Headlines News :
முகப்பு » » அவுட்குரோவரும், ஹைபிரிட்டும் - மல்லியப்பு சந்தி திலகர்

அவுட்குரோவரும், ஹைபிரிட்டும் - மல்லியப்பு சந்தி திலகர்

தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 20)


முள்ளுத் தேங்காய் தொடரின் 20ஆவது அத்தியாயத்தை எழுதத் தொடங்கும் போதே ஒரு தொலைபேசி அழைப்பு. மாத்தளை பகுதியில் இருந்து   ஒரு தொழிற்சங்க செயற்பாட்டாளர்  சொல்கிறார்  'எல்கடுவ தோட்டத்தின் காணிகளை பிரிக்கின்றார்களாம், என்ன ஏது என்று விபரம் தெரியவில்லை' என்றார்.

இந்த செய்தி நமக்குத் தரும் தகவல். 'அவுட் குரோவர் முறை'  வேகமாக இடம்பெற்று வருகிறது. பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPC) (மத்துரட்ட பிளான்டேஷன் தவிர்ந்த) ஏனையவை இப்போதுதான் முன்மொழிவுகளைச் செய்து தயாராகிக் கொண்டு வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள மக்கள் பெருந்தோட்ட 'மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச்  சபை' (JEDB), 'இலங்கை அரச பெருந்தோட்டயாக்கம்' (SLSPC ),  எல்கடுவ பிளான்டேஷன் ஆகிய தோட்டங்கள்  'அவட்குரோவர்' முறையை கடந்த பத்து வருட காலமாக சிறுக சிறுக அறிமுகப்படுத்தி இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதன் விளைவுதான் இந்த தொலைபேசி அழைப்பு. 

தனியார் கம்பனிகள் (RPC) அறிமுகப்படுத்த நினைக்கும் 'வருமான பங்கீட்டு முறை'  (Rvenue Share Method) சம்பந்தமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசப்பட்டு வருகின்றது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் மத்தியஸ்த்தத்துடன் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக் காரியாலயத்தில் இந்த புதிய முறை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டங்கள் கடந்த ஆண்டு 'கூட்டு ஒப்பந்தம்' மேற்கொள்ளப்படுவது இழுத்தடிக்கப்பட்ட காலப்பகுதியில்  தங்கள் மாற்றுத்திட்டத்தை முன்வைக்கின்றோம் என்பதன் பேரில் நடாத்தப்பட்ட கூட்டங்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC) , இலங்கைத்தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) தொழிற்சங்ககூட்டுக் கமிட்டி (JPTUC) தவிர்ந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிலாளர் தேசிய சங்கம் (NUW),  மலையக தொழிலாளர் (மக்கள்)  முன்னணி (UPF) என்பனவும் கலந்துகொண்டிருந்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

கடந்த ஆண்டு 'கூட்டு ஒப்பந்தம்' (2016)தொடர்பான பிரேரணைகளும் உரைகளும் அதற்கு முன்பெல்லாம் இல்லாத அளவில் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்திருந்தமை காரணமாக பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வைக்கும் மாற்றுத்திட்டம்  தொடர்பில் கூட்டு 'ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத' தொழிற்சங்கங்கள் (அரசியல் கட்சிகளின்) கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அத்தகைய கூட்டங்களுக்கான அழைப்பினை விடுத்திருந்தார். 

அந்தக்கூட்டங்களில் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளால் முன்வைக்கப்பட்ட முறைமையானது உடனடியாக ஏற்றுக்கொள்ளும் படியானதாக இல்லை. எனவே, இதனை சமூக மற்றும் அரசியல் தொழிற்சங்க மட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே, தீர்மானிக்க முடியும் என பங்குபற்றிய தொழிற்சங்கங்கள் கருத்தினை முன்வைக்க அந்த பேச்சுவார்த்தைகள் அப்படியே நிறுத்தப்பட்டன. அந்தக் கூட்டங்களில் பேசப்பட்டவை என்ன என்பதுபற்றி அடுத்துவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். 

அந்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட நிலையில் வழமைபோன்றே  இந்த முறையும்  'கூட்டு ஒப்பந்தம்'  மூலமே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிப்பது என வழமையான நடைமுறைகள் கையாளப்பட்டன. எனினும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் அவர்கள் முன்வைக்கும் 'அவுட்குரோவர்' எனும் மாற்றுத்திட்டத்தை அடுத்த முறை ஒப்பந்தத்திற்கு முன்னர் நடைமுறைப்படுத்துவது என்ற நிபந்தனையை இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொண்டுள்ளது. எனவே, 'அவட்குரோவர் ' முறை என்பது அடுத்த ஒப்பந்தத்தில் பிரதான பாத்திரம் வகிக்க போகின்றமை  தெளிவு. 

எனவே, ஒரு பக்கம் அரச பொறுப்பில் உள்ள தோட்டங்களில் அவை கட்டம் கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்ற நிலையில்  பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் அடுத்து திட்டவட்டமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ள இந்த 'அவுட்குரோவர்' முறைபற்றிய சமூகமட்ட ஆய்வுகளின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.
இந்த 'அவுட்குரோவர்' முறைபற்றிய இரண்டு கலந்துரையாடல்களை கண்டி 'சமூக அபிவிருத்தி நிறுவனம்'  கொழும்பிலே நடாத்தியுள்ளது.  அரச சார்பற்ற நிறுவனம் என்ற வகையிலும் அனைத்து தொழிற்சங்க, மலையக சமூக செயற்பாட்டாளர்கள் கல்வியாளர்கள், அரசியல்வாதிகளை அழைத்து இந்த கலந்துரையாடல்களை 'சமூக அபிவிருத்தி நிறுவனம்' மேற்கொண்டது. 

முதலாவது செயலமர்விலே பிராந்திய கம்பனிகள் தயார் செய்துள்ள முன்மொழிகள் உள்ள அம்சங்களை விளக்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திடம் விடத்த வேண்டுகோள் அடிப்படையில் அதன் தலைவர் ரொஷான் இராஜதுரை திட்டம் தொடர்பின் விளக்கத்தை அளித்தார்.

அவரது அறிக்கையில் முன்மொழிவு பற்றிய விளக்கத்தைவிட தோட்டங்களை பிராந்திய கம்பனிகள் பொறுப்பேற்றதன் பின்னர் அவை வளர்ச்சிப்போக்கில் சென்றுள்ளதாகவும் வறுமை நிலை குறைந்திருப்பதாகவும் புள்ளி விபரங்கள் முன்வைக்கப்பட்டமை சபையோரிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தி அவரை நோக்கி அதிகம் கேள்விக் கணைகளை எழுப்பிய செயலமர்வாகவே அது முடிந்தது. எனினும், மிகவும் சுருக்கமாகவும் 'அவுட்குரோவர்' முறையில் தொழிலாளர்கள் எவ்வாறு நன்மையடையப் போகிறார்கள் என்பது தொடர்பாக விளக்கமளித்தார். 

பிராந்திய கம்பனிகளின் முன்மொழிவின் படி அவர்கள் ஆரம்பத்தில் தயாரித்த முன்மொழிவு மற்றும் பெருந்தோட்ட அமைச்சில் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் கிடைக்கப்பெற்ற பின்னூட்டங்கள் என்பவற்றின் அடிப்படையில் 'ஹைபிரிட்' (Hybird) என்கின்ற நடைமுறையில் முதலில் தமது திட்டத்தை அமுல்படுத்தவது என்பதாக தெரிவித்தார். 


'ஹைபிரிட்' (Hybird) எனும் சொல் அண்மைக் காலத்தில் ஒரு பிரபலமானது.
வாகனங்களை தனியே எரிபொருள்  (Petrol or diesel) மாத்திரம் கொண்டு செலுத்தாத அதனிடையே மின்கலம் (Battery) ஒன்றையும் பொறுத்தி எரிபொருளினால் ஓடும் போது அது உருவாக்கும் மின்சாரத்தை பெற்றரியில் சேமித்து அந்த மின்சாரத்தின் ஊடாகவும் வாகனத்தை ஓடச் செய்வதன் மூலம் குறைந்த எரிபொருள் செலவில் வாகனத்தை ஓட்டுவதும், சூழல் மாசடைவதை குறைப்பதும் இந்த 'ஹைபிரிட்' வாகனங்களின் நோக்கம். இந்த இரண்டும் கலந்துமுறையே 'ஹைபிரிட்' (Hybird) என அழைக்கப்படுகின்றது.

மிகவும் சுவாரஷ்யமாக, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிந்துரைப்பு செய்யப்பட்டது.  அது 'ஹைபிரிட்' முறையில் விசாரணைகளை முன்னெடுப்பது என்பதாகும். 

இலங்கையில் இந்த தருணத்திலும் இந்த 'ஹைபிரிட்' என்ற சொல் அரசியல் மட்டத்தில் பிரபலமாக பேசப்பட்டது. அதாவது சர்வதேச நீதிபதிகளையும்  உள்நாட்டு நீபதிகளையும் கொண்ட ஒருபொறிமுறை மூலம் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்களை விசாரிப்பது என்பதுவே அந்த 'ஹைபிரிட்' பொறிமுறை. 

அரசியல் ரீதியாக இந்த 'ஹைபிரட்' என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் கிடைத்தால், போர்க்குற்ற விசாரணைகள் வேண்டாம் என அதனை 'வெறுப்புக்குரிய' சொல்லாக இலங்கை அரசியல் சூழல் மாற்றி வைத்துள்ள நிலையில் அந்த 'ஹைபிரிட்' முறையில் பெருந்தோட்டங்களை நடாத்துவது என முதலாளிமார் சம்மேளனம் முன்வைப்பு செய்கிறது.

இந்த 'ஹைபிரிட்' முறை என்ன? என அடுத்தவாரம் பார்க்கலாம். 
(உருகும் )

நன்றி - சூரியகாந்தி


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates