Headlines News :
முகப்பு » » ‘அர்த்தமிழந்த’ மேதினம் - ஜீவா சதாசிவம்

‘அர்த்தமிழந்த’ மேதினம் - ஜீவா சதாசிவம்


அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை காட்டும் சர்வதேச வருடாந்த திருவிழா முடிவடைந்து இன்றுடன் மூன்று நாட்கள்.  ஒரு காலத்தில் தொழிலாளர்களுக்கான தினமாக இருந்த இந்நாள் தற்போது யார் அதிகளவான கூட்டம் சேர்க்கும் கட்சிகள் என போட்டித்தன்மையை உருவாக்கியுள்ள தினமாக மாறிவிட்டதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

''கடந்த வருட மேதினத்தை விட இவ்வருட  நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானோர் ஆர்வமாக  கலந்துகொண்டிருக்கின்றனர்'' என்று அந்தந்த கட்சித் தலைமைகள் பகிரங்கமாக உரையாற்றி அதனை உறுதிசெய்திருந்தார்கள். 

சினிமாவில் சுப்பர் ஸ்டார் அடிக்கடி பேசும் "இது நானா சேர்த்த கூட்டமில்ல: தானாக சேர்ந்த கூட்டம்" இந்த மைன்ட் வொயிஸ் (Mind Voice) அடிக்கடி கேட்கின்றது இந்த திருவிழா முடிந்தும்.

தொழிலாளர்களின் வர்க்க நலன் சார்  உரிமைகளை கோரும் மேடையாக இருந்த 'மேதின மேடை' இன்று அரசியல் கட்சிகளின் பிரசார மேடையாக மாறிவிட்டிருப்பது மன வருத்தத்திற்குரிய விடயம். அரசியல் கட்சிகள் தமது பலத்தை காட்டும் வருடாந்த 'அரசியல் காட்சி' நிகழ்வாகவே இந்த தொழிலாளர் தினம் மாறியிருப்பதை இவ்வார 'அலசல்' அலசுகின்றது.

நடந்து முடிந்த மேதினக் கூட்டங்கள்,  ஊர்வலங்கள்,  பேரணிகள் என்பவற்றை பொதுவில் நோக்கும் போது மிகவும் ஆச்சரியத்தக்க விடயம். தேர்தல் காலத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் , வீரவசனங்கள்,  ஆவேசமான வார்த்தைகள் அள்ளி வீசப்பட்டன.

ஆனால், இவ்வசனங்கள் அதனது அரசியல் கட்சிகள், அதன் பிரதிநிதிகள் தங்களது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் அடித்தளமாகவே அமைந்திருந்ததை மறுக்க முடியாது. தொழிலாளர்களுக்கு உரிய இத்தினத்தன்றும் இத்தொழிலாள மக்களை தங்களால் முடிந்த வரை பகடைக்காய்களாக பாவித்தமை வருந்தக்கூடிய விடயம்.

மேதினத்தன்று மாலை அதாவது  கூட்டங்கள் முடிந்த பின்னர் குறிப்பிட்ட பிரதேசங்களில் கடுமையான வாகன நெரிசல். குறிப்பிட்ட வாகனங்களை நோக்கும் போது அவற்றில் பெரும்பாலானவை வெளிமாவட்டங்களுக்குரியதே. அது மட்டுமா? அதில் வந்திருந்தவர்களில் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்களே! அவர்களில் சிலரை அணுகிய போது அவர்கள் போதையில். இது தான் தொழிலாளர் தினமா? என்று அலுத்துக்கொண்டனர்.

முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகள் உட்பட ஏனைய தலைவர்களின் உரைகளும் தமது  அரசியல் செல்வாக்கை ஸ்திரப்படுத்தி கொள்வதற்கும் எதிர்கால அரசியல் அதிகார நோக்கங்களுக்கும் அடுத்த தேர்தலை இலக்கு வைக்கக்கூடியதான உரையாகவும் இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

தொடர்ச்சியாக வேலையில்லா பட்டதாரிகள், அரசாங்க ஊழியர்கள் கண்டனப் பேரணிகளையும் சம்பளப் போராட்டங்களையும்  நடத்தி வருகின்ற நிலையில், அது குறித்தோ அல்லது உடல் உழைப்புக்களை நாட்டுக்காக வழங்கும் தொழிலாள மக்கள் பற்றியதாக அக்கறையும் இவர்களின் வீர வசனங்களில் இருந்ததாக தெரியவில்லை.

மேலைத்தேய நாடுகளில் அரசியல் மேடைகள் அல்லாது தொழிலாளர் சார் விடயங்களை கருத்திற்கொண்டதாகவே அவர்களது ஊர்வலங்கள் இப்போதும் இடம்பெறுகின்றன. உருவாக்கப்பட்ட நோக்கம் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மேமாதம் முதலாம் திகதி வருவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக எந்தெந்தக் கட்சிகள் எங்கெங்கு மேடை அமைக்க வேண்டும்? எவ்வாறான அலங்காரங்கள் செய்ய வேண்டும்? வருபவர்களுக்கு எவ்வாறு விருந்துபசாரம் வழங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தங்களது தொழிலாளர்களின் உரிமைகளை பேசுவதற்கு எத்தனிக்கின்றனர்.

இது வருடாந்தம் சாதாரணமாகவே இடம்பெற்று வரும் நிகழ்வு.... 
இந்நிகழ்வை சித்தரித்துக்காட்டும் முகமாக ஊடகங்களில் விளம்பரங்கள், வாழ்த்துச் செய்திகள், வர்ணனைக் கட்டுரைகள் போன்றவற்றையும் காணத் தவறுவதில்லை. இதெல்லாம் ஊர்களில் இடம்பெறும் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகள் போல கச்சிதமான மனதைக் குளிரச் செய்கின்ற ஏற்பாடுகளுடன் வழமைபோல நடந்து முடிந்து விடுகின்றது.

 இந்தத்  தொழிலாளர் தினத்தில்  மாத்திரம் 'தொழிலாளர் உரிமைகள்'  பேசப்படுகின்றது. பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டப்பேரணிகள் என பல முன்னெடுக்கப்படுகின்றன. இந்த முன்னெடுப்புக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக்கொடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் அறிக்கைகள், விஞ்ஞாபனங்கள் என பல முன்னெடுப்புக்கள் நடந்தாலும் இது அன்றைய தினத்திற்கு மாத்திரம் செல்லுபடியாகுவதாக அமைந்திருக்கும்.  இதன் தொடர்ச்சியை  தெரிந்துகொள்ள வேண்டுமாயின் பின்னர் அடுத்த வருட மேதினம் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது.  இன்றைக்கு கொண்டாப்படுகின்ற, அனுஷ்டிக்கப்படுகின்ற, நினைவுகூரப்படுகின்ற ஒவ்வொரு சர்வதேச தினமும் அன்றையநாளுக்கு மாத்திரம் 'அறைகூவல்' விடுக்கும் தினமாகவே இருக்கின்றது. உருவாக்கப்பட்ட அத்தினம் அன்றைய நாளுக்கு மாத்திரமே அர்த்தப்படுத்தப்பட்டு விடும் ஒன்றாக ஆகிவிடுகின்றது.

எந்த நோக்கத்திற்காக ஒரு தினம் சர்வதேச தினமாக ஐ.நா.வினால் அங்கீகரிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக அத்தினம் நினைவுகூரப்படுகின்றதா என்று சற்றேனும் சிந்தித்தால் பதில் கவலைக்குரியது.

 இதனை  இவ்வருட மேதின நிகழ்வுகளை ஒவ்வொருவரும் தங்களது பிரதேசத்தில் இருந்த தமது ஸ்மார்ட் போன்கள் மூலம் பகிர்ந்து கொண்டதை நாம் சமூக வலைத்தளங்கள் ஊடாகவே நேரடி ஒளிபரப்பு, புகைப்படங்களின் ஊடாகவே பார்க்கக் கூடியதாகவே இருந்தது.  வடக்கு,  கிழக்கு,  மலையகம் உட்பட பல பகுதிகளிலும் அவதானிக்கக் கூடிய விடயமாக இருந்த ஒரே விடயம் 'யாருக்கு கூட்டம்' அதிகமாக சேர்ந்திருக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததை குறிப்பிட முடியும்.  

தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து கலந்து கொள்ளும் நிகழ்வாக இந்தத் தொழிலாளர் தினம் இருக்கின்றபோதும் ஒவ்வொருவரும் தனித்தனி கட்சிகள், தொழிற்சங்கங்களின் பிடிக்குள் சிக்கியிருப்பதால் தங்களது உரிமைசார் விடயங்களை தாமே கேட்டுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுவதாக இலங்கையில்  கொண்டாடப்படுகின்ற மேதின நிகழ்வுகள் அமைந்துள்ளன. இந்நிலை காலங்காலமாகவே தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் தேசிய கட்சிகளாக  இருந்தாலும் பங்காளி கட்சிகள், தொழிற்சங்கங்கள் இத்தருணத்தில் தமது அரசியல் பலத்தை தாம் மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் நிலை நிறுத்திக் கொள்ளவும் தமது கட்சி சார்ந்த, சாராதவர்களை பேரம் பேசி தமது கூட்டங்களுக்கு எப்படியாவது வளாகம் நிறைந்த ஆட்களை சேர்த்து கூட்டத்தை நடத்தி முடிக்கின்றன. இந்த ஆர்வத்தில் வாக்குறுதிகளையும் வழங்கிவிடுகின்றன.

அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான  அதிகளவான பஸ் வண்டிகளை இரண்டு பிரதான கட்சிகளும் இந்த மேதினத்திற்காக முன்கூட்டியே பதிவு செய்து கொண்டன. இதன்படி,  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐ.தே.க, கூட்டு எதிரணி,  ஜே.வி.பி  ஆகியன முன்கூட்டியே பதிவு செய்து விட்டன. இதன் பலன் 40 மில்லியன் ரூபா இ.போ.ச.வுக்கும் வருமானமாக கிடைத்துள்ளது. ஆனால், இந்த தொகைகளை விட பல மடங்கு தொகை பஸ்களை மேதினம் நடைபெற்ற பகுதிகள் எங்கும் காணக்கூடியதாக இருந்தது.

ஆனால், மக்களின் சாதாரண சேவைக்காக 1300 அரசாங்க பஸ்கள் மாத்திரம் அன்றையதினம் இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதான இரு கட்சிகளும் முன்கூட்டியே புகை வண்டியையும் பதிவுசெய்திருந்தமை நகைச்சுவைக்குரிய விடயமாகவும் இருந்தது.

ஒரு நாள் நடக்கின்ற இந்த கூத்துக்கு மக்களுக்கு வசதிகளை கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கி வசியப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், அவர்கள் குறிப்பிட்ட இந்த இத்தொழில் துறை தொடர்பில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்ற போது அது சார் விடயங்களில் கண்டு கொள்ளாமல் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அதனை அடக்குவதற்கு முற்படுகின்றனர். அதற்கு எதிராக சில சக்திகளையும் தூண்டி விடும் நிலைமை காணப்படுகின்றது.

தொழிலாளர் தினம் அதனை அடையாளப்படுத்தும் நிறமாக 'சிவப்பு' நிறம் இருக்கின்றது. பலர் இந்த நிறத்திலான ஆடைகளையே அணிந்து இத்தினத்தை கொண்டாடுவார்கள். ஆனால், இங்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களில் பல தமது கட்சிக்குரிய நிறத்திலான  ஆடைகளை அணிந்து கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பேரணியில் பங்கு கொண்டிருந்தனர்.  இதுதான் இலங்கையில் கொண்டாடப்படும் மேதினமாக ஒவ்வொரு ஆட்சியிலும்  நடைமுறையாகவே இருந்து வருகின்றது.  அதுமாத்திரமன்றி உணவுக்கோ, குடிபானங்களுக்கோ இத்தினத்தில் எவ்வித தட்டுப்பாடும் நிகழவில்லை.

இதனை ஒவ்வொரு கூட்டங்களும் நடந்த  மைதானத்தில் நேற்று சுத்திரிகரிப்பாளர்களால் அள்ளப்பட்ட குப்பைகள் ஊடாக இந்த  மேதினத்தையும் மெச்சக்கூடியதாகவும் இருந்தது.

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates