மறைந்த முன்னால் அமைச்சரும், மலையக மக்கள்
முன்னணியின் தலைவருமான சந்திரசேகரனின் புதல்வி அனுஷா சந்திரசேகரன் அக் கட்சியின்
உயர் பீடத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மலையகத்தில் பெண்களின் அரசியல் பாத்திரம் பெறும்
பற்றாக்குறைக்குரியது. அந்த வகையில் அனுஷா போன்ற இளம் சந்ததினரின் வருகை மலையக
அரசியலுக்கு பலமூட்டக்கூடியது.
அதே வேளை மலையகம் ஏற்கெனவே வாரிசு அரசியலாலும்,
குடும்ப அரசியலாலும் பட்ட துன்பங்களும், பின்னடைவுகளும் மறப்பதற்கில்லை.
சந்திரசேகரனின் மறைவின் பின்னர் மலையக மக்கள் முன்னணி
ஒரு வகையில் குடும்ப சொத்தாகவே ஆக்கப்பட்டது. சந்திரசேகரனின் மனைவி சாந்தி
சந்திரசேகரனின் பூரண கட்டுப்பாட்டில் அது இருந்தது. முக்கிய அரசியல் முடிவுகள் கூட
எடுக்க முடியாதபடி மூத்த உறுப்பினர்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர். இராதாகிருஸ்ணன்
போன்ற பணம் படைத்த வியாபாரிகளிடம் கட்சி சிக்கியபோது அரசியல் ஞானமுள்ள மூத்த
உறுப்பினர்கள் பின் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களின் முடிவுகள் எடுக்கும்
அதிகாரமும் அவர்களிடம் இருந்து பறிபோனது.
இந்த நிலையில் தான் ஓய்வு பெறுவதாகவும் தனது இடத்தை
தனது மகளுக்கு கொடுப்பதாகக் கூறி அனுஷாவிடம் உயர்பீட பொறுப்பு கொடுக்கப்படுவது
குடும்பச் சொத்தை கைமாற்றும் ஒரு நடவடிக்கையா என்கிற சந்தேகம் எழுவதை தவிர்க்க
முடியாது.
சாந்தி போன்றே அவரின் மகள் அனுஷாவும் அரசியல்
பணிகளில் ஈடுபட்ட அனுபவங்களில் இருந்து உயர் பீடத்தை அடையவில்லை. மாறாக அவர்களின்
ஒரே தகுதி சந்திரசேகரனின் குடும்பம் என்பது மட்டுமே.
இப்போது அனுஷாவுக்கு ஒரு சந்தர்ப்பம்
கிடைத்திருக்கிறது. கல்விகற்ற, இளம்,
பெண்ணின் அரசியல் பிரவேசம் என்கிற ரீதியில் அனுஷாவின் வருகை முக்கியம் என்பதை
பதிவு செய்துகொள்கிற அதேநேரம் நேரடியாக மேலே வந்த அவர் கட்சியின் வளர்ச்சியிலும்,
மலையக அடிமட்ட அரசியலிலும் பணியாற்றி தன்னை நிரூபிக்கும் தார்மீக பொறுப்புக்கு
உரியவர்.
இதுவரை அடிமட்டத்திலிருந்து கிடைக்காத அரசியல் பயிற்சி "உயர் பீடத்திலிருந்தாவது" கிட்டட்டும்.
இதுவரை அடிமட்டத்திலிருந்து கிடைக்காத அரசியல் பயிற்சி "உயர் பீடத்திலிருந்தாவது" கிட்டட்டும்.
மலையக மக்கள் முன்னணியும் அதன் தலைவராக இருந்த மறைந்த
சந்திரசேகரனும் ஒரு காலத்தின் உச்ச நாயகத்துவமாக இருந்ததை மறுக்க முடியாது.
அதேவேளை அரசியல் ஒர்மமிழந்து சராசரி சாக்கடை அரசியலில் சிக்கி அரசியல்
இலக்குகளையும், கொள்கைகளையும் இழந்து போன சம்பவங்களை மறந்து விட முடியாது. சந்திரசேகரனுக்கு இன்றளவிலும்
இருக்கும் மரியாதை அவரின் தொடக்க அரசியலுக்கு இருந்த மரியாதையே ஒழிய அவர் இறந்த
போது இருந்த மரியாதை அல்ல என்பதையும் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது.
மலையகத்துக்கு இன்றுவரை ஒரு உறுதியான மாற்று அரசியல் கிடையாது.
மலையக மக்கள் முன்னணி அந்த பாத்திரத்தை 90 களின் நடுப்பகுதி வரை வகித்தது. அந்த உறுதிமிக்க
அரசியல் சுலோகங்களை இந்த புதிய இரத்தம் பாய்ச்சுவதன் ஊடாக வெற்றி கொள்ள முடிந்தால்
மலையகத்துக்கு மீண்டும் ஒரு அரசியல் வெளிச்சம் கிடைத்திருப்பதாக நம்பிக்கை
கொள்ளலாம்.
அந்த நிலைமைகளையும் கருத்தில் கொண்டே அனுஷாவின்
வருகையையும் நாம் கணிக்க வேண்டியிருக்கிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...