இலங்கையில் வாழக்கூடிய பல்லின சமூகத்தவர்களில் நாட்டின் பொருளாதாரத்தை தாங்கிப்பிடிக்கக்கூடிய முக்கிய பங்காளியாக காணப்படும் மலையகப் பெண்களின் வாழ்க்கை நிலையானது மிகவும் பின்தங்கிய நிலையிலே உள்ளது. தேயிலைத் தொழில்துறை, ஆடை கைத்தொழில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு என முத்துறைகளில் தடம் பதித்து உடலுழைப்பை நாட்டுக்காக வழங்குவோரின் வாழ்க்கை இன்னும் அவலங்கள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
இரு சகாப்தங்களுக்கு மேல் இந்நாட்டில் வாழும் இப்பெண்களுக்கான அடிப்படை தேவைகள் கூட இன்னும் பூர்த்திசெய்யமுடியாத நிலையிலே உள்ளது. அடிப்படை உரிமைகள் இவை தான் என தெரியாத பெண்கள் கூட உள்ளனர். இத்தகையோர் தினம் தினம் உரிமை மீறல்களுக்கு உள்ளாகிவருவதோடு அடக்குமுறைக்குள் உள்ளாகி வருகின்றனர்.
ஆண்மைய வாதம் என்பது நாகரிகமடைந்த சமூகத்தில் கூட இன்னும் வேரூன்றியுள்ள தருணத்தில் மலையகத்தில் மட்டும் இல்லாமல் சென்றிருக்குமா? இத்தகைய ஆண்மைய வாதத்திற்குள் மலையக பெண்கள் சிக்குண்டு தினமும் கவலையையும் கண்ணீரையும் மட்டுமே மிச்சப்படுத்துவைத்திருப்பது பரிதாபத்திற்குரிய விடயம். குடும்பம் என்றால் கணவன் அல்லது தந்தை சொல் கேட்டு நடக்கவும், வேலைத்தளத்தில் கங்காணி கணக்குப்பிள்ளை சொல் கேட்டு நடக்கவும், அரசியல் என்றால் அரசியல் வாதி என்ன சொல்கிறாரோ அதற்கு தலையசைந்து நடக்க வேண்டும் என எங்கு பார்த்தாலும் ஆணின் வழிநடத்திலே தான் பெண் தனக்கு வாழ்க்கையை நடாத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது. மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் சார் அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள் ஆங்காங்கே செயற்பட்டு வந்தாலும் அதன் நடைமுறை செயற்பாடு இன்னும் முடங்கியே கிடக்கின்றன.
மலையகப் பெண்களின் பிரச்சினைகள் ஏட்டளவிலோ, பேச்சளவிலோ இருந்தாலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததற்கான அடிப்படைக் காரணம் பெண்களின் பிரதிநித்துவம் உயர மட்டங்களில் வற்றிய நிலையில் காணப்படுவதாகும். குறிப்பாக அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து காணப்படுதலாகும். சமகாலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு பெண்கள் அரசியலில் நுழைந்திருந்தாலும் அவர்கள் மலையக பெண்களின் பிரச்சனை தொடர்பாக பேசுகிறார்களா அல்லது அப்பெண்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொடுத்தார்களா என வினா எழுப்பினால் விடை கூறுவது கடினம். காரணம் அவர்கள் அரசியலில் பிரதிநிதித்துவம் பெற்றாலும் அரசியல் கட்சியின் தலைவரின் சொற்படி நடக்க வேண்டிய நிர்ப்பந்திக்கப்படுவதோடு சுயமாக செயற்பட முடியாதவண்ணம் ஆண்மைய வாதம் முடக்கும் நிலையும் காணப்படுகின்றது.
அத்தோடு மலையகத்தில் அரசியலில் நுழைந்த பெண்களின் பின்னணியில் உறவினர் செல்வாக்கு அதிக தாக்கம் செலுத்துகின்றது. அவ்வாறாயின் உழைத்துழைத்து கருகிப்போகும் தொழிலாளர் வர்க்கப் பெண்களின் அல்லது அவர்களின் பிள்ளைகள் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவது என்பது எட்டாகனியா, அரசியல் நுழைய முடியாதா என பல வகையான வினாக்கள் எழுகின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மலையகத்தை சேராத ஒருவர் தோட்டத்தொழிலாளர்களை தேர்தலில் போட்டியிடச் செய்து வாக்குவங்கிகளை நிரப்ப நினைத்து தோல்வியை தழுவினார். உண்மையில் இது சாத்தியமற்ற ஒரு முயற்சி என்றே கூறலாம். அரசியலில் நுழைவதாக இருந்தால் தலைமைத்துவ பண்பு பெண்களிடம் கட்டியெழுப்ப வேண்டும். அத்தலைமைத்துவ பண்பும் பேச்சாற்றலும் துணிச்சலும் மட்டுமே அவர்களை வெற்றியை நோக்கி நகர வழிசமைக்கும்.
மலையக பெண்கள் அரசியலில் நுழைய வேண்டுமென்றால் தலைமைத்துவ பயிற்சியினை அளிக்க வேண்டும். தற்காலத்தில் மாணவர்களுக்கான பாராளுமன்ற தேர்தல் பாடசாலைகளில் நடைபெறுகின்றது. இந்த தேர்தல்களில் பெண்களை போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அமைப்புக்களில் பெண்களின் உறுப்புரிமையை உறுதி செய்ய வேண்டும். உளவியல் ரீதியில் அவர்களின் தலைமைத்துவ பண்பையும், ஆளுமையையும் விருத்தி செய்ய வேண்டும்.
எமது நாட்டின் சனத்தொகையில் அரைவாசியைத் தாண்டக்கூடிய வகையில் பெண்களின் சனத்தொகை காணப்படுகின்றது. ஆனால் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பத்து வீதத்தை கூட எட்டிப்பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் பெண்களே பெண்களுக்கு வாக்களிப்பதில்லை . பெண்களே பெண்களை நம்புவதில்லை என கூறலாம். பெண்களால் முடியும் அவர்களுக்கு பக்கபலமாய் நிற்போம் என முதலில் பெண்கள் எண்ணி பெண் அபேட்சகர்களுக்கு வாக்களிக்க முன்வர வேண்டும். மலையகத்தில் குடும்பத்தில் தலைவர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானிக்கின்றாரோ அவருக்கே வாக்களிக்கும் மரபு காணப்படுகின்றது. இந்நிலை மாறவேண்டும் பெண்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொடுக்க வேண்டும்.
மலையகத்தில் காணப்படும் அரசியல் கட்சிகளில் 90 சதவீதத்திற்கு மேலாக ஆண் வேட்பாளர்களே பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இந்நிலை மாறி பால்நிலை சமத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தக்கூடிய வகையில் அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். அத்துடன் அரசியல் கட்சிகள் பெண் பிரதிநிதிகளை இணைக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும். பிரான்ஸில் அரசியலில் பெண்களை குறித்த விகிதாசாரத்தில் இணைக்கும் கட்சிகளுக்கு பரிசாக நிதியுதவி வழங்கும் வழக்கம் காணப்படுகின்றது. இலங்கையிலும் அவ்வாறான முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஏனைய சமூக அமைப்பினரோடு ஒப்பிடும் போது மலையகத்தில் வாழும் பெண்கள் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்ற நிலைகளில் பின்தங்கிய நிலையில் வாழ்வதனால் அரசியலைப் பற்றி சிந்திக்கும் சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படும். பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் போது உலக அறிவை புரிந்துக்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். ஏட்டுக்கல்வியை புகுத்துவதோடு மாத்திரம் நின்றுவிடாது அனுபவ அறிவை புகுத்த வழிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். யதார்த்த உலகியல் விடயங்களை தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். கல்விகற்ற சமுதாயத்தாலே பகுத்தறிந்து சிந்திக்க முடியும் அச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க முன்வர வேண்டும்.
அரசியல் ரீதியான வன்முறைகள், பாலியல் சீண்டல்கள் பெண்களை அரசியல் பக்கம் தலைகாட்ட முடியாதளவு தடுப்புவேலி போடுகின்றன. இந்நிலைகளை மட்டுப்படுத்த கூடிய நடவடிக்கையினையும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய நிலையினை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
அழகுக்குறிப்புகள், சமையல் குறிப்புக்கள் என பெண்கள் சார்பாக நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் ஊடகங்கள் பெண்களில் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் நிகழ்ச்சிகளையும் நடாத்த வேண்டும்.
சமகாலத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது வாக்களித்தல், கோஷமெழுப்புதல், ஆர்ப்பாட்டம் செய்தல் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருங்கியுள்ளன. அரசாங்கத்தில் செயற்பாடு, தான் வாக்களித்த பிரதிநிதி தனக்காக என்ன செய்கிறார் போன்ற அடிப்படை அறிவுகள் எதுவுமின்றி அன்றாட வாழ்வாதாரத்திற்காவே போராடிவருகின்றனர். இந்நிலை மாற வேண்டும். இரு சகாப்தத்திற்கு மேல் இந்நாட்டில் உழைத்து வாழும் இம்மக்களின் வேலைத்தளத்தில் கழிப்பறை வசதியோ, சாப்பிடுவதற்கென தனியான இடமோ இல்லை. இத்தனை அவலம் இலங்கையில் எந்த சமூகவமைப்பினருக்கும இடம்பெறவில்லை. அத்தோடு கர்ப்பிணி பெண்களுக்கென விசேட சலுகைகளோ இல்லை. உடழுழைப்பை மட்டுமே உறிஞ்சும் தேசம் அவர்களின் உய்வைப்பற்றி சிந்திப்பதில்லை. இந்நிலை மாற வேண்டுமாயின் மலையக மக்களின் மீது அக்கறைக்கொண்ட, ஆளுமைக்கொண்ட பெண் தலைமைகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக கல்விகற்ற பெண்கள் அரசியலில் நுழைய வேண்டும் அதற்கான களத்தினை அரசியல் கட்சிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். பெண்கள் பலவீனமானவர் என்று எண்ணும் மனநிலையை தகர்க்க வேண்டும்.
இன்று ருவண்டாவில் 56 சதவீதமாக பெண்களின் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது. அந்நாட்டில் இலஞ்சம், ஊழல் மிகக்குறைவாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல.
இன்று மலையகப்பெண்கள் பல்கலைக்கழகம், கல்வியற்கல்லூரி போன்றவற்றில் விரிவுரையாளர்களாகவும் உயர்மட்ட உத்தியோகஸ்த்தர்களாகவும் மாறிவருகின்றனர். இம்மாற்றம் அரசியலிலும் ஏற்பட வேண்டும். குடும்பத்தடைகள், மூடநம்பிக்கைகள், கலாசார கட்டுகளில் இருந்து வெளிவர வேண்டும். இவையெல்லாவற்றுக்கும் மேலாக பெண்கள் பெண்களை பலவீனமானவர்களாக எண்ணாது துணிந்து அரசியலில் பிரவேசிக்க துடிக்கும் பெண்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
இவ்வாறான மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்த முடியாவிட்டாலும் பகுதியளவில் தொடர்ந்தேர்ச்சியாக மேற்கொண்டு வரும்போது எதிர்காலத்தில் மலையகப் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கமுடியும்.
நன்றி - http://www.uvangal.com
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...