Headlines News :
முகப்பு » » தெவரப்பெருமவிடம் தமிழ் செல்பி புள்ளைங்கள் கற்க வேண்டியவை - வீ.முரளி

தெவரப்பெருமவிடம் தமிழ் செல்பி புள்ளைங்கள் கற்க வேண்டியவை - வீ.முரளி


நமது தமிழ் அரசியல்வாதிகள் அனுதாபம் தெரிவிப்பதும், அஞ்சலி செலுத்துவதும், அதற்கு போஸ் கொடுப்பதும், செல்பி எடுப்பதும் ஊடக பிரச்சாரத்துக்காகவும், முகநூல் விளம்பரங்களுக்குமே என்றாகிவிட்டது.

இவர்களோடு ஒப்பிடும் போது இல்லாமல் தமது பணிகளையும், விளைபலனைத் தரத்தக்க சேவைகளையும் அமைதியாக செய்துவிட்டுப் போபவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள்.

அவர்கள் மத்தியில் பாலித தெவரப்பெரும எனும் மக்கள் பிரதிநிதி தனித்து விளங்குகிறார்.

அவர் புரியும் பணிகளும் விளம்பரங்களுக்கு உள்ளாகவே செய்கின்றன. ஆனால் ஊடக விளம்பரங்களுக்காக நாயாய் அலைவதில்லை. அவரது முகநூலை இயக்குபவர்களும், ஆதரவாளர்களும் நடந்தவற்றை முகநூலில் செய்தியாக்கிவிடுகிறார்கள்.


அது மட்டுமின்றி அவரது நடவடிக்கை அத்தனையும் நேரடியாக விஜயம் செய்து களத்தில் இறங்கி, பந்தா இல்லாமல் ஒரு முடிவு கண்டு விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார் மனிதர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்குவது, அந்த இடத்திலிருந்து ஊடகங்களுக்கு பந்தா காட்டும் வகையில் யாராவது இரு அதிகாரிகளை, அல்லது அமைச்சரைத் தொடர்பு கொண்டு கதைப்பதாக பாசாங்கு காட்டிவிட்டு முடித்துவிட்டதாக கதை விடும் பொய்யனாக அவர் இருப்பதில்லை.

சம்பந்தப்பட்ட விடயத்தை எப்பேர்பட்டேனும் தீர்த்து முடிவு காண்பதற்காகத் தான் அவரது தொலைபேசி அழைப்புகளும், சம்பந்தப்பட்ட காரியாலயங்களுக்கு புகுந்து நீதி கோரும் நடவடிக்கைகளும் இருக்கும்.

இதனால் தெவரப் பெரும ஏராளமான அதிகாரிகளையும், சொந்த ஆளும் கட்சியையும் பகையை சம்பாதித்துக் கொண்டே வருபவர்.

அவரிடம் உள்ளூர இருக்கும் சண்டித்தன குணாம்சம் கூட மக்கள் சேவைக்கே அழுத்தமாக பிரயோகிக்கப் படுகிறது. அந்த வகையான சண்டித்தனத்தின் தேவையையும் மக்கள் ஒரு வகையில் உணரவே செய்கிறார்கள்.

இரு வருடங்களுக்கு முன்னர் அவரது மகன் நோய்வாய்ப்பட்டு இறந்து போன போது சுக்குநூறாக நொறுங்கிப் போன அந்த மனிதன் துடிதுடித்து அழுததை செய்திகள் காண முடிந்தது. இனி சில நாட்களுக்கு அந்த மனிதனின் சேவை மக்களுக்கு கிடைக்கபோவதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்த மரணச் சடங்கு நிகழ்ந்த ஓரிரு நாட்களில்  அவரை மீண்டும் களத்தில் கண்டோம்.

இன்றைய 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் எந்த ஒருவரும் தெவரப்பெரும அளவுக்கு களத்தில் இறங்கி மக்கள் நலன்களுக்காக போராடும் எந்த ஒருவரையும் காண முடியாது. அவருக்கு நிகர் அவரே தான்.

மகிந்த காலத்தில் தான், இந்த மனிதன் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்தை வம்புக்கு இழுக்கிறார் என்று நினைத்திருப்பார்கள் சிலர். ஆனால் அதைப பிழையாக்கினார் அவர். அவர் இன்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர். எந்த கட்சியென்றாலும் எனக்கு ஒன்று தான் என்கிற அவர் முன்னரை விட அதிகமான போர்க்குணத்துடன்  தனியொரு எம்.பி.யாக களத்தில் நின்று வருகிறார்.

அவரின் இந்த போக்கை சகிக்க முடியாத ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு தகுந்த அமைச்சு பதிவிகளைக் கொடுப்பதைக் கூட தவிர்த்தே வருகிறது. அதை சற்றும் கணக்கில் கொள்ளாத தெவரப்பெரும தனது பாதையில் மக்கள் சேவையில் தன்னை விட்டுக்கொடுக்காமல் இயங்கி வருவது அவரின் சிறப்பு.

அவரது போராட்டங்கள் அனைத்துமே அடிமட்ட மக்களின் பிரச்சினைகளைச் சார்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. ஊரில் உள்ள அதிகார வரக்கத்தினரதும், அரசியல் வாதிகளதும், வர்த்தகர்களினதும் பிரச்சினைகள் அல்ல என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

களுத்துறை மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் மனங்களையும் வென்றவர். அளுத்கம கலவரத்தின் போது முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக வர் எடுத்த முயற்சிகள் மகத்தானது. ஞாசார தேரரை காலிமுகத்திடலில் பகிரங்கமாக தூக்கிலேற்றி கொள்ளவேண்டும் என்று பகிரங்கமாக கூறினார்.

சென்ற வருடம் ஏழை மாணவர்களின் பாடசாலை அனுமதி விவகாரத்தை எடுத்து களத்தில் இறங்கி போராடிய அவர் உண்ணாவிரதப் போராட்டம் செய்து அதுவும் கைவராத நிலையில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். இதை ஒரு நாடகம் என்கிற விமர்சனங்கள் பரவலாக இருந்தபோதும் இந்த விடயத்தில் கற்க வேண்டிய விடயம் என்னவென்றால் எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்ற அவர் எடுத்த பிரக்ஞை தான். அதற்கு எத்தனை விளம்பரம் கொடுத்தாலும் தகும்.

இந்த வெள்ளத்தில் அதிகமான பேரை பலிகொடுத்த மாவட்டம் களுத்துறை. கடந்த மூன்று நாட்களாக அவர் நிவாரண நடவடிக்கைகளிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் மட்டுமல்ல இறந்து போனவர்களின் உடலங்களை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மீட்டுக் கொடுக்க படகில் தேடித் திரிந்துகொண்டிருக்கிறார்.

பிணங்களில் அரசியல் செய்யும் நம் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பிணங்களையும் தேடி அந்த சொந்தங்களிடம் கையளிப்பவரை நாம் வேறு பிரித்துத் தான் அறிய வேண்டியிருக்கிறது.

ஆனால் நமது தமிழ் அரசியல்வாதிகளோ முடிக்காத வேலைக்கு விளம்பரம் தரச் சொல்லி பத்திரிகைகளிடம் நாயாய்ப் பேயாய் அலைவது தரங்கெட்ட செயல் மட்டுமல்ல. வெட்கம்கெட்ட செயல். 

அனர்த்தங்களின் போது சொகுசாக களிசான் கசங்காமல் நனையாமல், பரிதவிக்கும் மக்களிடம் சுகம் விசாரித்துவிட்டு சாகசத்தனமாக திரும்புவதோடு கடமை முடிவதில்லை.

நமது தமிழ் செல்பி புள்ளைங்கள் எல்லோரும் நிறையவே பாலித தெவரப்பெருமவிடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அளுத்கம கலவரத்தில் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி பற்றி விளக்குகிறார்Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates