் ஆண்டு ஆட்சியிலமர்ந்த சிறிமா அரசாங்கம் 1975ஆம் ஆண்டு அடுத்த பொதுத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும் ஆனால் 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பைக் கொண்டு வந்து குடியரசாக பிரகடனப்படுத்தியதோடு அதிலிருந்து தான் தமது ஆட்சிகாலம் அடுத்த ஐந்து ஆண்டுகாலத்துக்கு தொடரப்போவதாக அறிவித்து பதவிக்காலத்தை நீடித்துக்கொண்டது. இந்த ஏழு ஆண்டு காலத்திற்குள் மக்கள் வெறுப்பை அதிகமாக சம்பாதித்திருந்த சிறிமாவின் கூட்டரசாங்கம் 1977இல் மண் கவ்வுவதற்கான முழுத் தகுதியையும் உயர்த்திக்கொண்டிருந்தது. தமது ஆட்சிக்காலத்தின் இறுதியில் மிகவும் பலவீனமடைந்து அரசியல் ஸ்திரத்தன்மையும் இழந்துகொண்டிருந்தது சிறிமா அரசாங்கம். அந்த இடைவெளியை ஜே.ஆர் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார். தேர்தல் முடிவுகளும் வரலாறு காணாத முடிவை பாடமாகத் தந்ததது.

தேர்தலின் போது தான் ஒரு தர்மிஷ்ட அரசாங்கத்தை உருவாக்கப்போவதாக கவர்ச்சிகரமான பிரச்சாரத்தில்  இறங்கினார் ஜே.ஆர்.ஜெவர்த்தன. தர்மிஷ்ட என்றால் “தர்மம் நிறைந்த” என்பது பொருள். குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் அந்த கவர்ச்சிகர சொல்லாடல் நன்றாகவே ஈடுபட்டது. சுயநலம் கருதாது புத்தரது போதனைக்கும் தருமத்திற்கும் இணங்க ஆட்சிபுரிந்தால் மக்களது சம்மதமும் நிலைத்து நிற்குமென்பதையே 'தர்மிஷ்டம்” என்பர். தச. ராஜ-தருமத்திற்கும், பஞ்சசீல நெறிகளுக்கும் கட்டுப்படுத்தப்பட்ட மன்னராகவே இருப்பார். பௌத்த வரலாற்று இலக்கியங்களில் அசோகனின் ஆட்சியை தர்மிஷ்ட ஆட்சி என்பார்கள். ஜே.ஆருக்குப் பின்னர் அந்த சொல்லாடலை தேர்தலில் லாவகமாகப் பயன்படுத்தியவர் 2015 இல் மைத்திரிபால சிறிசேன.

சுதந்திரக் கட்சியின் வியூகம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கிறன என்ற விடயத்தைக் கூட நேரடியாக அங்கீகரிக்கத் தயங்கியது.

தேர்தலுக்கு முன்னரே தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைமைகளை சரிகட்டுவதற்காக 21.02.1977 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் சிறிமாவோ ஒரு கூட்டத்தைக் கூட்டி சிறுபான்மை மக்களின் நியாயமான கவலைகளை கவனத்திற் கொண்டு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதே தமது நோக்கம் என்றார்கள். அதற்கு பதிலளித்திருந்த செல்வநாயகம் ‘தனிநாடு என்ற கோரிக்கையில் சமரசத்துக்கு இடமில்லை, ஆனால் அப்படியான தீர்வெதனையும் இடைக்கால ஏற்பாடாக ஏற்றுக் கொள்வோம் என்றார். வரப்போகும் தேர்தலுக்காக நடத்தப்படும் கபட நாடகம் என்பதை அறியாமல் இல்லை. திரும்பவும் மார்ச் 16 அன்று அடுத்த கூட்டத்தைக் கூடினர். தமிழ்மொழியின் பயன்பாடு, அதிகாரப் பரவலாக்கம் பற்றி சிறிமாவோ இறங்கி வரத்தயாராக இருந்தார். அத்தோடு பல்கலைக்கழக அனுமதிகளின் தரப்படுத்தல் முறையை மாற்றியமைக்கவும் இணங்கினார். ஆனால் தமிழ் இளைஞர்கள் சிறிமாவோவை நம்புவதற்குத் தயாராக இருக்கவில்லை. கடந்த கால நம்பிக்கைத் துரோக அனுபவப் பாடங்களின் விளைவு அது.

தந்தை செல்வாவுடன் அமிர்தலிங்கம்
தந்தை செல்வாவின் இறுதிக் கருத்து
செல்வநாயகம் இறப்பதற்கு சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் மார்ச் 26 அன்று திருகோணமலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் உரையாற்றும் போது,
“சிங்களத் தலைவர்களுக்கான எனது அறிவுரையானது, எங்களை எங்கள் வழியில் செல்ல விடுங்கள் நாங்கள் கசப்புணர்வினைத் தவிர்த்துவிட்டு அமைதியாகப் பிரிவோம். இது இரு தேசங்களும் சமத்துவத்தின்பால் இணங்கிச்செல்ல பெரிதும் உதவும். தமிழ் மக்களுக்கு வேறு மாற்று வழியில்லை.
இளைய தலைமுறையினரிடையே கசப்புணர்வு வளர்ந்து வருகிறது. அதனை இனியும் வளரவிடக் கூடாது. விட்டால் அது பெரும் முரண்பாட்டில் சென்று அந்நியத் தலையீட்டின் அவசியப்பாடு வரை செல்லும்.” என்றார்.
சிறிமா அரசாங்கத்தின் மேற்கத்தேய எதிர்ப்புக் கொள்கையும் ஜே.ஆரின் மேற்கத்தையே சார்புக் கொள்கையாலும் சர்வதேச நாடுகள் ஜே.ஆரின் வெற்றிக்கு பங்களித்திருந்தன. தேர்தலில் தமது வெற்றியில் சிறிதும் ஐயமுற்று இருக்கவில்லை ஐ.தே.க. 'திருமதி பண்டாரநாயக்கவை நாம் இத்தேர்தலில் கட்டாயம் தோற்கடிப்போம். 100 க்கு 90 ஆசனங்களைக் கைப்பற்றி ஐக்கிய தேசிய கட்சி தனிக்கட்சி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும்' என உறுதியாக தேர்தல் மேடைகளில் சூளுரைத்தார்.

தமிழீழத்துக்கு வாக்கு
இலங்கையின் தமிழர் அரசியலில் நான்கு தசாப்தத்துக்கும் மேல் கோலாச்சிய இரு தலைவர்களும் இதே வருடத்தில் இரு மாத இடைவெளியில் மறைந்தார்கள். ஜீ.ஜீ.பொன்னம்பலம் பெப்ரவரியிலும் (09.02.1977),  தந்தை செல்வா ஏப்ரல் மாதமும் (26.04.1977) மரணமடைந்தார்கள். தமிழரசுக் கட்சி ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் சேர்ந்து தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக உருவெடுத்திருந்தது. செல்வநாயகத்துக்குப் பின்னர் அதன் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம் தனது சொந்தத் தேர்தல் தொகுதியான வட்டுக்கோட்டையில் போட்டியிடவில்லை. செல்வநாயகத்தின் தொகுதியிலேயே இந்தத் தேர்தலில் போட்டியிட்டார். 1970 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் சொந்தத் தேர்தலில் தோல்வி கண்டிருந்தார்.

அதேவேளை தமிழர் கூட்டணி தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தனி நாட்டுக்கான சபதத்தை எடுத்தது. மிகவும் விரிவான அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் இறுதிப் பகுதியில் இப்படி குறிப்படப்படுகிறது.

“சுயநிர்ணய அடிப்படையின் கீழ், இறைமையுள்ள தாயகத்தை அமைக்கும் பணியை தமிழ் தேசம் பொறுப்பெடுத்துக் கொள்ளும். இதனை சிங்கள அரசுக்கும், உலகிற்கும் அறிவிப்பதற்கான ஒரே வழி, தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிப்பது ஆகும். இந்த வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், இலங்கை தேசிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அதே நேரம், "தமிழீழ தேசிய பேரவை" ஒன்றையும் அமைத்துக் கொள்வார்கள். அந்த அமைப்பு, தமிழீழ அரசமைப்பு சட்டத்தை எழுதுவதுடன், அதனை நடைமுறைப் படுத்துவதன் மூலம் தமிழீழத்தின் சுதந்திரத்தை உருவாக்கிக் கொள்ளும். அதனை சாத்வீகமான வழியிலோ, அல்லது போராட்டம் ஒன்றின் மூலமோ அமைத்துக் கொள்ளும். தமிழீழ தேசியப் பேரவையானது, பொருளாதார அபிவிருத்தி, சமூக நலன், பிரதேச பாதுகாப்பு, கல்வி போன்றவற்றை எழுதி அமுல்படுத்தும். தமிழீழத்தின் சுதந்திரத்திற்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.”

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்கடிப்பதற்கு ஒரு வகையில் ஐ.தே.கவுடன் புரிந்துணர்வின் அடிப்படையில் மறைமுக கூட்டு இருந்தது என்றே கூற வேண்டும். ஐ.தே.க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் பிரச்சினையை தாம் முழுமையாக தீர்த்து வைப்பதாகவும் அதற்காக ஒரு சர்வகட்சி மாநாட்டை நடத்துவதாகவும் உறுதியளித்திருந்தது. பெரும்பாலும் கூட்டணி போட்டியிடாத தொகுதிகளில் தமிழ் மக்களின் அடுத்த தெரிவாக ஐ.தே.க  வாக இருந்தது.

ஜே.ஆர்.ஜெயவர்தன
தேர்தல் தந்த பதில்
1977 யூன் 06 வேட்பு மனு தாக்கல் செய்து, ஜூலை 21 தேர்தல் நடந்தது. ஐ.தே.க.வரலாறு காணாத வெற்றியை அடைந்தது. 154 தேர்தல் தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட ஐ.தே.க மொத்த 168 ஆசனங்களில் 140ஐ பெற்று 83 வீத அதி பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டது. 147 தொகுதிகளில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர வெறும் 8 ஆசனங்களை மட்டுமே பெற்று படு தோல்வியடைந்தது. எதிர்க்கட்சியாகும் தகுதியைக் கூட இழந்தது. மறுபுறம் இனத்துவக் கட்சியும், பிரதேச கட்சியுமான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 23 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு 18 ஆசனங்களை வென்று பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதுடன் எதிர்க்கட்சி தலைமைக்கான தகுதியையும் வரலாற்றில் முதற் தடவை பெற்றுக் கொண்டது. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவானார்.


1970 இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற கட்சி 1977இல் வெறும் சிறு குழுவாக சுருங்க 1970இல் வெறும் சிறு குழுவாக சுருங்கியிருந்த ஐ.தே.க. 1977இல் 5/6 பங்கை தனதாக்கிக் கொண்ட வியப்பு மிக்க சூழல் உருவானது. பாராளுமன்ற ஜனநாயகம் நடைமுறையிலுள்ள எந்த நாட்டிலும் இப்படி ஒரு வெற்றி கிட்டியதில்லை என்பார்கள். அப்படி கூறுவதற்கு இன்னொரு காரணம் 87% சத வீத வாக்குகள் பயன்படுத்தப்பட்டிருந்ததும் தான். சில தொகுதிகளில் 90% வீத வாக்குகள் கூட பதிவாகின.

1970 தேர்தலில் 49% வீத வாக்குகளை மட்டுமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி பெற்றது. அதாவது அதையே இன்னொரு அர்த்தத்தில் சொல்வதாயின் 51% மக்கள் அவர்களை வெறுத்திருக்கிறார்கள். அல்லது எதிர்த்திருக்கிறார்கள். ஆனால் அப்படி குறைந்தளவு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அந்த கூட்டணி அரசியல் அமைப்பையும் மாற்றியது. ஆனால் 1977 தேர்தலில் ஐ.தே.க. வரலாறு காணாத வெற்றி பெற்றபோதும் பெற்ற வாக்குகள் வெறும் 50.84% வீதம் மட்டுமே. அது மட்டுமன்றி வடக்கு கிழக்கிலுள்ள 7 மாவட்டங்களிலும் ஐ.தே.க பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. 49%, 50.84% வாக்குளைப் பெற்ற இந்த இரு அரசாங்கங்களும் தமக்கு அரசியலமைப்பையே மாற்றும் ஆணையை மக்கள் தந்து விட்டார்கள் என்று அறிவிக்கும் போது. வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு 53.53% வீத வாக்குகளை தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள். ஆக; அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு கிடைத்த மக்கள் அங்கீகாரமல்லவா? தமிழீழத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையாக ஏன் அதை கொள்ள முடியாது. இந்தக் கேள்வியை எழுப்பியவர் கூட வேறு யாருமல்ல ஏ.ஜே வில்சன். (Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth and Twentieth Centuries – February 1, 2000 by A. J. Wilson)

அதுபோல 1947 இல் எதிர்க்கட்சி தலைமையாக தகுதிபெற்றிருந்தது லங்கா சமசமாஜக் கட்சி. எந்த இடதுசாரிக் கட்சியாலும் ஒருவரைக் கூட வெற்றிபெறச் செய்ய முடியாது போனமை இது தான் முதற்தடவை.  சிறிமா அரசாங்கத்துடனான இடதுசாரிக்கூட்டு 1975இலேயே உடைந்து போயிருந்ததும் கவனிக்கத்தக்கது.

தமிழர் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்பது அதன் விஞ்ஞாபனத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது. குறிப்பாக தமிழீழத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை என்றே உணரப்பட்டது. நாட்டில் ஒரு பாரிய இனப்பிளவை தெட்டத் தெளிவாக உணர்த்திய தேர்தல் பெறுபேறுகளாக அமைந்தது இந்தத் தேர்தல். அதேவேளை கிழக்கில் கூட்டணி சார்பில் போட்டியிட்ட அத்தனை முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வி கண்டனர் என்பதையும் இங்கு பதிய வேண்டும். இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்கவில்லை.

தனிநாட்டுப் பிரகடனத்தோடு கூட்டணியில் இருந்து விலகி தனித்து இயங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை மட்டும் பெற்றுக்கொண்டது.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பெற்ற வெற்றி

கூட்டணி தந்த ஏமாற்றம்

இந்தத் தேர்தலில் கூட்டணி ஆதங்கத்தையும், அபிலாஷையையும் வைத்து அரசியல் லாபம் கண்டது என்கிற குற்றச்சாட்டு அதன் பின்னர் மக்கள் மத்தியில் பலமாக எழுந்தது. தேர்தல் விஞ்ஞாபனம் அத்தனை கேள்விகளுக்குமான வழியைத் திறந்து விட்டிருந்தன.

தமிழர் விடுதலை கூட்டணி தமக்கு மக்கள் ஆணை கிடைக்குமிடத்து ‘தமிழீழ நிழல் அரசாங்கம்’ ஒன்றை தாம் அமைக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தது.தேர்தல் மேடைகளில் பேசும் போது கூட அயர்லாந்து விடுதலைப் போராளிகள் 1920ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும் “அயர்லாந்து நிழல் அரசாங்கத்தை” அமைத்தது போல தாமும் அப்படி ஒரு அரசாங்கத்தை அமைக்கப் போவதாக உறுதியளித்தனர்.

ஆனால் இதன் சரியான தமிழ்ப் பிரயோகம் “இடைக்கால அரசாங்கம்” என்று சமீபத்தில் மு.திருநாவுக்கரசு எழுதிய ஒரு கட்டுரையில் விளக்குகிறார். நிழல் அரசாங்கம் என்பது ஆங்கிலத்தில் Shadow Government எனப்படும். ஆனால் விஞ்ஞாபனத்தில் “இடைக்கால அரசாங்கம்”  (Provisional Government) என்றே அவர்கள் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.

அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் “விடுதலையை எப்படி அடைவது” என்கிற உப தலையங்கத்தின் கீழ் தேர்தல் மூலம் ஆணை கிடைத்ததும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கொண்ட “தமிழீழ தேசியப் பேரவை” (National Assembly of Tamil Eelam) உருவாக்கப்படும் என்றும் அது சுதந்திர தமிழீழ அரசுக்கான அரசியல் யாப்பை உருவாக்கும் என்றும் அந்த சுதந்திர தமிழீழ யாப்பானது அமைதியான வழிமுறைகள் மூலமோ அல்லது வேறு நேரடி நடவடிக்கைள் மூலமோ அல்லது போராட்டங்கள் மூலமோ நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  (Tamil Eelam by bringing that constitution into operation either by peaceful means or by direct action or struggle).

தேர்தல் மேடைகளில் இதுதான் தமிழ் மண்ணில் நடக்கும் கடைசித் தேர்தல் என்றும் இனி தமிழீழத்திற்தான் அடுத்த தேர்தல் நடைபெறும் என்றும் கூட்டணித் தலைவர்கள் மேடைகளில் முழங்கியதை அப்படியே நம்பிய மக்கள் சும்மா இருப்பார்களா என்ன.

மேடைகளில் கூறப்பட்டபடி அயர்லாந்து பாணியிலான ஓர் இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது “தமிழீழ நிழல் அரசாங்கத்தை”யோ பற்றிய கதைகளை தேர்தலின் அப்படியே கிடப்பில் போட்டார்கள். அதுவே கூட்டணிக்கும் அமிர்தலிங்கத்துக்கும் எதிராக இளைஞர்களை திருப்பியது.

துரோகங்கள் தொடரும்

நன்றி - தினக்குரல் 
“தமிழீழம் மதச் சார்பற்ற சோஷலிச அரசு”

என்கிற உப தலைப்பின் கீழ் இருந்த பகுதி இது.
முற்று முழுதான முடிவுடன் அறிவிக்கக் கூடிய, ஒரேயொரு மாற்று மட்டுமே உண்டு. எமது முன்னோரின் மண்ணை, நாம் மட்டுமே ஆள வேண்டும். சிங்கள ஏகாதிபத்தியம் எமது தாயகத்தில் இருந்து வெளியேற வேண்டும். தமிழர் விடுதலை கூட்டணியானது, 1977 பொதுத் தேர்தலை, சிங்கள அரசுக்கு தமிழ் தேசத்தை அறிவிப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பமாக பார்க்கின்றது. நீங்கள் கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு வாக்கும், சிங்கள மேலாதிக்கத்தில் இருந்து தமிழர் தேசத்தை விடுதலை செய்வதற்கானது என கருதப்படும்.
அதிலிருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தத் தேர்தலில், தமிழர்களுக்கான தேசத்தை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றது. ஒரு சுதந்திரமான, மதச் சார்பற்ற, சோஷலிசத் தமிழீழம், பூகோள ரீதியாக தமிழ் பேசும் மக்களின் பூர்வீக மண்ணை உள்ளடக்கி இருக்கும்.
அதே நேரத்தில், தமிழீழத்தின் பின்வரும் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்புகள் பாதுகாக்கப்படும் என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிக்கின்றது. தமிழரின் தேசமான ஈழம் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் அமைக்கப்படும்.  
1. தமிழீழத்தின் பிரஜைகளாக அங்கீகரிக்கப் படுவோர்:
(அ) தமிழீழப் பிரதேசத்திற்குள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும்          அனைத்து மக்களும்.
(ஆ) இலங்கையில் எந்தப் பகுதியிலும் வாழும் தமிழ் பேசும் நபர், தமிழீழத்தின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
(இ) இலங்கை வம்சாவளியினரான தமிழ் பேசும் மக்கள், உலகில் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், தமிழீழத்திற்கான குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். 
2. அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படும். ஆகவே, எந்தவொரு பிரதேசமும் அல்லது மதமும், இன்னொரு பிரதேசம், அல்லது மதத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இடமளிக்கப் பட மாட்டாது. சுவிட்சர்லாந்தில் உள்ள சமஷ்டி அமைப்பு போல, பல்வேறு பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, பிராந்திய தன்னாட்சி அதிகாரம் உறுதிப் படுத்தப்படும். விசேடமாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழீழத்தின் பகுதியில், ஒரு தன்னாட்சிப் பிரதேசம் அமைக்கப்படும். அவர்களது சுயநிர்ணய உரிமையும், பிரிந்து செல்லும் உரிமையும் மதிக்கப்படும்.
3. ஒன்றில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமோ, அல்லது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமோ, ஒன்றை மற்றது காலனிப் படுத்தவோ, அந்தப் பிரதேச மக்களை சிறுபான்மையினர் ஆக்கவோ  அனுமதிக்கப் பட மாட்டாது.
4. தீண்டாமைக் கொடுமை, சமூக அந்தஸ்து அல்லது பிறப்பால் தாழ்ந்தவராக கருதப்படும் அநீதி முற்றாக ஒழிக்கப் படும். அந்தக் குற்றங்களை புரிவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
5. தமிழீழ அரசு மதச் சார்பற்றது. அதே நேரத்தில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் சமமான அரச பாதுகாப்பும், உதவியும் வழங்கப்படும்.
6. தமிழீழ அரசின் உத்தியோகபூர்வ மொழியாக, தமிழ் மொழி இருக்கும். அதே நேரம், நாட்டில் வாழும்  சிங்களவர்கள் தமது மொழியில் கல்வி கற்பதற்கும், தமது சொந்த மொழியிலேயே அரசுடன் தொடர்பு கொள்ளவும் சுதந்திரம் வழங்கப்படும். சிங்கள நாட்டினுள் வசிக்கும் தமிழர்களின் மொழி உரிமையை மதிக்க வேண்டுமென சிங்கள அரசிடம் வேண்டப் படும். 
7. தமிழீழம் ஒரு விஞ்ஞான சோஷலிச நாடாக இருக்கும்.
(அ) மனிதனை மனிதன் சுரண்டுவது சட்டத்தால் தடை செய்யப்படும்.
(ஆ) உழைப்பின் மேன்மை பாதுகாக்கப்படும்.
(இ) தனியார் துறை சட்ட வரையறைக்குள் அனுமதிக்கப்பட்டாலும், உற்பத்தி சாதனங்களும், விநியோகங்களும்  அரச உடைமைகளாக இருக்கும் அல்லது அரசினால் கட்டுப்படுத்தப் படும்.
(ஈ)குத்தகை விவசாயிகளுக்கும், தனியார் காணிகளில் குடியிருப்போருக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.
(உ)தமிழ் தேசமான ஈழத்தின் பொருளாதார அபிவிருத்தி, சோஷலிச திட்டமிடல் அடிப்படையில் இருக்கும்.
(ஊ) ஒரு தனிநபரோ, அல்லது குடும்பமோ சேர்க்கக் கூடிய அளவு செல்வத்தின் உச்ச வரம்பு தீர்மானிக்கப்படும்.
8. தமிழீழ சோஷலிசக் குடியரசானது அணி சேராக் கொள்கையை பின்பற்றும்.  அதே நேரத்தில், சர்வதேச மட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுக்கும், ஜனநாயக விடுதலை இயக்கங்களுக்கும் தனது ஆதரவை வழங்கும்.
9. தமிழீழ அரசானது, சிங்கள நாட்டில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும்.  இரண்டு தேசங்களும் எதிர்நோக்கும் பரஸ்பர பிரச்சினைகள், சகோதரதத்துவ அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும்.

TULF இன் முழுமையான தேர்தல் விஞ்ஞாபனம் - 1977
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates