Headlines News :
முகப்பு » » அனர்த்தங்களை தொடரவிடுவதா? - ஜீவா சதாசிவம்

அனர்த்தங்களை தொடரவிடுவதா? - ஜீவா சதாசிவம்


கடந்த 24 ஆம் திகதி முதல் இன்றுவரை இலங்கையின் தென்பகுதி உட்பட நாட்டின் பலபகுதி மக்களும் பதற்றமான நிலையில். இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி,  பெரும் சீரழிவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இலங்கையைப் பொறுத்த வரையில் இது ஒரு புது விடயம் இல்லை. இவ்வாறு  இலட்சக்கணக்கான மக்கள் இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு  வருவது ஒரு வருடாந்த நிகழ்வே!

உலக நாடுகளில் இயற்கை அனர்த்தங்களாக வரட்சி, மண்சரிவு , மழை, வெள்ளம், சுனாமி என அவ்வப்போது இடம்பெற்று வருகின்றது.  எனினும் அண்மைய ஆண்டுகளில் இலங்கையைப் பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் வரும் பண்டிகைகள் போல கட்டாயமாக வரட்சியும் மழையும் வெள்ளமும் என மக்கள் மாறி மாறி அங்கலாய்கின்ற நிலை.

 சொத்துக்கள் அழிவு,  நிரந்தர இடங்களில் இருந்து நீக்கி தற்காலிக தங்குமிடங்கள் என தொடரும்  பரிதாப நிலை கவலையளிப்பதாகவே இருக்கின்றது.  இந்த கவலைக்கிடமான  தொடர் நிகழ்வுகளுக்கு காரணம் என்ன?அதிலிருந்து மீள்வதற்கான உபாயங்கள் என்ன என்பது தொடர்பிலேயே இவ்வார 'அலசல்' ஆராய்க்கின்றது.

இங்கு 'திட்டமிடல்' என்ற சொற்பதம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எந்தத் துறையாயினும் திட்டமிடல் இல்லையென்றால் அதன் விளைவாக சரிவுப் போக்கையே எம் கண் முன்னால் காணக்கூடியதாக இருக்கும்.
அந்த வகையில், இலங்கையில் தொடர்ச்சியாக இவ்வாறான அனர்த்த நிலைமைக்கு 'திட்டமிடப்படாத  முகாமைத்துவ' முறையே பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த உலகின் எல்லா அபிவிருத்திகளும் இயற்கையில் இருந்து எடுத்துக் கொள்ளும் பொருட்களை மையப்படுத்தியவையே. அதேவேளை, அதுவே நமக்கு ஆபத்தானதாக மாறுகின்றமையை நாம் உணர மறுக்கின்றோம். இந்த உலகத்தை Digital World என அழைக்க தொடங்கி  தொழில்நுட்பத்தின் உச்சத்தை வைத்துள்ள நிலையில் அதுவே 'இலக்ரோனிக் கழிவுகளையும்'இது  இயற்கையிடம் இருந்து வளங்களைப் பெற்றுக் கொள்ளும் இந்த உலகம் அதனை மீளவும் பெற்றுக் கொடுப்பதில் அல்லது எதிர்கால சமூகத்திற்கு மிச்சம் வைக்கா மல் அதீத பாவனையின் விளைவால் இயற்கை சமநிலை குழம்பி இன்று 'காலநிலை மாற் றம் ' என்று  பிரதான பேசுபொருளாகிவிட்டது.

2030ஆம் ஆண்டளவில் யாரையும் பின்நிற்க விடுவதில்லை (No One Left Behind). எல்லோரையும் முன்னோக்கியே அழைத்து செல்லல் எனும் இலக்குடன் ஐக்கிய நாடுகள் சபை 17 இலக்குகளை அடையும் வண்ணம் தத்தமது நாடுகளில் அபிவிருத்தித் திட்டங்களை திட்டமிடுமாறும் நடைமுறைப்படுத்தமாறும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றது.

அவை 'நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் 2030'  ('Sustainable Development Goal 2030)என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டளவில் பத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் (Millenium Devlopment Goals) அறிமுகப்படுத்தப்பட்டு அது முழுமையாக எட்டப்படாத நிலையில் விரிவுபடுத்தப்பட்டதாக SDG -2030 என 2015-2030 இடையிலான 15 ஆண்டுகளில் அடையக்கூடிய இலக்குகளை தீர்மானிக்கிறது.

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள 17 இலக்குகளையும் இங்கு அலசுவதை விடுத்து  அதில் முக்கியமான இலக்கான 'காலநிலை மாற்றம்' (Climate Change) சாதாரண மனித வாழ்விற்கு சவாலான விடயமாகவும் மாறும் என்பதாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள்  90களிலேயே முன்வைக்கப்பட்டன.  இந்த climate change இலக்கினை விசேடமாக கொண்டு  2015ஆம் ஆண்டு G7 நாடுகள் ஒன்றிணைந்து பாரிஸ் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த மாற்றத்தின் பெறுபேறுகளையே இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.

இந்த இலக்கினை 90களின் ஆரம்ப காலத்திலேயே 'நிலைபேறான அபிவிருத்திக்கு' இயற்கையை பாதுகாத்து கொண்டு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் எனும் கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது.  இதன்போது, ஓசோன் படை குறித்து அதிகமாக பேசப்பட்டது.  பூமியில் இருந்து வெளியாகும்  இலக்ரோனிக் கழிவுகள் குறிப்பாக 'குளோரா, புளோராகளுடன்' கழிவுகள் ஓசோன் படையில் ஓட்டைகளை தோற்றுவித்து சூரியனில் இருந்து சில கதிர்களின் தாக்கத்தை அதிகரிப்பது பற்றி பேசப்பட்டது. ஆனால், அதுபற்றி யாரும் அக்கறை கொள்ளாத நிலையில் இன்று 25 வருடங்கள் கழிந்து அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியதாக இருக்கின்றது. 

கடந்த 25 வருடங்களில் இலக்ரோனிக் பாவனை, இறப்பர், பொலித்தீன் பாவனைகளில் இலங்கை அக்கறை காட்டத் தவறியது. உமா ஓயா, மேல்கொத்மலை போன்ற சுரங்க வழி நீர் மாற்று திட்டங்கள் இயற்கை சமநிலையை குறைக்கும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதிலும் அவை பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் இடம்பெறும் மண்சரிவுகளுக்கு உமா ஓயா திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட  சுரங்க அதிர்வுகளின் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல'பொலித்தீன்  பாவனையை பிரதானமாக சுட்டிக்காட்டலாம்.

'பொலித்தீன்' என்பது உக்கிப்போகாத ஒரு பொருள்.  அவற்றை அதிகம் பாவிப்பதனால் அவை செறிவாக சேர்த்து பூமியில் நீர் இயற்கையாக பாயும் திசைக்கு இடைஞ்சலாக இருந்து நீரோடும் திசைகளை மாற்றி விடுகின்றது. மறைந்த அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் மனைவி ஸ்ரீ மணி அத்துலத் முதலி பொலித்தீன் பாவனைக்கு முற்றாகத் தடையை ஏற்படுத்துவதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார் என்பது இங்கு நினைவூட்டத்தக்கது.
ஆனால், இன்றைய திகதியில் கட்சி வேறுபாடுகளுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் தொன் கணக்கிலான பொலித்தீன்களை தங்களது  கூட்டங்களின் போது அலங்கரிப்புக்காக பயன்படுத்தி அப்படியே சூழலில் விட்டுச் செல்கின்ற நிலைமையே இருக்கின்றது.

 அபிவிருத்தி குறித்து பேசும் திட்டமிடும், செயற்படுத்தும் அரசியல் தரப்பே இந்த பொலித்தீன் பாவனையை நிறுத்தும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும். ஆனால், பொலித்தீன் வியாபாரிகளிடம் கிடைக்கும் அனுசரணைக்காகவோ என்னவோ அது குறித்து வாய் திறப்பதாக இல்லை. மறுபுறத்தில் கடைகளிலும் சுப்பர் மார்க்கெட்டுகளிலும் பொலித்தீன் பைகளை தடை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக திரும்பவும் பாவிக்கக் கூடிய உக்கும் தன்மை கொண்ட மூலப்பொருளிலான பைகளை அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து பொலித்தீன் பாவனையை தொடர்ந்திருக்கும்  தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.  சட்டம் அதுவாக இருந்தால் அதனை மாற்றும்   தீர்மானங்களை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் உடையது.


ஒரு பக்கம் ஐ.நாவின் SDG 2030 இலக்குகளை அடைவதற்கு பயணிப்பதாக கூறும் அரசு மறுபக்கம் அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதியளிக்கின்றது.   Renewable energy என சொல்லப்படுகின்ற  சூரிய சக்தியின் உற்பத்தியை செய்வதற்கு அரசு பின்நிற்கின்றது.

எனவே 90களில் செய்திருக்க வேண்டிய விடயத்தை அன்று செய்யத் தவறியதால் அதன் விளைவை 2015 இல் அனுபவித்தோம்.  இப்போது 2030இல் எவ்வாறு காலநிலை மாற்றத்தில் இருந்து எம்மை காப்பாற்றிகொள்வது என திட்டமிட்ட கொள்கை தீர்மானத்தின் படி அபிவிருத்தி கோட்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க தவறினால் 2030ஆம் ஆண்டளவில் ஆண்டுக்கு ஒரு முறை வரும் அனர்த்தங்கள் அப்போது மாதத்திற்கு ஒரு முறை வரும் நிலை ஏறபட்டு விடும். முன்னைய காலங்களில் மன்னர்கள் குளங்களை கட்டினார்கள் என பெருமையுடன் பேசுகின்றோம். அவை நீரைச் சேமித்தது மட்டுமல்ல பூமியின் ஈரத்தன்மையை பாதுகாக் கவும் வரட்சியை கட்டுப்படுத்தவும் உதவின.

இந்த குளங்களை புனரமைத்து அதனை நோக்கி ஆற்றுப்படுக்கை  அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்து மரங்களை நடுவதன் மூலம் இயற்கை சமநிலையில் பேணுவது என நீண்டகால அபிவிருத்தி திட்டமிடலை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தினது பொறுப்பு இத்தகைய நீண்டகாலத்திட்டங்களை நோக்கிய    தீர்மானங்களை நிறைவேற்றாத அரசுகள் தங்களது இருப்புக்காக தங்களது பலத்தை காட்டுவதற்கு பொலித்தீனை கூட தடை செய்ய முன் வராவிட்டால் நிலைபேறான அபிவிருத்தியும் இல்லை நிலையான ஆட்சியும் இல்லை. நீண்டகாலத்தில் தமக்கான நாடும் இல்லை என்ற நிலையே தோன்றும்.

நன்றி - வீரகேசரி
Sri Lanka Flood 2017 3W With Table 300517 by SarawananNadarasa on Scribd

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates