தமிழர் திருநாளாம் தைத்திருநாள் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொதுவாக உழவர் பெருமக்களாலேயே தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. எனினும் தமிழர்களின் பூர்வீகத் தொழிலாக உழவுத் தொழிலே இருந்து வந்துள்ளது. எனவேதான் தமிழர் என்ன தொழில் செய்தாலும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் உழவர் திருநாளான தைத்திருநாளை கொண்டாடத் தவறுவதில்லை.
நெல் வேளாண்மைக்கு மழைநீர், சூரிய ஒளி அவசியமாகும். அதனை வழங்கும் சூரியனுக்கு தமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கும் வகையிலேயே தமிழர்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.
தைமாதம் முதலாம் திகதி அறுவடைசெய்யப்படும் புதுநெல்லில் தைப்பொங்கலன்று அதிகாலையில் சூரியனுக்கு பொங்கல் பொங்கி, படைத்து தமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிப்பது வழமையாகும். நெல் அறுவடையின் மூலம் மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் பெற்ற உழவர் பெருமக்கள் தமது உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தைப்பொங்கல் தினத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். அதுமட்டுமன்றி வீட்டுக்கு வருகைதரும் உறவினர்களுக்கு விருந்தளித்துக் கெளரவிப்பதுடன் வீரவிளையாட்டுகளிலும் ஈடுபடுவது வழமை.
உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தாம் வாழும் நாடு, சூழல், கலாசாரம் என்பவற்றை கருத்திற்கொண்டு, தத்தமது வசதிக்கேற்ப இன்றும் தைப்பொங்கலை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இலங்கையில் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களும் தைப்பொங்கலைக் கொண்டாடத் தவறுவதில்லை.
அதேவேளை, மலையகத் தமிழர்களான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களது ஏழ்மை நிலையிலும் கூட தைப்பொங்கல் உள்ளிட்ட சமய, கலாசார, பண்பாட்டு நிகழ்வுகளையும் பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இம்முறை தைப்பொங்கல் எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை வருகிறது. பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்தத் தைப்பொங்கலைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். குறிப்பாக பொருளாதாரப் பிரச்சினை, விலைவாசி அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்தப் பண்டிகையை கொண்டாடத் தயாராகியுள்ளனர்.
கடந்த வருடம் சம்பள உயர்வுக்காக பெரும்போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். நாட்சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அந்தத்தொகை கிடைக்கவில்லை. மாறாக முழுமைபெறாத நாட்சம்பளமாக 730 ரூபாவே வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதனால், தொழிலாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. தற்போது என்றுமில்லாதவாறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து காணப்படுகின்றன.
அரிசி விலை குறிப்பாக ஸ்டீம் என்றழைக்கப்படும் நாட்டரிசியின் (ஆகக்குறைந்த தரம்) விலையே 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. ஒருபோதும் அரிசி இந்தவிலைக்கு உயர்ந்ததில்லை.
அரிசி மற்றும் கோதுமை மா என்பவற்றையே பெருந்தோட்ட மக்கள் பிரதான உணவாக உட்கொள்கின்றனர். அரிசி உற்பத்தி செய்யப்படும் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு அரிசியின் விலை உயர்வு பெரிதாக இருப்பதில்லை.
ஆனால், முழுக்க முழுக்க தேயிலை மட்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் பிரதேச மக்களுக்கே அரிசியின் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது அரிசி விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெருந்தோட்ட மக்கள்தான்.
அவர்கள் வாங்கும் சம்பளத்தை அரிசி வாங்குவதற்கே செலவுசெய்துவிட்டால், வேறு செலவுக்கு என்ன செய்வது என்ற நிலையிலேயே இருக்கின்றனர். தங்களது பிள்ளைகளை படிக்க வைப்பது, அவர்களுக்கான பிறசெலவுகள், குடும்பச் செலவுகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பண்டிகைகளையும் விழாக்களையும் கொண்டாட வேண்டிய நிலைக்குள்ளாகும்போது பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதற்காக தோட்ட நிர்வாகம் பண்டிகை முற்பணம் கொடுக்க ஒரு போதும் முன்வராது.
இந்நிலையில் பொங்கலைக் கொண்டாடுவதற்கு கடன் வாங்கவேண்டிய நிலைக்கே தள்ளப்படுவர் என்பது உண்மை. கடன் வாங்கி பண்டிகைகளைக் கொண்டாடுவதே பெருந்தோட்ட மக்களின் வழமையாகிவிட்டது. இதிலிருந்து இவர்களுக்கு மீட்சியே கிடையாது என தமது ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்
தற்போதைய நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பது மிகவும் அவசியமாகும். இதன்மூலமே அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைப்பதுமட்டுமன்றி அவர்களுக்கு அரிசி, மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானியவிலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலையக தொழிற்சங்க மற்றும் அரசியல் தலைவர்கள் இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மலையக அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...