Headlines News :
முகப்பு » , , , , , » தொழிலாளர் தினம் மறந்த தொழிற்சங்க முன்னோடி புல்ஜன்ஸ் - என்.சரவணன்

தொழிலாளர் தினம் மறந்த தொழிற்சங்க முன்னோடி புல்ஜன்ஸ் - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்”
ஏ.ஈ.புல்ஜன்ஸ் (A.E.Buultjens)
ஏ.ஈ.புல்ஜன்ஸ் (A. E. Buultjens 1865 – 1916) இலங்கையின் முதலாவது தொழிற்சங்கமான இலங்கை அச்சக தொழிற்சங்கத்தை (Ceylon Printers Union) 1893இல் உருவாக்கி அதே ஆண்டு முதலாவது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் அவர் தான். முதன் முதலில் தொழிற்சங்க கருத்தாக்கத்தை மக்கள் மத்தியில் விதைத்ததில் பெரும்பங்கும் அவரையே சாரும்.

புல்ஜன்ஸ் பிறப்பால் பறங்கி இனத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவர். அதனைக் கைவிட்டுவிட்டு பௌத்த மறுமலர்ச்சிக்கு உழைத்தவர். இலங்கை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று 1883 இங்கிலாந்து கேம்பிரிட்ஜில் வரலாற்றுத்துறையில் பட்டம் பெற்று 1887 இல் திரும்பினார் புல்ஜன்ஸ். அங்கு தனது பட்ட ஆய்வின் போது பிரபல பொருளியல் நிபுணர் பேராசிரியர் அல்பிரட் மார்ஷல் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அரசியல் ராஜதந்திரம் குறித்த கற்கையும் முடித்துக் கொண்டார்.

1884-1887 காலப்பகுதிகளில் பிரித்தானியாவில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினை, வேலையில்லாத் திண்டாட்டம் என்பவற்றைத் தொடர்ந்து அரசியல் கொந்தளிப்பும் நிகழ்ந்திருந்தது.     இங்கிலாந்திலுள்ள தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி போதிய அறிவைப் பெற்றுக்கொண்டார். தொழிலார்களின் போராட்டங்களில் ஒரு போராளியாக புல்ஜன்ஸ் தன்னை ஈடுபடுத்தத் தொடங்கியது அங்கு தான். அதன் நீட்சியாக மார்க்சிய கருத்துக்களால் உந்தப்பட்டு அவர் தன்னை ஒரு சோசலிசவாதியாக வளர்த்துக்கொண்டார்.

லண்டன் பல சிந்தனாவாதிகளின் புகலிடமாக திகழ்ந்து வந்திருப்பதுடன் பல சிந்தனாவாதிகளை தோற்றுவித்த இடமும் கூட. கார்ல் மார்க்ஸ் கூட 1883 இல் தான் இறக்கும் காலம் வரை லண்டனை தனது புகலிடமாகக் கொண்டிருந்தார். இப்படி ஒரு சிறப்பு மிக்க காலப்பகுதியில் தான் புல்ஜன்ஸ் தாராளவாதம், சுதந்திரம், சமத்துவம் போன்ற கருத்துக்களால் கவரப்பட்டிருந்தார். லண்டனிலேயே அவர் கிறிஸ்தவ மதத்தை கைவிட்டுவிட்டார். இலங்கை திரும்பியதன் பின் 1888 இல் அவர் பௌத்தத்தை தழுவினார்.

கிறிஸ்தவத்திலிருந்து பௌத்தத்துக்கு
அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் கற்ற காலத்தில் கூட கிறிஸ்தவ மதத்தையே பின்பற்றினார். ஆனால் இலங்கை திரும்பியதும் இரண்டு இயக்கங்களை உருவாக்குவதில் பிரதான பங்கெடுத்தார். பௌத்த கல்விக்கான இயக்கம், அடுத்தது தொழிற்சங்கம். கூடவே பௌத்த மதத்துக்கு மாறி பௌத்த மறுமலர்ச்சியில் பங்கெடுத்தார். பௌத்த பிரம்மஞான சங்கத்தின் தீவிர செயற்பாட்டாளருமானார். அப்போது ஆங்கில வழிக்கல்வி என்பது கிறிஸ்தவர்களுக்கே பெரும்பாலும் மட்டுப்படுப்பட்டிருந்தது.

டபிள்யு.லெட்பீடர் (1854 -1934)
அவருக்கு வயது 24 இருக்கும்போதே 1890 இல் அவர் புறக்கோட்டை பௌத்த (ஆண்கள்) பாடசாலைக்கு (பிற்காலத்தில் அது மருதானை ஆனந்தா கல்லூரியாக ஆனது)  அதிபராக செயல்படத்தொடங்கி 11 வருடங்கள் அந்த பதவியில் இருந்தார். 1890இல் இந்த ஆனந்தா மகா வித்தியாலய திறப்புவிழாவின் போது கேணல் ஒல்கொட், புல்ஜன்ஸ், பொன்னம்பலம் ராமநாதன் போன்றோர் சிறப்புரை நிகழ்த்தியிருக்கிறார்கள்.  1890-1903 வரை பௌத்த பாடசாலைகளின் கல்வி முகாமையாளராக பணியாற்றினார். மத மாற்றத்தாலும், தீவிர தொழிற்சங்க நடவடிக்கையாலும் ஆங்கிலேயர்களால் மட்டுமல்லாது உறவினர்களாலும், நண்பர்களாலும் வெறுக்கப்பட்டார். ஆனாலும் அவர் பௌத்த பாடசாலைகளை நாடெங்கிலும் நிறுவுவதில் ஒல்கொட்,  டபிள்யு.லெட்பீடர் (1854 -1934) போன்றோருடன் சேர்ந்து தீவிரமாக ஈடுபட்டார்.

1893 இல் கண்டி பௌத்த பாடசாலையில் (பின்னர் தர்மராஜா வித்தியாலயமானது) ஆற்றிய உரையில் சுதந்திரத்திற்கான அரசியலமைப்பையும், மக்களவையும் புரிந்துகொள்ளும் வகையில் சகல இளைஞர்களும் தேசப்பற்றுடன் வளர வேண்டும் என்றார். பௌத்த நடவடிக்கைகளை அரசியல் மாற்றத்துக்கான தளமாகவும் மாற்றுவதில் அவர் பிரயத்தனம் கொண்டார்.

கால் மைலுக்குள் இயங்கும் பாடசாலைகளுக்கு அரச உதவிகள் கிடைக்காது என்று 1892 இல் ஆங்கிலேய அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து தீவிரமாக போராடினார். பௌத்த பாடசாலைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படும் என்று அவர் வாதிட்டார். ஆங்கிலேய அரசு இலங்கையில் மேற்கொண்ட அநியாயங்களை இங்கிலாந்தில் காலனித்துவ செயலகத்துக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகளை செய்து வந்ததுடன் ஆங்கில பத்திரிகைகள், சஞ்சிகைகளின் மூலம் அவற்றை வெளிக்கொணர்ந்தார்.

கிறிஸ்தவ மறுப்பின் விளைவு
அவர் கல்விகற்ற கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரி புல்ஜன்ஸ்ஸின் மத மாற்றத்தினால் ஆத்திரமுற்று கௌரவம் வழங்கப்பட்டவர்கள் வரிசையில் இருந்த அவரின் பெயரையும் நீக்கியது. இது தொடர்பாக எழுத்திலேயே அவர் அக்கல்லூரி நிர்வாகத்திடம் வினவியபோது அதற்கு எழுத்திலேயே கிடைத்த பதிலின் படி “இந்த பாடசாலை கிறிஸ்தவத்தை பேணிப் பாதுகாத்து, வளர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. ஞானஸ்தானம் பெற்ற நீங்கள் எதிரியிடம் போய் சேர்ந்துள்ளீர்கள். விருதுகள் பெற்ற மாணவர்கள் பட்டியலில் துரோகிகளின் பெயரையும் உள்ளிடவா சொல்லுகிறீர்கள்.” என்று பதிலளித்தனர். 

புல்ஜன்ஸ் 1888இல் “பௌத்தன்” (The Buddhist) எனும் பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். இதன் மூலம் ஆங்கில கிறிஸ்தவ மிஷனரிமார்களுடன் கருத்துப்போரைத் தொடர்ந்தார் என்றே கூறவேண்டும். பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிரம்மஞான சபையின் முக்கிய பிரச்சார ஊடகமாக அது இருந்தது. 

கொழும்பு தொழிலாளர்கள் மத்தியில் அவர் பெரும் நன்மதிப்பை பெற்றிருந்தார். புல்ஜன்ஸ் 25.03.1899 அன்று பௌத்த தலைமையகத்தில் வைத்து ஆற்றிய “நான் ஏன் பௌத்தன் ஆனேன்?” (Why I became a Buddhist) எனும் தலைப்பிலான ஆங்கில உரை பிரசித்திபெற்ற உரை. அந்த உரை ஒரு சிறு கை நூலாகவும் வெளிவந்தது. “நான் ஏன் முஸ்லிம்மாகவோ, ஒரு இந்துவாகவோ மாறாமல் பௌத்தத்துக்கு மாறினேன்” என்று அவர் அந்த விரிவுரையில் குறிப்பிடுகிறார்.
“...கிறிஸ்தவத்தை பின்பற்றும் இங்கிலாந்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், சமூக சீரழிவுகளை நேரில் கண்டேன்... நடைமுறை கிறிஸ்தவம் போலியானது. ஏனென்றால் மிஷனரிகளையும், பைபிளையும் நாடுநாடாக அனுப்பப்படுகின்றபோது அவர்களுடன் பெருமளவு மதுபான போத்தல்களும், துப்பாக்கி ரவைகளும் அனுப்படுகின்றன. மதுபானம் சிந்தனையை அழிப்பதற்காக, ரவைகள் கொல்வதற்காக...” என்கிறார்.
புல்ஜன்ஸ் கிறிஸ்தவ பாடசாலை கல்வி முறைமையையும், மிஷனரிகளையும் கடுமையாக தனது பிரசாரங்களின் மூலமும், எழுத்தின் மூலமும் தாக்கினார்.

கத்தோலிக்க சபை அவரையும் அவரது செயற்பாடுகளையும் வெறுத்தது. கொழும்பு பேராயர் அவரை பகிரங்கமாகவே கடிந்துகொண்டார். அவர் ஒரு முறை புல்ஜன்ஸுக்கு இப்படி எழுதினார்.
“உம்மால் அனுப்பப்பட்டிருந்த “பௌத்தன்” (The Buddhist) பத்திரிகையில் உள்ளடங்கியிருந்த பௌத்த கிறிஸ்தவ விரோத கருத்துக்கள் எத்தகையதாக இருந்ததென்றால் என்னால் அப்பத்திரிகையை ஏற்றுக்கொள்ளவோ, என்னுடன் வைத்திருப்பதற்கோ கூட இயலாதது. கிறிஸ்தவ மதத்தை கைவிட்டுச் சென்ற உங்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாலும், நிரந்தர பௌத்தனாக ஆகியிருப்பவரோடு எந்தவொரு நட்பையும் என்னால் வளர்த்துக்கொள்ள முடியாது.”
புல்ஜன்ஸ் மதம் சார்ந்த வாதங்களுக்கு பரிச்சயமானவர் மட்டுமன்றி விருப்பமும் உடையவர். பேராயருக்கு அவர் அனுப்பிய பதிலில்
“பௌத்த மக்களின் வரிப்பணத்தில் வருடந்தோறும் 20,000 ரூபாவை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும்போது பேராயருக்கு எந்தவித மனச் சங்கடங்களும் வருவதில்லையே, ஆனால் “பௌத்தன்” பத்திரிகையை பெற்றுக்கொள்வதில் மாத்திரம் தார்மீகக் கொள்கை குறுக்கிடுகிறதா?” என்றார்.
முதலாவது தொழிற்சங்கவாதி
1893 ஆம் ஆண்டு ஜூலையில் வெளிவந்த “சுதந்திர கத்தோலிக்கர்” (Independent Catholic) என்கிற சஞ்சிகையில் புல்ஜன்ஸ் புனை பெயரில் கட்டுரையை எழுதினார். தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணும் தொழிற்சங்கத்தின் அவசியம் பற்றிய கருத்தாக்கத்ததை  அந்த கட்டுரையின் மூலம் தான் அறிவித்தார். தொழிலாளர் வர்க்கம் ஒன்று பட்டு போராடுவதன் அவசியத்தையும், வேலைநிறுத்தப் போராட்டங்களின் பெறுமதியையும் அவர் அதில் வெளிப்படுத்தினார்.
கொழும்பு மெயின் வீதியில் ரிக்சா ஓட்டுனர்கள்  - படம் Skeen Photo
அல்பிரட் ஏனர்ஸ்ட் புல்ஜன்ஸ் ரிக்சா தொழிலாளர்கள் போராட்டம், நகர சுத்தித் தொழிலாளர்களின் போராட்டம், சலவைத் தொழிலாளர்களின் போராட்டம் (1896), ரயில்வே ஊழியர்களின் போராட்டம் (1912), போன்ற அடிமட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர். 1905 க்குப் பின்னர் அவர் படிப்படியாக அவரது பணிகளில் இருந்து ஓரமானார். அதற்குக் காரணம் அநகாரிக தர்மபாலாவின் பிரவேசம்.

அநகாரிக தர்மபால “பௌத்த” செயற்பாடுகளை “சிங்கள-பௌத்த” அடையாள எழுச்சியாக  மாற்றிக்கொண்டிருந்தார். ரிக்சா தொழிலாளர்களுக்கு (அன்றைய ரிக்சா தொழிலாளர்கள் பலர் இந்திய வம்சாவளியினராக இருந்தனர்.) எதிராக இனவாத பிரச்சாரங்களைச் செய்தார். அதே வேளை ரயில்வே வேலை நிறுத்தத்துக்கு பங்களித்தார் அநகாரிக. அனகாரிகவுடன் ஏ.ஈ.குணசிங்கவும் கைகோர்த்துகொண்டார். தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தினார்கள். இந்திய கூலித் தொழிலாளர்களையும், நாட்டாமை தொழிலாளர்களையும், தோட்டத்தொழிலாளர்களையும்; சிங்களத் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து பிரித்து வெறுப்புணர்ச்சியை பரப்பினார்கள்.

பெண்களின் உரிமைகளுக்காகவும் இயங்கிய அவர் 1890களில் பெண்கள் கல்விச் சங்கம் என்கிற ஒரு அமைப்பை ஆரம்பித்ததுடன் பௌத்த மகளிர் பாடசாலைகளையும் நிறுவ உழைத்தார் புல்ஜன்ஸ். 

இடதுசாரிகளாலும் மறக்கப்பட்ட புல்ஜன்ஸ்
ஒல்கொட்டின் அத்தியாயம் முடிந்ததன் பின்னர் அநகாரிக்க தர்மபால வரும்வரும் வரையான இடைக்காலத்தில் பௌத்த மறுமலர்ச்சிக்கு பாரிய பங்கை ஆற்றியவர் ஏ.ஈ.புல்ஜன்ஸ். இவர்களை விட எச்.எஸ்.பெரேரா, சீ.டபிள்யு.லெட்பீடர் ஆகியோரும் முக்கியமானவர்கள். 

டச்சு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு பல முக்கிய வரலாற்று ஆவணங்களை மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார் புல்ஜன்ஸ். கண்டி மன்னனுக்கு எதிரான டச்சு கவர்னர் வான் எக்ஸ்ஸின் பயணம் (on Governor "Van Eck's expedition against the king of kandy) என்கிற பெருங்கட்டுரையை டச்சு மொழியிலிருந்து புல்ஜன்ஸ் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருந்தார். அதனை இன்றளவிலும் பல ஆய்வாளர்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இலங்கை டச்சு பறங்கியர் சங்கத்தினால் (The Dutch Burgher Union of Ceylon) வெளியிடப்பட்டுவந்த “Journal of the Dutch Burgher Union of Ceylon” சஞ்சிகையிலும் சுவாரசியமான பல கட்டுரைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார். (சிங்கள பேச்சு வழக்கில் கலந்திருக்கின்ற ஒல்லாந்துச் சொற்களைப் பற்றி அவர் அதில் எழுதிய கட்டுரையை இந்த கட்டுரையின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.)

குமாரி ஜெயவர்த்தனாவின் “இலங்கையில் தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி” என்கிற நூலில் புல்ஜன்ஸ் பற்றி பெருமளவு தகவல்களை உள்ளடக்கியிருக்கிறார்.

இப்போது நடந்து முடிந்த மே தினத்தன்று புல்ஜன்ஸ் பற்றி ஓரிரு வரிகளிலாவது நினைவு கூர்ந்தது ஜாதிக ஹெல உறுமய மாத்திரமே. சிங்கள பௌத்த தேசியவாதிகள் அவரை தமக்கானவராக வரிந்துகொண்ட்போதும் இடதுசாரிக் கட்சிகளும், இந்த நாட்டின் தொழிற்சங்கங்களும் புல்ஜன்சை முற்றாக மறந்தே போயினர். இலங்கையில் கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் உருவப்படங்களுடன் சேர்த்து வைக்கப்படவேண்டியவர் புல்ஜன்ஸ்.




Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates