Headlines News :
முகப்பு » » அவுட்குரோவர் முறையினை எதிர்கொள்வது - மல்லியப்பு சந்தி திலகர்

அவுட்குரோவர் முறையினை எதிர்கொள்வது - மல்லியப்பு சந்தி திலகர்

தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 26) 

விரும்பியோ விரும்பாமலோ பெருந்தோட்டத்துறையானது 'அவுட்குரோவர்' முறைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. 25 வருடங்களுக்கு முன்னர் அரச உடமையாகவும் நிர்வாகவாகமாகவும் காணப்பட்ட பெருந்தோட்டத்துறை தனியார் மயமாக்கப்பட்டபோது தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. அதேநேரம் அப்போது தனியார் துறைக்கு வழங்கும்போது நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ள கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அல்லது இந்த தொழில் துறையில் தனியார் கம்பனிகள் மீதுள்ள பொறுப்புடமை குறித்து அரசாங்கத்துக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ வகைகூறும் ஏற்பாடுகள் ஏதும் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவில்லை. நிலத்தின் உடமையாளராக அரசாங்கம் கோல்டன் பங்குதாரர் (Golden Share Holder) எனும் அந்தஸ்தினை வகிப்பதோடு சரி இதர எந்த விடயத்திலும் அரசாங்கத்தின் தலையீடுகள் இல்லை. பெருந்தோட்ட காணிகள் தொடர்பில் ஏதேனும் விடயங்கள் வரும்போது அரசாங்கம் இந்த கோல்டன் பங்குதாரர் எனும் அந்தஸ்துடன் அதில் தலையிட்டு வந்துள்ளது. அவை தவிர்ந்த அனைத்து நிர்வாகங்களும் சம்பள முறைமையும் கூட தனியாரினாலேயே தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளதே தவிர அரசாங்க தலையீடுகள் இருக்கவில்லை. மறுதலையாக தனியார் துறையினர் தொழிற்சங்கங்களுடன் பேசித் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்த நடைமுறைகளையே அரச பொறுப்பில் இயங்கும் கூட்டுத்தாபனங்களும் பின்பற்றும் நிலைமையே உருவாக்கப்பட்டது. எனவே ஒரு வகையில் கூட்டுஒப்பந்தம் மூலம் குறைந்தபட்ச சம்பள சபை சட்டத்தை அமுல்படுத்த அமுல்ப்படுத்தாமல் இருக்க அரசாங்கம் தனியாருக்கு உதவி செய்திருந்ததுடன் அவர்கள் செய்துகொள்ளும் கூட்டு ஒப்பந்த நடைமுறைகளை அரச பொறுப்பு நிறுவனங்களும் பின்பற்ற வைத்தமை பெருந்தோட்ட தொழில்துறை சார்ந்து அரசாங்கத்தை தனியார் துறை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப்போராடும்போது அது கம்பனிகளுக்கு எதிரானதாக அமைந்ததே தவிர அரசாங்கத்தின் மீது அது அழுத்தத்தைச் செய்வதாக அமையவில்லை. 

இத்தகைய பின்னணியிலேயே தனியார் கம்பனிகள் 'அவுட்குரோவர்' முறையினையும் அமுல்படுத்திவிடலாம் என எண்ணம் கொண்டிருக்கின்றன. எனவேதான் தேயிலைக்காணிகளை பகிர்ந்தளிப்பதாக நிலத்துடன் தொடர்புடையதாக முன்மொழிவுகளைச் செய்யாமல் அரசாங்கத்தை சம்பந்தப்படுத்தாத வகையில் தேயிலை மரங்களை பகிர்ந்தளிப்பதன் ஊடாக அவுட்குரோவர் முறையினை நடைமுறைப்படுத்தும் திட்டத்தினை முன்மொழிவாகச் செய்துள்ளன. இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்துவந்த இத்தகைய அனுபவங்களின் அடிப்படையில் 'அவுட்குரோவர்' முறை முன்வைக்கப்படுமாக இருந்தால் அது எவ்வாறானதாக இருக்க வேண்டும் எனும் தீர்மானத்தை அறிவிக்க வேண்டியவர்களாக உள்ளனர். 'அவுட்குரோவர்' முறை வேண்டாம் என வாதிடுபவர்களுக்கு 'அவுட்குரோவர்' முறை எவ்வாறு அமைய வேண்டும் என விவாதிப்பது தேவையற்ற விடயமாக இருக்கலாம்.  அல்லது இந்த ஆராய்வை அவட்குரோவருக்கு ஆதரவளிப்பதற்கான முயற்சி இதுவென விமர்சிக்கலாம். ஆனால், யதார்த்த நிலையில் நின்று பார்க்கின்றபோது பின்வரும் நிலைமைகள் 'அவுட்குரோவர்' முறை நடைமுறைப்படுத்தப்பட போவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துவனவாக உள்ளன. 

பெருந்தோட்ட கம்பனிகள் பொதுவாக நட்டத்தில் இயங்குவதாக சொல்லப்பட்டு கூட்டு ஒப்பந்த பேரம்பேசலின்போது சம்பளவுயர்வை வழங்க மறுக்கின்றமை.

2011 க்கு பின்பான கூட்டு ஒப்பந்தங்களில் 'அவுட்குரோவர்' முறையை நிபந்தனையாக முன்வைத்து கம்பனிகள் கைச்சாத்திட்டுள்ளமை.

2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது அவுட்குரோவர் முறையை அமுலாக்க எத்தணித்தமை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் சில தோட்டங்களில் 'அவுட்குரோவர்' முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை (வலப்பனை மஹா ஊவ தோட்டம்)

அரச பொறுப்பில் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (ஜனவசம), அரச பெருந்தோட்ட யாக்கம் (எஸ்.பி.சி), எல்கடுவை பிளாண்டேசன் தோட்டங்களில் ஏற்கனவே 'அவுட்குரோவர்' முறைமை 2005, 2010 ஆம் ஆண்டுகளில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை.

அரசாங்கம் தற்போது அரச தனியார் பங்குதாரர் முறைமையின் கீழ் (Public Private Partnership)  தனியாருடன் இணைந்த 'அவுட்குரோவர்' முறையொன்றுக்காக திட்டமிடுகின்றமை.

மேற்படி விடயங்கள் அவுட்குரோவர் முறை நோக்கி செல்கின்ற பட்சத்தில் தொடர்ச்சியாகவும் தொழில் தருனர் - தொழிலாளர் முறையில் தோட்டங்களை நடாத்த முற்பட்டால் அவதானிக்கக் கூடிய விளைவுகள்.

பயிர்செய்யும் பரப்பளவை தோட்டக்கம்பனிகள் கொஞ்சம் கொஞ்சமாக கைவிடுவதானல் தேயிலைப்பயிர்ப் பிரதேசங்கள் காடாகி வருகின்றமை கூட்டு ஒப்பந்த சந்தர்ப்பங்களின்போது தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வைத் தருவதற்கு மறுக்கின்றமை கம்பனிகள் உப குத்தகை அடிப்படையில் வேறு கம்பனிகளுக்கு வழங்கி வருவதால் தரமான தேயிலைக் காணிகளை தொழிலாளர்கள் தம் வசம் பெறுவதை இழக்கும் நிலை இத்தகைய பின்னணிகளைக் கொண்டு பார்க்கும்போது 'அவுட்குரோவர்' முறை அமுல்படுத்தப்படுமானால் அது எவ்வாறானதாக இருக்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் இருந்து நிபந்தனைகளை வைக்க வேண்டியுள்ளது. அதனை அடுத்த கூட்டு ஒப்பந்த   காலம் வரும்வரை காத்திருந்து அப்போது அவசர அவசரமாக முன்னெடுக்காமல் அல்லது பேசுபொருளாக்காமல் இப்போதிருந்தே தொழிலாளர் தரப்பு நிபந்தனைகளை அல்லது கோரிக்கைகளை முன்வைப்பதே பொருத்தமானது. அவ்வாறு முன்வைக்கப்பட வேண்டிய நிபந்தனைகளாக பின்வருன அமைய முடியும்.

பெருந்தோட்ட கைத்தொழிலுக்கு பொறுப்பான அமைச்சுகள் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து இந்த திட்டத்திற்கான அனுமதியைப் பெறுவது
அத்தகைய அமைச்சரவை அனுமதியை கொண்ட அடிப்படையாகக் சட்ட மூலம் ஒன்றை  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பாராளுமன்றில் சமர்ப்பித்து அனமதியைப் பெறுதல்.

இந்த முறைமையினை மேற்பார்வை செய்யும் அரச நிதியம் அல்லது அதிகார சபை ஒன்றை தாபித்தல்.

மேற்படி முறைமைகள் இப்போதிருக்கும் பாதுகாப்பற்ற தன்மையை மாற்றியமைக்கக்கூடியன. அதேவேளை முறைமையினை அமுல் செய்யும் நிறுவனங்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறுவதாக அமையும். இப்போதைய நிலையில் தனியார் கம்பனிகள் எவ்விதத்திலும் பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறுவதாக இல்லை.

அதேவேளை அவுட்குரோவர் முறையில் தொழிலாளர்களுக்கு அல்லது தொழிலாளர் குடும்பங்களுக்கான நிலவுடமையை உறுதிசெய்யும் வகையிலான கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்படல் வேண்டும். தேயிலை மரங்களை மாத்திரம் நம்பி பெருந்தோட்டக்கைத்தொழிலில் தொழிலாளர்கள் தங்கியிருக்க முடியாது. தேயிலை வீழ்ச்சியடையுமானால் மாற்றுப்பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பாக அவர்களுக்கு உரிய காணி சொந்தமாகவோ நீண்ட கால குத்தகை அடிப்படையில் தொழிலாளர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படல் வேண்டும்.

பெருந்தோட்டக் கைத்தொழிலில்  பிரதான உற்பத்தி மூலப்பொருளான 'தேயிலைக் கொழுந்தை' பெற்றுக்கொடுக்கும் சக்தி வாய்ந்த பக்கம் தொழிலாளர் வசம் இருப்பதனை பலமாகக் கொண்டு நிபந்தனைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்படுதல் வேண்டும். தொழிற்சாலைகளை இயக்குவதிலும் கணிசமான அளவு தொழிலாளர்கள் பங்கேற்கிறார்கள். அத்தகைய தொழிலாளர்களுக்கு கைத்தொழில் சட்டங்களின் அடிப்படையில் சம்பளம் பெற்றுக்கொடுக்கும் பிரேரணையை முன்வைக்கலாம். ஏனெனில் இந்த இரண்டு கட்டங்களுக்கு அப்பால் தேயிலையை ஏலத்தில் வாங்குதல் அவற்றை பொதிசெய்தல், அவற்றிற்கு பண்டக்குறியிடல், மேலதிக பெறுமதி சேர்த்தல் ஏற்றுமதி செய்தல் என நாட்டில் இன்னுமொரு பகதி தொழிலாளர்களும் நிறுவனங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆரம்ப கட்டமான தேயிலைக் கொழுந்து பறித்தல் கேள்விக்கு உள்ளாகின்றபோது தேயிலையுடன் தொடர்புடைய ஏனைய அனைத்து தொழில்களும் பாதிப்படைவதனால் அதன் பொருளாதார முக்கியத்துவத்தை உணர்ந்து தொழிலாளர் தரப்பு நிபந்தனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து 'அவுட்குரோவர்' முறையை தமக்கு சாதகமாக்க முனைதல் வேண்டும். தொழிற்சங்க பேதமின்றி பொதுக்கலந்துரையாடலாக சமூகம் சார்ந்த பொதுத்திட்டமாக இதனைக் கையாள வேண்டும்.

நன்றி - சூரியகாந்தி


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates