இலங்கையில் இனவாதத்தத்தை விதைக்கும் செயல்பாடுகள் தொடங்குமிடம் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து அவர்கள் கற்கும் இடம்தான். சிங்கள பௌத்தமயப்பட்ட இலங்கை சமூக, அரசியல் கட்டமைப்பு கல்வி நிறுவனத்தை தமது சித்தாந்தத்தை நிறுவுவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் நன்றாகவே பயன்படுத்தி வந்துள்ளது எனலாம்.
பாமர சிங்கள மக்களுக்கு வரலாற்றுப் புனைவுகளை போஷிக்கத் தொடங்கும் முதல் இடம் பாடசாலையும், தாஹாம் பாசல் என்கின்ற வாரஇறுதி பௌத்த அறநெறிப் பள்ளிகளும் தான்.
இலங்கையில் மொத்தம் 12,150 விகாரைகளும் அவற்றில் 750 பௌத்த கல்வி நிறுவனங்களான பிரிவென்களும் 150 மடாலயங்களும் (காடுகளை அண்டிய தியானத் தளங்கள்) இருப்பதாக சென்ற ஆண்டு வரவு செலவு விவாதத்தின் போது வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரிய வருகிறது. அரசு மாத்திரமன்றி தனியார்களும், பல்வேறு நிறுவனங்களும் இந்த எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன என்பது தெரிந்ததே. ஏனைய மதங்களின் நிலை குறித்து சொல்லத்தேவயில்லை. பௌத்தத்துக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இந்த வகையில் தான் ஏனைய சமூகங்களுக்கு பாரபட்சமாகி வருகிறது என்பது ஒருபுறமிருக்க மதவெறுப்புணர்ச்சிக்கான தளங்களாக இந்த நிறுவனங்கள் ஆக்கப்பட்டுள்ளமை தான் நமது கவனத்துக்கு உரிய விடயமாகிறது.
புத்த சாசன அமைச்சின் கீழ் அதற்கான திணைக்களம் மாத்திரமல்ல, ஆணைக்குழுக்கள், அறக்கட்டளைகள், தனித்தனியான நடவடிக்கைக் குழுக்கள் இன்னும் பல பணிகள் நடக்கின்றன. வருடாந்த வரவு செலவின் போது பௌத்த நடவடிக்கைகளுக்கும், ஏனைய மத நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை கவனித்தால் இந்த பாரபட்சங்களை ஓரளவு அறிய முடியும். அரச புத்த சாசன அமைச்சின் இணையத்தளம் கூட தமிழில் நீங்கள் பார்த்திட முடியாது (http://mbra.gov.lk/). அது சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மாத்திரம் தான் காண முடியும். மகிந்த அரசாங்கத்தின் போது 2014 இல் நேபாள் / லும்பினிக்கு செல்லும் யாத்திரிகர்களுக்காக புத்த சாசன அமைச்சினால் ஒரு சொகுசு விடுதி கட்டப்பட்டது. அதற்கு அமைச்சு வைத்த பெயர் துட்டகைமுனு யாத்திரிகர் விடுதி (Dutugemunu Pilgrim’s Rest).
2014 ஆம் ஆண்டு மகிந்த அரசாங்கம் பிரிவெனா கல்வி அபிவிருத்திக்காக வரவு செலவுத் திட்டத்தில் தனியான ஒதுக்கீட்டை முதற் தடவையாக வழங்கத் தொடங்கியது. மகிந்த ராஜபக்ச அதனை பெருமிதத்துடன் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்படியிருந்தும் புதிய பட்ஜெட்டில் பிரிவெனாக்களின் வளர்ச்சிக்காக மேலும் நிதியொதுக்க வேண்டும் என்று அஸ்கிரிய மாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன நிதியமைச்சரை சந்தித்த வேளை அவரிடம் கோரிக்கை வைத்தார். இலங்கையில் இந்து, முஸ்லிம், கத்தோலிக்க அறநெறிக் கல்விக்கு இவற்றில் சிறிய சதவீதமும் கூட அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை என்பது நிதர்சனம்.
பாடசாலை பாடத்திட்டத்தில்
சிங்கள பாட நூல்களில் தமிழ் அரசர்கள் பற்றியோ, அன்றிருந்த அரசுகள் பற்றியோ போதிய விடயங்கள் இல்லை. அதே வேளை அவற்றில் இருக்கும் தமிழ் மன்னர் கூட சிங்கள ஆட்சிகளை கைப்பற்றி சிங்களவர்களை அடக்கியாண்ட ஆக்கிரமிப்பாளர்களாகவே சித்திரிக்கப்பட்டுள்ளனர். தமிழ் பாட நூல்களில் இல்லாத துட்டகைமுனுவின் “தர்ம யுத்தம்” சிங்கள நூல்களில் மாத்திரம் காணப்படுவதன் அரசியலை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளுக்குள் அரசாங்க பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட பாடத்திட்டங்களை தனியான ஒரு ஆய்வு செய்ய நேரிட்டால் ஒரு முக்கிய விடை கிடைக்கும் என்பது எனது கணிப்பு. அவற்றில் ஒரு சிறு பகுதியை நான் கண்டறிந்திருகிறேன்.
இதற்காக தமிழ், சிங்கள மொழிமூல பாட நூல்களை நீண்ட காலமாக அவதானித்து வருகிறேன். குறிப்பாக பாடசாலை பாடநூல்கள் - பாடத்திட்டங்கள், தஹாம் பாசல் எனப்படும் பௌத்த மறை கல்வி பாடத்திட்டம், அவர்களுக்கு கற்பிக்கும் பிக்குமார்கள் கற்கும் கல்வி நிறுவனமான பிரிவென் பாடசாலை நிறுவனங்களும் அவை கொண்டிருக்கிற பாடத்திட்டங்களும், இவற்றுக்கான பரீட்சைகளின் போது எதிர்பார்க்கப்படும் பதில்கள் போன்றன இத்தகைய பகுப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
மொழி, மதம் ஆகிய பாடங்களைப் பொறுத்தளவில் அந்தந்த மொழிகளிலேயே பாடத்திட்டங்கள் அமைவது சரிதான். ஏனைய பாடங்கள் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு பொதுவான பாடத்திட்டங்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பாக வரலாறு, அரசியல் போன்ற பாடங்களில் தமிழில் ஒரு வரலாறும், சிங்களத்தில் இன்னொரு வரலாறுமாக பல இடங்களில் வேறுபடுவதை பாட நூல்களில் இருந்து காண முடிகிறது. பெரும்பாலும் இந்த பாடத்திட்டங்களின் மூல மொழி என்பது சிங்களமே. தமிழில் கிடைப்பன அனைத்தும் சிங்களத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்படுபவை தான். எனவே சிங்களத்தில் இருக்கும் சரளமான மொழி நடை தமிழில் இல்லை என்பது முதலாவது பிரச்சினை. அடுத்தது இலங்கை கல்வித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சிங்களத்தில் பெரும்பாலான பாடத்திட்டங்கள், பாட நூல்கள், வழிகாட்டல்கள், ஆசிரியர் வழிகாட்டல் என்பவற்றை காண முடிகிற போதும் சிங்களத்தில் கிடைக்கும் அத்தனையும் தமிழில் கிடைப்பதில்லை என்பதை அறிய முடிகிறது. குறிப்பாக மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக நேரடி கேள்விகளுக்கு அந்த இணையதளத்திலேயே பதிலளித்து தம்மை பரீட்சித்துப் பார்க்கும் வசதிகள் தமிழ் மாணவர்களுக்கு இல்லை. வெறும் பேருக்கு சிலவற்றை மாத்திரம் வைத்திருகிறார்கள்.
மாதிரி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்களைப் பார்த்தால் சிங்களத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கும், தமிழில் கேட்கப்பட்டிருப்பவற்றிக்கும் வித்தியாசங்களை காண முடியும். சிங்களத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பெருவாரியான வினாத்தாள்கள் தமிழ் மொழியில் இல்லை என்பது வேறு பிரச்சினை.
சென்ற ஆண்டு 10ஆம் ஆண்டு பௌத்த வினாத்தாளில் இரண்டாவது பகுதியில் முதல் 8 கேள்விகளும் துட்டகைமுனு எல்லாளன் போர் பற்றியவை. பௌத்த பாடங்களில் இந்தப் போருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன்?
தென்னிந்திய ஆக்கிரமிப்பை விளக்குக (இணைப்பை அழுத்துக) |
சிங்கள மாணவர்களின் பயிற்சிக்காக 10ஆம் ஆண்டு வரலாறு - மூன்றாவது அத்தியாயம் தென்னிந்திய ஆக்கிரமிப்பு குறித்த நேரடி கேள்வி பதில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் அது தவிர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் காண முடியும்.
அவ்வாறு “தென்னிந்திய தமிழர்களின் படையெடுப்புகள்” எனும்போது ஒருவகையில் சரித்திரத்தை உள்ளபடி பயில்வதன் நியாயத்தை உணர்த்தியபோதும் இங்கு இவற்றை ஆக்கிரமிப்பாக தொடர்ச்சியாக ஊட்டுவதன் மூலம் தமிழர்களை பாரம்பரிய எதிரிகளாகவும், ஆக்கிரமிப்பாளர்களாகவும், வந்தேறிகளாகவும் நிறுவும் அரசியல் உட்பொதிந்துள்ளதை நாம் மறுத்துவிட முடியாது. இன்றறைய அரசியல் விளைவுகளே இந்த போதனைகளுக்களுக்கு சிறந்த சாட்சி.
இலங்கையில் தமிழர்கள் குடியேற்றவாசிகள் தான் என்றும், வந்தேறிகள் தான் என்றும் இந்த பாடத்திட்டங்களில் போதிக்கப்படுகின்றன. ஆதிக்குடிகள் தமிழர்கள் அல்ல என்று கூறும் அதே வேளை சிங்களவர்களே தமிழர்களுக்கும் முந்திய ஆதிக் குடிகள் என்று இங்கு புனைகின்றனர்.
சிங்கள இனம் விஜயனில் இருந்து தோன்றுகின்றது என்று போதிக்கும் அதே வேளை விஜயனை ஒரு வந்தேறியாகவோ, ஆக்கிரமிப்பாளனாகவோ கொள்ளப்படுவதில்லை. சிங்கள இனத்தின் தோற்றமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது என்பதை சூசகமாக மறுத்து திரித்து விடுகின்றனர். பௌத்த மதம் இந்தியாவில் இருந்து தான் வந்தது என்பதையும், சிங்கள மொழியின் மூலமும் கூட அங்கிருந்து தான் பெறப்பட்டது என்பதையும் கூட வரலாறு நெடுகிலும் மாற்றியே கூறப்பட்டு வந்திருக்கின்றன. மொத்தத்தில் இனம், மதம், மொழி, கலாசாரம் என சிங்கள பௌத்த, பண்பாட்டு, வரலாற்றுத் தொன்மை என்பது இந்தியாவை அண்டியே வந்து, வளர்ந்து, நிலைபெற்றது என்பதை போதிக்காதது மட்டுமன்றி இந்தியாவையே எதிரியாக சித்திரிக்கும் போக்கு பண்பாட்டு வெறுப்புணர்ச்சி கலந்ததே.
அதிலும் குறிப்பாக தமிழர் தாயகக் கோட்பாட்டையும், கோரிக்கையையும் நிராகரிப்பதற்கு சிங்களப் பேரினவாதத்துக்கு முன்நிபந்தனையான தேவையாக ஆகியிருப்பவை.
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பது. பௌத்தம் இலங்கையில் வருவதற்கு முன்னர் இலங்கையில் மரங்களையும், இறந்தவர்களையும் வணங்கும் மத மரபே இருந்தது என்றும், (பார்க்க கல்வி அமைச்சு சிங்களத்தில் வெளியிட்டுள்ள 2016 – பௌத்த தர்மம் மாதிரி வினாத்தாள்) குறிப்பிடப்படுகிறது.
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு சிங்கள மொழியில் கிடைத்து வந்த அரசாங்க பாட நூல்கள் தமிழில் கடந்த ஒரு சில வருடங்களாகத்தான் கிடைக்கின்றன. அதுவரை பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட தனியார் நூல்களின் துணையுடனேயே தமிழ் மாணவர்கள் கற்று வந்தார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
பௌத்த மறை கல்வி
இலங்கையின் பௌத்த விகாரைகளிலும் பாடசாலைகளிலும் பௌத்த மறை கல்வி (“தஹாம் பாசல் – தர்ம போதனை வகுப்புகள்”) வார இறுதி நாட்களில் வழமையாக பல ஆண்டுகாலமாக நடந்து வருகிறது. பௌத்த மறைகல்வி கற்கும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பாக “சிசு உதான” , “சிசு நிபுனதா” வங்கிக் கணக்குகள் ஆரம்பித்து கொடுக்கும் வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கிறது.
பிரிவென் ஆண்டிறுதிப்ப ரீட்சைத தாளில் துட்டகைமுனு பற்றி கேள்வி |
தமிழ் மன்னர்கள் குறித்து பாடத்திட்டங்களில் போதிய அளவு உள்ளடக்காததன் விளைவு சிங்கள மாணவர்கள் தமிழர்களை அந்நியர்களாக பார்ப்பதற்கு துணைசெய்கிறது. போதாததற்கு தமிழ் மாணவர்களும் தாம் வந்தேறிகளே என்று நம்பவைக்கப்படுகின்றனர்.
தமிழ் மன்னர்கள் குறித்து பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்படவேண்டும் என்று சமீபத்தில் டக்ளஸ் தேவானந்தாவும் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லினக்கத்துக்குமான செயலகத்தின் இயக்குனராக செயற்பட்டு வருகிற சந்திரிகா 01.12.2015 அன்று நடந்த ஊடக சந்திப்பி போது, தேசிய நல்லிணக்கத்துக்கு இழுக்காக இருக்கக்கூடிய பாடங்களை பாடசாலை பாட நூல்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் அப்படி கூறியது இந்த நிலைமை குறித்து ஏற்கெனவே அவர் அறிந்து வைத்திருக்கிறார் என்பதை உறுதிபடுத்துகிறது. பாடத்திட்டத்திலிருந்து தனியான மதங்களை போதிப்பதை நீக்கிவிட்டு சகல மதங்கள் பற்றிய அறிவைக் கொடுக்கும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது அவசியம் என்றும் அந்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார். அந்த கருத்துக்கு இனவாத தரப்பில் கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
துட்டகைமுனுவை சிங்கள பௌத்த புனித காவியத் தலைவனாக ஆக்கியதன் அரசியல் விளைவு குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. மேலும் மேலும் துட்டகைமுனுவை முதன்படுத்திய செயல்பாடுகள் அத்தனையும் சிங்கள வரலாற்றை முன்நிறுத்துவதற்குப் பதிலாக தமிழ் விரோதப் போக்குக்கு இசைவாக முன்னிருத்தப்படுவதே இன்றைய போக்காக மாறியிருக்கிறது.
“ஜாதிக ஹெல உறுமய” கட்சியின் முன்னாள் தலைவரான எல்லாவல மெத்தானந்த தேரோ எழுதிய “சிங்கள மீட்பன் மகாராஜா துட்டகைமுனு” (‘සිංහලයේ විමුක්තිදායකයා දුටුගැමුණු මහරජතුමා’ - 2002) என்கிற நூல் கூட பல புனைவுகளையும் ஐதீகங்களையும் அடிப்படையாகக் கொண்ட சிக்கல் வாய்ந்த நூல் என்கிறார் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி.
“ஜாதிக ஹெல உறுமய” கட்சியின் முன்னாள் தலைவரான எல்லாவல மெத்தானந்த தேரோ எழுதிய “சிங்கள மீட்பன் மகாராஜா துட்டகைமுனு” (‘සිංහලයේ විමුක්තිදායකයා දුටුගැමුණු මහරජතුමා’ - 2002) என்கிற நூல் கூட பல புனைவுகளையும் ஐதீகங்களையும் அடிப்படையாகக் கொண்ட சிக்கல் வாய்ந்த நூல் என்கிறார் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி.
மெத்தானந்த தேரோ ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவர். அக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அதன் பின்னர் அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்டதன் பின்னர் மகிந்த அணியோடு சேர்ந்தவர். “தொல்பொருளியல் சக்கரவர்த்தி எல்லாவல” என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் இன்றைய இனவாத சக்திகளின் முக்கிய ஆயுதம். குறிப்பாக இது சிங்கள நாடு, தமிழர்கள் அன்னியர்கள், தமிழர்களுக்கு என்று ஒரு தாயகமும் கிடையாது அங்கெல்லாம் சிங்கள பௌத்த தொன்மைகளே உள்ளன என்று தொல்பொருள் ஆதாரங்களுடன் புனையும் பணியை நீண்ட காலமாக ஆற்றி வருகிறார்.
ஒரு புறம் சிங்கள தரப்பில் துட்டகைமுனுவை முன்னிறுத்திய அரசியல் கலாசாரத்தின் விளைவு; தமிழர் தரப்பிலும் எல்லாளனை முன்னிறுத்திய செயற்பாடுகள் வெளிக்கிளம்பியதையும் போர் காலத்தில் நாம் கண்டிருக்கிறோம்.
நன்றி - தினக்குரல்
துட்டகைமுனுவின் அவதாரம் (பாகம் -1) - என்.சரவணன்
மேலதிக தகவல்களுக்காக இந்த இணைப்பு உங்களுக்கு உதவும்...
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...