Headlines News :
முகப்பு » , , , , , » "காங்கேசன்துறை இடைத்தேர்தலின் செய்தி" - என்.சரவணன்

"காங்கேசன்துறை இடைத்தேர்தலின் செய்தி" - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 16
“அவர்கள் எம் உரிமைகளை வழங்கத் தயாரில்லை. அவர்களை நம்பிப் பலனில்லை. தாம் ஆதிகார பீடம் ஏறுவதற்கு எம்மை ஏணியாகப் பயன்படுத்தியபின் எம்மை உதைத்துத் தள்ளுவார்களேயன்றி தமிழ் இனத்தையும் சிங்கள இனத்தின் நிலைக்கு உயர்த்த மாட்டார்கள்.”
இப்படிக் கூறியவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம்.18.12.1974 கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் வெள்ளிவிழா நிகழ்வில் அவர் ஆற்றிய உரை அது.

அஹிம்சாவழியில் தானும் பொறுமைகாத்து, மற்றவர்களையும் பொறுமை காக்கச்செய்த தலைவராக அவர் இருந்தார். தமிழர் வரலாற்றை மீட்டுப் பார்க்கும் போது எப்போதோ தொடங்கியிருக்க வேண்டிய தனியுரிமைப் போராட்டத்தை பிற்போட்டு காலத்தை தள்ளித் தள்ளிக் கொண்டு போனவர் தந்தை செல்வா என்று விளங்கும். எப்போதோ வெடிக்க வேண்டிய ஆயுதப் போராட்டத்தை தன்னால் இயன்றவரை அமுக்கி வைத்திருந்தவரும் அவர் தான் என்பது புரியவரும். அவரது இறுதிக் காலத்தில் பொறுமையின் உச்சத்தை எட்டியிருந்ததுடன் அப்படி கட்டுப்படுத்தும் பலத்தை இழந்துகொண்டு போவதை உணர்ந்திருந்தார். அதற்கான நியாயத்தையும் அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

இந்த அரசியலமைப்பை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை ஐக்கிய முன்னணிக்கு கொடுக்கப்படவில்லை என்கிற ஒரு தர்க்கம் பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தத்தையும் இந்த இடத்தில் நினைவுறுத்த வேண்டும். 1970 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டு முன்னணிக்கு அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதும் அரைவாசி வாக்குகள் கூட கிடைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. 48.7 வீத வாக்குகளே மொத்தம் அவர்களுக்கு கிடைத்திருந்தது. அதாவது மறு அர்த்தத்தில் அவர்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றும் கூறலாம். பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு அரசியலமைப்பை மாற்றும் தார்மீக உரிமை என்ன என்கிற கேள்வி இருக்கவே செய்தது. 1972 அரசியலமைப்புக்கு எதிரான பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று தந்தை செல்வாவின் இராஜினாமா. அதுபோல சீ.சுந்தரலிங்கம் மேற்கொண்ட வழக்கும் கவனிக்கத்தக்கது.

அரசியல் நிர்ணய சபைக்கெதிரான வழக்கு.
இந்த அரசியலமைப்பு நிரைவேற்றப்படுமுன்னர் சுந்தரலிங்கம் அரசியல் நிர்ணய சபைக்கெதிராக உயர் நீதி  மன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். அரசியலமைப்பு அவை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கெதிரான தடையுத்தரவொன்றை வேண்டி சீ.சுந்தரலிங்கம், உயர்நீதிமன்றுக்கு மனுச்செய்தார். பிரதம நீதியரசர் எச்.என்.ஜீ.பெனான்டோ மற்றும் நீதியரசர் விஜேதிலக்க ஆகியோரைக் கொண்ட அமர்வின்முன் அது விசாரணைக்கு வந்தது. 1971 பெப்ரவரி 13 உயர்நீதிமன்றம் சீ.சுந்தரலிங்கத்தினுடைய மனுவை நிராகரித்தது.

அத்தீர்ப்பில் “அவ்வாறானதொரு புதிய அரசியலமைப்புச் சட்டம் ஸ்தாபிக்கப்படுகின்ற பொழுது அல்லது அவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்படுகின்ற பொழுது இரண்டில் ஒரு வகையான சூழ்நிலை எழலாம்.

1) அவ்வாறானதொரு அரசியல் யாப்பு சட்டபூர்வமானதாகவும் வலுவானதுமாகவும் இருக்கும். அது தற்போதைய அரசியல் யாப்பை மீறுகின்ற ஒன்றாகவும் இருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் புதிய அரசியல் யாப்பை கேள்விக்குட்படுத்த முடியாது.

2) மாறாக, அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்படுகின்ற புதிய அரசியல் யாப்பு சட்ட அந்தஸ்தும் வலுவுமற்றது என்பது தான் உண்மை நிலையாயின் அவ்வாறான புதிய அரசியல் யாப்பு ஸ்தாபிக்கப்பட்ட அல்லது ஸ்தபிக்கப்பட்டதற்கான தோற்றப்பாடு உருவாக்கப்பட்டதன் பின்னர் தான் பொருத்தமான நீதிமன்றம் அந்த யாப்பு சட்டத்தன்மை மற்றும் வலுவற்றதென தீர்மானிக்க முடியும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.


வண்ணார்பண்ணை கூட்டம்
சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழக்கூடிய சமஷ்டியையே இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைத்து பல தசாப்தகாலமாக அஹிம்சாவழியில் கோரி வந்தனர்  தமிழர்கள். ஆனால் அந்த ஐக்கியப் பாதையை இறுதியாக அடைத்த சந்தர்ப்பம் தான் 1972 அரசியல் திட்டமும் அந்த ஆட்சியதிகார காலகட்டமும். 22.05.1972 அன்று நவரங்கால மண்டபத்தில் மதியம் 12.43 க்கு அன்றைய “சுபவேளையில்”  அன்றைய சபாநாயகர் ஸ்டேன்லி திலகரத்ன கையெழுத்திட்டு அரசியலமைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.

1972 அரசியலமைப்பை எதிர்த்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் வண்ணார்பண்ணையில் நடத்திய கூட்டத்தில் ஆற்றிய உரை மிகவும் முக்கியமான ஒன்று.

தமிழ் இனமும் சிங்கள இனமும் தனித்தனியாக இயங்கி வந்தததை வரலாற்று மேற்கோள்களுடன் விளக்கினார். இரு இனங்களும் தனித்தனியே சுதந்திரமாக வாழும் உரிமையைக் கொண்டுள்ளன என்று கூறினார். பாராளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவத்தை குறைக்க சிங்கள அரசு மேற்கொண்ட சதியின் விளைவை விளங்கப்படுத்தினார்.

1947 இல் 95 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகையில் விகிதாசாரப்படி 66 இடங்கள் சிங்களவர்களுக்கும், 22 இடங்கள் தமிழர்களுக்கும் கிடைத்திருக்க வேண்டும். பிரஜாவுரிமை சட்டங்களின் விளைவாக 1952 தேர்தலில் சிங்களப் பிரதிநிதிகள் 75 ஆகவும் தமிழரின் எண்ணிக்கை 13அகவும் சுருங்கியது. 1956இலும் அது தொடர்ந்தது. 1960இல் பாராளுமன்ற உறுப்பினர் தொகை 151 ஆக உயர்த்தப்பட்ட போது சிங்களவர்களுக்கு 105 தொகுதிகளும் தமிழர்களுக்கு 35 தொகுதிகளும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 1960 ஜூலை தேர்தலில் சிங்களவர்கள் 121 இடங்களைப பெற்ற வேளை தமிழர் 18 இடங்களை மாத்திரமே பெற முடிந்தது. 1965 தேர்தலிலும் சிங்களவர்களுக்கு 122 இடங்களும் தமிழர்களுக்கு 17 இடங்களுமே கிடைத்தன. 1970 தேர்தலில் சிங்களவர் 123 இடங்களையும் தமிழர் 19 இடங்களையும் பெற்றனர். 1972 அரசியலமைப்பு இந்த அநீதியை நிலையாக இருக்கச் செய்யப் போகிறது என்றார் செல்வநாயகம்.

இராஜினாமா
1972 நிலைமைகளைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என்கிற அழுத்தம் அதிகரித்திருந்தது பற்றி ஏற்கெனவே கண்டோம். பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்தபடி இறுதி முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருந்தது தமிழரசுக் கட்சி. ஆனால் சட்டத்தின் பிரகாரம் மூன்று மாதங்களுக்கு உரிய காரணங்களின்றி வராமல் இருந்தால் அவர்கள் உறுப்புரிமையை இழக்கும் வாய்ப்பு இருந்தது.

ஓகஸ்ட் 22க்குள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாமல் விடுமுறையும் எடுக்காமல் இருந்தால் அவர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருந்தது.  இப்படியான சூழலில் தான் “பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதால் தமிழ் மக்களின் குரல் கேட்கப்படாமலே போய் விடும்” என்று விளக்கினார் தந்தை செல்வா. ஆனால் பின்னர் அவர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

செல்வநாயகம் 30.09.1972 அன்று காங்கேசன் துறைத் தொகுதி உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து ஆற்றிய உரை முக்கியத்துவம் மிகுந்தது. அந்த உரையில் தமிழ் பேசும் மக்கள் தமது பாரம்பரிய தாயகத்தைச் சுதந்திரமாக ஆட்சிபுரியும் உரிமை உடையவர்கள் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். 

அவரின் இராஜினாமாவுக்கு இரண்டு அடிப்படை காரணங்கள் இருந்தன. 1972 அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் என்பதை அரசுக்கும் உலகுக்கும் உணர்த்த வேண்டும் என்பது ஒன்று, அடுத்தது தமிழ் இளைஞர்களின் சினத்தை கட்டுப்படுத்துவது. அரசாங்கம் இதில் உள்ள முதலாவது காரணத்தைக் கண்டு கொண்ட அளவுக்கு இரண்டாவது காரணத்தை உணரவில்லை. இதனால் ஏற்படப்போகும் இடைத்தேர்தலில் தமிழ் மக்களின் தீர்ப்பை அரசாங்கம் உணரச் செய்வது முக்கிய இலக்காகவும் இருந்தது. ஆனால் அவரச கால சட்ட விதிகளைப் பயன்படுத்தி காலத்தை இழுத்தடித்தது.

தமிழ் மக்களின் தீர்மானத்தையும், உணர்வுகளையும் புரிந்துகொள்வதில் எந்தவித அக்கறையையும் அரசாங்கம் காட்டவில்லை.

தேர்தல் இழுத்தடிப்புக்கு நியாயம்
காலவரையறையின்றி இழுத்தடிப்பதைக் கண்டித்தும் இடைத்தேர்தலை உடனடியாக நடத்துவது குறித்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் இணைந்து முன்வைத்தன. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்தன, டபிள்யு தஹாநாயக்க, பரிஸ் குணசேகர, எம்.தென்னகோன், வீ.என்.நவரத்னம், ஏ. தர்மலிங்கம், வீ ஆனந்தசங்கரி ஆகியோர் இப்படி கோரியிருந்தனர்.
“அரசியலமைப்பின் தேர்தல் சட்டங்களின் படி காங்கேசன்துறை இடைத்தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் இழுத்தடித்து வருவது மக்களின் அடிப்படை மீறலும், ஜனநாயக உரிமைகளை மீறுவதுமாகும். இதற்கு மேலும் இழுத்தடிக்காமல் இடைத்தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.” 

08.08.1973இல் இது குறித்து தேசிய அரசுப் பேரவையில் (1972 அரசியல் யாப்பின்படி நாடாளுமன்றம் அப்படித்தான் பெயர் மாற்றம் கண்டது.) ஒரு விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் இடைத்தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான காரணத்தை முன்வைத்து நீண்ட நேரம் பேசியவர் அன்றைய மின்னேறிய தொகுதி உறுப்பினரும் தொழில், திட்டமிடல் அமைச்சருமான ரத்ன தேஷப்பிரிய. (மறைந்த முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கவின் சகோதரர்)

வடக்கில் தமிழரசுக் கட்சியினர் தொடர்ச்சியாக கிளர்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டே செல்வதால், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்குகளைப் பயன்படுத்த வாய்ப்பு இல்லை என்று அவர் வாதிட்டார். மேலும் ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆயுதங்களைத் திரட்டியும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் வடக்கின் தலைவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்யும் நிலையில் காங்கேசன் துறையில்  இடைத்தேர்தல் நடத்த எப்படி முடியும் என்று அவர் குற்றம் சாட்டினார். “செல்வநாயகம் அரசியலமைப்பை எதிர்த்துத்தான் இராஜினாமா செய்திருக்கிறார். அதிலிருந்து அவர் ஒரு ஜனநாயக விரோதி என்று தெரிகிறது. இராணுவத்தையும், போலிசாரையும் ஈடுபடுத்தி இடைத்தேர்தலை எம்மால் நடத்த முடியும் ஆனால் அதை செய்யப்போவதில்லை” என்று மிரட்டினார்.

1974 இந் நடுப்பகுதியிலும் இந்த விடயம் சம்பந்தமாக ஒரு விவாதம் நிகழ்ந்தது. இதுபற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லும் 150 கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோதும். அரசாங்கம் அதற்கு அனுமதி தர மறுத்தது.

சிறிமாவின் அறிவிப்பு
20.04.1974 விசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்ட அவசரகால சட்ட விதிகளின் மீதான விவாதத்தில் உரையாற்றிய வீ.தர்மலிங்கம் “இந்த சட்டத்தின் மூலம் தெற்கில் உள்ளவர்களுக்குத் தான்  ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் அதற்கு முன்னரே ஜனநாயக உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டுவிட்டன.” என்றார். மேலும், கூட்டங்கள் நடத்துவதை சட்ட ரீதியில் நேரடியாக தடுக்காவிட்டாலும் பல நிபந்தனைகளின் கீழ் தான் அங்கு கூட்டங்கள் நடத்தமுடிகிறது என்றார் அவர். அந்த விவாதத்தில் பங்கு கொண்ட பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க வடக்கில் இடம் பெற்று வரும்  நிலைமைகளை அடுக்கிச் சொல்லிவிட்டு குண்டெறிவது, துப்பாக்கி சூடு நிகழ்த்துவது போன்றவற்றை நிறுத்தினால் இடைத்தேர்தலை நடத்த முடியும் என்று காரணம் கற்பித்தார்.

ஆனால் பின்னர் 1974 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதற்காக வந்திருந்தவேளை, அங்கு உரையாற்றிய பிரதமர் சிறிமா கூடியவிரைவில் காங்கேசன்துறை இடைத்தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்தார். அதுவரை காலம் காங்கேசன்துறை தொகுதி மக்கள் தமது பிரநிதியைத் தெரிவு செய்யும் உரிமையை இல்லாமல் செய்யும் நோக்கத்தினால் நடத்தாமல் இருந்தததாக கருத வேண்டாம் என்றும், அமைதியான தேர்தலை நடத்துவதை உறுதி செய்வதற்காகத்தான் என்றும் கூறினார். உங்களில் உள்ள இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் சில சம்பவங்களை நிறுத்தியதன் பின்னர் நிச்சயமாக நடத்துவேன் என்று அறிவித்தார்.

02.12.1974 அன்று பிரதமர் காரியாலயத்திலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்  ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாண விஜயத்தின் போது வெளியிட்ட கருத்துக்களையும் நினைவு கூர்ந்ததுடன், அத தேர்தலை ஒத்திவைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை புதுப்பிப்பதை நிறுத்திவிட்டு சாதாரண சட்டத்தின் கீழ் அந்த தேர்தலை நடத்தவிருப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு செய்யப்பட்ட ஒரு மாதத்தில் 07.01.1975 தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் அன்றைய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் விமல் அமரசேகர முன்னிலையில் செய்யப்பட்டது.

வரலாற்றுத் தேர்தல்
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (வீடு சின்னம்), இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீ.பொன்னம்பலம் (விண்மீன் சின்னம்), சுயட்சையாக எம்.அம்பலவாணர் (கப்பல்) ஆகியோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

சுதந்திர இறையாண்மை உள்ள தமிழ் ஈழ தேசம் என்ற கோரிக்கையை முன்வைத்து, தந்தை செல்வா போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் தந்தை செல்வாவின் வெற்றிக்காக அன்று சிறு ஆயுதக் குழுவாக இயங்கிவந்த பிரபாகரன் இரகசியமாக பிரச்சாரம் செய்தார்.

அடுத்த மாதமே 1975 பெப்ரவரி 6 இல் இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல் வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியாகவும் அமைந்தது. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் 25,927 வாக்குகளைப் பெற்றார். 72.89 வீத வாக்குகள் அவருக்கே கிடைத்திருந்தன.

வேட்பாளர்
கட்சி
சின்னம்
வாக்குகள்
%
வீடு
25,927
72.89%
விண்மீன்
9,457
26.61%
எம் அம்பலவாணர்
கப்பல்
185
0.50%
தகுதியான வாக்குகள்
35,569
100.00%
நிராகரிக்கப்பட்டவை
168
மொத்த வாக்குகள்
35,737
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்
41,227
வாக்கு வீதம்
86.68%

அதே வேளை  26.61 வீத வாக்குகள் கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வீ.பொன்னம்பலத்துக்கு கிடைத்து. இந்தத் தேர்தலில்  கொம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்ததாலேயே அவர் போட்டியிட்டார் என்கிற ஒரு கருத்தும் உண்டு. அவர் ஆளும் ஐக்கிய முன்னணியின் கூட்டுக் கட்சியான கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலேயே நிறுத்தப்பட்டிருந்தார். அதாவது செல்வநாயகத்துக்கு எதிரான அரசாங்க வேட்பாளர். ஆனாலும் அவர் செல்வநாயகத்தை எதிர்த்தோ, சமஸ்டிக் கோரிக்கையை எதிர்த்தோ பிரச்சாரம் செய்யவில்லை. இடதுசாரிகள் பங்குகொள்ளும் முற்போக்கு அரசாங்கத்தை ஏன் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்கிற பாணியிலான பிரச்சாரத்தையே அவர் மேற்கொண்டார். ஏற்கெனவே அவர் தமிழ்ப் பிரதேசங்களின் சுயாட்சியை கொம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவேண்டும் என்று கொம்யூனிஸ்ட் கட்சிக்குள் வலியுறுத்தி வந்த ஒருவர்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் செல்வநாயகம் ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது.
“இத்தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தம் தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர் என்றே நான் கருதுகிறேன். தமக்குள்ள இறைமையைப் பிரயோகித்து சுதந்திர தமிழ் ஈழத்தை அமைப்பதே அவர்கள் அளித்த தீர்ப்பு. அதை நான் இந்நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் பிரகடனப்படுத்துகிறேன். மக்கள் எமக்களித்த இந்த ஆணையை தமிழர் கூட்டணி செயற்படுத்தும் என்று நான் இன்று உறுதியளிக்கிறேன்.” என்றார்.
இந்த இடைத்தேர்தல் கால இடைவெளிக்குள் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களும் திருப்பங்களுமே இந்த வெற்றிக்கும், இந்த அறிவிப்புக்கும் உடனடிக் காரணம்.

எவை என்னவென்று அடுத்த வாரம் பார்க்கலாம்.

துரோகங்கள் தொடரும்...



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates