Headlines News :
முகப்பு » » தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு... - திலக்

தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு... - திலக்


கபாலி என்றொரு திரைப்படம் வந்ததுதானே. நான் இன்னும் அதனைப் பார்க்கவில்லை. வழமையான ரஜினி படங்கள் மீதான ஆர்வமின்மை முதல் காரணம். ஆனாலும் அந்த படம் குறித்த சர்ச்சைகளால் அந்த திரைப்பட இயக்குனரான பா.ரஞ்சித் இன் நேர்காணல்கள் பலவற்றைப் பார்த்தேன். கபாலியில் அவர் பேசிய அரசியல் என்னவென இன்றுவரை பார்க்காத நிலையில் கபாலி எனும் திரைப்படத்தை வைத்துக் கொண்டு பா.ரஞ்சித் 'பேசும்'அரசியல் பிடித்திருந்தது. நேரம் வாய்க்காத்தால் இன்னும் கபாலியை பார்க்கவில்லை. ஆனாலும் பொங்கல் நாளன்று வசந்தம் தொலைக்காட்சி கபாலியை ஒளிபரப்ப எதேட்சையாக கொஞ்சம் பார்த்தேன். அதில் ஒரு காட்சியில் நிழல் போன்று பயன்படுத்திய 'கத்தி' காட்சிகள் கபாலியைப் பார்க்கவும், கடந்தவாரம் நேர்ந்த என்னுடைய அனுபவம் ஒன்றை பகிர்வும் தூண்டுதலாகியது.

கடந்த மாதம் அழைப்பெடுத்த  ஒரு தருணத்தில் தங்கை லுணுகலை ஶ்ரீ, அல் அஸ்மத் எழுதிய அறுவடைக் கனவுகள் நாவலை முன்வைத்து நான் எழுதிய கட்டுரையில் தேயிலை தொழில் துறை  வீழ்ச்சி குறித்த பதிவுகளின் எனது விபரிப்பு குறித்து பேசிவிட்டு, அதில் 'ரப்பர்' தொழில் குறித்தும் அங்கு வாழும் மலையக மக்கள் குறித்தும் இலக்கியங்கள் அதிகளவில் வராமை குறித்த எனது அவதானம் முக்கியமானது என விவரித்தார். (இப்போது மாத்தளை மலரன்பன் இரப்பர் வாழ்வு குறித்த நாவல் ஒன்றை எழுதிக்கொண்டிருப்பதாகவும் ..விரைவில் வெளிவரவுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது. வாசிக்க ஆவலாக உள்ளேன்) கூடவே ஶ்ரீ கூறிய இன்னுமொரு விடயம் எனது கவனத்தைப் பெற்றது. பாம் ஒயில் தொழிலுடன் தொடர்புடையதான சிறுகதை ஒன்றை தன்னுடைய தோழி ஒருவர் எழுத விழைவதாகவும் அது அவருக்கு அந்த துறை சார்ந்தவர்களிடம் இருந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதா எனவும் ஆலோசனைகள் கேட்டார். கட்டாயமாக பதிவு செய்யச் சொல்லுங்கள்.இந்த பாம் ஒயில் குறித்த தேடல் அவசியம் என்றேன். 'ஒரு பூ முப்பது கிலோ கிட்ட வருமாம் அண்ணா... தவிர இன்னும் பல அண்ணாவிடம் நான் சொல்ல முடியாத்தெல்லாம் நடக்குதாம் அண்ணா' என்ற ஶ்ரீ யின் ஆதங்கத்தின் பின்னையதை புரிந்து கொண்டு, முன்னையதின் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன்...."என்னது... பூ ஒன்னு முப்பது கிலோவா....."

தென்னைத் தொழிலில் இருந்து நம் மக்கள் முற்றாக ஓரம் கட்டப்பட்டு குருநாகல், சிலாபம் பகுதிகளில் கரைந்து விட்டார்கள். குளியாபிட்டிய - புத்தளம் எல்லையில் ஒரு தனியார் தென்னந்தோட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சிறிய தோட்டத்தை பார்த்துக்கொள்ளும் ஏழைக்குடும்பம் ஒன்றுதான் அங்கு இருந்தது. தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு 'அக்கா வின் ஊர் இதேதானா' என்று சிங்களத்தில் கேட்டேன். 'ஒவ் மாத்தியா' என்றவரிடம் 'தனியாக ஒரு குடும்பம் மாத்திரம் இருக்கிறீர்களே... சிரம்மாக இல்லையா என்றேன்.' சிரமந்தான் மாத்தியா ... முந்தி நிறைய பேர் இருந்தாங்க .. தென்னந்தோட்டம் குறைஞ்சதும் வேற..வேற பக்கம். போயிட்டாங்க என்று அழகான சிங்களத்தில் பேசினார். ஏதோ நினைத்தவனாக 'அக்காகே நம் மொனவத' என்றேன் . 'முத்துலெட்சமி' மாத்தியா என்றார்.

இந்த நிலை இப்போது இரப்பரிலும் உண்டு. மெனராகலையில் பாலகிருஷ்ணன் என்பவரின் மக்களிடம் உன் பெயர் என்னும்மா என்றேன். 'வாசனா' என்றது. கம்பளை , வட்டதெனியா வில் மாசிக்கொம்பரை எனும் ஒரு தோட்டம் இருந்தது. என் அம்மாவின் தாய்மாமாமன் அங்கு வாழ்ந்த காலத்தில் மிக சிறுவயதில் சென்ற ஞாபகம் உண்டு. பலாப்பழம் அந்த ஊரில் பிரசித்தம். இரண்டொரு வருடங்களுக்கு முன்னர் அந்த வழியாக போக நேர்ந்த போது மாசிக்கொம்பரை மக்களின் சில பெயர்களை அங்குள்ள கடை ஒன்றில் இளநீர் குடித்தவாறு கேட்டேன். 'நீங்க... எந்த காலத்துல இங்கஆல வந்தீங்க மவன்.. இப்போ இங்கே எல்லாம் இப்போ இஸ்லாமானவுங்கதான் இரிக்க' என்றார் கடை முதலாளி. 

ஶ்ரீ, சொன்ன அந்த சிறுகதைக் கதை நினைவுக்கு வரவும் களுத்துறை மாவட்டத்தில் பள்ளேகம தோட்டத்து வீடமைப்பு திறப்பு விழாவும் வந்தது. மூன்று மணித்தியாலயத்துக்கு முன்பதாகவே களுத்துறைக்கு சென்று களத்தில் இறங்கினேன். பாம் ஒயில் தோட்டத்துக்குள் இறங்கி அந்த பூவை தேடினேன். அப்புறம் மக்களைத் தேடினேன்.சிறுகதைக்குள் வரும் என நான் எதிர்பார்த்த அத்தனை ஊகங்களையும் அங்கு அகப்பட்ட பெரியவரிடம் பேசி தெரிந்து கொண்டேன். 'அண்ணாவிடம் சொல்ல முடியாத' அந்த விடயங்கள் பற்றியெல்லாம் கூட அந்த பெரியவர் தயக்கத்துடன் சொன்னார்.மனது பாரமாகிக்கொண்டு வர... சற்று முன்னர் நான் தோட்டத்தில் தூக்கிப்பார்த்து தோற்றுப்போன 'பூவின் பாரம்' குறித்து கேட்டேன்.பெரியவர் சிரித்தார் ... 'அது பூ இல்லீங்க சேர்.... க(ட்)டுப் பொல் என்றார். அவரது சிரிப்பிற்குள் நின்று கட்டுப்பல் வேறு என்னைப் பார்த்து தனியாக சிரித்துக்கொண்டு நின்றது. மொழிபெயர்க்கச் சொல்லி மூளைக்கு உத்தரவிட்டு விட்டு அடுத்த. கேள்வியைப் போட்டேன் . ' ஆமா ... இந்த உயரமான மரத்துல இருந்து எப்பிடி கட்டுப்பொல்ல எறக்குவீங்க?'. மீண்டும் சிரித்தார், இப்போது பொக்கை வாயாக இருந்தார். நான் இன்னும் அலட்சியப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். 'எறக்கறதெல்லாம் இல்லீங்க ... முப்பது அடி நீட்ட 'மலேசிய' கத்தி கொடுத்து இருக்காங்க ... நாங்க ஆம்பளைங்க எட்டி வெட்டுவோம். தொபுக்கட்டீனு உழுகும். காய்எல்லாம் செதறும். அப்பிடி செதறுனது எல்லாத்தையும் பொறுக்குறதுக்கு பொம்பளை ஆளுக ரெடியா இருப்பாங்க... அப்படி சிதறாம நெறய காய்ஒட்டிக்கிட்டு அப்படியே கிடக்க கட்டுப்பொல்ல தூக்கி மத்த பொம்பளை ஆளுக ரோட்டில கொண்டு வைக்கனும். லொறி வந்து ஏத்மிக்கிட்டு போயிடும்.நீங்க சொன்ன மாதிரி அது பூ இல்லீங்க... (மீண்டும் சிரித்தார்.... என்க்கு கூச்சமாக இருந்தது ) ஒரே முள்ளுங்க. அதுனால தாங் க கட்டுப்பொல்னு பேரு. அதான் தூக்கி பார்த்தேன்னு சொன்னீங்களே.... எப்படி நீட்டி ... நீட்டிக்கிட்டு இருக்கு பார்த்தீங்களா...? 'ஆமாம் ... தூக்கி பார்த்தேன்... முடியல்ல ... முள்ளும் குத்துனுச்சே ...' என்றேன். ஐயையோ, கவனங்க எங்க தோட்டத்தில முள்ளு குத்துன வெசம் ஏறி ரெண்டு பேரு செத்து இருக்காங்க. 

என் விரலில் குத்திய சின்ன காய்த்தை சின்னதாக கடித்து உறிஞ்சு துப்பியபடி கேட்டேன்.."அப்ப சம்பளம்லா எப்பிடி"....   

ஹி.... ஹி... என இப்போது என்னைப் பார்த்து ஏளனமாக வந்தது ... 'கூட்டு ஒப்பந்ததந்தான்' . 

பெரியவர் போய்க் கொண்டிருந்தார்... தேவ.முகுந்தனின் 'கண்ணீர் ஊடே தெரியும் வீதி' நினைவுக்கு வந்தது. கபாலி படத்தில் அந்த நிழலாகத் தெரிந்த கத்தியைப் பார்த்ததும் அந்த கண்ணீர் ஊடே சென்ற பெரியவர் நினைவுக்கு வந்தார். என் மூளை மொழிபெயர்ப்பு பணியை முடித்து இருந்தது. க(ட்)டு - முள், பொல் - தேங்காய். கட்டுப்பொல் - முள்ளுத்தேங்காய். இதில் இருந்து வரும் எண்ணைக்குப் பெயர் "பாம் ஒயில்'. 

ஆமாம், அந்த சிறுகதையை எழுத ஏன் அந்த சகோதரி 'அச்சுறுத்தல்' வருமா என அச்சப்படுகிறார்?????. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பது கத்தி மட்டும்தானா?.. வாழ்க்கை மட்டுமல்ல எங்கள் வரலாறும் ஒரு வட்டம் தான் போலிருக்கிறது ... அதற்கு மீண்டும் தலைப்பை வாசிக்க ..(வளரும்) 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates