Headlines News :
முகப்பு » » மலைநாட்டு தமிழ் மக்கள் தலைவர்கள்- கோ. நடேச ஐயரின் சாதனைகள் - ஸி. வி. வேலுப்பிள்ளை

மலைநாட்டு தமிழ் மக்கள் தலைவர்கள்- கோ. நடேச ஐயரின் சாதனைகள் - ஸி. வி. வேலுப்பிள்ளை


நடேச ஐயர் அவர்களின் வாழ்க்கையே ஒரு சகாப்தத்தின் தொடக்கமாகும். காட்சிக்குரியவராக இருப்பதற்கு இணையற்ற ஆற்றல் படைத்தவர். நூற்றுக்கணக்கான செயற்கரிய செயல்களை ஆற்றிய பெரியார். பல சூழ்நிலைகளைச் சாமர்த்தியமாக வென்றவர். நிகழ்ச்சிகள் அவரைச் சுற்றி வட்டமிட்டன. நிகரற்ற தலைவராய் விளங்கினார். அவர் பல துறைகளிலும் ஈடுபட்டார்.

தோட்டத்தில் விழிப்புற்றார்
அவர் ஒரு பத்திரிகை எழுத்தாளர்; நூலாசிரியர்; துண்டுப் பிரசுரம் எழுதுபவர்; தொழிற்சங்கவாதி; அரசியல் கிளர்ச்சியாளர் இவற்றிற்கெல்லாம் மேலாக அவர் ஒரு அரசியல் அறிஞராகவும் விளங்கினார்.

1920ஆம் ஆண்டின் முற்பகுதியில்தான் நடேசஐயர் ஈழத்திற்கு வந்தார். அப்பொழுது அவரை யாரும் அறியார். அன்று அவரைக் கேள்விபட்டவரும் இலர் எனலாம்.

உடுபுடைவைக் கடை முதலியார் ஒருவர், ஒருமுறை இவரைத் தோட்டப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். ஐயர் தோட்டத் தொழிலாளர்களின் துன்பத்தைக் கண்ணாக் கண்டார். ஐயரவர்கள் விழிப்புற்றுச் செயலாற்றமுன் அறிவும் சிந்தனையும் வேண்டும் என்று எண்ணினார்.

தன்னை அறிமுகப்படுத்தி மக்களோடு நெருங்கிப் பழகுவதற்காக வெற்றி உங்களுடையதே என்ற நூலை எழுதினார். இது அவர் எழுதிய முதல் நூல். அந்த நூல் நன்றாக விலைப்பட்டது. 'தேசபக்தன'; என்ற சஞ்சிகையை வெளியிடலானார். அந்தச் சஞ்சிகை தனிப்பட்ட ஒரு இனத்திற்காக என்று எழுந்ததல்ல@ ஆயினும் அது நீண்டகாலம் வாழவில்லை. சஞ்சிகை தோன்றியதன் அடிப்படைக் குறிக்கோள் நிறைவேறியது ஐயரவர்களுக்கு வெற்றி!

தொழிற்கட்சி தோற்றம்
பின், ஐயரவர்கள் திரு. ஈ. குணசிங்காவோடு சேர்ந்து முதன் முதலாகத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். இலங்கைத் தேசிய காங்கிரஸை எதிர்பார்த்து இலங்கைத் தொழிற் கட்சியைத் துவக்கினார். இந்த இரண்டு இயக்கங்களும் மக்களின் எழுச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தொண்டு புரிந்தன.

கருத்துவேறுபாடு காரணமாகத் திரு. குணசிங்காவைவிட்டு ஐயரவர்கள் விலகினார். பின் லேக் ஹவுசில் சேர்ந்து பணியாற்றினார். ஆனால் ஐயரவர்கள் பெரும் அபிலாஷை படைத்தவர். என்றும் உதவி ஆசிரியராகவே கடைமையாற்ற அவரால் முடியாவில்லை.

லேக்ஹவுஸை விட்டு விலகினார். தோட்டத் தொழிலாளர் அவர் உள்ளத்தைக் கவர்ந்தனர். தமது செயற்களமாகத் தொப்பித்தோட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கிருந்துதான் இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனம் தோன்றியது.

அது தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய தொல்லையாகவே இருந்தது. சர்.பொன்னம்பலம் அருணாசலம் திரு. தியாகராஜன் செட்டியார் ஆகியோர் காலத்திலிருந்து ஐயரவர்களைப் போலத் தொழிலாளர் சங்கத் தலைவர் எவரும் தொழிலாளர் முறையில் இருந்த அநீதிகளை அச்சமின்றியும் ஊக்கத்துடனும் எடுத்துக்காட்டவில்லை. இதற்காகத் தமது அச்சுக்கூடத்தையும் மேடையையும் கைவந்த ஆயுதமாகிய துண்டுப்பிரசுரத்தையும் பயன்படுத்தினார். இவற்றோடு தோட்ட முதலாளிகள் இராச்சியம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். நூல் பரவாமல் தடுப்பதற்காகத் தோட்டத் துரைமார் நூற்றுக்கணக்கான பிரதிகளை வாங்கி, எரித்தார்கள். ஆயினும் நூல் பரவாமல் இருக்கவில்லை. வெள்ளைமாளிகையும் இந்திய அரசாங்கமும் திடுக்கிட்டன.

1927ம் ஆண்டில் ஐயரவர்கள் சட்டசபைக்குத் தெரிவுசெய்யப்பட்டார். திரு.சுல்தானின் இடத்திற்கு. ஐயரவர்கள் நாட்டின் கனிப் பொருள்வளங்களை அபிவிருத்தி செய்யவேண்டுமென்று சட்டசபையை வற்புறுத்தினார். அவருடைய விடாமுயற்சியால் மின்னரம், இல்மனைட் சுரங்க வேலைகள் தொடங்கின.

வாழ்க்கையில் ஒரு திருப்பம்
அந்தக் காலத்திலே கரையோரப் பிரதேசத்தில் சைவசமய வளர்ச்சி குன்றியிருந்தது. நீர்கொழும்பில் உள்ள சைவ மக்கள் சுவாமியைத் தேரில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்ல முடியாதிருந்தது. அவர்களுக்கு இந்த உரிமையை ஐயரவர்களே பெற்றுக் கொடுத்தார். நீர்கொழும்புத் தமிழர் ஊர்வலத்தில் ஐயரவர்களையும் சிறப்பாகச்செய்த ஒரு இரதத்தில் கொண்டு சென்றனர். இது ஐயரவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தைக் குறித்தது.

சர். இராமநாதன் வயதுவந்தோர் வாக்குரிமையை எதிர்த்தார். இதனைத் தடைசெய்ய வெள்ளை மாளிகைக்கும் சென்றார். ஆனால் ஐயரவர்கள் சர்வஜன வாக்குரிமையை ஆதரித்து டொனமூர் கமிஷன் முன்பு தீரத்துடன் போராடினார்@ வெற்றியையும் கண்டார்.
ஐயரவர்கள் 1931ம் ஆண்டில் முதலாவது அரசாங்க சபைக்குச் செல்வதற்குச் சூழ்நிலைகள் தடை செய்தன. அவருக்குக் கெட்டகாலம் தொடங்கியது.

பொருளாதார மந்தத்தின் விளைவாகத் தோட்டங்களிலே ஆள்குறைப்பு நடைபெற்றது@ தொழிலாளர் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். அன்று தொழில் மந்திரியாக இருந்த திரு பெரிசுந்தரம் தொழிலற்றவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் திட்டம் ஒன்றினைக் கொண்டு வந்தார். ஐயரவர்கள் இதனை நல்ல வாய்ப்பாகக் கொண்டு, ஆள்குறைப்புக்கெதிரான ஆட்சேபனைகளைக் கிளப்பிவிட்டு தோட்டங்களில் இருந்து விலகும்படி தொழிலாளர்களை வற்புறுத்தினார். தொழிலாளர்கள் பலர், ஆணும் பெண்ணுமாக, தொப்பித் தோட்டப் புகைவண்டி நிலையத்தில் கூடினர். தோட்டங்கள் காலியாக இருந்தன@ புகைவண்டிச்சேவை சீர்குலைந்தது. புகைவண்டிப்பகுதி அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் தொப்பித் தோட்டத்திற்கு விரைந்தனர். ஐயரிடம் சென்றார்கள். ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. தொழிலாளர்களும் வேலைக்குத் திரும்பினர்.

நினைவுச் சின்னம் ஆக விளங்கும் நூல்
ஐயரவர்கள் 1935ம் ஆண்டுத் தேர்தலின் பொழுது திரு. பெரிசுந்தரத்திற்கு மாறாகத் தொப்பித்தோட்டத்தில் பெரும் இயக்கம் ஒன்றை நடத்தினார். அந்த இடத்தை ஐயருக்கு விட்டு விட்டுத் திரு. பெரிசுந்தரம் ஓடவேண்டியிருந்தது.
திரு.வள்ளியப்ப செட்டியார், திரு.சங்கரலிங்கம்பிள்ளை ஆகியோரின் துணைக்கொண்டு ஐயரவர்கள் இந்திய சேவா சங்கத்தை அமைத்தார். இது இந்திய மத்திய சங்கத்துக்கு எதிராகத் தோன்றியதெனலாம். 1939ம் ஆண்டில் இந்த இரண்டு ஸ்தாபனங்களையும் பண்டிட் நேரு ஒன்றாக்கினார்@ இலங்கை இந்திய காங்கிரஸ் பிறந்தது.

ஐயரவர்கள் காங்கிரஸில் பலகாலம் இருக்கவில்லை. அவர் தமது சம்மேளனத்தைக் கலைக்கவுமில்லை. தம்முடைய அரசியல் நண்பராகிய திரு. சத்தியவாகீஸ்வர ஐயரோடு சேர்ந்து உழைக்கலானார்.

ஐயரவர்களின் நாடகங்கள், நாவல்கள், வருமானவரி வழிகாட்டி ஆகிய புத்தகங்கள் இலக்கியப் படைப்புகளாக இல்லாமல் மறைந்துவிட்டன. ஆனால் இலங்கை இந்தியர் பிரச்சினை பற்றிய அவருடைய பெரும் நூல் அவர் நினைவிற்கு ஒரு சின்னமாக விளங்குகிறது. அது ஓர் அருமையான நூல். அந்தத் துறையில் அது நமக்கு வழிகாட்டியாகப் பயன்படவேண்டிய நூல்.

பிழையால் உற்ற தோல்வி
பெரும் அபிலாஷை உடையவர்கள் செய்யும் பெரும் பிழையை அவர் செய்தார். மக்கள் வளர்ந்து, வயதடைந்து இறப்பவர்கள்@ மக்களுடைய கருத்துக்கள் மாறும் என்பதனை உணரத் தவறினார். அவருக்கு நல்ல ஆலோசனை கூறுவோர் இருக்கவில்லை. ஆமாம் போடுபவர்கள் மட்டுமே இருந்தார்கள். அவருடைய ஸ்தாபனம் ஒரு திட்டவட்டமான கொள்கையுடையதல்ல ஆனால் தான் மட்டும் தனியாய் நின்று நாடகத்தை நடத்தினார். அவருடைய சம்மேளனம் - அவர் ஏறிச்சென்ற அந்த இரதம் 1947ம் ஆண்டில் நொறுங்கிச் சிதைந்தது.

தொழிலாளர் எழுச்சியுற்று, உரிமையுடைய மக்களைப்போல் தன் மானத்தோடு நடக்க ஐயரவர்கள் கற்பித்தார் என்பதனை ஒருபொழுதும் அலட்சியம்செய்ய முடியாது.

அரசியல் எதிரிகள்மீது வசைமாரி பொழிவதற்காகப் பாம்பாட்டிக்கதைக் கேலிச் சித்திரங்களை நுண்ணிய திறமையுடன் பயன்படுத்தினார். குறித்த இச்சித்திரங்கள் அவருக்கே பொருத்திவிட்டன. முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பொது மக்களைத் தம் இனிய குரலின்படி ஆட்டினார். 1947ம் ஆண்டில் அவர் குரல்கெட்டது மஸ்கேலியாத் தொகுதிப் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

எம்மக்களுக்காகத் தம் வாழ்க்கையின் சிறந்த பகுதியைத் தியாகம் செய்தாரோ அவர்களே பின் ஐயரவர்களை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டனர். இது அவருடைய உள்ளத்தைப் பிளந்தது. 1948ம் ஆண்டில் மாரடைப்பால் அவர் இறந்தார்.


(தினகரனில்- 1958, வெளியான இக்கட்டுரை லெனின் மதிவானத்தால் சேகரிக்கப்பட்டது)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates