Headlines News :
முகப்பு » , , , , » இலங்கை ஊடகத்துறையின் தந்தை பெர்கியுசன் - என்.சரவணன்

இலங்கை ஊடகத்துறையின் தந்தை பெர்கியுசன் - என்.சரவணன்

அறிந்தவர்களும் அறியாதவையும் - 13
19 – 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கை பற்றிய ஆய்வுகளை செய்பவர்கள் துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கு பெரும்பாலும் “பெர்கியுசன்ஸ் டிரெக்டரி” யை கட்டாயம் பயன்படுத்தியிருப்பார்கள். இலங்கையின் தொகைமதிப்பு புள்ளிவிபர சேகரிப்பும், வெளியீடும் 1871 இலேயே ஆரம்பித்துவிட்டன. அதேவேளை 1944 டிசம்பர் மாதம் தான் டொனமூர் அரசியல் திட்டம் அமுலில் இருந்த காலத்தில் இலங்கை குடிசன மதிப்பீட்டு திணைக்களம் (Census Department) ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது வரை இலங்கையின் மக்கள், சமூகம், வர்த்தகம், விவசாயம், மருத்துவம், வரலாற்றுக் குறிப்பு என அத்தனையையும் துல்லியமாக பல நூற்றுக்கணக்கான பக்கங்கங்களில் பல வருடங்களாக தந்தவர் தான் பெர்கியுசன்.

சிலோன் ஒப்சேவர் நிறுவனத்தால் (The Ceylon Observer Press) தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த Ferguson's Ceylon Directory என்கிற மிகப்பிரசித்தி பெற்ற தகவல் நூல் பல ஆண்டுகளாக வெளிவந்திருக்கிறது.

1859 ஆம் ஆண்டு வெளிவந்த அதன் முதல் பதிப்புக்குப் பின்னர் 1999ஆம் ஆண்டு 127 வது பதிப்புகளைக் கண்டது. அது தான் அதன் இறுதி பதிப்பும். அதுவரையான ஒவ்வொரு பதிப்பும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது. லேக் ஹவுஸ் நிறுவனமே பிற்காலத்தில் அதனை வெளியிட்டு வந்தது. 1959 இல் வெளியான 1465 பக்கங்களைக் கொண்ட பதிப்பில் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் பற்றிய விபரங்களுடன் அதன் வரலாறையும் சொல்கிறது. இலங்கையில் ஆங்கிலேயர் கால்பதித்தது முதல் அனைத்து விபரங்களையும் இவற்றில் சேகரித்து தொகுக்கப்பட்டன.

இதில் வெளியிடப்பட்ட தகவல்களில் தேயிலைத் தோட்டங்கள், அதன் உரிமையாளர்கள், அங்கு ஈடுபடுத்தப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் நிறையவே உள்ளதால். இந்திய வம்சாவழி மக்களைப் பற்றிய வரலாற்று ஆய்வுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்ட நூல்களாக விளங்குகின்றன. இந்நாட்டின் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு இது ஒரு பொக்கிஷம். சாதியம் பற்றிய விபரங்கள், முஸ்லிம் சமூகத்தினரின் குடியேற்றம் போன்ற விபரங்கள் பல கூட அடங்கியுள்ளன.

சிலோன் டிரக்டரியின் ஆரம்ப கர்த்தா ஏ.எம்.பெர்கியூசன் (Alistair Mackenzie Ferguson). 

ஏ.எம்.பெர்கியூசன் 1816இல் ஸ்கொட்லாந்தில் பிறந்தார். 1837இல் அவர் இலங்கை வந்தபோது அவரது வயது 21. முதல் ஒன்பது ஆண்டுகள் அவர் ஒரு தோட்ட உரிமையாளராகவும், சுங்க அதிகாரியாகவும், நீதவானாகவும் கடமையாற்றிக்கொண்டே கொழும்பு ஒப்சேர்வர் பத்திரிகைக்கும் எழுதிவந்தார்.

முதலாவது ஒப்சேவர் பத்திரிகையின் முகப்பு
1834 ஆம் ஆண்டு வாரப் பத்திரிகையாக வெளிவந்த ஒப்சேவர் வார இதழை 1836 ஆம் ஆண்டு 120 பவுண்களுக்கு டாக்டர் கிறிஸ்டோபர் எலியட் (Dr. Christopher Elliott) வாங்கியிருந்தார். கொழும்பு ஒப்சேவர் என மாறிய இப்பத்திரிகையை 24 ஆண்டுகள்  நடத்தினார். ஏ.எம்.பெர்கியூசனை 1846 இல் இணை ஆசிரியராக அதில் இணைத்துக்கொண்டார்.

எலியட் ஒரு தீவிர விமர்சகராக இருந்தார். குறிப்பாக 1848 ஆண்டு காலப்பகுதியில் மலையகப் பகுதிகளில் நிகழ்ந்த கிளர்ச்சியை அடக்கி அதில் கைது செய்யப்பட்டவர்களை இராணுவச் சட்டத்தின் மூலம் சுட்டுக்கொல்லும் ஆணை பிறப்பிக்கப்பட்ட விதம் போன்றவற்றை கடுமையாக எலியட் விமர்சித்தார். மேலும் புதிய வரி முறையை எதிர்த்து கொட்டா வீதியிலிருந்து கோட்டை கவர்னர் மாளிகை வரை ஊர்வலம் நடத்திய மக்களை சுட்டுக்கொல்ல ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தது. அந்த ஊர்வலம் குறிப்பிட்ட இடத்தை அடைவதற்குள் தடுத்து நிறுத்தினார் டொக்டர் எலியட். அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இப்படி தலையீடு செய்துகொண்டிருந்த இந்த பத்திரிகை தடை செய்யப்படுவதற்கான நிலைமைகள் தோன்றின. 

இத்தகைய சூழலில் எலியட் தனது சக ஊடக நண்பரும் துணிச்சல் மிக்கவரும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவருமான பெர்கியூசனுக்கு 1859 இல் அது 1200 ரூபாவுக்கு (120 பிரிட்டிஷ் பவுன்கள்) விற்றார்.

ஒரு நிபுணத்துவம் பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவரான அவர் அதன் தலைமை பிரதம ஆசிரியராக ஆகி முழுமையாக முழு நேர ஊடகவியலாளராக ஆனார். 1867 இல் “கொழும்பு ஒப்சேர்வர்” (Colombo Observer) “சிலோன் ஒப்சேவர்” (Ceylon Observer) என பெயர் மாற்றம் கண்டது. 

ஜோன் பெர்கியூசன் (John Ferguson)
பத்திரிகையை அவர் கையேற்ற இரு வருடங்களில் 1861இல் தனது மருமகனான ஜோன் பெர்கியூசனை (John Ferguson) தனக்கு உதவியாக இலங்கைக்கு அழைத்துக்கொண்டார் (சில கட்டுரைகளில் மகன் என்று குறிப்பிடப்படுகிறது அது பிழை). அப்போது ஜோன் பெர்கியூசனுக்கு வயது 19. ஜோன் தனது மாமனாருடன் சேர்ந்து  ஊடகத்துறையில் நிறைய கற்றுத் தேர்ந்தார். பத்திரிகையின் வளர்ச்சியில் ஜோனின் பங்களிப்பைக் கண்ட ஏ.எம்.பெர்கியூசன் தனது மருமகனை பரீட்சித்துப் பார்ப்பதற்காக ஸ்கொட்லாந்துக்கு விடுமுறையைக் களிக்கச் செல்லும் காலத்தில் இளம் ஜோனிடம் தற்காலிக ஆசிரியர் பொறுப்பை கொடுத்து விட்டுப் போனார்.

ஆச்சரியப்படத்தக்க வகையில் ஜோன் தனது பொறுப்பை ஆற்றி இருந்ததைக் கண்ட ஏ.எம்.பெர்கியூசன் 1870 இல் ஜோனை இணைத் தலைமை ஆசிரியராக ஆக்கிக் கொண்டார். 1875இல் அப் பத்திரிகையின் சக பங்குதாரர் ஆனார் ஜோன். இவர்கள் இருவரும் இணைந்து “A. M. & J. Ferguson” என்கிற கம்பனியை ஆரம்பித்து அச்சு மற்றும் வெளியீட்டுத் துறையில் பாரிய பணியை ஆற்றத் தொடங்கினார்கள். அந்த காலத்தில் இலங்கையின் ஹன்சார்ட் பிரதிகள் கூட இந்த நிறுவனத்தால் தான் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

“Tropical Agriculturist” என்கிற விவசாயத்துறை பற்றிய சஞ்சிகையைத் தொடங்கினார்கள். அதுபோல “இலங்கை தகவல் கைநூல்” (Handbook and Directory of Ceylon) என்கிற நூலை வருடாந்தம் வெளியிட்டார்கள். இதில் இலங்கை பற்றிய துல்லியமான தகவல்களை புள்ளிவிபரங்களாகவும், தரவுகளாகவும் அதில் தந்தார்கள். தமது ஊடகத்துறை அனுபவம் அவர்களுக்கு பெருமளவு கைகொடுத்தது. அன்றைய தேசாதிபதி சேர் ஆர்தர் கோர்டன் (Sir Arthur Gordon) பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலேயே வித்தியாசமான ஒரு ஒரு படைப்பு என்றார். அதே காலப்பகுதியில் தான் தேயிலை, கோப்பி, ரப்பர் தோட்டத்துறை பெரு வளர்ச்சி காணத் தொடங்கியது.  

1879 ஆம் ஆண்டு பத்திரிகைப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஏ.எம்.பெர்கியூசன் வேறு அரச பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார். அவர் ஆற்றிய சேவைக்காக அவருக்கு அன்றைய பெறுமதியில் 10,000 ரூபா பெறுமதியான தங்கக் கடிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது.

ஏ.எம்.பெர்கியூசன் நானுஒயாவிலுள்ள அப்போட்போர்ட் (Abbotford) தோட்டத்தின் உரிமையாளராக 1880 – 1924 காலப்பகுதியில் இருந்திருக்கிறார். அதன் பின் சில காலம் அவரது துணைவி அந்தத் தோட்டத்துக்கு உரிமையாளராக ஆனார்.

அன்று தனுஷ்கோடிக்கும் மன்னாருக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து பாதைக்கான திட்டமும் படகு தரிப்பிடத்துக்கான திட்டமும் வகுக்கப்பட்டதன் பின்னணியில் ஜோன் பெர்கியுசனின் பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பல நூல்களில் காண முடிகிறது. அவர் இலங்கையின் ரயில் போக்குவரத்துப் பாதை குறித்த பல விபரங்களையும் கூட ஆய்வுகளாக வெளியிட்டிருக்கிறார்.


ஏ.எம்.பெர்கியூசன் 26.12.1892 அன்று தனது 76 வது வயதில் மரணமானார். ஏறத்தாள அரை நூற்றாண்டு காலம் இலங்கையின் ஊடகத்துறையில் பங்கு வகித்த பெருமை அவரைச் சேரும். “இலங்கை பத்திரிகைத் துறையின் தந்தை” என்று ஏ.எம்.பெர்கியூசனை “20ஆம் நூற்றாண்டில் இலங்கையில் முத்திரை பதித்தவர்கள்”  (TWENTIETH CENTURY IMPRESSIONS OF CEYLON) என்கிற பிரபலமான நூல் கூறுகிறது.

ஏ.எம்.பெர்கியூசனின் மரணத்தைத் தொடர்ந்து ஜோன் பெர்கியூசன் சிலோன் ஒப்சேர்வர் பத்திரிகையின் தலைமை ஆசிரியரானார். சில வருடங்களின் பின்னர் லண்டனில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு வந்த அவரது மகன் ரொனால்ட் ஹொட்டன் பெர்கியூசனிடம் (Ronald Haddon Ferguson) பிரதம ஆசிரியர் பொறுப்பை ஒப்படைத்தார். 

ஜோன் பெர்கியூசன் 1903 ஆம் ஆண்டு இலங்கையின் அரச சபைக்குத் (ஐரோப்பிய பிரதிநிதியாக) தெரிவானார். இலங்கையின் ரயில்வே துறையை வளர்ப்பதிலும், வர்த்தகத்துறையை பலப்படுத்துவதிலும் அவர் அந்தக் காலப்பகுதியில் பங்காற்றினார். ஐந்தே வருடங்களில் 1908 இல் அவர் அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துவிட்டு இலக்கியம், வரலாறு சார்ந்த எழுத்துப் பணிகளில் தனது காலத்தைக் கழித்தார்.

1912 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். 1913 இல் அங்கேயே மரணமானார். ஜோன் பெர்கியூசன் Royal Asiatic Societyயின் தலைவராகவும் இருந்திருக்கிறார். பல ஆய்வுக் கட்டுரைகளை அவர் அங்கு வெளியிட்டிருக்கிறார். 36 வருடங்களாக லண்டன் டைம்ஸ் பத்திரிகையின் இலங்கைக்கான நிருபராகவும் கடமையாற்றியிருக்கிறார்.

மூன்று தலைமுறைகளாக இலங்கையின் பத்திரிகைத் துறைக்கும், வெளியீட்டுத் துறைக்கும் அளப்பெரிய சேவையாற்றிய பெர்கியூசன் குடும்பத்தின் வகிபாகம் இலங்கையில் வரலாற்றில் முக்கியமானது.

இந்த சிலோன் ஒப்சேர்வர் நிறுவனம் தான் வெவ்வேறு கைகளுக்கு மாறி பின்னர் லேக் ஹவுஸ் (Associated Newspapers of Ceylon Limited) நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.

மேலும் வாரம் தோறும் ஞாயிறு வேத வகுப்புகளில் ஆசிரியராக நீண்ட காலம் தொண்டராக சேவை செய்து வந்துள்ளார். அவரின் அந்த சேவைகளுக்காகத் தான் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பெரிய பாடசாலைக்கு 1928 ஆம் ஆண்டு அதற்கு அவரின் பெயரைச் சூட்டினார்கள்.

பெர்கியுசன் ஆற்றிய சேவையின் நினைவாக இன்று அவரின் பெயரை பாடசாலைகளுக்கும், வீதிகளுக்கு சூட்டியுள்ளனர்.

ஆனால் இன்றும் இலங்கையின் ஊடகத்துறை அவரை நினைவுகொள்வதாகத் தெரியவில்லை. அவர் பற்றிய போதனைகள் கூட ஊடகத்துறை கற்கைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. லேக் ஹவுசில் அவரது நினைவாக எதுவும் எஞ்சியிருப்பதாகவும் தெரியவில்லை.


மட்டக்குளி - பர்கியுசன் வீதி
இரத்தினபுரியிலுள்ள மிகப் பெரிய புகழ் பெற்ற பாடசாலையாக விளங்கும் பெர்கியுசன் உயர் பாடசாலை

பிற்குறிப்பு

19, 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் புத்திஜீவிகளின் சமூக விஞ்ஞான சங்கமாக இருந்தது ராஜரீக ஆசிய கழகம் - இலங்கைக் கிளை (Journal of the CEYLON BRANCH of the Royal Asiatic society) இந்த சங்கத்தில் ஆங்கிலம் படித்த பல புலமையாளர்கள் பல்வேறு தலைப்புகளில் திறனாய்வுகளைச் செய்திருக்கிறார்கள். அதில் ஏ.எம்.பெர்கியூசன், ஜோன் பெர்கியூசன் போன்றோரும் அங்கத்துவர்களாகவும், நிர்வாகிகளாகவும் பல வருடங்கள் பணியாற்றியிருக்கின்றனர். 1893 ஆம் ஆண்டு வெளிவந்த VOLUME XIII. No. 44. இதழில் மறைந்த ஏ.எம்.பெர்கியூசனுக்கு அஞ்சலி செலுத்தி வெளிவந்த அறிக்கையையும் காண முடிகிறது. அதே இதழில் அன்றைய சட்டப்பேரவை உறுப்பினரான பொன்னம்பலம் குமாரஸ்வாமி சிலப்பதிகாரம் பற்றி ஆற்றிய (1883ஆம் ஆண்டு பல தொடர் கூட்டங்களில்) திறனாய்வு குறித்தும் அதன் மீதான விவாதங்களையும் காண முடிகிறது. பி.குமாரஸ்வாமி; ராமநாதன், அருணாச்சலம் ஆகியோரின் உடன்பிறந்த சகோதரர். இந்த மூன்று பொன்னம்பலம் சகோதரர்களும் சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினர்களாக மட்டுமன்றி ராஜரீக ஆசிய கழகத்திலும் உறுப்பினர்களாக இருந்து திறனாய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவை அந்த சஞ்சிகைகளிலும் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன.

மேற்படி சிலப்பதிகாரம் பற்றிய திறனாய்வின் போது ராமநாதன் உட்பட இன்னும் முக்கிய பல ஆங்கிலேயே, சிங்கள ஆய்வாளர்களும் கருத்துக்களைப் பகிர்ந்திருப்பதைக் காண முடிகிறது. ஆழமான இந்த உரையாடலில் சிலபத்திகாரத்தில் குறிப்பிடப்பட்ட விபரங்களின் உண்மைத்தன்மை குறித்த ஒப்பீட்டு ஆய்வுக்காக, மகாவம்சம், புறநானூறு உள்ளிட்ட பல இலக்கியங்களும், வரலாற்று நூல்களும் திறனாய்வுக்கு பயன்படுத்தப்படுவதைக் காண முடிகிறது.

முக்கியமாக இந்த விவாதங்களின் போது கஜபா மன்னர் பற்றிய முன்னுக்குப் பின் முரணான வரலாற்று ஆதாரங்கள் குறித்து நடக்கும் விவாதம் சுவாரசியமானவை. இலங்கைக்கு கண்ணகி வழிபாட்டை கொண்டு வந்து சேர்த்தவராக கருதப்படும் கஜபா மன்னர் பற்றி ஏற்கெனவே பல சுவாரசியமானதும், ஆச்சரியமிக்கதுமான கதைகள் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இந்த விவாதத்தில் ஜோன் பெர்கியூசனும் கலந்துகொண்டு புலமைத்துவப் பங்களிப்பை வழங்கியிருப்பதைக் காண முடிகிறது.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates