Headlines News :
முகப்பு » » பெண்களின் அரசியல் முன்வருகையின் தேவையும்: மலையகமும் - தனுஷன் ஆறுமுகம்

பெண்களின் அரசியல் முன்வருகையின் தேவையும்: மலையகமும் - தனுஷன் ஆறுமுகம்


சமகால உலகில் அதிகம் பேசப்படும் விடயங்களுள், பால் சமத்துவம் என்பது மிக முக்கியமான அம்சமாக காணப்படுகின்றது. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் தாபனத்தின் நிலை பேண் அபிவிருத்தியை ஏற்படுத்தும் திட்டத்திற்கான முன்மொழிவுகளில் பால் சமத்துவம் என்ற விடயம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. பால் சமத்துவம் எனும் பரந்த பரப்பில் ஒரு சிறு துளியை கொண்டு இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. அதிலும் பெண்களின் அரசியல் சமத்துவம் மற்றும் அரசியல் ஈடுபாடு எனும் பரப்பினுள் மலையக பெண்களின் அரசியல் ஈடுபாட்டை மையப்படுத்தி இக்கட்டுரை நகர்த்திச் செல்லப்பட இருக்கின்றது.

வரலாற்றுக் காலம் முதலே அரசியலில் பெண்களின் ஈடுபாடு என்பது மிகக் குறைவாகவே காணப்பட்டு வந்தது. உண்மையில் பெண்களின் ஈடுபாடு குறைந்துக் காணப்பட்டதா? அல்லது ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் அரசியல் ஈடுபாடு என்பது குறைக்கப்பட்டதா? என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றே. அந்த ஆழ்ந்த விவாதத்திற்குள் செல்வதில் நாட்டமின்றி நகர்த்துவோம் நமது கருத்தாடலை. வரலாற்றுக் காலம் முதல் சம காலம் வரை பெண்களின் அரசியல் ஈடுபாட்டை நாம் எடுத்து நோக்கினால் பெயர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வெகுசிலரே மிளிர்ந்திருக்கின்றனர். அதிலும் ஒப்பிட்டளவில் ஆண்களை விட மிகவும் குறைந்த அளவிலேயே அரசியலில் பெண்கள் பங்குப் பற்றி இருக்கின்றார்கள்.

அரசியல் நிர்ணயங்களாகட்டும், சமுதாய சட்டங்களாகட்டும் அவை அதிகமாக ஆண்களால் வடிவமைக்கப்பட்டவைகளாகவே காணப்படுகின்றன. பிற்பட்ட காலங்களில் ஆண்களின் ஆதிக்கம் கொண்டு உருவாக்கப்பட்ட அல்லது புனையப்பட்ட மதங்களும் கூட ஒப்பீட்டளவில் பெண்களின் உரிமைகளை மந்த கதிக்குள்ளாக்கி பெண் தலைமைத்துவத்தை மறைமுகமாக மழுங்கடித்திருக்கின்றன. காமப் பொருளாகவும், பலம் குறைந்தவளாகவும், அடுப்பறைக்குள் முடக்கப்பட வேண்டியவளாகவும், ஆணின் பார்வையால் கூட மானப்பங்கப்படுத்தக் கூடியவளாகவும் என குறுகிய வட்டத்திற்குள் நோக்கப்பட்ட இப் பெண்கள் தங்களை சமுதாயத்தில் தங்களது தனி மனித சுதந்திரத்தையும் ஆளுமையையும் வெளிகாட்ட பாரிய சவால்களை சந்தித்திருக்கின்றார்கள்.
கால ஓட்டம், வரலாறு எனும் திரையில் பெண்களின் திறன்களையும், ஆளுமையையும் தேவைக்கு அதிகமாகவே பறைசாற்றி இருக்கின்றது. அரசியல் துறையிலும் இதன் வெளிப்பாடு இருக்கவே செய்கின்றது. அரசி ன்கியுசிங்கா (1582–1663), எலிசபத் மகாராணி எனத் தொடங்கி பெனாசீர் பூட்டோ, சந்திரிக்கா பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, ஆங்சாங் சுகி, ஏஞ்சலா மார்கெல், ஜெயலலி;தா என இந்த திரையில் வெளிப்பட்ட மற்றும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் சகாப்தங்கள் பல. உதாரணங்களாக கூறி விட பலர் இருந்தாலும் உண்மையில் ஆண்களின் விகிதாசாரத்தோடு ஒப்பிடும் போது மிகக் குறைந்தளவான பெண்களே இந்த அரசியலில் முத்திரை பதித்துள்ளனர். அதிலும் பலர் தமது ஆண் துணையின் மறைவின் பின்னர் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர்களாகவும், அதிலிருந்து வெளிப்பட்டவர்களாகவுமே காணப்படுகின்றனர். எனினும் தனித்து சாதித்த பலரும் இல்லாமல் இல்லை.

பெரும்பாலான உலக நாடுகளின் சனத்தொகையில் 50 வீதத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் பெண்கள் அரசியலில் பங்குப்பற்றுவது எண்ணவோ மிகக் குறைவே. சில நாடுகள் பாரம்பரிய ரீதியாகவும், மதவாதங்களினூடாகவும் பெண்களின் அரசியல் பிரவேசத்தை தடுத்திருக்கின்றன. உதாரணமாக சவுதி அரேபியா இந்த தசாப்தம் வரை பெண்களுக்கு வாக்களிக்கவேனும் வாய்ப்பினை வழங்கியிருக்கவில்லை. அதேபோலவே வத்திக்கானிலும் பெண் தலைமைத்துவமொன்று உருவாகுவதற்கோ, மதம் வேறு அரசு வேறென்ற நிலைதோன்றவோ வாய்ப்பில்லை. இதனை விரும்பியேற்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இலங்கையை பொறுத்த வரையில் 1931 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் வெகுசில பெண்களே அரசியலில் முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கின்றார்கள். அதிலும் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கின்றார்களே தவிர அரசியலில் மிளிரவில்லை. அதிலும் குறிப்பாக அதிகமானோர் தேர்தல் ஒன்றினூடாக தெரியப்படாது பாராளுமன்றம் சென்றவர்களாகவே இருக்கின்றனர். அட்லைன் மொலமுறே அம்மையார் தொடக்கும் இறுதியாக ரோஹினி குமாரி வரை சுமார் 114 பெண்கள் இலங்கை பாராளுமன்றிற்கு தெரிவாகியிருக்கின்றனர். இவற்றில் அதிகமானோர் பெரும்பான்மை இனத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள். உயர் வகுப்பினைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். சிறுபான்மை இனத்தவரை பொறுத்த வரையில் திருமதி புலேந்திரன், திருமதி பேரியல் அஸ்ரப், திருமதி தங்கேஸ்வரி, திருமதி விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட வெகுசில சிறுபான்மையின மக்களே இந்த குறுகிய பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். இவை தவிர விளைவுகளை அதிகம் ஏற்படுத்தாத மாகாண சபைகளிலோ. உள்ளுராட்சி சபைகளிலோ ஆசனங்களை நிரப்பியவர்களின் விபரங்களை விட்டு நான் விலகி நகர்கின்றேன். இந்த எண்கள் அரசியல் அமைப்பு சொல்லும் சமத்துவம், இலங்கை தேசம் ஏற்றுள்ள பெண்களுக்கெதிரான பாகுபாடு காட்டாமை தொடர்பான சமவாயம் (CEDAW) உள்ளிட்ட பல சர்வதேச மற்றும் உள்நாட்டு தராதரங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உண்மையில் மனதளவில் உறுதியோடு சில பெண்களே தங்களை அரசியலுக்குள்  ஈடுப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். மேலும் சிலர் மனதளவில் உறுதியோடிருந்தும் குடும்பத்தினரின் மனப்பாங்கின் விளைவாக அரசியலில் தம்மை உள்வாங்கிக் கொள்வதில் சிக்கல் நிலையில் இருக்கின்றார். அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவத்தை வழங்காத நிலைமையும் முக்கிய காரணமாக அமைகின்றது. மேலும் அரசியல் அரங்கிலே பெண் ஒருவருக்கு தமது வாக்கினை அளிப்பதற்கு பலர் விருப்பமின்றியிருக்கின்றார்கள். இவ்வாறு பெண்களின் மனநிலை (சுய நிலை) தொடக்கம், சமூகம் வரையில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. சிக்கல்கள் இன்றி சாதனைகள் ஏது என்ற வினாவைக் தமக்குள் கேட்டுக் கொண்டாலே இந்நிலை மாறாக்கூடும். ஆனால் பெண்களுக்கு தலைமையேற்று நடாத்த திறமையில்லை என நினைத்துக் கொண்டு இன்னும் வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்போரும் எம் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக சில பெண்களோ பல உதாரண பெண்மணிகளை கண்ட பின்பும் கூட தமக்கு அந்த தகுதியில்லை (தலைமைத்துவம்) நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இலங்கையில் சிறுபான்மையின பாரளுமன்ற பிரதிநிதிகளின் பெயர்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். அந்த ஒவ்வொரு பெயரும் வன்னி, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவான பிரதிநிதிகளாவர். அவர்களின் அரசியல் பிரவேசம் நேரடியானதா?, நிர்ப்பந்திக்கப்பட்டதா? என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விடயமே. எது எப்படியோ அவர்களின் அரசியல் பிரவேசம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

வடக்கு கிழக்கை தாண்டி இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் செறிந்து வாழக்கூடிய மலையகத்திலிருந்து இத்தனை காலமும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகக் கூடிய ஆளுமைமிக்க ஒரு பெண் தலைமைத்துவம் உதயமாகவில்லையா? என்பது வியப்பான கேள்விக்குறியே. இன்றளவும் வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கும், அல்லது வளத்திற்கும் வளர்ச்சிக்குமாக போராடும் ஒரு சமுதாயகமாகவே மலையக சமுதாயம் காணப்படுகின்றது. வரலாற்றில் பெயர் குறிப்பிடக்கூடிய வெகு சில தலைமைகளையே மலையகம் வெளிகாட்டியிருக்கின்றது. உதயமான பலர் வெளிப்படாமலேயே புதைக்கப்பட்டதன் பிம்பங்களே இந்த “வெகு சிலர்”. சி.வி.வேலுப்பிள்ளை, சௌமியமூர்த்தி தொண்டமான், சந்திரசேகரன் என்ற இந்த ஆளுமைகள் ஏற்படுத்தி தாக்கங்களையும், கொண்ட பலத்தினையும் இன்று பெற்ற தலைமைகளை காண முடியாதுள்ளது.
ஏனைய சமூகங்கள் சிறந்த பல ஆண் தலைமைகளைக் கொண்டு காணப்படுகின்ற நிலையில் பெண் தலைமைத்துவம் தொடர்பில் பேசுவது நன்றே. நல்லதொரு ஆண் தலைமைத்துவத்தையே இன்று நிலைநாட்டிக் கொள்ளாத மலையக சமுதாயத்தினராகிய நாம் எவ்வாறு பெண் தலைமைத்துவம் பற்றி பேச முடியும் என நண்பர் ஒருவர் பகிர்ந்த கருத்தை இங்கே கூறிக் கொள்ள விரும்புகின்றேன். சிறந்த அரசியல் விமர்சகரான அவரது கருத்து என்னை வியப்புக்குள்ளாக்கியது. “ஆண் தலைமைத்துவமே சரியாக இல்லை, பின்னர் எப்படி பெண் தலைமைத்துவம்” என்ற அந்த வரிகளின் சுருக்கம் ஆண்களால் முடியாத ஒன்று பெண்களால் எப்படி சாத்தியப்படும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றது. இதனை ஆணாதிக்கம் என்பதா?, மனதளவில் முதிர்ச்சி நிலை போதவில்லை என்பதா? என புரியவில்லை. எண்ணங்கள் பல விதம் என எண்ணிக் கொண்டு நகர்ந்திடுவோம் நாம்.

இலங்கை இன்றளவும் வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடு என்பதாலும், அரசியல் ரீதியாகவும், மக்கள் மனதளவிலும் பக்குவப்பட வேண்டிய நிலை அதிகமாக உள்ளதாலும் பெண்களின் அரசியல் ஈடுபாடு நாடாளாவிய ரீதியில் குன்றியே காணப்படுகின்றது. ஒப்பீட்டு ரீதியில் வளர்ச்சிக் கட்டத்தில் இலங்கையின் ஏனைய சமூகங்களிலிருந்து சற்று பின் தங்கி காணப்படும் மலையகச் சமூகத்தில் பெண்களின் ஈடுபாட்டை பெறுவதென்பது இலகுவான காரியமல்ல.

கடந்த காலங்களில் மத்திய மாகாண சபைகளிலே சில தமிழ் பெண் பிரதிநிதிகள் தெரிவாகியிருந்தனர். தற்சமயமும் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணக்கூடியளவே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் தெரிவானவர்களும் சரி, சமகாலத்தில் தெரிவாகியிருப்பவர்களும் சரி தத்தமது கட்சி தலைமைகளின் கைப்பாவைகளாக செயற்பாட்டார்களே தவிர பெயர் குறிப்பிடும் படியான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. ஆகக் குறைந்தது எதிர்காலத்தில் பெண்களின் அரசியல் பிரவேசங்களை அதிகப்படுத்துவதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளையேனும் முன்னெடுக்கவில்லை.

இங்ஙனம் பெண்களின் பிரவேசம் தொடர்பில் பல்வேறுப்பட்ட ஆய்வுகளும், ஆய்வுக் கட்டுரைகளும் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள போதும் அவை அனைத்தும் அதிகமாக ஆங்கிலத்தில் அமைந்திருப்பதால் அது ஆங்கிலும் கற்றோரோடு நின்று விடுகின்றது. தமிழ், சிங்கள மொழிகளில் வெகு சில பதிவுகளே காணப்படுகின்றன. அதிலும் மக்கள் பெற்று வாசிக்கும் நிலையில் வெகு சிலவே காணப்படுகின்றன.

உண்மையில் மலையகத்தைப் பொறுத்த வரையில் தோட்டப்புறங்களில் வேலை செய்யும் பெண்கள் சொல்லெனா துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்வோர் இந்த துயரங்களை தாண்டிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்போரே. ஆக மலையகம் என்ற போதும் பிரதிநிதிகளும் அவர்கள் பிரநிதித்துவப்படுத்தும் மக்களும் இருவேறு துருவங்களை சார்ந்தோராகவே இருக்கின்றனர். நிறைய தருணங்கள் இந்த பிரதிநிதிகள் தோட்டப்புற மக்களின் துயரங்களை ஆள உணராதவர்கள் என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளது.

“உண்மையில் தோட்டப்புற தொழிலாளிகளின் நிலை அரசியல் அரங்கில் பிரதிபலிக்கப்பட அத் தோட்டப்புறம் சார்ந்தோர் அரசியலுக்குள் உள்வாங்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக அதிகமான துயரங்களை சந்திக்கும் தோட்டப்புற பெண்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டும்”. என உணர்ச்சிப் பொங்க பேசிக் கொண்டே போக முடியும். ஆனால் யதார்த்தம் ஜனநாயகத்தையும் மக்களாட்சியையும் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக தேர்தல்கள் காணப்படும் அதேவேளை, அந்தத் தேர்தல்களை தாங்கி நடாத்தும் தூணாக பணம் காணப்படுகின்றது. பிரச்சாரக் கூட்டங்கள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், சோற்று பார்சல்கள், மது என செலவழித்து மாயை நிலையை காட்டி வாக்குகளை பெறும் ஒரு கலப்பட அரசியலுக்கு மத்தியில் சாமான்ய மக்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பது என்பது எட்டாக்கணியாகிக் கொண்டே போகின்றது. ஐந்து வருடங்களில் செய்ய வேண்டிய ஒன்றையும் செய்யாது, மீண்டும் தாம் தெரியப்பட  வேண்டும் என்பதற்காக தேர்தல் அறிவித்தவுடன் செய்யும் ஏமாற்று நடவடிக்கைகளுக்கு பணத்தை வாரி இரைக்கும் அந்த நாடகத்தில் ஏமாறும் மக்களும் அந்த ஏமாற்றுக்காரர்களிடம் சோடை போகின்றனர்.

இவ்வாறு பணம் முதலிடம் வகிக்கின்ற ஒரு தேர்தலில் ஒரு தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்யும் ஒரு பெண் அரசியலுக்குள் வருவது என்பது எங்ஙனம் சாத்தியப்படும். கோடி கோடியாய் சேர்த்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் உண்மையில் தோட்டப்புற மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பின் அவர்களிலிருந்து வேட்பாளர்களை தெரிந்து அவர்களுக்கு வாய்ப்பும், தேர்தலுக்கான வசதிகளையும் செய்துக் கொடுக்க வேண்டும். அல்லது நுவரெலியா போன்ற  மாவட்டத்தில் தேசிய பட்டியலை வாங்கிக் கொடுக்க திராணியுள்ள கட்சிகள் தங்களின் கைக்கூலிகளுக்கு அதனை வழங்காது தோட்டப்புற மக்களுக்கு அவ்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தோட்டப்புற மக்கள் எனும் போது தோட்டத்தில் அன்றாடம் வேலை செய்யும் மக்களையோ, பெண்களையோ மட்டும் நான் மட்டுப்படுத்தவில்லை;. தினமும் அட்டைகளுக்கும், அரக்கர்களுக்கும் மத்தியில் மலையிலும் ரப்பர் போர்வையுடனும், வெயிலில் வியர்வை சிந்தியும், உழைத்து கறுத்த கரங்களைக் கொண்ட தன் தாயின் கஷ்டத்தையும், தந்தையின் கஷ்டத்தையும் பார்த்து வளர்ந்து படித்து பட்டம் பெற்றிருக்கும் ஒருவருக்குக் கூட இவ்வாய்;ப்பினை வழங்க முடியும். குறிப்பாக இவ்வாறான இடங்களில் இருந்து வந்த பெண்களுக்கு இவ்வாய்;ப்பினை வழங்குவது மலையகத்தைப் பொறுத்த வரையில் ஒரு மாற்றத்திற்கு வழி சமைக்கும்.

பெண் உரிமைகள் எனும் விடயத்திலும் ஏனைய சமுதாயங்களோடு ஒப்பிடுமளவிற்கு நாம் இன்னும் வளரவில்லை. 18 வயதானதும் தோட்டத்தில் பெயர் பதிவதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையும், வீட்டு வேலைகளை செய்வதற்காகவே பெண் என்ற நிலையும் எம் சமூகத்தில் இருந்து இன்னும் முற்றாக நீங்கவில்லை.  இவ்வாறான நிலைகளைத் தாண்டி  எமது சமுதாயத்தை அடுத்தக் கட்டம் நோக்கி நகர்த்திச் செல்ல இந்த துயரங்களைத் தாண்டி வந்த சாதனைப் பெண்களின் அரசியல் பிரவேசம் அதிகமாகும். இந்த அரசியல் என்பதொன்றும் ஆபத்தான விடயமல்ல. ஆனால் ஆபத்தான விடயமாக்கப்பட்டுள்ளது. மக்களின் நிலையறிந்த தரப்பினர் அரசியலுக்குள் உள்வாங்கப்பட இந்த நிலை குறையும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

மலையகத்தைப் பொறுத்த வரையில் வாக்காளர்களும், பலம் பொருந்திய மற்றும் பழைமையான கட்சிகளை குறித்து நின்று அவர்கள் எத்தனை தடைவ வாக்கு தவறியிருந்தாலும், எத்தனை தடவை துரோகமிழைத்திருந்தாலும் அவற்றை மறந்து,  தேர்தல் கால கண்துடைப்புக்களில் ஏமார்ந்து அவர்களுக்கு விலை போய் விடுகின்றனர். தன் குடும்பத்திலிந்து ஒரு நல்ல அரசியல்வாதியை உருவாக்க என்னாத இவர்கள், அத்தகைய நல்ல நோக்கம் கொண்டு வரும் தோட்டப்புற தரப்பினர்களையும் புறந்தள்ளி விடுகின்றனர்.

கடந்த காலங்களில் தொலைக்காட்சியில் தோன்றி ஏமாற்றிக்கொண்டு மலையகத்தில் வாக்குப்பெற்ற பிரதிநிதி தனது ஏமாற்று வித்தை பழிக்காது என்று தெரிந்த சந்தர்ப்பத்தில் மலையகத்தில் தனது கட்சி சார்பில் பெண்களை வேட்பாளர்களாக இறக்கியிருந்தார். குறிப்பாக இவ்வணியில் தோட்டப்புற பெண்கள் அதிகமாக இருந்தனர். தனது ஏமாற்று நாடகத்தின் ஒரு பாகமாக இதனை அவர் செய்திருந்தாலும் அந்த முயற்சி வரவேற்கத்தக்கதே. எனினும் மலையக முதலைகளின் வாக்கு வேட்டைக்கு முன்பதாக இவர்கள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்பது தெரிந்தும் இத்தனை பெண்களை களமிறக்கி படுதோல்விக் கண்டமை பல பெண்களின் மனதில் நம்மால் அரசியல் வெற்றி என்பது முடியாது என்ற மாயை உருவாக காரணமாக அமைந்திருந்தமை நாம் அறியாத பக்கங்களே. கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் இ.தொ.காங்கிரஸ் சார்பில் ஒரு பெண் வேட்பாளர் பாராளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்தாலும் அவர் தோல்வி; கண்டிருந்தார். பெண் பிரதிநிதிகள் மீது மக்கள் மத்தியில் காணப்படும் பாராபட்ச நிலைமையின் விளைவு இதுவெனினும் அவர் மத்தியமாகாண அமைச்சராக இருந்த சந்தரப்பங்களில் அவரின் செயற்பாடுகளில் காணப்பட்ட திருப்தியின்மையும் ஒரு காரணமாக அமைகின்றது.

இவ்வாறு பல சிக்கல்கள் பெண்கள் அரசியலுக்குள் வருவதற்கான நிலைப்பாட்டிற்கான தடுப்புச் சுவர்களாக காணபப்படுகின்ற அதேவேளை மலையக பெண்களைப் பொறுத்த வரையில் அந்த தடுப்பு என்பது மிக அதிகமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக தோட்டப்புறங்களிலே வேலை செய்யும் பெண்கள் நாட்டு நடப்புக்கள், அரசியல் போக்குகள்; என்பன தொடர்பில் போதிய விளக்கமற்றவர்களாகவே காணப்படுகின்றனர். தொழிநுட்ப வளர்ச்சியாலும் உலகமயமாக்கலாலும் உலகத்தை சுருக்கியிருந்தாலும் பொருளதாரம் எனும் சாத்தானாலும், போதிய கல்வி அறிவின்மையாலும் தோட்டப்புற மக்கள் இன்னும் பூரணமாக உலகமயமாக்கலுக்கு உட்படமாலேயே இருக்கின்றனர். இதுவும் மலையக தோட்டப்புற மக்களின் அரசியல் பிரவேசங்களுக்கு பாரிய முட்டுக்கட்டைகளை இடுகின்றது.

பெண்களின் அரசியல் பிரவேசங்களை அதிகரிக்கவும் பாராளுமன்றில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றில் எத்தனை மலையக தோட்டப்புற பெண்கள் பலன் பெற்றார்கள் என்பது கேள்விக்குறியே. குறிப்பாக 2005 – 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 5000 யிற்கு அதிகமான பெண்களுக்கு இவ்விடயம் தொடர்பிலான கருத்தரங்குகளும், செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டன. இவை பல்வேறுப்பட்ட தன்னார்வ தொண்டர் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த காலப்பகுதியாகட்டும் அதற்கு பிற்பட்ட காலப்பகுதியாகட்டும், இவற்றில் பயன்பெற்ற பெண்கள் அதிகமாக பெரும்பான்மையினத்தை சேர்ந்த பெண்களாவர். அவர்களை விட வடக்கு கிழக்கைச் சேர்ந்த சில தமிழ் - முஸ்லிம் பெண்களும் நன்மை பெற்றிருந்தனர். ஆனால் மலையத்தை சேர்ந்த தோட்டப்புற பெண்களை குறிவைத்து எந்த செயற்பாடுகளும் இடம் பெறவில்லை. ஏனைய அரசியல் ரீதியான திட்டங்களைப் போன்று இவ் விழிப்புணர்வு செயற்பாடுகளிலும் எம்மக்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலைப்பாடே காணப்படுகின்றது.

இவ்வாறு பல திட்டமிடப்பட்ட திட்டங்களிலும் சரி, மலையக தலைமைகளால் திட்டமிடப்பட்ட முறையிலும் சரி மலையகப் பெண்களை அரசியலுக்குள் உள்வாங்கும் செயற்பாடானது முடக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. மலையகத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களும் சரி ஏனைய அமைப்புக்களும் சரி இந்த சிக்கல் நிலைக்கு ஒரு முடிவுக்கட்டி பெண்கள் சார்பில் ஒருவரையேனும் மலையத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பும் செயற்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்காத நிலைமையே காணப்படுகின்றது.

பிரச்சினைகள் இவ்வாறு காணப்படும் அதே வேளை இவற்றிற்கான தீர்வு என்பது குறுகிய காலத்தில் எட்டப்பட முடியாத ஒன்றாகும். மலையகத்தின் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம், அரசியல் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஊட்ட வேண்டிய அதேவேளை பெண் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அது மாத்திரமன்றி மக்களுக்காகவே கட்சி வளர்க்கின்றோம் என வயிறு வளர்த்து திரியும் கூட்டமும் தங்களது வாக்கு வங்கிகளை கொண்டு சிறந்த பெண் தலைமைகளை உருவாக்க வேண்டும் அல்லது அதற்கான முயற்சிகளையேனும் மேற்கொள்ள வேண்டும். நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படும் பெண் தலைமைத்துவம், பெண்களின் அரசியல் உள்வாங்கல் தொடர்பான செயற்பாடு மலையகத்தை மேலும் அதிகப்படுத்தப்பட வேண்டும். மலையகப் பெண்கள் எனும் போது படித்த மலையகப் பெண்கள், தோட்டப்புற தொழிலாளிகள் என இரு பிரதான தரப்பினர் உள்ளனர். இவர்களில் யார் பிரதிநிதியாக வந்தாலும் நன்றுதான். ஆனாலும் அந்த தோட்ட தொழிலாளியின் கஸ்டத்தை உணர்ந்த ஒரு படித்த பெண் அல்லது அந்தக் கஸ்டத்தை அனுபவ ரீதியில் உணர்ந்து அதனை போக்க வேண்டும் என துணிந்த ஒரு பெண் பிரிதிநிதியாக வருவது மேலும் சிறப்பாக அமையும்.

மேலும் அரசியல் கட்சிகள் வேட்பு மணு தாக்கல் செய்கின்ற சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டளவான வாய்ப்பினை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்ட ஏற்பாடு கொண்டுவரப்பட வேண்டும். உதாரணமாக இந்தியாவில் 2008 ஆம் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டமூலம் கொண்டுவரப்பட முயற்சிக்கப்பட்டும் தோல்வியை தழுவியிருந்தது. அத்தகையதோர் சட்ட ஏற்பாட்டினை இலங்கையில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றுவது இப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தரும். எது எவ்வாறாயினும் அரசியல் முன்வருகைக்கு பெண்ணும் துணிந்திடத்தான் வேண்டும்.

பெண்கள் தலைமையேற்க தகுதியற்றவர்கள், மென்மையானவர்கள், பிற சவால்களுக்கு இலகுவாக உட்படக் கூடியவர்கள் என்பன போன்ற 14ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மன சிந்தனையுடன் இருப்போர் தத்தமது சிந்தனைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்களுமே இவ்வாறான சிக்கலுக்கு முகங் கொடுத்து நாட்டினையும் மக்களையும் வரலாற்றையும் சீரழித்த வரலாறுகள் அதிகம். தலைமைத்துவம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பால் சம்பந்தப்பட்ட விடயமல்ல. அது மனம் சார்ந்த விடயம். மாற்றத்தை நோக்கிய மன எண்ணமும் மக்கள் நலன் பேணும் உயிர் துடிப்புள்ள எவரும் தலைமையேற்க தகுதியானவர்களே. மீண்டும் நூற்றாண்டுகளுக்கு பின்னே பயணிக்க முயலாது மனங்களை மாற்றி சமுதாய மாற்றத்திற்கு வழிகோல முயற்சிப்போம்.

நன்றி - http://adndhanushan5.wixsite.com/
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates