Headlines News :
முகப்பு » » தீண்டாமை வந்த கதை மாட்டிறைச்சி உணவு ஹிந்து கலாச்சாரமே! - ஜே.மோஹன்

தீண்டாமை வந்த கதை மாட்டிறைச்சி உணவு ஹிந்து கலாச்சாரமே! - ஜே.மோஹன்



பசுப் பாதுகாப்புக் கோரி சென்னை பனகல் பூங்காவிலிருந்து வள்ளுவர் கோட்டம் வரை செப்டம்பர் 16, 2000 அன்று நடந்த பேரணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து ஹிந்து பாசிஸ் முகாமை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருக்கும் மடத் தலைவர்கள், ஜயேந்திரா மற்றும் விஜயேந்திரா ஆகிய இருவரும் தலைமையேற்று நடத்தினார்கள். (1)  பிராணிகள்-வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், இறைச்சிக்காக மாடுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு பெரு நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவதையும், அடிமாடுகளை தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் அறுப்பதையும் எதிர்த்து அப்பேரணியை நடத்துவதாகக் கூறியிருக்கிறார்கள். இதன் பின்னணியாக, ஹரியானாவில் இறந்த மாடுகளின் தோலை உரித்துக் கொண்டிருந்த ஐந்து தலித்துக்கள் ஹிந்துயிஸத்தின் கூலிரவுடிகளான விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள் போன்ற அநாகரீகமான மூர்க்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதைப்போலவே, இந்தியா முழுவதும் தலித் குடிகள் தாக்கப்படுவது, மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கணிசமாக உயர்ந்திருக்கிறது.

பசுவதைச் சட்டத்தை நேரடியாக அமுல்படுத்துவதற்கான தேசிய அளவிலான எதிர்ப்பை சந்திக்க முடியாத ஹிந்தத்துவ அரசு, பிராணிகள் வதை சட்டம் என்ற போலித்தனமான வேஷதாரித்தனப் போர்வையில் மறைமுகமாகவும், நேரடியாகவும் போலீஸ்களின் அத்துமீறல்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். வெளி மாநிலங்களுக்கு சுலபமாகக் கடத்தப்படும் சத்துணவு அரிசி மற்றும் பருப்பு வகைகளை தடுக்க முற்படாத போலிஸ்துறை, தற்போது லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் மாடுகளைக் கண்டவுடன் பிராணிகள் வதைத்தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.

போலீஸ் துறையினர் கையூட்டு ஏதேனும் வாங்கிக் கொண்டு இத்தகைய லாரிகளை விட்டுவிட்டாலும், 'காக்கி கால்சட்டைக்காரர்கள்’ எனும் ஹிந்து தடியர் படையான ஆர்.எஸ்.எஸ். வெறிக் கும்பல்கள் தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு வருகிறார்கள் ஒரு பெண் பாலியல் வன்மத்திற்கு உட்படுத்தப்படும் போதும், கடத்தப்படும்போதும் அல்லது ஹிராயின், அபின் போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்படும்போதும், தடுத்து போலீஸ் துறைக்கு தெரிவிக்கும் மனோநிலை இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகள்(?), மாடுகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது மட்டும் வெறியுடன் செயல்படுவது ஏன்? இறைச்சிக்காக, இரண்டு சக்கர வாகனங்களில் பத்திலிருந்து இருபது ஆடுகள் வரை ஒரே வாகனத்தில்) ஏற்றிச் செல்லுவதைத் தடுக்காதவர்கள், நாட்கணக்கில் வேன்களிலும், லாரிகளிலும், இறைச்சிக்காக ஏற்றிச் செல்லப்படும் கோழிகளைத் தடுக்காதவர்கள், மாடுகளை ஏற்றிச் சென்றால் மட்டுமே தடுப்பது ஏன்? கோழிகளும், ஆடுகளும் இன்ன பிற ஜீவராசிகளும், பிராணிகள் தடுப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லையே! ஏன்? மாடுகள் வகையிலும், பசுக்கள் மட்டுமே இந்த ஹிந்துக்களின் ஆர்எஸ்எஸ்காரர்களின் கண்களில் விழுகிறதே! ஏன்? இந்திய பூர்வ குடிகளான எருமைகள் உயிர்கள் இல்லையா? எமனின் வாகனம் எருமை புனிதம் இல்லையா? பன்றி விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்று பன்றி புனிதம் இல்லையா?

எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராய் இருந்தபோது தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சி குதிரைவதைச் சட்டம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சி சார்பில் நூதனமாக எதிர்ப்புத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான். முதல்வரைப் பார்த்து, ‘குதிரையை மனிதன் வதைத்தால் கடும் தண்டனை. ஒத்துக் கொள்கிறோம். ஆனால், குதிரை மனிதனை உதைத்தால் யாருக்கு தண்டனை?’ என்று கேட்டார். சட்டசபையே குலுங்கிச் சிரித்தது. இது சிரிப்பதற்காக அல்ல. மாடுகளை விட கீழ்த்தரமாக மனிதர்கள் நடத்தப்படுவதை சிந்திப்பதற்காகத்தான்.

அப்படியானால், மாட்டிறைச்சிக்கான எதிர்க்கலாச்சாரக் கலகம் ஹிந்துக்களிடையே பரப்பப்பட்டு வருவதற்கான காரணத்தை தெளிவாக்கும் அவசியம் இருக்கிறது. தலைநகர் டெல்லியிலும், நாட்டின் பல பகுதிகளிலும் மாட்டிறைச்சியைக் கொண்டு செல்லும் மூன்று சக்கர வாகனங்களைத் தாக்கி ஒட்டுநர்களைக் கொன்று வருகிறார்கள் ஆர்.எஸ்.எஸ். கொலைஞர்கள். மாடுகளைக் காப்பாற்றும் எண்ணத்தில் மனிதர்களின் இரத்தம் குடிக்கும் இத்தகைய மதவெறி ஒநாய்களின் நோக்கம் என்ன? பாஜக அரசியல் குடையின் கீழ் நடந்து வரும் இத்தகைய மக்கள் உணவுக் கலாச்சாரத்திற்கான எதிர் கலாச்சாரக் கலகம் நாடு முழுவதும் முடுக்கி விடப்பட்டதன் உள்நோக்கம் என்ன?

தற்போது மாட்டிறைச்சி உண்ணுகின்ற கலாச்சாரம் யாரிடையே இருக்கிறது? தலித் குடிகள் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் போன்றவர்களே வெளிப்படையாக மாட்டிறைச்சி உண்பவர்கள். சில ஜாதி ஹிந்துக்கள் மறைமுகமாகவும், கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வெளிப்படையாகவும் உண்கிறார்கள் உயர்த்திக்கொண்ட போலி கலாச்சார ஜாதி ஹிந்துக்களும் பிராமணர்களுடன் சேர்ந்து தலித்-முஸ்லீம் கிறித்தவர்களின் மீது திணிக்கப்படும் நேரடியான மற்றும் மறைமுகப்போரே இந்த மாட்டிறைச்சி எதிர்க் கலாச்சாரம், கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும், மிசோராமிலும், தமிழகத்தின் வடக்குப் பகுதிகளிலும் மற்றும், அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட மேலைய நாடுகளில் எல்லாம் பொருளீட்டச் சென்றிருக்கும் பிராமண ஜாதி ஹிந்துக்கள் உட்பட எல்லோராலும் பாரபட்சமின்றி உட்கொள்ளப்படும் உணவு மாட்டிறைச்சி சென்னை மற்றும் மற்ற எல்லா நகரங்களிலும் இப்போது துரித நேர உணவு சாலையோரக் கடைகள் ஏராளமாக ரோந்து வருகின்றன. இக் கடைகளில் கிடைக்கக் கூடியது மிகவும் குறைந்த விலையில் அதிக சக்தி தரக்கூடிய, ருசியான ஒரு உணவு வகை என்றால் மாட்டிறைச்சிதான். இது உலகம் தழுவிய உணவுக் கலாச்சாரமாக இன்று திகழ்கிறது. வடகொரியாவில் பட்டினியாகக் கிடக்கும் மக்களுக்கு தென்கொரியா ஆயிரக் கணக்கில் இறைச்சி மாடுகளை அனுப்புகிறது. உலகையே இந்தியா உட்பட) தன் காலடியில் வைத்திருந்த பிரிட்டனின் பிரதான உற்பத்தி மாட்டிறைச்சி ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஹிந்துக்கள், இறைச்சி உணவாக உட்கொள்வதெல்லாம் மாட்டிறைச்சிதான். இந்த நாடுகளின் மீது மாட்டிறைச்சிப் போரை இந்தியா தொடுக்க முடியுமா? மேலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் பொருளாதாரம் போன்றவற்றில் முதல் நிலையில் இருக்கும் அய்ரோப்பியஅமெரிக்க நாடுகள் மாட்டிறைச்சியையே பிரதான உணவாகக் கொண்டிருப்பதை அறிக, ஒரு கிலோ மாட்டிறைச்சி 15 கிலோ கோதுமைக்குச் சமமான கலோரியயைக் கொடுப்பதாக உணவு அறிவியலாளர் கூறுகின்றனர். அத்தகைய மாட்டிறைச்சி தற்போது ஹிந்தத்துவ அரசாட்சியின் சனாதன அதத்துவங்களையும், அவற்றின் மத-நீதி முதலாளிகளான சங்கரர்களின் செல்லரித்துப்போன அத்வைத கருவறைகளையும் தீட்டுப்படச் செய்திருக்கின்றது. இதனால், ஹிந்து சறைக்குள்ளிலிருந்து எழுந்திருக்கும் எதிர்க் கலாச்சாரத்திற்கு ஒரு எதிர் புரட்சியை செய்வதற்கு முன்னால், மாட்டிறைச்சி இந்திய மக்களிடையே எப்படி வந்தது? இதை ஹிந்துக்கள் எனும் ஜாதிய மக்கள் கைவிட்டது எப்போது? தற்போது மாட்டிறைச்சி விவகாரம் இந்திய அரசியலில் முடுக்கிவிடப்பட்டதன் பின்னணி என்ன? என்பதையெல்லாம் ஆய்ந்தறிவது அவசியமாகும்.

19-ம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும், அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த அரசியல் ஆதாயங்களுக்காக, பசுவதை தடுப்பு விவகாரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. நீச்சமனிதர்கள் என்று புறந்தள்ளப்பட்ட தலித் குடிகளின் இழிந்த உணவாக மாட்டிறைச்சி கற்பிதம் செய்யப்பட்டது. மாட்டிறைச்சி உண்ணும் மக்கள் மீது இதையே அடிப்படையாக வைத்து ‘சுத்தமில்லாதவர்கள் அல்லது 'அசுத்தமானவர்கள்’ என்ற மனோ ரீதியான வெறுப்பு ஹிந்துக்களிடையே கற்பிதம் செய்யப்பட்டது. மாட்டிறைச்சி உணவுக் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்தே தீண்டாமையும் வலிமையாக்கப்பட்டது என்பது அரசியல் சுதந்திரப் போராட்ட காலகட்டங்களில் தோன்றிய ஹிந்தத்துவ அரசியலின் கொடுமையாகும். கோல்வால்கர், வினாயக் தாமோதர் மூஞ்சே போன்றவர்கள் இவ்வுணவுக் கலாச்சாரத்தை வெகுவாக மற்றும் லகுவாக கலாச்சார தேசியம் என்கிற பாசிஸப் போர்வைக்குள் கொண்டு வந்து வெற்றிக் கண்டனர். முதல் வெற்றி மாட்டிறைச்சி உணவுக் கலாச்சாரத்தை சமூக அந்தஸ்துக்காக தூக்கி எறிந்தனர் ‘சத்-சூத்திர்கள் என்றழைக்கப்பட்ட கடைநிலை பணிவிடை ஜாதிக் குழுக்கள் இரண்டாம் வெற்றி, ‘சத்-சூத்திரர்கள் பல்வேறு கட்டங்களில், மாட்டிறைச்சியைத் தின்று வந்த மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக செயல்படுத்தப்பட்டனர். மூன்றாம் வெற்றி இறைச்சிக்காகவோ, தோலுக்காகவோ, மாட்டை அறுக்கும் தலித் குடிகளை பசுவதைச் சட்டம் என்ற ஒன்றின் கீழ் கைது செய்வதும், கொலை செய்வதும் நியாயப்படுத்த முடிகிறது. பசுவின் உயிரை விட மனிதன் உயிர் துச்சமென ஆகிவிட்டது.

இன்றைக்கு பலமாக அடித்தளமிட்டுக் கொண்ட ஜாதியம் அல்லது ஹிந்துத்துவம் அரசியல் ரீதியாக அதிகார வேட்டையில் இறங்கிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தகைய அதிகாரமும், அகங்காரச் செருக்கும் ஜாதி-மதம் பற்றிய பொய்யும் புளுகும் ஹிந்துத்துவத்தை வளர்க்கும் அல்லது ஹிந்துத்துவம் அல்லாத இனங்களையும், சிறுபான்மைபடுத்தப்பட்ட கலாச்சாரங்களையும் அழிக்கும் என்பது ஹிந்து சாம்ராஜ்யர்களின் பகற்கனவே.

ஹிந்து பாசிஸ் முகாம்களை முன்னின்று நடத்திச் செல்ல தலித் குடிகளையும் தலைமைப் பொறுப்பேற்கச் சொல்லி ஜாதிய ஒணாநியம் தலை விரித்தாடுகின்றது. பாஜக-வின் தலைவராக ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தலித் கருத்தியலுக்கும் எழுச்சிக்கும் மிகப்பெரும் சவாலாக இருந்ததா என்றால் இல்லை என்றே கூறிவிடலாம். ஏனென்றால், தாழ்த்தப்பட்ட தீண்டப்படாதவன் எனப்படும் திரு. பங்காரு லஷமன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பலவருடங்களாக பயிற்சி பெற்றவர் ஜாதி எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பெல்லாம் இவருக்கு கிடையாது. இவருக்கு தலித் குடிகளின் ஒட்டு வேண்டும். தலித் குடிகளின் ஒட்டுகளை ஹிந்து பாசிஸ் முகாமின் வெற்றிக்கு பணையம் வைக்க வேண்டும். ஒரு ஆதாய பெருமுதலையாகவே இவர் செயல்பட முடியும். இடத்திற்கேற்ப வண்ணம் மாற்றிக்கொள்ள முடியும். இத்தகைய பச்சோந்திகள், தலித் குடிகளின் ஈரல் புண்கள். ஆர்.எஸ்.எஸ் கூடாரத்திலிருந்து வெளிவந்திருக்கும் இத்தலைவர் தலித் குடிகளின் ரத்தம் குடித்துக் கொண்டிருக்கும் இவரின் ஹிந்துத்துவ அரசியல் சகாக்களின் உத்தரவை உதறித் தள்ள முடியுமா? தலித் மற்றும் சிறுபான்மையினரின் உணவுக் கலாச்சாரத்தில் அரசும், மத அமைப்புகளும் தலையிடாமலிருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க முடியுமா? இருந்தாலும் பங்காரு லசுஷ்மண் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக வெகுவிரைவிலேயே பதவி இறக்கப்பட்டார் என்பது ஜாதியில் ஹிந்துத்துவம் உறுதியுடன் இருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.

மாட்டிறைச்சி என்பது ஒரு காலத்தில் வந்தேறிகளான ஹிந்து க்களால்தான் அன்றைய இந்தியர்களான தொல் புத்த மக்களிடையே பரப்பப்பட்டது. பகவான்புத்தர் காலத்தில், கேவஷ்தி ஆநிறை கவர்தல்) என்கிற முரட்டுக் கலாச்சாரத்திற்கான யாகத்தில், மாட்டை அடித்து, தீயிலிட்டுச் சுட்டுத் தின்று வந்த வந்தேறி ஹிந்துக்கள் உயிர்க்கொலைப் புரிதலை தவிர்த்துக்கொள்ள, அரசையும், மக்களையும் கெளதம புத்தர் வேண்டிக் கொண்டதன் விளைவாக, பிற்காலத்தில் புத்த பேரரசர் சாம்ராட் பிய்யதஸி அசோகர் தனது வரலாற்று கல்வெட்டுகளின் மூலம், விவசாய விருத்திக்கு பெரிதும் பயன்படும் எருதை உணவுக்காக பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். புத்தனை வாழ்வியல் நெறியாகக் கொண்ட விவசாயிகள் வேளாண்மைப் பெருக உதவிய எருதை வணங்கினர். அது வரைக்கும் மாட்டிறைச்சியையேப் பிரதான உணவாகக் கொண்ட பிராமணர்களும், மற்ற ஜாதி ஹிந்துக்களும் எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றங்களினால், புத்த தம்மத்தை அடியொற்றி வாழும் நிலையால், பசுவை மட்டும் உண்ணக்கூடாது என்று மத சடங்குகளின் மூலம் "பசுவதை தடுப்பை பரப்பினர். இறக்கும்வரை காமதேனுவாக இருக்கின்ற பசு, இறந்தபின்பு தீண்டத்தகாத ஒன்றாக மாறுகிறது. இதைத் தீண்டி அப்புறப்படுத்தி அதன் தோலின் உபயோகத்தை அறிந்திருக்கும் மக்களை தீண்டாதீர்’ என்று கூறி இன்றும் அதம்ம வழியில் செல்லும் ஹிந்துக்கள் தீண்டாமையையே முதன்மைக் கடவுளாக வணங்குவது அவர்களின் இணைபிரியா அறியாமை என்பதைவிட, அவர்களின் தெளிவான ஏமாற்று வேலை என்றே கூறலாம். அஸ்வ மேத யாகத்தில், குதிரைகளையும், மாடுகளையும் பலியிட்டு, தீயிலிட்டுத்தின்று தீர்த்த 'கார்னிவோரஸ் ஹிந்துக்கள், இன்றைக்கு மாட்டை மட்டும் அடித்துத் தின்பதிலிருந்து தடைபோட்டுக் கொண்டனர். இத்தடையை மாட்டிறைச்சியை பிரதான இறைச்சி உணவாகக் கொண்டிருக்கும் தலித் மற்றும் ஒருசில குடிகளின் மீது மட்டுமே திணிக்கின்றனர். ஆனால், கோழி குதிரை, ஆடு, மான், புலி கரடி உடும்பு, பன்றி, மீன், நண்டு, எலி, பாம்பு உள்ளிட்ட பல்வேறு ஜீவராசிகளைக் கொன்று தின்று தீர்க்கிறார்கள் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் கூட மாட்டிறைச்சி உட்கொள்பவர் தான். இவர்களை தீண்டப்படாதவராகவோ, தாழ்ந்த ஜாதியாகவோ கருதுவதில்லை. ஆனால் தலித் குடிகள் மட்டுமே தீண்டப் படாதவர்களாக கருதப்படுவதற்குக் காரணம் மாட்டிறைச்சிதான் என்று கதைக்கிறார்கள். பல கட்டுரைகளைத் திணிக்கிறார்கள். இக் குடிகள் ஜாதியை அடிப்படையாக்கிக் கொண்ட ஹிந்துயிஸத்தை உறுதியுடன் எதிர்த்த புத்த தம்மத்தைச் சேர்ந்த பூர்வீகிகளின் வழித்தோன்றல்கள் என்பதனால் தானேயொழிய, இவர்கள் இழிவுக்கு காரணம் மாட்டிறைச்சி அன்று.


ஆகவே, பசுவதைச் சட்டம் என்பது தற்போதைய தலித் உணவுக் கலாச்சாரத்திற்கு எதிராகவும் சிறுபான்மையினருக்கு எதிராகவும், தோற்றுவிக்கப் பட்ட புற அரசியல் போர். இத்தகைய ஹிந்து பாசிஸ் முகாம்களின் வியூகங்களை புகுந்துடைத்து நொறுக்காவிட்டால், இன்னும் பத்தாண்டுகளில் மத தேசியவாதிகளான ஜாதி ஹிந்துக்கள், கோல்வால்கர், வினாயக தாமோதர் போன்றோரின் ஹிந்து ராஷ்டிர கனவு நினைவு எல்லாம் நிறைவேறிவிடும் அபாயத்தை நெருங்க வேண்டியிருக்கும்.

ஹிந்துக்கள் மாட்டிறைச்சியை தின்றவர்கள், மாட்டிறைச்சியை இந்திய உணவுக் கலாச்சாரத்தில் அறிமுகப்படுத்தியவர்கள் என்கிற அந்தஸ்தைப் பெற்றவர்கள். இதற்கு ஹிந்துக்களின் புனித நூல் திரட்டுக்களும், பெருங் கதையாடல், செவிவழி உரையாடல் கட்டுக் கதைகளுமே சாட்சியம் தருகின்றன. சதபத பிராமண (satapatabrahmana)வில் இரண்டு பகுதிகள் மிருக பலியையும், குறிப்பாக மாட்டிறைச்சியையும் உள்ளிழுத்து புனையப்பட்டிருக் கின்றன. மாடு விவசாயப் பொருளாதாரத்திலும், மனித வாழ்வின் எல்லா அங்குலங்களிலும் உதவியாக இருப்பதால், மாட்டிறைச்சியை உண்ணுதல் என்பது, எல்லா செல்வங்களையும் உண்டு தீர்த்தல் என்பதாகும். ஆகவே மாட்டிறைச்சியை பிரதான உணவாகக் கொண்டிருந்த, அத்வார்பு போன்ற ஆரியர்கள் இதை உண்ணலாகாது என சதபத பிராமணாவின் கதையாடல் (2)  சொல்கிறது. மாட்டை இறைச்சிக்காக அழித்தல், எல்லாசெல்வங் களையும் அழித்தல் போன்றது என்பதால், மனித வாழ்வின் அழிவை எதிர் நோக்க வேண்டிய நிலை வரும் என்று அபஸ்தம்ப தர்ம சூத்ரா விளக்கிக் காட்டி மாட்டிறைச்சி தின்பதை தடைசெய்யச் சொல்கிறது. (3) ஆனால், வேத கால கட்டத்தில், அதாவது கி.மு. 1500-லிருந்து கிமு.1000-க்கு இடைபட்ட காலத்தில், மட்டுமின்றி புத்திஸ்டு யுகம் எனச் சொல்லப்படும் காலம் வரை ஆரியர்கள் எனப்பட்ட முரட்டு ஹிந்துக்கள் மாட்டைக் கொன்று தின்றனர். (4)  பசுவானது புனிதம் ஆதலால் அதை உண்ணுதலே புனிதம் என்று நம்பியதால், (5)  பசுக்கறி ஹிந்துக்களின் உணவுக் கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்திருந்தது. இதற்கு மாறாக, இந்தியப் பூர்வீகிகள் பெரும்பாலும் விவசாயக் குடிகளாக இருந்தமையால், எருதை மிகவும் புனிதமாக நினைத்துப் போற்றியதால் அதை கொல்லக்கூடாது எனவும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டில் எருது மிக முக்கியம் வாய்ந்த பிராணி எனவும் ஹிந்துக்களிடம் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், உணவுக்காகவும், பலியிடுவதற்காகவும் மாட்டைக் கொல்வதை ஹிந்துக்கள் தொடர்ந்து செய்து வந்தனர்.

ரிக் வேதம் (6) எனும் முதல் வேதத்தில், இந்திரன் 15 முதல் 20 மாடுகளை கொன்று சமைத்ததாகக் கூறுவான். ஹிந்து தேவர்களின் ராஜன் இந்திரனே மிகச் சிறந்த மாட்டிறைச்சி உண்ணும் பலசாலியாக ரிக் வேதம் 10-வது மண்டலத்தில் பல பாடல்கள் காட்டுகின்றன. அக்னி தெய்வத்திற்காக குதிரைகள், எருதுகள் அடிமாடுகள் பசுக்கள் எல்லாம் பலியிடப்பட்டன (7)  என்றும் அதிலும் பிராதான உணவுக்காக பசுவைக் கொல்வதற்கு வாளும், கோடாரியும் பயன்படுத்தப் பட்டதாக ரிக் வேதம் (8) கூறுகிறது.

பலியிடுவதிலும் எந்தெந்த வகையான மாடுகள் எந்தெந்த கடவுளுக்கு பலியிட வேண்டும் எனும் விவரங்களை தைத்திரிய பிராமணா விவரிக்கிறது. குள்ளவகை எருதுகளை விஷ்ணுவுக்கு பலியிட வேண்டும். வளைந்த கொம்புடைய தீபம்போல் நெற்றி அமைந்த காளை இந்திரனுக்கு பலியிட வேண்டும். அதே போல் கருப்பு பசு பூஷனுக்கும், சிவப்பு பசு ருத்திரனுக்கும் பலியிட வேண்டும். இன்னும் பஞ்சசாரதிய-சேவா எனும் பலி பூஜையில், ஐந்து வயதுடைய 17 முசப்பு இல்லாத குள்ளவகை மாடுகளும் மற்றும் எண்ணற்ற குள்ளவகை இளம் பசுக்கன்றுகளும் பலியிடப்படும் ஹிந்துக்களின் கொடிய வழக்கத்தை தைத்திரிய பிராமணா படம் பிடித்துக்காட்டுகிறது. (9)

பசுவும், எருதும் புனிதம் என்பதனாலேயே அவற்றின் இறைச்சியை உட்கொள்ள வேண்டும் (வேரி சூத்ரா (10)  வலியுறுத்துகிறது. மிக புனிதமாக கருதப்படும் மதுபார்க்கா எனும் சிறப்பு உணவு பிராமணர் ஆச்சாரியர்குரு) ஹிந்து குருகுல சீடர்கள், அரசர் ஆகியோர்க்கு வழங்கப்படுவது பல கிரஹ்ய சூத்ரா ஸ்லோஹங்களின் மூலம் அறிய முடிகிறது.(11)  மதுபார்க்கா எனும் உணவு, பசுக்கறியுடன் தேனையும் தயிரையும் கலந்து சமைக்கப்பட்ட உணவு என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய இன்றியமையாத ஒன்று இன்னும் சொல்லப்போனால், ஹிந்துக்கள் தங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் சிறப்பு உணவாக பசுக்கறியைத் தான் கொடுத்து உபசரித்திருக்கிறார்கள். இதற்கு உகந்த சான்று ‘கோ-க்னா" எனப்படும் வழக்கம். விருந்தினருக்கு பசுக்கறி விருந்தோம்பல் என்பது உபசரிப்போரின் கவுரவப் பிரச்சனையாக கருதப்பட்டாலும் விருந்தினர் தமது வீட்டிற்கு வருகிறார்கள் என்று தெரிந்ததும், தொழுவத்தில் கட்டி வைத்த பசுவை அவிழ்த்து விட்டு தப்பிக்க விடுவார்களாம். இதற்கு பெயர்தான் கோ-க்னா (go-ghna). (12)

இவ்வாறு தான் ஹிந்துக்களின் மாட்டிறைச்சிக் கலாச்சாரம் பழங்ககாலத்தில் ரத்தக் களறியாய் களைகட்டி இருந்தது. இக்கொலைஞர்களை திருத்தி உயிர்க்கொலை, பலியிடுதல் போன்ற கொடிய வழக்கங்களில் இருந்து வெளிக்கொணர வேண்டி புத்த தம்மம் எழுச்சியுற்றபோதுதான், ஹிந்துயிஸமும் தன் பேருக்கு மாட்டிறைச்சி உண்பதை குறைத்துக் கொண்டது. பின் அதையே பெரும் அரசியலாக்கி அவ்வழக்கத்தை நிறுத்திக்கொண்டது. ஆனால், கொல்லாமையைக் கடைபிடிக்கும் வகையில், இறந்த மாட்டை உண்ணும் வழக்கம் புத்த குடிகளிடம் இருந்து வந்ததால், அவ்வழக்கத்தையே அடிப்படையாக்கி அவர்களின் மீது தீண்டாமை எனும் கொடிய வழக்கத்தைத் திணித்தனர். ஹிந்துக்களின் பல்வேறு சூழ்ச்சிகளுக்கும் கோழைத்தனமான கெட்ட மூடப் பழக்க வழக்கங்களுக்கும் இரையாகி வீழ்த்தப்பட்டது புத்த தம்ம அரசுகள். இதைத் தொடர்ந்து புத்த தம்மமும், அதன் வழி நின்ற குடிகளும் வீழ்ச்சியுற்றனர். இவர்கள் தான் இன்றைக்கும் ஹிந்துயிஸத்தின் கோழைத்தனமான சூழ்ச்சியின் காரணமாக இந்தியாவெங்கும் புரட்சியை எதிர்நோக்கி விழித்துக் கொண்டிருக்கும் தலித் எனும் மானுடர்கள். தலித் குடிகள் இனி ஹிந்துயிஸத்தின் சுமக்க முடியாத சுமையாகத்தான் (Dalits are here after Hinduism'sburden) இருக்க முடியும். ஏனெனில், இனி இவர்களையும், இவர்களின் சமூக விடுதலையையும் ஜாதி ஹிந்துக்கள் தமது கோயில் கர்ப்பகிரஹத்தில் தீண்டாமை வன்மத்தோடு சேர்த்து வைத்து பூட்டி வைக்க முடியாது.

அடிக்குறிப்புகள்
  1. தினமணி செப்டம்பர் 17, 2000
  2. சதபத பிராமணா
  3. அபஸ்தம்ப தர்ம சூத்ரா 15:1729
  4. Staurt Piggott, Prihistoric India, Middlesex, 1950, pp.263-264
  5. அபஸ்தம்ப தர்ம சூத்ரா, மே.கு
  6. ரிக் வேதம் X 86.14
  7. ரிக் வேதம் X 9114
  8. ரிக் வேதம் X 726
  9. தைத்திரிய பிராமணா வின் பெரும்பாலான பாடல்களில் எந்தெந்த வகை மாடுகள் எந்தெந்த கடவுளுக்கு பலியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  10. வேரி சூத்ரா 14,1529
  11. மே.கு
  12. மே.கு


"தலித் குடிகளின் மறுக்கப்பட்ட வரலாறு - மோஹன் (ஜே)" என்கிற நூலிலிருந்து
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates